இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பதினேழாம் நூற்றாண்டு என்கிறபோது, பிரெஞ்சு அறிவு ஜீவிகளில் சட்டென்று நமது நினைவில் கொர்னெய், மோலியேர், ராசின், தெக்கார்த், பஸ்கால் ஆகியோர் உயிர்த்தெழுகின்றனர். அவர்களுள் பிளேஸ் பஸ்க்காலுக்கான இடம் மிகமுக்கியமானது, கவனத்திற்குரியது. அறிவியல், தத்துவம், ஆன்மீகமென மூன்றிலும் ஆழமான அறிவுடன், இளம் வயதிலேயே சாதனைப் படைத்த பிலேஸ் பஸ்க்கால் ஓர் அபூர்வ மனிதர், துரதிஷ்டவசமாக அச்சாதனைகள் மரணத்தை வெல்லும் வகையறியாது ஒதுங்கிப்போனதால், மானுடத்திற்கான இழப்புகள் அதிகம். தன்முனைப்பினை ஒதுக்கி, கடுமையாக அதை விமர்சித்து வாழப்பழகிய பஸ்க்கால் முரண்பாடுகள் கொண்ட ஓர் இளைஞர். உள்ளத்தைச் சமயச்சிந்தனைகளுக்கு அர்ப்பணித்தபோதிலும், உலகவாழ்வைத் துறப்பது அவருக்கு இயலாமற்போனது. விரக்தியின் விளிம்பில் உயிர்வாழ்ந்த நேரங்களிலும், அறிவியல் ஆன்மீகமென்ற இரட்டைக்குதிரையில் சவாரி செய்தவர். அநாமதேயப்பெயர்களில் எழுதவேண்டிய நெருக்கடிகள் அவருக்கிருந்தன என்பதும் உண்மை, அவ்வாறான நெருக்கடிகளை விரும்பியே உருவாக்கிக்கொண்டார் என்பதும் உண்மை, ஆகக் கொஞ்சம் புதிரான ஆசாமி.

இளம் அறிவியலறிஞராக கணிதத் துறையில்: வீழ்ப்பு வடிவியல் (Projective geometry) மற்றும் நிகழ்தகவு கணிப்புமுறைகளை (Probability theory) அறிமுகப்படுத்தினார், இயற்பியல் துறையில்: காற்றழுத்தம் (Pressure) மற்றும் வெற்றிடம் (Vacuum) தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, கோட்பாடுகளை உருவாக்கினார். வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை ஒவ்வொரு நாளும் கணக்கெழுதுவதற்குப் படும் வேதனைகளைக் கண்ணுற்று, எண்கணித எந்திரத்தை (Arithmetic Machine) – முதல் கணிப்பானை (calculator)வடிவமைத்தபோது அவருக்கு வயது பத்தொன்பது, அது இன்றைய கணிப்பொறியின் முன்னோடியென்று சொல்லப்படுகிறது, இருபது வருடங்கள் கழித்து பொதுமக்களுக்கான உலகின் முதல் போக்குவரத்து வாகனத்தை பாரீஸில் அறிமுகப்படுத்தினார் – ஐந்து சோல் (Sols)-தம்பிடி- கொடுத்தால் பாரீஸ் மக்கள், சாரட் வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணிக்கலாமெனச்சொல்லப்பட்டது. உழைப்பாளி, சேசுசபை குருமார்களை எதிர்க்கவும், ஜான்செனியூஸ்களை ஆதரிக்கவும் செய்தவர், அனைத்துக்கும் மேலாக மிகப்பெரிய சிந்தனாவதி, படைப்பாளி. உடல் நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டு, உடலூனமுற்றநிலையிலும் நிறைய எழுதினார், மரணம் இவர் சரீரத்தை முடக்கியபொழுது வயது முப்பத்தொன்பது.

பிளேஸ் பஸ்கால் 1623ம் ஆண்டு கிளெர்மோன் (Clermont) என்ற இடத்தில் பிறந்தார். தந்தை எத்தியென் பஸ்கால்; தாய் அந்த்வானெத் பெகொன்; ழில்பெர்த், ஜாக்கிலின் இருவரும் சகோதரிகள். தாயைப் பறிகொடுத்தபோது குழந்தை பஸ்க்காலுக்கு மூன்று வயது. இரண்டு வயதிலேயே, பஸ்க்காலின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதைப்போல சில அறிகுறிகள் தெரிந்தன, அவருடைய சகோதரி ழில்பெர்ட் வார்த்தைகளை நம்புவதென்றால், இரண்டு வயதில் குழந்தைப் பஸ்க்கால் பெற்றவர்களையும் உற்றவர்களையும் அச்சுறுத்துவதுபோல நடந்துகொண்டிருக்கிறார்: அவர் வயது பிள்ளைகள் கண்ணிற்படக்கூடாது, தண்ணீரையோ, வேறுதிரவப்பொருட்களைக் கண்டால் ஆகாது, பெற்றோர் இருவரும் சேர்ந்தார்ப்போல எதிரே வந்துவிடக்கூடாது, மேற்கண்டவற்றுள் ஏதாவது ஒன்றுபோதும் அலறி ஊரைக்கூட்ட. இப்படியொரு குழந்தை வீட்டிலிருந்தால் என்ன நடக்கும்? அழைத்துவா சாமியாடியை, விடைக்கோழியை காவு கொடென்று ஆத்தாளும், அப்பனும் அலைய மாட்டார்களா என்ன? எத்தியென் பஸ்காலும் அந்த்துவானெத்தும் அதைத்தான் செய்தார்கள். அவர்களுக்குச் சந்தேகம் வீடுதேடிவந்து பிச்சைக்கேட்ட ஒரு பெண்மணிமீது, அவள்தான் ஏதாவது ஏவல், பில்லி சூன்யமென்று வைத்திருப்பாளோ? கூப்பிட்டனுப்பினார்கள், வந்தாள். ஆண்பூனையொன்றை பலிகொடுத்தால், குழந்தைக்கு விடுதலைகிடைக்குமென்றாள், இலையும் தழையும் சேர்த்து கேக்கொன்று செய்து குழந்தையின் தொப்புளில் வைத்து எடுத்தாள். பஸ்க்காலை பிடித்திருந்த சாத்தான் போய்த் தொலைந்தததாவென்று தெரியவில்லை, ஆனால் முப்பத்தொன்பது வயதில் அவர் சாகும்வரை, நோயென்ற பெயரில் பல சாத்தான்கள் அவர் உடலில் வாசம் செய்தனவென்பது உண்மை.

பஸ்க்காலுடைய தந்தையும் இயல்பிலேயே புத்திசாலியான ஆசாமி, அறிவியலில் கூடுதலாக அவருக்கிருந்த ஆர்வம், 1631ம் ஆண்டு பாரீஸ் நகரத்திற்குக் குடிபெயரத் தூண்டுகிறது. அங்கே எத்தியன் பஸ்க்காலுக்கு அதாவது பிலேஸ் பஸ்க்கால் தந்தைக்கு மர்செண் என்ற பங்குத்தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. மர்செண் கணிதத்தில் மிகுந்த ஞானமுடையவர், அவரது வீடு, புகழ் பெற்ற பல வரலாற்றாசிரியர்களும், அறிவியலறிஞர்களும் புழங்குமிடம், அது தவிர ஐரோப்பாவின் இதரப்பகுதியிலிருந்தும் பேரறிஞர்கள் வந்துபோனார்கள். அப்பெருமக்கள், தங்கள் ஆய்வுகள் முடிவுகளை நண்பர்களிடயே பகிர்ந்து கொள்ளவும், கலந்துரையாடவும் மர்செண் வீட்டை பயன்படுத்திக்கொண்டார்கள் தந்தை ஏற்படுத்திக்கொடுத்த இப்புதிய சூழல் சிறுவன் பஸ்க்காலுடைய வாழ்க்கையை பெரிதும் மாற்றி அமைத்தது எனலாம். பதினோரு வயதிலேயே பிளேஸ் பஸ்க்கால் ஒலிசம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டபோதிலும், கணக்கியல் துறையில் தனது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள,பதினாறுவயதுவரை தந்தையின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. கூம்புகள் தொடர்பான தனது முதற் கட்டுரையை 1640ல் அச்சில் கொண்டுவந்திருக்கிறார். 1642ல் உலகின் முதற் கணிப்பானை(Calculator) வடிவமைத்தபோதிலும், அதைச் சந்தைப்படுத்தும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. 1646ம் ஆண்டு இயற்பியல்துறை அவரது கவனத்தைப் பெற்றது, இத்தாலி நாட்டைச் சேர்ந்த டோரிசெல்லி ‘வெற்றிடம்’ குறித்த ஆய்வில் தொடர்ந்து ஈடுபடுகின்ற காலத்தில், அகஸ்ட்டினென்கிற கிறிஸ்துவ மதப்பிரிவினை அந்நேரத்தில் பலரும் தழுவியதைப்போலவே பஸ்க்கால் குடும்பத்தினரும் ஏற்கின்றனர். தந்தை, சகோதரிகள், பஸ்க்கால் உட்பட நால்வரும் அகஸ்ட்டின் சமய அனுதாபிகளாக மாறியபோதும், பஸ்க்கால் தனது அறிவியல்துறையில் ஆராய்ச்சிகளிலிருந்து விடுபடாதவராகவே இருந்துவந்தார்.

அறிவியல் ஆன்மீகமென்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பஸ்க்கால், மிகப்பெரிய சிந்தனையாளராக, நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவதாரமெடுத்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? அவர் ஆர்வம் கொண்டிருந்த கணிதத்தையும் பௌதிகத்தையும்விட, ஏற்றுக்கொண்ட அகஸ்ட்டின் கிறிஸ்துவ சமயப்பிரிவும், ஒத்த சிந்தனைகொண்ட நட்பு வட்டாரமும், அக்காலத்தில் மிகவும் செல்வாக்குடனிருந்த சேசு சபையினருக்கு எதிராகப் பஸ்க்கால் கலகக்குரலெழுப்ப காரணமாயின. 1654 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ந்தேதி இரவு அவருக்கு ஏற்பட்ட வியப்புக்குரிய அனுபவத்தால் இயேசுவின் தீவிர விசுவாசியாக மாறினாரென்று அவரே பின்னர் தெரிவித்திருக்கிறார், அந்த அனுபங்கூட அவரை எழுதத் தூண்டியிருக்கலாம். அவரது எழுத்தில் அவரைவிட, அவர் சரீரத்தில் சாகாவரம் பெற்றிருந்த நோய்கள் பேசின. 1652ல் போர்-ரொயால்(Port-Royal) கிறிஸ்துவ மதப்பிரிவினருக்குச் சொந்தமான மடத்தில் அவரது சகோதரி ஜாக்லின் சேர்ந்தபோதும், அவரது வற்புறுத்தலுக்கு மாறாக வெளியிலிருந்தே அகஸ்ட்டின் சமயப்பிரிவினரின் கோட்பாட்டை ஆதாரிப்பதென்கிற மன நிலையிலேயே பிலேஸ் பஸ்க்கால் இருந்தாரென்பதையும் இங்கே நினைவு கொள்ளவேண்டும்.

ரோவான்னெஸ் பிரபு கூ•பெரும், அவரது சகோதரி ஷர்லோத்தும் பஸ்க்காலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். பஸ்க்காலுடன நெருக்கமாகவிருந்த ரொவான்னெஸ், தனது நண்பரின் ஆலோசனைப்படி அகஸ்ட்டீன் பிரிவினரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். அவரது சகோதரியும் திருமணத்தை மறுத்து, மேற்கண்ட பிரிவில் சேர்வதற்கு விரும்புகிறார். பஸ்க்காலுடைய கருத்தினைக் கேட்கிறார். அப்பெண்மணிக்கு 1656ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒருநாள் பஸ்க்கால் ” நேரமின்மைக்கிடையிலும், நீ எழுதிய பல விடயங்களுக்குத் விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் சொல்லவேண்டுமென்று எழுதுகிறேன்”, என்று கூறினார். ஆக எதற்காக பஸ்க்கால் எழுதினாரென்பதை ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறதென்றாலும், திட்டவட்டமான பதிலென்று நமது ஊகத்தை முன்வைக்க இயலாது, இந்நிலையில். அப்பதிலுக்கான வேறு சாத்தியகூறுகளையும், கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அல்லும் பகலும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தனது நோயுற்ற உடலை மேலும் மேலும் வருத்திக்கொள்வதைக் காண்கிற மருத்துவர்கள், அவருக்கு ஓய்வுதேவையென்றும், அதிகம் உடலைக்கெடுத்துக்கொள்ளாத பொழுதுபோக்கு அம்சங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டுமென்றும் அந்நேரத்தில் வற்புறுத்தியிருந்ததால் பஸ்க்கால் ஒருவேளை எழுத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களிலொன்றாகக் கருதியிருக்கக் கூடுமொ என்கிற ஐய்யமும் எழாமலில்லை. பிறருக்குப் ‘பதில் சொல்வதற்காக’ ஒருவர் எழுதக்கூடுமா? எழுதுகிறவனுக்கென்று சுய அருட்சிகள்( Personal Inspiration) இருக்காதா? என்கிற ஐயங்களும் நமக்கு எழுகின்றன. ஆனால் பஸ்க்கால் படைப்புகளைப் பார்க்கிறபோது, அவற்றுள் தமது சிந்தனைகளைப் பிறருக்குச் சொல்கிற எண்ணமுமில்லை, நோக்கமுமில்லை. மாறாக பிறர் சிந்தனைக்காக அவர் எழுதியவரென்பது நிதர்சனம். தவிர அவற்றுள் அவதானிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கிய உன்னதம், எழுவதற்கான நேரம் அரிதாகவே அவருக்குக் கிடைத்தது, (கணிதம் மற்றும் இயற்பியல் ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு, பல ஆய்வுகட்டுரைகளை அவ்வப்போது பிரசுரித்து வந்தார் என்பதை நினைவிற் கொள்ளுதல் அவசியம்) உடல் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும், பிறருக்காக மன்றாடும் வகையிலேயே அவரது எழுத்துக்களிருந்தன.

இன்றைக்கு பஸ்க்கால் என்றவுடன் இரண்டு மிகப்பெரிய படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன 1.Provinciales (பாமரனுக்கு..) 2. Pensளூes (சிந்தனைகள்). அறிவியல் துறையையில் அவர் பிரசுத்திருக்கும் ஆய்வுகட்டுரைகளை இங்கே நான் கணக்கில் கொள்ளவில்லை. சொல்லும்வகையில் சொல்லாவிட்டால், உண்மையைக்கூட பிறர் நம்பமாட்டார்கள் என்பதைப். பஸ்க்கால் உணர்ந்திருக்க வேண்டும்.. தவிர பஸ்க்கால் தன் நண்பர் பிரபு கூ•பெரின் சகோதரியான ஷர்லோத்துடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவோ அல்லது அவருக்குச் சமயச் சிந்தனைகளில் வழிகாட்டவோ எழுதத் தொடங்கினாரென்பதை மைக்கேல் ஷ்னைடெர் என்ற எழுத்தாளர் நம்பமறுக்கிறார்(3). ஆக ஒவ்வொரு படைப்பிற்கும் காரணங்களுண்டு, அவை சம்பந்தப்பட்ட எழுத்தாளரன்றி பிறர் அறிய முடியாத தேவரகசியம். பஸ்க்காலுடையை எழுத்தில் நாம் வியப்புகொள்கிற மற்றொரு அம்சம், அவரது எழுத்து ஜெயிக்கிற எழுத்தாக இருப்பது, வாசக நீதிபதியும் தனது நடுநிலைமை பிறழ்ந்து, இவருக்கு ஆதரவாக வாதிடும் அதிசயத்தைப் பார்க்கிறோம். எதிராளி பலத்தைத் தனதாக்கிக்கொள்ளும் வாலிக்கான வரத்தை எங்கிருந்து பெற்றார்? பிறர் கருத்தாக்கங்களை நீர்க்கச்செய்யும் வல்லமையை எவரிடம் கற்றார்? அவர் எழுத்தை ஒருவிதமான சூதாட்டமெனக்கொண்டால் எதிராளி உடமையைப் பறிக்கும் சாதுர்யத்தைக் காட்டிலும், தன்னைப் பணயம் வைத்து மனக்கிளர்ச்சிகொள்கிற படைப்பாளியாகத் தோன்றுகிறார்.

பிரெஞ்சு இலக்கியவாதிகள் ‘பஸ்காலுடைய எழுத்துக்களில் ‘சிந்தனைகள் (Pensளூes) என்ற நூலுக்கே இதுவரை முதலிடம் கொடுத்துவந்தார்கள், கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான் ப்ரோவேன்சியால் (Provinciales- கிராமியம்) என்ற நூலைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். ப்ரொவேன்சியால் என்ற பெயரில் பின்னர் தொகுக்கபட்டபோதும், இந்நூல் 1656 ஜனவரி 23 தொடங்கி 1657ம் ஆண்டு மார்ச் 24 வரை எழுதப்பட்ட பதினெட்டு கடிதங்களின் தொகுப்பு, ஒவ்வொரு கடிதமும் பாமரன் ஒருவனுக்கு அவன் நண்பன் ஒருவன் எழுதிய கடிதமென்ற பெயரில் வெளிவந்தது. அதற்கான காரணம் சுவாரஸ்யமானது. வெகுகாலமாகவே, கிறித்துவ சமய அறிஞர்களிடையே கருத்துமோதல்கள் இருந்துவந்தன, குறிப்பாக முன்நியமம் (Predestination), நற்கருணை (grace) போன்ற கோட்பாடுகளில் சேசு சபையிபருக்கும், அகஸ்ட்டீன் பிரிவினருக்குமிடையே கருத்துவேறுபாடுகளிருந்தன. 1655ம் ஆண்டு பிக்கோத்தே என்கிற பங்குத் தந்தையானவர், அகஸ்ட்டீன் கோட்பாட்டில் நம்பிக்கைக்கொண்ட போர்-ரொயால் மடத்தைச் சார்ந்தவர்களோடு தொடர்பிருப்பதாகக் கருதி பிரபு ஒருவருக்கு பாவச்சங்கீர்த்தனம் செய்ய மறுக்க, பிரச்சினை வெடிக்கிறது. போர்-ரொயால் மடத்தைச்சேர்ந்தவரும் பஸ்க்கால் நண்பருமான அர்னோல்டு என்பவர் பங்குத் தந்தையின் போக்கைக் கண்டித்து எழுதுகிறார், சேசுசபையின், நற்கருணை கோட்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகிறது, சேசு சபையினர் சொர்போனில் கூடி அர்னோல்டை கண்டிக்க நினைக்க நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அர்னோல்டு தலைமறைவாகிறார். தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளும் அர்னோல்டையும் வேறு சில நண்பர்க¨ளையும் பஸ்க்கால் சந்திக்கிறார். சொர்போனில் தங்களுக்கு இழைக்கபட்ட அநீதியை பொதுமக்களுக்கு விவரமாக எடுத்துரைப்பது அவசியமென தீர்மானிக்கிறார்கள். அதுவரை எழுத்தென்றால் கிலோ என்ன விலையென்று கேட்கக்கூடிய நிலையிலிருந்த பஸ்க்கால் தானே அக்காரியத்தை முன்னெடுத்துச் செல்வதாக நண்பர்களுக்கு வாக்குறுதியும் அளிக்கிறார். ப்ரொவேன்சியால் என்ற பெயரில் பின்னர் தொகுத்து வெளியிடப்பட்ட நூலின் முதல் இதழ், “சொர்போன் பிரச்சினைகள் குறித்து பாமரன் ஒருவனுக்கு அவன் நண்பன் எழுதிய கடிதம் (1) என்றபெயரில், ரகசியமாக அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப் படுகிறது, முதலாவது இதழ் 1656ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ந்தேதி வெளிவந்தபோது மிகபெரிய வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து வெளிவந்த இதழ்களில் சேசுசபையினர் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் முதல் மூன்று ப்ரொவேன்சியால் இதழ்களில் EAABPAFDEP (2)என்ற புனை பெயரிலும், பின்னர் லூயிஸ் தெ மோந்தால்த் என்கிற புனைபெயரிலும் பஸ்க்கால் எழுதினார். 1659வரை ப்ரொவேன்சியல் இதழ்களின் ஆசிரியர் யாரென்ற உண்மைத் தெரியாமலேயே இருந்தது. பஸ்க்காலைத் தவிர, அவரது போர்-ரொயால் நண்பர்கள் அனைவரும் சந்தேகிக்கப்பட்டனர். ஆளும் மன்னரிடம் செல்வாக்குப்பெற்றிருந்த சேசுசபையினர், நடவடிக்கைகளில் இறங்கினர். காவல் துறையினர் போர்-ரொயால் மடத்தைச் சோதனையிட்டனர், அச்சகப் பொறுப்பாளரென்று சொல்லப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் சட்டத்திற்கு மாறாகச் சிறையில் அடைக்கப்பட்டனர், பஸ்க்காலும் தலைமறைவானார். போர்- ரொயால் மடத்தைச்சேர்ந்த ஒருசிலர், ப்ரொவேன்சியால் மடல்களால் தங்களிருப்பே நெருக்கடிக்குள்ளாகுமோ என்றஞ்சியபோதும், அர்னோல்டு போன்ற பஸ்க்காலின் நெருங்கிய நண்பர்கள் கிறிஸ்துவமதத்தை சேசு சபையினரின் பிடியிலிருந்து மீட்கவும், கிறிஸ்துவ சமயத்தின் நெறிகளைப் பேணவும் ப்ரொவேன்சியால் இதழ்கள் தொடர்ந்து வெளிவரவேண்டுமென வற்புறுத்துகின்றனர். பதினோறாவது ப்ரொவேன்சியால் இதழில் சேசுசபையினர் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் நேரிடையாகக் கண்டிக்கப்பட்டார்கள். மன்னருக்கு பாவசங்கீர்த்த்னம் செய்பவராகவிருந்த தந்தை அன்னா குற்றம்சாட்டபட்டார். சேசு சபையினரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்சொல்லவேண்டிய கட்டாயத்திலிருக்க, அவர்கள் தரப்பிலிருந்து Imposture(பாசாங்கு)என்ற இதழ் வெளிவருகிறது, பதினோறாவது ப்ரொவேன்சியால் இதழிலிருந்த குற்றச் சாட்டுக்களை மறுத்ததோடு, அகஸ்ட்டீன் பிரிவினர் வீண்பழியை சுமத்துவதாகச் சொல்லியிருந்தார்கள். பஸ்க்கால் எழுத்துக்களால் மக்கள் ஆதரவை இழந்திருந்த சேசுசபையினரின் செல்வாக்கு, போர்-ரொயால் மடத்தில் தங்கியிருந்த பஸ்க்கால் உறவினர் பெண்ணொருத்தியின் கண் நோய் அதிசயத்தக்கவகையில் குணமானதால் மேலும் சரிந்தது. மக்கள் அச்சம்பவத்தினை, கடவுள், அகஸ்ட்டீன் பிரிவினருக்கு ஆதரவாக இருப்பதால் நேர்ந்த அதிசயமென்று நம்பினார்கள். ஆக பஸ்கால் எதிர்பார்த்த பலன் கிடைக்கத்தான் செய்தது, சேசு சபையைச் சேர்ந்த பிரோ என்ற மதகுருவானவர், ‘நியாய விளக்கம்’ (Apologie) என்ற நூலில், அறநெறியாளர்களுக்கு (Casuistes) ஆதரவாக முதன்முதலாக, ப்ரொவேன்சியால் மடல்களில் எழுப்பட்டக் கேள்விகளுக்குத் பதிலிறுத்தார், ஆனால் அகஸ்ட்டீன் பிரிவினரை ஒரு பொருட்டாக மதித்து பதிற்சொல்லவேண்டிய அவசியமில்லை என்று கருதிய பெரும்பான்மையான சேசுசபையினர் நூலின் ஆசிரியரைக் கண்டித்ததோடு, நூலும் வாசிப்புக்குரியதல்லவென தடை செய்யப்படுகிறது. எதிரிகளிடையே சலசலப்பை உண்டாக்கிய இந்நிகழ்ச்சியை ப்ரோவேன்சியாலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம். ப்ரோவேன்சியால் மடல்களை அர்த்தமற்ற நம்முடைய பட்டிமன்றக் கருத்தாடல்களாகப் பார்க்கக்கூடாது. முதன்முதலாக இருபிரிவினரும் தங்கள் சமயக் கோட்பாடுகளை பொதுபுத்திக்குக் கொண்டு சென்றார்கள், தங்கள் தரப்பு நியாயங்களுக்கு வெகுசன ஆதரவை கோரிநின்றார்கள், விளிப்பு நிலை மக்களுக்கு, சமயக்கோட்பாடுகளின் மையங்கள் உணர்த்தப்பட்டன. ப்ரோவேன்சியால் மடலில் பஸ்க்கால் கையாண்டமொழியும், அங்கதமும் கடை நிலை மக்களையும், மேட்டுக்குடிமக்களையும் வாசிப்பு தளத்தில் ஒன்றிணைத்தது மாபெரும் சாதனை.

சேசுசபை தனது கிறித்துவமதத்திற்கேயுரிய பிரதான நெறிமுறைகளையும், நற்கருணை முதலான கோட்பாடுகளையும் மறந்து செயல்படுகின்றது என்பதை உணர்த்தும் விதத்திலேயே ப்ரோவேன்சியால் மடல்களிருந்தன. மூன்றாவது எண்ணிட்ட ப்ரோவேன்சியால் புனித பீட்டரின் பிரச்சினையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. புனித பீட்டருக்கு நற்கருணை வழங்கப்படாதது குறித்து அப்போது இருவிதமான கருத்துகள் நிலவின: முதலாவது, கடவுள் பீட்டருக்கு நற்கருணை வழங்குவதைத் தவிர்த்திருக்கவேண்டும், காரணம் அவர் பாவம் செய்திருக்கவேண்டும்; இரண்டாவது கருத்தின்படி, விரும்பியே பீட்டர் தமக்கான நற்கருணையை மறுத்திருக்கலாம். முதற்கருத்துக்குச் சொந்தக்காரர்கள், போர்-ரொயால் மடத்தினரான அகஸ்ட்டீன் பிரிவினர், அவர்களைப் பொறுத்தவரை கடவுளின் நற்கருணை அல்லது அனுக்கிரகமென்பது, நமது குறுகியகால நன்நடத்தை சார்ந்தது அல்ல, மனிதனுடைய கடந்தகால மற்றும் நிகழ்கால நடவடிக்கைகளை வைத்து இன்னின்னாருக்கு நற்கருணையை வழங்கலாம் வழங்கக்கூடதென்று கடவுள் தீர்மானிக்கிறான்; இரண்டாவது கருத்தியலுக்குச் சொந்தக்காரர்கள் சேசு சபையினரைச் சார்ந்த மோலினா என்பவரைப் பின்பற்றியவர்கள். அவர்களுக்கு கடவுளின் நற்கருணை சூரியனின் கதிர்களைப்போல எங்கும் பிரகாசிக்கிறது, அதைப்பெறவேண்டிய நேரத்தில் விழிகளை மூடிக்கொள்ளாமலிருந்தால் எல்லா மனிதர்களுக்குமே அது கிட்டும், என்றார்கள். மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்பதற்காக, ஒழுக்கங்களின் அடிப்படையிலேயே தமது அனுக்கிரகத்தினை கடவுள் வழங்குகின்றாரென்றும், அதைக் கணக்கில்கொள்ளாதவர்கள் (மோலினாக்கள்) கடவுளின் தெய்வீகத் தன்மையை சந்தேகிக்கிறவர்களென்றும் பஸ்க்கால் நினைத்தார்.

நற்கருணைக்கு அடுத்து சேசுசபையினரும், போர்-ரோயாலிஸ்த்துகளுக்கிடையிலும் கருத்து மோதல்களுக்கான பிரச்சினை ஒழுக்க நெறி சம்பந்தமானது. ப்ரோவென்சியால் மடல்கள் அறநெறிகொள்கைக்கு (casuistry) எதிரானதாகவும் சித்தரிக்கப்பட்டது. அறநெறிக்கொள்கையானது மனசாட்சியோடு சம்பந்தப்பட்டது, அதன்படி. மனிதன் தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கான கடப்பாடுகளை சூழ்நிலைக்கேற்ப மனசாட்சியின் அடிப்படையில் உண்மைக்கு ஆதரவாக தீர்மானிக்க்கிறான். பஸ்க்கால் இக்கருத்திற்கு முழுவதுமாக உடன்படுகிறார், மாற்று கருத்தென்பது அவருக்கில்லை. ஆனால் சூழ்நிலைக்கானத் தேர்வில் – குறிப்பாக உண்மைக்கான சாத்தியமானது எதுவென்கிற தேர்வில் – சேசுசபையினரிடம் அவர் உடன்பட மறுக்கிறார். கடமையைத் தீர்மானிக்கிறபோது, நேர்மையானது, நேர்மையற்றது என்ற இரண்டு சாத்தியங்கள் நம்முன்னே உள்ளன, பஸ்க்காலை பொறுத்தவரை நேர்மைசார்ந்த கடமைகளைச் தேர்வுசெய்யும் சாத்தியங்கள் குறைவு. எது உத்தமமான காரியம் என மனசாட்சியிடம் கேட்டு அதன்படி நடப்பதென்பது பெரும்பாலும் மனிதரைத் தடம் விலகச்செய்யும், கடமை தவறுவார்கள், ஏனெனில் மனிதனின் கடமை தேர்வென்பது உண்மை சார்ந்தது அல்ல, அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்யும் தன்மை சார்ந்தது, விளைவு கடவுள் மீதான அன்பு என்பதை வலியுறுத்தும் கிறிஸ்த்துவமத நெறிமுறைக்கு எதிராக, சுயகாதல் தன்மைமிக்கதாய் மனிதரின் கடமைகள் அமைந்துவிடுகின்றன என்கிறார்.

ப்ரோவேன்சியாலைப் பொறுத்தவரை, இன்றுவரை ஆதரித்தும் எதிர்த்தும் குரல்கள் எழுகின்றன, பல ஆரோக்கியமான விவாதங்கள் முற்றுபெறாமல் நீடிக்கின்றன. குரலைவிட, குரலெழுப்பியவன் கவனிக்கப்படுகிறானென்றால், அவன் எழுப்பிய குரல் அர்த்தமற்ற குரல் அல்லது வெற்றுக் கூச்சலென்றாகிறது. இன்றுவரை விவாதத்திற்குள்ளாவது ப்ரோவேன்சியாலே தவிர பஸ்க்கால் அல்ல. தனது நம்பிக்கைக்குரிய வாழ்வு ஆதாரத்திற்கு சங்கடங்கள் என்கிறபோது, உணர்ச்சியுள்ள எந்த மனிதனும் மௌனம் சாதிப்பதில்லை, சமூக பிரக்ஞையுள்ளவர்கள், அவர் தம் வழியில் கூடுதலாவே உழைக்கிறார்கள். பஸ்க்கால் மிக சிறப்பாகவே அப்பணியை நிறைவேற்றியிருக்கிறார். சேசு சபையினரைச் சங்கடத்துக்கு உள்ளாக்கிய அவரது எழுத்துகள், அவரால் விரும்பி எழுதப்பட்டதல்ல, அவற்றை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேசுசபையினருக்கு எதிராக மறைமுகமாக நடத்தபட்ட யுத்தங்களோடு ஒப்பிடுவதற்கில்லை என்பதுபோன்ற சமாதானக்குரல்களும் அவ்வப்போது ஒலிக்கின்றன, ஏனேனில் சேசு சபயினர் தவறான பாதையிற் சென்றவர்களேயன்றி, இயல்பில் கெட்டவர்களல்லவென்பதில் பஸ்க்கால் உறுதியாக இருந்தார்.” மதவிஷயத்தில் நீங்கள் இழைக்கும் தவறுகள் மரியாதைக்குரியதல்ல என்பதும் உண்மை, அவற்றைச் சுட்டிக்காட்டுவதால் நான் மரியாதைக்குரியவனல்ல என்பதும் உண்மை.” (சிந்தனைகள்- எண்-796), கட்டுரை வடிவில் எழுதப்பட்ட ப்ரோவேன்சியால் கடிதங்கள்: எழுதபட்டக் காலத்திலும், இன்றைக்கும்; அவற்றுள் விவாதங்களை முன்னெடுத்துச் சென்றவகைப்பாட்டால்; கையாண்டுள்ள மொழியால், சொல்லிய உத்தியால், கொண்டாடப்படுகின்றன.

கி.பி. 1662ம் ஆண்டு பிலேஸ் பஸ்க்கால் இறந்தபோது, அவ்வப்போது அவர் எழுதியிருந்த சுமார் 800 குறிப்புகளை வைத்துவிட்டுபோயிருந்தார். எண்பது விழுக்காடு எழுத்துகள், கத்தோலிக்க மதமும் உலகும் என்ற தன்மையில் இருந்தன. அவற்றை பிரசுரிக்க நினைத்தபோது, வரிசைப் படுத்துவதில் குழப்பம் நிலவியது. அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவரது நண்பர்கள் சிலரைக்கொண்டு பல்வேறு தலைப்புகளின் கீழ் முடிந்தவரை ஒழுங்குபடுத்தினர். ‘பஸ்க்கால் சிந்தனைகள் -மதமும், பிறவும்’ ( PENSEES de M. Pascal sur la Rளூligion et sur Quelques Autres sujets) என்ற பெயரில் 1670 ஆண்டு அதனை நூல்வடிவமாக்கினர். பஸ்கால் சிந்தனைகளை, வெகுதொலைவிலிருந்து காற்றில் மிதந்து வருகிற, துயரகீதமாக கேட்கிறவழக்கமே அன்றி அவற்றைப் பார்ப்பதாகவோ, வாசிப்பதாகவோ தான் உணர்வதில்லை என்கிறார், மிஷெல் ஷ்னெய்தர். அறிவியல் துறையில் ஆர்வம்கொண்டிருந்த ஒருவர், அறிவியற்துறை வளர்ச்சிகளே, அளவற்ற எண்ணிக்கையிலான எதிர்கால மனிதரின தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவை என்று நம்பிய ஒருவர், அதற்கு முரணான ஆன்மீகத்தீல் தோய்ந்து, ரஷ்ய பொம்மைகள்போன்று, ஒன்றில் மற்றொன்றென தத்துவங்களை உள்ளடக்கி, அந்தரங்கத்தை பகிர்ந்துகொள்வதுமாதிரியான எழுத்தாற்றலுடன் எழுதி, எழுதி முடித்ததும் கிழித்துப் பல துண்டுகளாக பரப்பி முடித்து, முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள் என்பதைப்போல அவரது சிந்தனைகள் இருக்கக் காண்கிறோம். சொற்கள் அனைத்துமே, ஆழ்மனதிற்குச் சொந்தமானவை: நிரந்தரமானதொரு அமைதி, நம்மை(வாசிப்பவரை) கவனத்திற்கொள்ள மறுக்கும் புனைவியல் நோக்கு. அணையப்போவற்கு முன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற, மலைச்சரிவில் கீழ்நோக்கி ஓடுகிற, திக்கற்ற மனிதராக, கதியற்ற யோகியாகப் பஸ்க்காலை உணருகிறோம். மாறாக இந்த அடைமொழிகளுக்கெல்லாம் பஸ்க்கால் உரியவரேயன்றி அவரது எழுத்தல்ல, அவரது சொற்களில் இருமைப் பண்புகளைப் (Duality) பார்க்கிறோம், அவற்றின் புறவயத்தன்மையென்ற மாயையில், சில நேரங்களில் தடம் புரண்ட இரயில்போல, பாதை கிடைக்காத அவலத்தில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படுகிறோம், எனினும் இறுதியில் எங்கே இருக்கவேண்டுமோ அங்கே இருக்கிறோம். அவரது சிந்தனைகளை அதற்காகக் கையாளும் சொற்களை அவதானிக்கிறபோது அவை குணம், பொருண்மை, எனவரிசைப்படுத்த முடிகிற நியாய தர்சனமாக இருப்பது கண்கூடு. ஒரு சொல்லின் அல்லது அச்சொல் பதித்த வரியின் மேம்போக்கான புரிதலை தவிர்க்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறது, அடுத்த வாக்கியத்தை, முதல் வாக்கியத்தோடு முடிச்சுபோடுவதில்லை, இரண்டும் எதிரெதிர் நிலையில் இயங்கியபோதிலும் அவற்றுக்கான ‘கர்மம்’ ஒன்றுதானென முடிக்கிறார். “எனது சிந்தனைகளை வரிசைப்படுத்தி எழுதவேண்டுமென்று நினைப்பதில்லை, அப்படிச் சொல்வதால் ஒழுங்கின்றி எதையாவது சொல்ல நினைக்கிறேன் என்றும் பொருளல்ல, அதாவது ஒழுங்கற்ற வரிசையில் எனது சிந்தனைகளை நிறுத்துவதேகூட, ஒருவித ஒழுங்கின் அடிப்படையிலேயே ஆகும். ஒருபொருளைப் பற்றிய எனது கருத்தியலை முன்வைக்கிறேனென்றால், அப்பொருளின்மீதான எனது மதிப்பீடு உயர்ந்ததென்றாகிறது, தன்னை நெறிபடுத்திக்கொள்ள இயலாத அப்பொருளை, உரியவகையில் ஒழுங்குபடுத்துகிறேன்”(3). எனப் பஸ்கால் கூறுகிறார்.தொடக்கத்தில் கூறியதைப்போல பிற்காலத்தில் பஸ்க்கால் சிந்தனைகளை தொகுத்து வெளியிட நினைத்தவர்கள்: நாத்திகம், தெக்கார்த் மற்றும் மோந்தேஜ்ன், மகிழ்வூட்டும் செயல்பாடுகள், நியாய விளக்கம், கடவுளற்ற மனிதவாழ்க்கையின் இன்னல்கள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் அவற்றை கொண்டுவந்தார்கள். எதைசொல்வதென்பதைவிட எப்படிச் சொல்வதென்பதே ஓர் எழுத்தை உயர்த்திப்பிடிக்க முடியும், அதற்கு நல்ல உதாரணம் பஸ்க்காலுடைய சிந்தனைகள்: “(இடை)வெளிகளை நான் பொருட்படுத்தாததைப்போலவே, அவை என்னைப் பொருட்படுத்துவதில்லை”. “இதயத்தை வழி நடத்த நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் அதனை நியாயம் அறிவதில்லை”, “உணர்ச்சியின் வழிகாட்டுதலில் தீர்மானிக்கப் பழகியவர்கள், நியாயத்தின் நடைமுறையைப் புரிந்துகொள்வதில்லை, தோற்றத்தைக் கண்டு மயங்குபவர்கள், அவர்கள் விதிமுறைகளுக்கு வாழப்பழகியதில்லை. மாறாக வேறு சிலர் இருக்கின்றனர், விதிமுறைகளின் அடிப்படையில் நியாயத்தைத் தீர்மானிக்கப் பழகியவர்கள், அவர்களுக்குப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று தீர்மானிக்கப் போதாது. பிரச்சினையிலுள்ள உணர்வுகளை மட்டுமல்ல, விதிமுறைகளை பரீசீலிக்கவும் ஆகாது”.

“வேகமாக வாசிக்கிறபோதும் சரி, நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை” என்பது பஸ்கால் தெரிவிக்கிற கருத்து. வேகமாக வாசிக்கிறபோது வாசகன் உள்வாங்கிக் கொள்வதில்லை என்ற உண்மையை ஒருவரும் சந்தேகிக்கப்போவதில்லை, ஆனால் நிதானமாக வாசிக்கிற உனக்கும் அதுதான் நிலைமை என்று சொல்கிறபோது, குழம்பிப் போகிறோம். உண்மைதான், அதைப் புரிந்துகொள்ள ழாக் தெரிதாவின் அடியொட்டி நடந்தாகவேண்டும். படைப்பாளி-படைப்பு- படைப்பிலுள்ள சொற்களின் தொனியென அவற்றை நேர்படுத்தமுடியும், பெரும்பாலான வாசிப்பு நேரங்களில் சொற்களுக்குத் தேவையின்றி அர்ப்பணிக்கும் கால அவகாசங்களுங்கூட தவறானவகையில் வாசகனைத் திசை திருப்பக்கூடுமென்றாகிறது, ஆக தொனிக்கும் (Tempo) உரிய மரியாதையைக் பஸ்கால் கொடுக்கவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடுண்டு.

“ஓர் ஓவியத்தை அருகிற்சென்றும் பார்க்கலாம் தள்ளி நின்றும் பார்க்கலாம்; ஒவ்வொரு ஓவியத்திற்கும் இனிப் பிளவுக்குச் சாத்தியமில்லை என்பதுபோல மையப் புள்ளியொன்றுண்டு, அப்புள்ளியே ஓவியத்தின் உண்மையான இருப்பிடம். நமக்குக் கிடைக்கும் காட்சிகள், அப்புள்ளிக்கு வெகு அருகிலோ, வெகுதூரத்திலோ, மேலாகவோ, கீழாகவோ இருக்கின்றன. ஓவியத்தின் மையப் புள்ளியைச் சுட்டுவதற்குக் காட்சிகள் இருக்கின்றன, சத்தியத்தையும், தர்மத்தையும் சுட்டுவதற்கு என்ன இருக்கிறது? பஸ்க்கால் கேட்கிறார், பதிலிருக்கிறதா?

– நன்றி – வார்த்தை

———————————————————————————————————
1. Lettre ளூcrite தூ un provincial par un de ses amis sur le sujet des disputes prளூsentes de la Sorbonne
2. ” Et Ancien Ami, Blaise Pascal Auvergnat, Fils D’Etuenne Pascal
3. La mளூlancolie d’ளூcrire – Michel Schinider

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: – ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.

சராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.

‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா? என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);

“புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய்! ஓ மரியா! ஆயயயோவ்!” (பக்கம் – 25),

“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)

ஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு? ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.

படைப்பவனில்லாத நாவலெது? கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.

“பாண்டி! உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை?”

“அடுத்த தைப்பூசம்.”

“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)

“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)

“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரியகோயிலைப்பார்! காவேரி கல்லணையைப்பார்!” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”

“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்
– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்
– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்
– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்
– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.

புயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டியப்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரியூர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.

“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை! ராளிப் பாட்டி விற்கும் புளி வடை! தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.

“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.

இந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:

“நாம் எதை நம்புவது?”

“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”

“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.

இந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.

ஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.

காட்சியை நேர்முகப்படுத்துவதாகட்டும்:

“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)

மொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:

“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)

மென்மையான நகைச்சுவையாகட்டும்:

“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)

“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)

ஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள். ப. சிங்காரத்தின் இருநாவல்கள் குறித்தும் ஜெயமோகன் எழுதியுள்ள விரிவான ஆய்வுகட்டுரையை பின் இணைப்பாக சேர்த்துள்ளமை, வாசகர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் போனஸ்.

——————————————————————————————————————–
புயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்
விலை -180ரூ
ஆசிரியர் – ப. சிங்காரம்
தமிழினி பதிப்பகம்- சென்னை -14

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் ( Jean-Marie Gustave Le Clèzio) லெ க்ளேஸியோ என்ற நீண்டபெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டென பெயர்கள் (ழான்-மரி, குஸ்த்தாவ்) அவருக்கு உண்டென்றாலும், லெ க்ளேஸி (Le Clèzio) என்ற குடும்பப்பெயரிலேயே சுருக்கமாக பிரெஞ்சு இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டிருக்கிறார். முதல் நாவல் Le Procès- Verbal (The Interrogation) 1963ம் ஆண்டு வெளிவந்தபோது இருபத்துமூன்று வயது இளைஞர், அந்த ஆண்டிற்கான ரெனொதொ இலக்கிய பரிசினையும் (Prix Renaudot) அந்நாவலுக்காக வென்றார். அன்றிலிருந்து கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அயர்வுறாமல் எழுதிவருகிறார். இன்றைய தேதியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளென்று ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகள்; நோபெல் பரிசுக்கு முன்பாக பிரெஞ்சு இலக்கிய உலகத்தின் ஆறு முக்கிய பரிசுகளை வென்றிருக்கிறார்.

சராசரி பிரான்சு நாட்டு குடிமகனை லெ க்ளேஸியோவைத் தெரியுமாவென்று கேட்டால், ஓரளவு புவியியல் ஞானம் இருக்குமானால் பிரெத்தோன் மாகாணத்திலுள்ள ஒரு சிற்றூரை ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லக் கூடும். லெ க்ளேஸியோவை மாத்திரமல்ல, தமிழ் நாட்டு சிற்றிதழ் வாசகனறிந்த பிரெஞ்சு எழுத்தாளர்களைக்கூட அவன் அறிந்திருக்க மாட்டான். நோபெல் பரிசு அறிவிக்கப்படாதவரை பிரெஞ்சில் பெரிதாக எதையும் கிழிக்காதவர் என்றே எனக்குள்ளும் ஓர் கருத்தியலை உருவாக்கியிருந்தேன். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த அவரது சிறுகதைத் தொகுப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம். நோபெல் பரிசு அறிவித்த பிறகு அவரைப்பற்றிய செய்திகளை முதலில் இணைய தளங்களில் வாசித்தேன். கடந்த ஆண்டு ‘Lire'(Reading) என்ற பிரெஞ்சு இலக்கிய இதழ் எடுத்திருந்த கருத்துக் கணிப்பில் தீவிர இலக்கிய வாசகர்களின் அபிமான எழுத்தாளர்கள் வரிசையில் அவர் முதலிடம் பெற்றிருந்ததும், 1980ல் வெளிவந்த Dளூsert (Desert) பிரெஞ்சுமொழிக்கென்றுள்ள பேரரறிஞர்கள் அமைப்பு வழங்கும் பரிசினைப் பெற்றிருந்ததும் அவர்மீதான எனது கருத்தியலை மறுக்கட்டமைப்பு செய்ய உதவின. கிளர்ந்த ஆர்வம் சோர்வுறுவதற்கு முன்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடந்து முடிந்த புத்தகவிழாவில் சிலாகிக்கப்பட்ட Ritournelle de la faim (Ritornello of hunger) அவரது சமீபத்திய நூலை அவசரமாக வாசித்து முடித்தேன்:

1945ம் ஆண்டு, பிரான்சு ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பிலிருந்த காலம். சுந்தந்திரமாக நடமாட முடிந்த பாரீஸிலும், ஆக்ரமிப்பிலிருந்த நீஸ் நகரிலும் கடுந்துயரங்களையும் நெருக்கடிகளையும் உடல்வெளியில் சுமந்து அலுப்புற்ற எத்தெல் (Ethel)பெண்ணின் முதல் இருபதாண்டுகளில் இடம்பெற்ற அவல வாழ்க்கையை எடுத்துரைக்கும் நாவல். யுத்தகாலத்து பாரீஸ், மனித விலங்குகளின் மனவிகாரங்கள், கோரமுகங்கள், அடங்காப்பசிகள், பாய்ச்சல்கள், ஒழுங்கீனங்களென அதன் நீலம்பாரித்த ஆழ்கடலில் மூச்சுத் திணறியும், வெக்கை புழுத்த பாலையில் தாகவிடாயுடணும் இருபதாம் நூற்றாண்டின் தறிகெட்ட வாழ்க்கையை அசைபோடும் நாவலில், முன்னும் பின்னுமாக ஆசிரியர் நிகழ்காலத்திற்கு வருகிறார். தொடக்கத்தில் ஒரு சில பக்கங்கள் வயிற்றுப்பசியின் சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறது, பசியாற உதவிய டப்பாவில் அடைக்கபட்ட பாலும், இறைச்சியும் ஆசிரியரால் கொண்டாடப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் பெறும் புத்துணர்ச்சியும், அக்கடாவென்ற நிம்மதியையுங்கூட ஆசிரியர் சொல்லத் தவறவில்லை. பாவண்ணன் எழுதியிருந்த பசி என்னும் அரக்கன் என்ற தலைப்பிலான கட்டுரையையும், சுள்ளிக்காடு பாலசந்திரனுடைய திருவோண விருந்தினையும் நினைவூட்டுவதுபோல நாவலின் தொடக்கப்பகுதி அமைந்துள்ளது. எத்தெல் நல்லகுடும்பத்தைச் சேர்ந்த ஒர் இளம்பெண், சொலிமான் என்ற மாமனிடம் வளர்கிறாள். அவர் வயதானவர் என்றாலும் அன்பானவர். உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் கண்காட்சியொன்றில், மரபான மொரீஷியஸ் நாட்டு குடியிருப்பொன்றை (வராண்டாவும், ஊதா வண்ணமும்கொண்டது)ப் பார்த்து பிரியப்பட்டு அதை விலைக்கு வாங்கிவருகிறார். தம் சொத்து முழுமைக்கும் தமது மருமகளே வாரிசென்று எழுதிவைத்த குறுகிய காலத்தில் இறந்தும்போகிறார். பெறோர்களிடம் (அலெக்ஸாண்டர்- ஜஸ்ட்டின்) திரும்பும் எத்தெல் சொத்தினை, நிருவகிக்கும் பொறுப்பு இப்போது அவளுடைய தகப்பனிடம். பெண்ணின் சொத்தினை கரைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் நடக்கிறது. தம்பதிகள் இருக்கிற கட்டிடத்திலேயே வசிப்பவள் இசைநாடக அரங்குகளில் பாட்டுபாடும் பெண்மணி ‘மோது’. அவள் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு நேரங்காலமின்றி தனது வீட்டிற்கு வருவது திருமதி ஜஸ்ட்டினுக்கு எரிச்சலூட்டுகிறது, தனது கணவனின் கள்ளக்காதலியாக அவள் இருக்கக்கூடுமென்ற சந்தேகம். ஓயாமல் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. எத்தெல் கதையை முடித்த கையொடு மீண்டும் ஆசிரியரை கடைசியாகச் சந்திக்கிறோம், எதையோ சொல்ல மறந்த பதட்டம். வாசகர்கள் மனதிற்படிந்த சந்தேகத் தூசைத் தட்ட நினைக்கிறார். எத்தெலை தனது தாயல்ல என மறுக்கும் ஆசிரியர், அவள் தனது தாயின் நகல் என்பதை மறுக்கவில்லை. எத்தெல் கதையை எழுதியதற்கான வித்துணர்வு முளைகட்டிய விதத்தை கடைசியாக “இருபது வயதில், அவளது விருப்பத்திற்கு மாறாக வீராங்கனையாக வாழநேர்ந்த பெண்ணொருத்தியின் நினைவென்று” ஆசிரியர் கூறுகிறார்.

நோபெல் பரிசுத் தேர்வுக் குழுவினர் கடந்த அக்டோபர்மாதம் ‘லெ க்ளேசியாவை’ இலக்கிய பரிசுக்கென தேர்ந்தெடுத்தமையை வெளி உலகுக்கு அறிவித்தபோது, “இன்றைய மனிதகுல பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒர் புதிய மானுடத்திற்கான தேடுதல் வேட்டையில் கவித்துவ துணிச்சலும், உணர்ச்சிக் களிப்பும், ஒருங்கே அமைந்த படைப்பாளி”, எனப் புகழ்ந்தார்கள்.

லெ க்ளேஸியாவினுடைய படைப்பினைப் பொதுவாக விமர்சகர்கள் ஒருவகையான ‘பிரிவோம்பல்” (“oeuvre de la rupture”) என்கிறார்கள். எழுதிய படைப்புகள் தோறும், அவரது கதை மாந்தர்கள் ஊழிக்காலங்களால் வேருடன் பறித்து வீசியபின்பும் உயிர்பிழைத்து இறந்தகாலத்திற்காக ஏங்குபவர்களாக இருப்பது அவ்வாறான விமர்சனத்திற்கு தெம்பினைக் கொடுத்திருக்கிறது. எழுத்தாளரை அறிந்தவர்கள், அவரது பிறப்பு வளர்ப்பை அறிந்தவர்கள், இப்பிரிவோம்பலை நியாயப்படுத்துகிறார்கள். சொந்தவாழ்க்கையைச் சொல்கிறார் என்கிறார்கள். அகம் புறமென்றல்ல அதற்கும் வெளியே, மானுட எல்லைக்கோட்டிற்கு மறுவெளியில், அண்டத்திற்கு அப்பாற்பட்ட திசையில் அவரது பார்வைப் பயணிக்கிறது. ” இலக்கியம் கடல்போன்றது, ஏன் கடலுக்குமேலே அதாவது அலைகளுக்கு மேலாகவும் சூரியனை முன் வைத்தும் கடந்து செல்லும் ஒரு பறவையென்றும் கூறலாம்”, என ஒரு முறை எழுதியிருக்கிறார்.

பச்சைபிடித்த பின்பும் நாற்றங்காலை குறித்த கவலை பயிர் வாடுவதுபோல, லெ க்ளேஸி அகமனதில் தன்னை அந்நியான நிறுத்தி வதைபடும் மன நிலை அதாவது எங்கே சென்றாலும் ‘தனக்கான இடம் இதுவல்ல’ என்பதுபோல வேரினைத்தேடி துயரம் கசியும் எழுத்துக்கள்: “அதை நியாயப்படுத்தவென்று பெரிய காரணங்கள் எதையும் என்னால சொல்ல முடியவில்லை, இருந்தபோதிலும் என்னை செவ்விந்தியனாகத்தான் உணருகிறேன் (Haï,1971); அவனுக்குப் பெயரென்னவோ டேனியல்தான், ஆனாலும் மற்றவர்கள் அவனை சிந்துபாத் என அழைக்கவேண்டுமாம் (Mondo and other stories, 1978); கறுப்பின பெண்ணொருத்திக்கு மகனாக பிறந்திருக்கவேண்டுமென்ற ஆசை வெகுகாலமாக இருந்தது (The African, 2004) மேற்கண்ட அபிலாஷைகள், புற தேவைக்கான ஒரு ஏக்கமோ அல்லது புறவடிவத்தினை மறு செதுக்கலுக்கு உட்படுத்தும் உயிர்ச்சத்தற்ற கனவு வாக்கியங்களல்ல, அவை அவரது அகவய ஏக்கங்கள், தமது இருப்பு நிலையை எங்கே பொருத்தியும் நிறைவுறாத நாடோடி.

J.M.G. லெ க்ளேஸியோ என படைப்புலகத்தினராலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் நமது எழுத்தாளர் ஏப்ரல் 13ந்தேதி 1940 ஆண்டு பிரான்சிலுள்ள நீஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஆங்கிலேயர், மொரீஷியஸ் ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்தபோது அங்கே மருத்துவராக பணிபுரிந்தவர். தாய் வழியில் லெ க்ளேசியோ பிரெஞ்சு இனம். பதினெட்டாம் நூற்றாண்டில் மொரீஷியஸ் தீவிலிருந்து பிரான்சுக்கு குடிவருகிறார்கள். சிறுவயதில் பிரான்சு நாட்டில் தாத்தா-பாட்டியிடம் வளர்கிறார். எட்டுவயதில் நைஜீரியா நாட்டில் மருத்துவராக பணிபுரியும் தந்தையுடன் இணைகிறார். ஆக பால்யவயதிலேயே லெ க்ளேஸிக்கு நாடோடி வாழ்க்கை என்பது தீர்மானிக்கப்பட்டது என்றாகிறது. முதல் புலம்பெயந்த அனுபவத்தினை, ‘Onitsha’ (1991) என்ற ஆப்ரிக்க நகரத்தினை தலைப்பாகக் கொண்டு எழுதப்பட்ட நூலில் பதிவு செய்திருப்பதைப் பார்க்கிறோம்.

1950களில் நீஸ் நகரத்தில் பள்ளிக் கல்வி. வகுப்பில், பாடங்களில் கவனமின்றி சிந்தனையை அலைய விட்டதாக சொல்கிறார். இளம் வயதிலேயே சித்திர கதைகள், கவிதைகள், சாகஸக்கதைகள், தத்துவ விஷயங்கள், பயணக் கட்டுரைகள் என எழுதத்த் தொடங்கியிருக்கிறார். ‘வாசிப்பதற்கு முன்பாகவே தாம் எழுதத் தொடங்கியதாக’ சமீபத்தில் பிரெஞ்சு இலக்கிய வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியது இங்கே நினைவு கூறதக்கது. பிரான்சு, இங்கிலாந்து இருநாடுகளின் குடியுரிமையும் அவருக்கு உண்டென்பதால், பிரிஸ்டலில் மேற்கல்வியைத் தொடர்ந்தார், முதல் திருமணம் லண்டனில் நடந்தது.

1970ம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல்களில் புவியியல் ஞானம் அவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். பால்யவயதில் ஆரம்பித்து வைத்த நெடும்பயணம் தொடர்கிறது. பனாமா, அமெரிக்கா, மொராக்கோவின் தென் பகுதி, இந்து மகா சமுத்திர தீவுகள், பாரீஸ்- நீஸ் என்ற புவியியல் தேடலில், சொந்த வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கிறது, நியூ மெக்ஸிக்கில் 1977லிருந்து செய்யும் ஆசிரியப் பணி, 1975ல் மொராக்கோ நாட்டு பெண்ணுடன் நடந்த இரண்டாவது திருமணம், அவரது பதிப்பாளருக்காக பாரீஸ், பிறந்த ஊரென்ற கையில் நீஸ், மூதாதையர் நாடான மொரீஷியஸ் என ஆங்காங்கே பயணித்து உற்ற அனுபவங்கள், படைப்புகளில் வெளிப்படுகின்றன.

லெ க்ளேஸியினுடைய புத்தகங்கள் ஒவ்வொன்றும் மேற்கண்டவற்றுள் ஏதொவொரு இடத்தைச் சித்தரிக்கின்ற வகையிலேயே எழுதப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தவிர அந்நூல்களில் ஆசிரியரின் பதிவானது ஒரு தற்காலிக குடியின் உணர்வினைச் சாராது, நிரந்தகுடியொருவனின் அகப்பாடுகளாக இருக்கின்றன என விமர்சகர்கள் கருதுகிறார்கள். “நாடோடி மனநிலை என்பது லெ க்ளேஸிக்கான இரண்டாம் கட்டம், தாம் ஒரு பயணி என்பதையே அவர் மறந்து விடுகிறார்”, என்கிறார், பிரெஞ்சு இலக்கிய சஞ்சிகை ஒன்றினைச் சேர்ந்த ழான் க்ரோஸ்ழான்

நன்றி: காலச்சுவடு
————————————————————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தேடிச் சந்தித்து மகிழ்ந்ததும், விலைகொடுத்தேனும் உரிமை பெற்று சந்தோஷித்ததுமான கணங்கள் கடந்த காலத்திற்கானவை. பிறமனிதர்கள் அல்லது நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதற்ற நொடிகளுடன் வாழ்க்கை என்றாகிவிட்டது. படைப்பாளிகளுக்கோ தங்களிடமிருந்தே தாங்கள் தப்பினால் போதுமென்ற கவலை. வெளியுலகிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு வாழப்பழகிய படைப்பாளிகள் ஒருகட்டத்தில் அலுத்துபோய் தங்கள் உறவை மீண்டும் வெளிமனிதர்களிடம் புதுப்பித்துக்கொள்ளும் தந்திரமே எழுத்தும் அதன் பிரதிகளும். மொழியும், எழுத்தும் தங்கள் தனிமைக்கு ஒளியூட்டக்கூடுமென்பதோடு, பிற மனிதரோடு தம்மை இணைத்துக்கொள்ளவும் உதவுமென நம்பிக்கை. அடைபட்டுக்கிடந்த மனக்கதவுகள் திறக்கப்பட, ஒருவகையாக சுயகாதலினின்று தப்பிக்கும் போக்குடன் தங்கள் சாயலுடனனான மனிதர்களைப் படைத்து, தமது வாழ்க்கைச்சூழலையும் அக்கற்பனை மனிதர்களுக்கு தாரைவார்ப்பவர்களானார்கள் அவர்களில் சிலர் பிரம்பைக் கையிலெடுத்த குருவாக படைப்பு மாந்தர்களை ஆட்டுவித்த கூத்தும் நடந்திருக்கிறது. காலம் மாறியது: யதார்த்தவாதிகள் வந்தார்கள், உண்மையைச் சொல்லவேண்டும், சத்தியத்தை எழுதவேண்டும் எனத் தீர்மானித்தார்கள். ஒரு சம்பவத்தில் அடிப்படையில் அல்லது ஒரு நிகழ்வின் அடிப்படையில் சுற்றியுள்ள சமூகம் எடுக்கும் முடிவுகளுடன் முரண்பட்ட அவர்கள், தங்கள் கலகக் குரலை அல்லது குமுறலை எழுத்தில் பதிவு செய்தார்கள்: மதாம் ல·பார்ழ் என்பவளின் உண்மைவரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட குஸ்தாவ் ப்ளோபெருடைய(Gustav Flaubert) மதாம் பொவாரி (Madame Bovary), பெர்த்தே என்ற இளைஞனின் வாழ்க்கைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஸ்டெந்தால்(Stendhal) எழுதிய சிவப்பும் கறுப்பும்(Le Rouge et Le Noir), சார்லஸ் டிக்கென்ஸ்ஸால் (Charles Dickens) சொல்லப்பட்ட அவரது சொந்த வாழ்க்கையான டேவிட் காப்பர் ·பீல்ட், ·பியோடோர் தாஸ்தோவ்ஸ்கியால்(Fyodor Dostoevsky) பகிர்ந்துகொள்ளப்பட்ட அவரது சைபீரிய சிறைவாழ்க்கை நினைவுகள் (The house of the Dead) ஆகியவற்றை நல்ல உதாரணங்களாகக் கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, பிற்பகுதிவரை அமெரிக்காவில் ஓஹோவென்று கொண்டாடப்பட்ட ட்ரூமன் கப்போட்டுக்கு ஆசைகள் வேறாக இருந்தன. அறிமுகமற்ற மனிதர்களை எழுதுவதைத் தவிர்த்து அசலான மனிதர்களை, அசலானச் சம்பவங்களில் இருத்தி எழுத்தை நகர்த்த விரும்பினார். வெறும் கையில் முழம்போட மனிதருக்கு விருப்பமில்லை. மாங்காய் புளிச்சுதோ வாய்புளிச்சுதோவென்று எதையும் சொல்லிவிடக்கூடாதென்பது இவரது தீர்மானம். உள்ளதைச் உள்ளபடிச் சொல்லவேண்டும், அதை கூட்டவோ குறைக்கவோ கூடாதென்பது கப்போட்டினுடைய எண்ணம். இலக்கியம் வேறு வாழ்க்கைவேறல்ல, வாழ்க்கையே இலக்கியமென ட்ரூமன் கருதினார். மனிதர் எழுதுவதற்கு முன்பாக ஒருவகையான புலனாய்வை மேற்கொண்டார் எனலாம்: சாட்சிகளைத் தேடி அலைந்தார், தடயங்களைத் திரட்டினார். அத்தடயங்களுக்கான வடிவங்கள், எவ்வகைப்பட்டதாயினும், தான் சொல்லும் கதைமீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறதா என்று பார்த்துகொண்டார். இலக்கியத்தின் இப்புதிய வழித்தடங்கூட ஒருவகையான உத்தி, தேவையற்ற சொற்களையும் அலங்காரங்களையும் தவிர்ப்பதும், கேட்டதை அறிந்ததை வாசகனுக்கு வெகு அண்மையில் கொண்டுபோய் நிறுத்துவதுமான பணி.

ட்ரூமன் கப்போட்டைப் பற்றி படித்தபோது அவரது காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் ஆஸ்கார் லெவிஸ் குறித்தும் அறியமுடிந்தது. லெவிஸ் மெக்ஸிகன் குடும்பமொன்றினைக் குறித்து நாவல்கள் எழுதியிருப்பவர்(Five Families; Mexican Case Studies In The Culture Of Poverty, The Children of Sanchez etc..). அவற்றை எழுதியபோது தனது நாவலுக்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடி ஒலிவாங்கியும், ஒலிப்பதிவு உபகரணமுமாக அவர் அலைந்தாரெனக் கேள்வி. அப்படித் திரட்டிய தகவல்கள் அனைத்துமே அப்பழுக்கற்றவையென உருதிபடுத்த முடியாத நிலையில், உரியமுறையில் உண்மையையும் பொய்யையும் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்பை வாசகர்களிடம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் குணம் லெவிஸ¤க்கு உண்டெனச் சொல்லப்படுகிறது. ட்ரூமன் உத்தி ஆஸ்கார் லெவிஸை ஒத்திருந்தாலும், அவரைப்போல ஒலிவாங்கியும், ஒலிப்பதிவுகருவியுமாகச் சாட்சியங்களைத் தேடிப்போனவவர் அல்ல.

ட்ரூமன் கப்போட் ‘நியூயார்க்கர்’ என்ற இதழில் பணிபுரிந்தபோது பதினெட்டு வயது அப்போதே சில சிறுகதைகளை எழுதி அதில் பிரசுரிக்க முயற்சிசெய்திருக்கிறார். Shut a Final Door என்ற சிறுகதைக்கு தமது பத்தொன்பது வயதில் சிறுகதைக்கான ‘ஓ ஹென்றி’ பரிசை வென்றவர். 1944ம் ஆண்டு அவரது முதல் நாவல் ‘Other Voices, Other Rooms வெளிவந்தது. நாவல்களில் மிகப் பிரசித்தமானவை 1958ல் வெளிவந்த ‘Breakfast at Tiffany’s (ட்ரூமனின் பால்ய வயது சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்) மற்றொன்று 1966ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த இரத்த சகதி- ‘In Cold Blood'(2). குறிப்பாக ‘In Cold Blood’ ட்ரூமனின் படைப்பாளுமையை உலகிற்கு வெளிப்படுத்தியதோடு, விற்பனையில் சாதனை புரிந்து பல கோடி டாலர்களை அவருக்கு ஈட்டித்தந்த நாவலென்றும் சொல்லப் படுகிறது. மிகப்பெரிய வெற்றியைத் தொடுகிறபோது, அதற்காகச் சம்பந்தப்பட்டவர் தமது உடல், பொருள் ஆவி அத்தனையையும் தந்ததாகச் சொல்வதில்லையா? ட்ரூமன் கப்போட் நாவலுக்குப் பெற்ற வெற்றியையும் அவ்வாறு ஈட்டியதாகத்தான் சொல்லவேண்டும். ”In Cold Blood’ நாவலை ட்ரூமன் ‘யதார்த்த நவீனம்’ (Roman non fictionnel(3) என அழைக்கிறார். அவரது கூற்றுப்படி, ஒரு ‘புனைவு தன்மையற்ற நாவல்’ என்பது நாவலுக்குண்டான தகுதிகளுடன் உண்மையை மட்டுமே பேசுகிற சொற்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ஓர் ஊடகச் செய்திக்குண்டான உத்தியைக் கையாண்டு, ட்ரூமன் ‘புனைவுகளற்ற நாவலென்று’ கதை அளப்பதாக’, கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் நோர்மன் மய்லர் கடுமையாக விமர்சித்தார்.

ஆர்க்கான்ஸாஸ் நதிநீரைப்போலவும்; அதிவேகச்சாலை மோட்டார்வாகனங்களைப் போலவும்; நெருக்கடியான நேரங்களைத் தவிர்த்து மற்றநேரங்களில் ஸ்டேஷனில் நிற்காத சாந்த்தா ·பே இரயில் பாதையில் ஓடுகிற மஞ்சள்நிற இரயில்களைப் போலவும்; 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினான்காம் தேதிவரை அமெரிக்காவின் கான்ஸஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஹோல்கம்(Holcomb) என்ற சிறிய நகரம் இருக்குமிடம் தெரியாலிருந்தது. அதற்கு மறுநாள் அதாவது 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் அநியாயாமாகத் துப்பாக்கியால் சுடப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். கொலைக்கான தடயங்களும் இல்லை, கொலைக்கான நோக்கமும் புதிராக இருந்தது. உண்மையை அறிவதில் எல்லோரையும்போல ட்ரூமன் ஆர்வம் காட்டுகிறார். கிட்டத்தட்ட ஆறாண்டுகள் அப்பிரச்சினயில் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருவர் பாக்கியின்றி ஹோல்கம் நகரவாசிகள் அத்தனைபேரையும் சந்தித்தார், கேள்விகளைக்கேட்டு பதில்களை வாங்கினார். டிசம்பரில் கொலையாளிகள் பிடிபடுகிறார்கள். அவர்களையும் பரிச்சயம் செய்துகொள்கிறார், நேரிலும் கடித பரிவர்த்தனை ஊடாகவும் குற்றவாளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அவர்களடைய இளமைக்காலங்கள், அவர்கள் குற்றவாளிகளாக உருவெடுத்தற்கான சூழல்கலென விசாரனை பல முனைகளில் செயல்பட்டது. பிறகு வழக்கு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட, அவர்களைத் தேடிச்சென்று, டிக் ஹிக்காக், பெரி ஸ்மித் என்ற இரண்டு கைதிகளின் மன உளைச்சல்களையும், சிறை வாழ்க்கையையும் மிக நுணுக்கமாக, கடைசியாக அவர்களிருவரின் தண்டனை நிறைவேற்றப்படும் நொடிவரை உடனிருந்து பதிவு செய்து எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்குமுந்தைய பத்தியில் கூறியிருந்ததைபோல வெளிவந்த ஆறேழுமாதங்களில் நாவல் மிகப்பெரிய விற்பனைச் சாதனையை புரிந்தது. அன்றைய அமெரிக்காவின் சமூகச் சூழலையும், இருவேறு தரப்பு மக்களையும் இனங் காண உதவிற்று. கொலையுண்ட கிளட்டர் குடும்பம் கால்நடை வளர்ப்பு, பண்ணை விவசாயமென்று வாழ்ந்த நில உடமையாளர்கள் தரப்பைச் சார்ந்த குடும்பம். கொலையாளிகளான டிக்கும், ஸ்மித்தும் வாழ்வாதாரம் தேடி அலைந்து நாடோடிவாழ்க்கையை மேற்கொள்ள சபிக்கப்பட்ட ஏழை அமெரிக்கர்களின் பிரதிநிதிகள். சமுதாயத்தின் இருதுருவங்களென்றிருந்த கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் அகால மரணமே வாய்த்தது என்பதை இங்கே உணர்ந்தாக வேண்டும்.

ட்ரூமனுடைய ‘In Cold Blood’ நாவலை படிக்கிறபோது ஒரு தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கான எல்லா அனுபவங்களும் கிடைக்கின்றன. நாவலின் முதற் பக்கத்தில் ஹோல்கம் நகரத்தை அறிமுகப்படுத்துகிறபோது, அவரது அவதானிப்புக்குள்ள ஆழத்தையும் வீச்சையும் உணரமுடிகிறது. “அதோ தெரியுதே அதுதான்” எனப் பிற கான்ஸஸ் வாசிகளால் அலட்சியமாக அடையாளப்படுத்தப்படும் ஹோல்கம்” என்று தொடங்கி….”பார்த்து சந்தோஷபடவென்று அங்கே என்ன பெரிதாக இருக்கின்றது: ஒழுங்கின்றி எழுப்பப்பட்ட கட்டடங்களை இரண்டாக பிரிக்கின்ற சாந்தா ·பே இரயில் பாதை; அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கிற பண்ணை வீடுகளுக்குத் தெற்கில் பழுப்பு நிறத்தில் நீண்டுக்கிடக்கும் அர்க்கன்ஸாஸ் நதி, வடக்கில் அதிவேகச்சாலை எண்50; கிழக்கிலும் மேற்கிலும் பரந்திருக்கும் புல்வெளிகள், கோதுமை வயல்கள். புழுதி பறக்கும் பெயர் சூட்டப்படாத, செப்பனிடப்படாத, நிராதவராய்க் கிடக்கும் வீதிகள் மழைநாட்களிலும் பனிக்காலங்களில் கொட்டிக்கிடக்கிற பனி உருகும்போதும் சகதியாய்த் தோற்றந்தரும், நகரத்தின் கடைகோடியில் சிமெண்ட்டும்,சுண்ணாம்புமாகப் பூசப்பட்ட பழைய கட்டடம், கூரை முகப்பில் மின்சார ஒளியில் வடிவமைக்கபட்ட ‘Dance’ என்ற பெயர்ப்பலகை, உள்ளே ஆட்டம் எதுவும் நடப்பதில்லை, நிறுத்தபட்டு பலவருடங்கள் ஆகின்றன, எனவே பெயர்ப்பலகைக்கு இருட்டே கதி, மின்சாரத்தில் ஒளிர்ந்த காலமெல்லாம் போயேபோய்விட்டது. அழுக்கடைந்த சன்னலில் ‘Holcomb Bank’ என பொன்னிறத்தில் மின்னும் பெயர்ப்பலகையுடன் அருகில் மற்றொரு கட்டிடம். 1933லேயே வங்கி மூடப்பட்டுவிட்டது, கணக்கெழுத உபயோகித்த அறைகளெல்லாம் இன்றைக்கு குடியிருப்புகளாகிவிட்டன. நகரத்தில் உள்ள இரண்டு தொகுப்பு வீடுகளில், இதுவுமொன்று. மற்றொன்றும் மிகபழைய கட்டடம். உள்ளூர் பள்ளியின் உபயோகத்திலிருப்பதால், அனைவருக்கும் தெரிந்த இடம், ஒரு பக்கம் பள்ளி நிர்வாகம், மற்றொருபக்கம் ஆசிரியர்கள் குடியிருப்பு. ஆனால் பெரும்பாலான வீடுகள் பேதமற்று ஒற்றை தளமும், முன்வளைவு கொண்டவைகளாகவிருக்கின்றன….(பக்கம் -4)

கொலையுண்ட கிளஸ்ட்டர் குடும்பத்தினரைப் பற்றி எழுதுகிறபோதும் சரி, கொலையாளிகளைப் பற்றி எழுதுகிறபோதும் சரி பாரபட்சமற்ற விவரணையை ஆசிரியர் கொடுக்கிறார். குடும்பத்தலைவர் கிளஸ்ட்டர் “இந்த உலகத்தில் தனக்கான தேவை எது என்பதில் தெளிவாய் இருப்பவர் அதை பெறுவற்குண்டான வழிமுறைகளும், அவரிடம் இருந்தன, வயது 48. சராசரி உயரம்….” திருமதி போனி கிளஸ்ட்டர், கிளஸ்ட்டர் குடும்பத்துக்கான சாபம். ட்ரூமனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘நரம்புதளர்ச்சியால் பாதிக்கப்பட்டவள், நெருக்கமானவ்ர்களிடங்கூடம் ஒன்றிரண்டு சொற்களில் உரையாடலை முடித்துகொள்பவள். மூன்று மகள்களில் வீட்டோடு இருக்கும் நான்சி முக்கியமானவள். சமர்த்தானவள், படிப்பில் கெட்டி, நல்ல அழகு; பள்ளி நாடகங்களில் பங்கேற்பவள்; அட்டவணைபடி செயல்படுபவள்; அவளைத்தேடி வருகிற சிறுமிகளுக்கு சமையல் மற்றும் தையல் வேலைபாடுகள் கற்றுத் தருவதும், இசைப்பாடங்களுக்கு உதவுவதும் தன் கடமையென நினைப்பவள்; எனினும் கிளஸ்ட்டர் தனது மகளை கட்டுப்பாடுடன் வளர்க்கிறார். “go study” “engagement rings” போன்ற சொற்கள் அவர் காதில் விழக்கூடாது. அவளது நெருங்கிய தோழி சுசான் கிட்வெல், ஆண் நண்பன் பாபி. அடுத்து, கிளஸ்ட்டருடைய ஒரே மகன் கென்யன் கிளஸ்ட்டர் பதினைந்துவயதில் தகப்பனைக் காட்டிலும் உயரமானவன், திறமைசாலி. மரவேலைகள், பழுதுபட்டவைகளை சரிபார்ப்பது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது என எதையும் செய்வான், ஆனால் கண்களுக்கு கண்ணாடி வேண்டும், இல்லையென்றால் சரியாக வராது. அமைதியாக இருந்த குடும்பம் சட்டென்று ஓரு நாள் இரவு முடிந்துபோகிறது. நூறு கெஜ தூரத்தில் ஸ்டாக்லெய்ன் குடும்பத்தைத்தவிர அடுத்த அரைமல்தூரத்திற்கு வேறு குடியிருப்புகளற்ற தனித்தவீட்டில் அவர்கள் வசிக்க நேர்ந்தது பரிதாபம். கிளஸ்ட்டர் குடும்பத்தின் தொடர்ச்சியாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும், இரண்டு புதுமனிதர்கள்: ஒருவன் டிக் ஹிக்காக் மற்றவன் பெரி ஸ்மித், கடைசியில் நமது இதயத்தை உலுக்கும் கொலை அரங்கேறும் அந்த கொடூர நிமிடங்கள், குற்றத்தை முடித்து தப்பும் கொலையாளிகளோடு ட்ரூமன் கப்போட் நம்மையும் அழைத்துச் செல்கிறார், நிதானமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரி டுவேமீது நமக்கு எரிச்சல் வருகிறது.

இப்படியான குற்றத்திற்க்குக் காரணமென்ன? குற்றவாளிகள் என்பவர் யார்? கப்போட் நாவலை படிக்கிற எவருக்கும் இக்கேள்விகள் எழாமலிருக்க வாய்ப்பில்லை. அநேகமாக கிளஸ்ட்டர் குடும்பம் கொலையுண்ட செய்தியை வாசித்த கப்போட்டும் தம்மனதிற்குள் இக்கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்.. அதற்கான பதில்கள் இந் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறனவா என்பதை வாசகர்களே தீர்மானிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் எதோவொரு கொலையை பற்றிய செய்தியைப் படிக்கிறோம். ஒன்றிரண்டு நிமிடங்கள் அச்செய்தியை உள்வாங்கிக்கொண்டு அடுத்த செய்திக்கு தாவுகிறோம் அடுத்த அரைமணிநேரத்தில் அதை மறந்தும்போகிறோம். பிறகு மீண்டும் ஒருநாள் எதேச்சையாக நடந்த குற்றம் சுவாரஸ்யத்துகுரியதென்றால், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளோ, அவர்களுக்கு வழங்கபட்ட தண்டனையோ ஊடகத்தின் ஊடாக நம் கவனத்துக்கு வரும். பிறகென்ன நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள். சம்பவத்திற்குப் பிறகு குற்றாவாளிகள் எப்படி, கொலையுண்டவர்களின் சுற்றம் எப்படி? அவர்கள் உற்ற பாதகங்கள் என்ன சாதகங்கள் என்ன? சம்பவத்திற்கு முன் சம்பவத்திற்குப் பின் என்று பலவேறு கூறுகளையும் ட்ரூமன் கப்போத் விசாரணைக்கு உட்படுத்துகிறார். உண்மையுடன் ஆத்மார்த்தமாகப் பழகி உரையாடியதன் விளைவு, இலக்கியத்திற்கு ஒரு புதிய வரவாக In Cold Blood கிடைத்தது. துப்பறியும் நாவல் போன்றதொரு மாயை; பொய்யும் புரட்டும்மற்று; அழகு, மணம், வசீகரம், சமூகவியல் பார்வை என அனைத்தும் செறிந்த உன்னத இலக்கியம் In Cold Blood இருமுறை திரைவடிவம் பெற்றிருக்கிறது. முதல் திரைப்படம் ரிச்சர்ட் ப்ரூக்ஸ் இயக்கத்தில் 1967லும், இரண்டாவது திரைப்படம் ஜேனாத்தன் கப்ளன் இயக்கத்தில் 1996லும் வெளிவந்தன.

பிறந்தபோது ட்ரூமன் ஸ்ற்றெக்பஸ் என்று அழைக்கபட்டபோதிலும், தனது தாயாரின் இரண்டாவது கணவரால் தத்தெடுக்கப்பட ‘கப்போட்’ என்ற குடும்பப்பெயர், பத்தாவது வயதில் இவருடன் ஒட்டிக்கொண்டது, அதுமுதல் ட்ரூமன் கப்போட் என அழைக்கபட்டார். ஓரின சேர்க்கை ஆசாமி. தன்னுடைய இலக்கிய திறனையெல்லாம் புகழிற்கும் பணத்திற்கும் ஆசைபட்டு அழித்துக்கொள்டாரென குற்றச் சாட்டு உண்டு. தன்னை விளம்பரபடுத்திக்கொள்ள அத்தனை தந்திரங்களையும் பேற்கொண்டவர். “பணக்காரர்கள் நம்மைப் போன்றவர்களல்ல, அவர்களை நம்மோடு ஒப்பிடமுடியாது, சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும், தொலைகாட்சிகளிலும் அன்றாடம் இடம்பெறுவதிலிருந்து அவர்கள் வேறினம் என்றுதான் சொல்லவேண்டுமென்ற” ஸ்காட் ·பிஜெரால்டோடு ஒத்துபோகிறவர். க்ரெத்தா கர்போ, ஜாக்கி கென்னடி ஆகியவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதும், மர்லின் மன்றோ, லொரென் பக்கால் ஆகியோரோடு நடனமாடுவதும் அவருக்குச் சர்வசாதாரணம். விடுமுறைகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிறுவனமான CBS அதிபரோடும் அவரது மனைவியோடும் கழித்தவர். மது, போதைபொருட்கள் உபயோகம், பால்வினை நோய் என அனைத்திற்கும் இடம் கொடுத்து 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 59வயதில் காலமானார். பென்னெத் மில்லியெ ட்ரூமன் கப்போட்டைப்பற்றிய ஒர் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பார்க்கவேண்டிய ஒன்று. In Cold Blood எழுதபட்டவிதத்தை அதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். கப்போட்டுடைய பால்யவயதோடு தொடர்புடைய சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட A Christmas Memory தொலைகாட்சி திரைப்படமாகவும், Breakfast at Tiffany’s 1961ல் திரைப்படமாகவும் வெளிவந்தன. Other Voices, Other Rooms நாடகமாக மேடயேறியிருக்கிறது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளென கிட்டத்தட்ட இருபத்தைந்து படைப்புகள் ட்ரூமன் கப்போட்டுடைய ஆளுமையால் இலக்கியத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கின்றன.

————————————————————————————————————
1. Truman Capote (1924-1984)
2. In Cold Blood – A true account of a multiple murder and its consequences- Vintage Books, a division of Random house,inc.New york-U.S.A.
3. ‘புனைவு அற்ற நாவல்’ வகைகளுக்கு இலக்கிய உலகில் வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன: ஆவண நவீனம் (Roman-Document), யதார்த்த நவீனம்(Roman non fictionnel), அபுனைவு(Non fiction), நாளிதழ் நவீனம்(Roman journalistique), நாளிதழ்க் குறிப்பு(Journalisme narratif)

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா