இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)

This entry is part of 23 in the series 20081204_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தேடிச் சந்தித்து மகிழ்ந்ததும், விலைகொடுத்தேனும் உரிமை பெற்று சந்தோஷித்ததுமான கணங்கள் கடந்த காலத்திற்கானவை. பிறமனிதர்கள் அல்லது நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதற்ற நொடிகளுடன் வாழ்க்கை என்றாகிவிட்டது. படைப்பாளிகளுக்கோ தங்களிடமிருந்தே தாங்கள் தப்பினால் போதுமென்ற கவலை. வெளியுலகிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு வாழப்பழகிய படைப்பாளிகள் ஒருகட்டத்தில் அலுத்துபோய் தங்கள் உறவை மீண்டும் வெளிமனிதர்களிடம் புதுப்பித்துக்கொள்ளும் தந்திரமே எழுத்தும் அதன் பிரதிகளும். மொழியும், எழுத்தும் தங்கள் தனிமைக்கு ஒளியூட்டக்கூடுமென்பதோடு, பிற மனிதரோடு தம்மை இணைத்துக்கொள்ளவும் உதவுமென நம்பிக்கை. அடைபட்டுக்கிடந்த மனக்கதவுகள் திறக்கப்பட, ஒருவகையாக சுயகாதலினின்று தப்பிக்கும் போக்குடன் தங்கள் சாயலுடனனான மனிதர்களைப் படைத்து, தமது வாழ்க்கைச்சூழலையும் அக்கற்பனை மனிதர்களுக்கு தாரைவார்ப்பவர்களானார்கள் அவர்களில் சிலர் பிரம்பைக் கையிலெடுத்த குருவாக படைப்பு மாந்தர்களை ஆட்டுவித்த கூத்தும் நடந்திருக்கிறது. காலம் மாறியது: யதார்த்தவாதிகள் வந்தார்கள், உண்மையைச் சொல்லவேண்டும், சத்தியத்தை எழுதவேண்டும் எனத் தீர்மானித்தார்கள். ஒரு சம்பவத்தில் அடிப்படையில் அல்லது ஒரு நிகழ்வின் அடிப்படையில் சுற்றியுள்ள சமூகம் எடுக்கும் முடிவுகளுடன் முரண்பட்ட அவர்கள், தங்கள் கலகக் குரலை அல்லது குமுறலை எழுத்தில் பதிவு செய்தார்கள்: மதாம் ல·பார்ழ் என்பவளின் உண்மைவரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட குஸ்தாவ் ப்ளோபெருடைய(Gustav Flaubert) மதாம் பொவாரி (Madame Bovary), பெர்த்தே என்ற இளைஞனின் வாழ்க்கைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஸ்டெந்தால்(Stendhal) எழுதிய சிவப்பும் கறுப்பும்(Le Rouge et Le Noir), சார்லஸ் டிக்கென்ஸ்ஸால் (Charles Dickens) சொல்லப்பட்ட அவரது சொந்த வாழ்க்கையான டேவிட் காப்பர் ·பீல்ட், ·பியோடோர் தாஸ்தோவ்ஸ்கியால்(Fyodor Dostoevsky) பகிர்ந்துகொள்ளப்பட்ட அவரது சைபீரிய சிறைவாழ்க்கை நினைவுகள் (The house of the Dead) ஆகியவற்றை நல்ல உதாரணங்களாகக் கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, பிற்பகுதிவரை அமெரிக்காவில் ஓஹோவென்று கொண்டாடப்பட்ட ட்ரூமன் கப்போட்டுக்கு ஆசைகள் வேறாக இருந்தன. அறிமுகமற்ற மனிதர்களை எழுதுவதைத் தவிர்த்து அசலான மனிதர்களை, அசலானச் சம்பவங்களில் இருத்தி எழுத்தை நகர்த்த விரும்பினார். வெறும் கையில் முழம்போட மனிதருக்கு விருப்பமில்லை. மாங்காய் புளிச்சுதோ வாய்புளிச்சுதோவென்று எதையும் சொல்லிவிடக்கூடாதென்பது இவரது தீர்மானம். உள்ளதைச் உள்ளபடிச் சொல்லவேண்டும், அதை கூட்டவோ குறைக்கவோ கூடாதென்பது கப்போட்டினுடைய எண்ணம். இலக்கியம் வேறு வாழ்க்கைவேறல்ல, வாழ்க்கையே இலக்கியமென ட்ரூமன் கருதினார். மனிதர் எழுதுவதற்கு முன்பாக ஒருவகையான புலனாய்வை மேற்கொண்டார் எனலாம்: சாட்சிகளைத் தேடி அலைந்தார், தடயங்களைத் திரட்டினார். அத்தடயங்களுக்கான வடிவங்கள், எவ்வகைப்பட்டதாயினும், தான் சொல்லும் கதைமீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறதா என்று பார்த்துகொண்டார். இலக்கியத்தின் இப்புதிய வழித்தடங்கூட ஒருவகையான உத்தி, தேவையற்ற சொற்களையும் அலங்காரங்களையும் தவிர்ப்பதும், கேட்டதை அறிந்ததை வாசகனுக்கு வெகு அண்மையில் கொண்டுபோய் நிறுத்துவதுமான பணி.

ட்ரூமன் கப்போட்டைப் பற்றி படித்தபோது அவரது காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் ஆஸ்கார் லெவிஸ் குறித்தும் அறியமுடிந்தது. லெவிஸ் மெக்ஸிகன் குடும்பமொன்றினைக் குறித்து நாவல்கள் எழுதியிருப்பவர்(Five Families; Mexican Case Studies In The Culture Of Poverty, The Children of Sanchez etc..). அவற்றை எழுதியபோது தனது நாவலுக்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடி ஒலிவாங்கியும், ஒலிப்பதிவு உபகரணமுமாக அவர் அலைந்தாரெனக் கேள்வி. அப்படித் திரட்டிய தகவல்கள் அனைத்துமே அப்பழுக்கற்றவையென உருதிபடுத்த முடியாத நிலையில், உரியமுறையில் உண்மையையும் பொய்யையும் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்பை வாசகர்களிடம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் குணம் லெவிஸ¤க்கு உண்டெனச் சொல்லப்படுகிறது. ட்ரூமன் உத்தி ஆஸ்கார் லெவிஸை ஒத்திருந்தாலும், அவரைப்போல ஒலிவாங்கியும், ஒலிப்பதிவுகருவியுமாகச் சாட்சியங்களைத் தேடிப்போனவவர் அல்ல.

ட்ரூமன் கப்போட் ‘நியூயார்க்கர்’ என்ற இதழில் பணிபுரிந்தபோது பதினெட்டு வயது அப்போதே சில சிறுகதைகளை எழுதி அதில் பிரசுரிக்க முயற்சிசெய்திருக்கிறார். Shut a Final Door என்ற சிறுகதைக்கு தமது பத்தொன்பது வயதில் சிறுகதைக்கான ‘ஓ ஹென்றி’ பரிசை வென்றவர். 1944ம் ஆண்டு அவரது முதல் நாவல் ‘Other Voices, Other Rooms வெளிவந்தது. நாவல்களில் மிகப் பிரசித்தமானவை 1958ல் வெளிவந்த ‘Breakfast at Tiffany’s (ட்ரூமனின் பால்ய வயது சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்) மற்றொன்று 1966ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த இரத்த சகதி- ‘In Cold Blood'(2). குறிப்பாக ‘In Cold Blood’ ட்ரூமனின் படைப்பாளுமையை உலகிற்கு வெளிப்படுத்தியதோடு, விற்பனையில் சாதனை புரிந்து பல கோடி டாலர்களை அவருக்கு ஈட்டித்தந்த நாவலென்றும் சொல்லப் படுகிறது. மிகப்பெரிய வெற்றியைத் தொடுகிறபோது, அதற்காகச் சம்பந்தப்பட்டவர் தமது உடல், பொருள் ஆவி அத்தனையையும் தந்ததாகச் சொல்வதில்லையா? ட்ரூமன் கப்போட் நாவலுக்குப் பெற்ற வெற்றியையும் அவ்வாறு ஈட்டியதாகத்தான் சொல்லவேண்டும். ”In Cold Blood’ நாவலை ட்ரூமன் ‘யதார்த்த நவீனம்’ (Roman non fictionnel(3) என அழைக்கிறார். அவரது கூற்றுப்படி, ஒரு ‘புனைவு தன்மையற்ற நாவல்’ என்பது நாவலுக்குண்டான தகுதிகளுடன் உண்மையை மட்டுமே பேசுகிற சொற்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ஓர் ஊடகச் செய்திக்குண்டான உத்தியைக் கையாண்டு, ட்ரூமன் ‘புனைவுகளற்ற நாவலென்று’ கதை அளப்பதாக’, கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் நோர்மன் மய்லர் கடுமையாக விமர்சித்தார்.

ஆர்க்கான்ஸாஸ் நதிநீரைப்போலவும்; அதிவேகச்சாலை மோட்டார்வாகனங்களைப் போலவும்; நெருக்கடியான நேரங்களைத் தவிர்த்து மற்றநேரங்களில் ஸ்டேஷனில் நிற்காத சாந்த்தா ·பே இரயில் பாதையில் ஓடுகிற மஞ்சள்நிற இரயில்களைப் போலவும்; 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினான்காம் தேதிவரை அமெரிக்காவின் கான்ஸஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஹோல்கம்(Holcomb) என்ற சிறிய நகரம் இருக்குமிடம் தெரியாலிருந்தது. அதற்கு மறுநாள் அதாவது 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் அநியாயாமாகத் துப்பாக்கியால் சுடப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். கொலைக்கான தடயங்களும் இல்லை, கொலைக்கான நோக்கமும் புதிராக இருந்தது. உண்மையை அறிவதில் எல்லோரையும்போல ட்ரூமன் ஆர்வம் காட்டுகிறார். கிட்டத்தட்ட ஆறாண்டுகள் அப்பிரச்சினயில் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருவர் பாக்கியின்றி ஹோல்கம் நகரவாசிகள் அத்தனைபேரையும் சந்தித்தார், கேள்விகளைக்கேட்டு பதில்களை வாங்கினார். டிசம்பரில் கொலையாளிகள் பிடிபடுகிறார்கள். அவர்களையும் பரிச்சயம் செய்துகொள்கிறார், நேரிலும் கடித பரிவர்த்தனை ஊடாகவும் குற்றவாளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அவர்களடைய இளமைக்காலங்கள், அவர்கள் குற்றவாளிகளாக உருவெடுத்தற்கான சூழல்கலென விசாரனை பல முனைகளில் செயல்பட்டது. பிறகு வழக்கு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட, அவர்களைத் தேடிச்சென்று, டிக் ஹிக்காக், பெரி ஸ்மித் என்ற இரண்டு கைதிகளின் மன உளைச்சல்களையும், சிறை வாழ்க்கையையும் மிக நுணுக்கமாக, கடைசியாக அவர்களிருவரின் தண்டனை நிறைவேற்றப்படும் நொடிவரை உடனிருந்து பதிவு செய்து எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்குமுந்தைய பத்தியில் கூறியிருந்ததைபோல வெளிவந்த ஆறேழுமாதங்களில் நாவல் மிகப்பெரிய விற்பனைச் சாதனையை புரிந்தது. அன்றைய அமெரிக்காவின் சமூகச் சூழலையும், இருவேறு தரப்பு மக்களையும் இனங் காண உதவிற்று. கொலையுண்ட கிளட்டர் குடும்பம் கால்நடை வளர்ப்பு, பண்ணை விவசாயமென்று வாழ்ந்த நில உடமையாளர்கள் தரப்பைச் சார்ந்த குடும்பம். கொலையாளிகளான டிக்கும், ஸ்மித்தும் வாழ்வாதாரம் தேடி அலைந்து நாடோடிவாழ்க்கையை மேற்கொள்ள சபிக்கப்பட்ட ஏழை அமெரிக்கர்களின் பிரதிநிதிகள். சமுதாயத்தின் இருதுருவங்களென்றிருந்த கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் அகால மரணமே வாய்த்தது என்பதை இங்கே உணர்ந்தாக வேண்டும்.

ட்ரூமனுடைய ‘In Cold Blood’ நாவலை படிக்கிறபோது ஒரு தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கான எல்லா அனுபவங்களும் கிடைக்கின்றன. நாவலின் முதற் பக்கத்தில் ஹோல்கம் நகரத்தை அறிமுகப்படுத்துகிறபோது, அவரது அவதானிப்புக்குள்ள ஆழத்தையும் வீச்சையும் உணரமுடிகிறது. “அதோ தெரியுதே அதுதான்” எனப் பிற கான்ஸஸ் வாசிகளால் அலட்சியமாக அடையாளப்படுத்தப்படும் ஹோல்கம்” என்று தொடங்கி….”பார்த்து சந்தோஷபடவென்று அங்கே என்ன பெரிதாக இருக்கின்றது: ஒழுங்கின்றி எழுப்பப்பட்ட கட்டடங்களை இரண்டாக பிரிக்கின்ற சாந்தா ·பே இரயில் பாதை; அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கிற பண்ணை வீடுகளுக்குத் தெற்கில் பழுப்பு நிறத்தில் நீண்டுக்கிடக்கும் அர்க்கன்ஸாஸ் நதி, வடக்கில் அதிவேகச்சாலை எண்50; கிழக்கிலும் மேற்கிலும் பரந்திருக்கும் புல்வெளிகள், கோதுமை வயல்கள். புழுதி பறக்கும் பெயர் சூட்டப்படாத, செப்பனிடப்படாத, நிராதவராய்க் கிடக்கும் வீதிகள் மழைநாட்களிலும் பனிக்காலங்களில் கொட்டிக்கிடக்கிற பனி உருகும்போதும் சகதியாய்த் தோற்றந்தரும், நகரத்தின் கடைகோடியில் சிமெண்ட்டும்,சுண்ணாம்புமாகப் பூசப்பட்ட பழைய கட்டடம், கூரை முகப்பில் மின்சார ஒளியில் வடிவமைக்கபட்ட ‘Dance’ என்ற பெயர்ப்பலகை, உள்ளே ஆட்டம் எதுவும் நடப்பதில்லை, நிறுத்தபட்டு பலவருடங்கள் ஆகின்றன, எனவே பெயர்ப்பலகைக்கு இருட்டே கதி, மின்சாரத்தில் ஒளிர்ந்த காலமெல்லாம் போயேபோய்விட்டது. அழுக்கடைந்த சன்னலில் ‘Holcomb Bank’ என பொன்னிறத்தில் மின்னும் பெயர்ப்பலகையுடன் அருகில் மற்றொரு கட்டிடம். 1933லேயே வங்கி மூடப்பட்டுவிட்டது, கணக்கெழுத உபயோகித்த அறைகளெல்லாம் இன்றைக்கு குடியிருப்புகளாகிவிட்டன. நகரத்தில் உள்ள இரண்டு தொகுப்பு வீடுகளில், இதுவுமொன்று. மற்றொன்றும் மிகபழைய கட்டடம். உள்ளூர் பள்ளியின் உபயோகத்திலிருப்பதால், அனைவருக்கும் தெரிந்த இடம், ஒரு பக்கம் பள்ளி நிர்வாகம், மற்றொருபக்கம் ஆசிரியர்கள் குடியிருப்பு. ஆனால் பெரும்பாலான வீடுகள் பேதமற்று ஒற்றை தளமும், முன்வளைவு கொண்டவைகளாகவிருக்கின்றன….(பக்கம் -4)

கொலையுண்ட கிளஸ்ட்டர் குடும்பத்தினரைப் பற்றி எழுதுகிறபோதும் சரி, கொலையாளிகளைப் பற்றி எழுதுகிறபோதும் சரி பாரபட்சமற்ற விவரணையை ஆசிரியர் கொடுக்கிறார். குடும்பத்தலைவர் கிளஸ்ட்டர் “இந்த உலகத்தில் தனக்கான தேவை எது என்பதில் தெளிவாய் இருப்பவர் அதை பெறுவற்குண்டான வழிமுறைகளும், அவரிடம் இருந்தன, வயது 48. சராசரி உயரம்….” திருமதி போனி கிளஸ்ட்டர், கிளஸ்ட்டர் குடும்பத்துக்கான சாபம். ட்ரூமனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘நரம்புதளர்ச்சியால் பாதிக்கப்பட்டவள், நெருக்கமானவ்ர்களிடங்கூடம் ஒன்றிரண்டு சொற்களில் உரையாடலை முடித்துகொள்பவள். மூன்று மகள்களில் வீட்டோடு இருக்கும் நான்சி முக்கியமானவள். சமர்த்தானவள், படிப்பில் கெட்டி, நல்ல அழகு; பள்ளி நாடகங்களில் பங்கேற்பவள்; அட்டவணைபடி செயல்படுபவள்; அவளைத்தேடி வருகிற சிறுமிகளுக்கு சமையல் மற்றும் தையல் வேலைபாடுகள் கற்றுத் தருவதும், இசைப்பாடங்களுக்கு உதவுவதும் தன் கடமையென நினைப்பவள்; எனினும் கிளஸ்ட்டர் தனது மகளை கட்டுப்பாடுடன் வளர்க்கிறார். “go study” “engagement rings” போன்ற சொற்கள் அவர் காதில் விழக்கூடாது. அவளது நெருங்கிய தோழி சுசான் கிட்வெல், ஆண் நண்பன் பாபி. அடுத்து, கிளஸ்ட்டருடைய ஒரே மகன் கென்யன் கிளஸ்ட்டர் பதினைந்துவயதில் தகப்பனைக் காட்டிலும் உயரமானவன், திறமைசாலி. மரவேலைகள், பழுதுபட்டவைகளை சரிபார்ப்பது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது என எதையும் செய்வான், ஆனால் கண்களுக்கு கண்ணாடி வேண்டும், இல்லையென்றால் சரியாக வராது. அமைதியாக இருந்த குடும்பம் சட்டென்று ஓரு நாள் இரவு முடிந்துபோகிறது. நூறு கெஜ தூரத்தில் ஸ்டாக்லெய்ன் குடும்பத்தைத்தவிர அடுத்த அரைமல்தூரத்திற்கு வேறு குடியிருப்புகளற்ற தனித்தவீட்டில் அவர்கள் வசிக்க நேர்ந்தது பரிதாபம். கிளஸ்ட்டர் குடும்பத்தின் தொடர்ச்சியாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும், இரண்டு புதுமனிதர்கள்: ஒருவன் டிக் ஹிக்காக் மற்றவன் பெரி ஸ்மித், கடைசியில் நமது இதயத்தை உலுக்கும் கொலை அரங்கேறும் அந்த கொடூர நிமிடங்கள், குற்றத்தை முடித்து தப்பும் கொலையாளிகளோடு ட்ரூமன் கப்போட் நம்மையும் அழைத்துச் செல்கிறார், நிதானமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரி டுவேமீது நமக்கு எரிச்சல் வருகிறது.

இப்படியான குற்றத்திற்க்குக் காரணமென்ன? குற்றவாளிகள் என்பவர் யார்? கப்போட் நாவலை படிக்கிற எவருக்கும் இக்கேள்விகள் எழாமலிருக்க வாய்ப்பில்லை. அநேகமாக கிளஸ்ட்டர் குடும்பம் கொலையுண்ட செய்தியை வாசித்த கப்போட்டும் தம்மனதிற்குள் இக்கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்.. அதற்கான பதில்கள் இந் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறனவா என்பதை வாசகர்களே தீர்மானிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் எதோவொரு கொலையை பற்றிய செய்தியைப் படிக்கிறோம். ஒன்றிரண்டு நிமிடங்கள் அச்செய்தியை உள்வாங்கிக்கொண்டு அடுத்த செய்திக்கு தாவுகிறோம் அடுத்த அரைமணிநேரத்தில் அதை மறந்தும்போகிறோம். பிறகு மீண்டும் ஒருநாள் எதேச்சையாக நடந்த குற்றம் சுவாரஸ்யத்துகுரியதென்றால், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளோ, அவர்களுக்கு வழங்கபட்ட தண்டனையோ ஊடகத்தின் ஊடாக நம் கவனத்துக்கு வரும். பிறகென்ன நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள். சம்பவத்திற்குப் பிறகு குற்றாவாளிகள் எப்படி, கொலையுண்டவர்களின் சுற்றம் எப்படி? அவர்கள் உற்ற பாதகங்கள் என்ன சாதகங்கள் என்ன? சம்பவத்திற்கு முன் சம்பவத்திற்குப் பின் என்று பலவேறு கூறுகளையும் ட்ரூமன் கப்போத் விசாரணைக்கு உட்படுத்துகிறார். உண்மையுடன் ஆத்மார்த்தமாகப் பழகி உரையாடியதன் விளைவு, இலக்கியத்திற்கு ஒரு புதிய வரவாக In Cold Blood கிடைத்தது. துப்பறியும் நாவல் போன்றதொரு மாயை; பொய்யும் புரட்டும்மற்று; அழகு, மணம், வசீகரம், சமூகவியல் பார்வை என அனைத்தும் செறிந்த உன்னத இலக்கியம் In Cold Blood இருமுறை திரைவடிவம் பெற்றிருக்கிறது. முதல் திரைப்படம் ரிச்சர்ட் ப்ரூக்ஸ் இயக்கத்தில் 1967லும், இரண்டாவது திரைப்படம் ஜேனாத்தன் கப்ளன் இயக்கத்தில் 1996லும் வெளிவந்தன.

பிறந்தபோது ட்ரூமன் ஸ்ற்றெக்பஸ் என்று அழைக்கபட்டபோதிலும், தனது தாயாரின் இரண்டாவது கணவரால் தத்தெடுக்கப்பட ‘கப்போட்’ என்ற குடும்பப்பெயர், பத்தாவது வயதில் இவருடன் ஒட்டிக்கொண்டது, அதுமுதல் ட்ரூமன் கப்போட் என அழைக்கபட்டார். ஓரின சேர்க்கை ஆசாமி. தன்னுடைய இலக்கிய திறனையெல்லாம் புகழிற்கும் பணத்திற்கும் ஆசைபட்டு அழித்துக்கொள்டாரென குற்றச் சாட்டு உண்டு. தன்னை விளம்பரபடுத்திக்கொள்ள அத்தனை தந்திரங்களையும் பேற்கொண்டவர். “பணக்காரர்கள் நம்மைப் போன்றவர்களல்ல, அவர்களை நம்மோடு ஒப்பிடமுடியாது, சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும், தொலைகாட்சிகளிலும் அன்றாடம் இடம்பெறுவதிலிருந்து அவர்கள் வேறினம் என்றுதான் சொல்லவேண்டுமென்ற” ஸ்காட் ·பிஜெரால்டோடு ஒத்துபோகிறவர். க்ரெத்தா கர்போ, ஜாக்கி கென்னடி ஆகியவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதும், மர்லின் மன்றோ, லொரென் பக்கால் ஆகியோரோடு நடனமாடுவதும் அவருக்குச் சர்வசாதாரணம். விடுமுறைகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிறுவனமான CBS அதிபரோடும் அவரது மனைவியோடும் கழித்தவர். மது, போதைபொருட்கள் உபயோகம், பால்வினை நோய் என அனைத்திற்கும் இடம் கொடுத்து 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 59வயதில் காலமானார். பென்னெத் மில்லியெ ட்ரூமன் கப்போட்டைப்பற்றிய ஒர் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பார்க்கவேண்டிய ஒன்று. In Cold Blood எழுதபட்டவிதத்தை அதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். கப்போட்டுடைய பால்யவயதோடு தொடர்புடைய சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட A Christmas Memory தொலைகாட்சி திரைப்படமாகவும், Breakfast at Tiffany’s 1961ல் திரைப்படமாகவும் வெளிவந்தன. Other Voices, Other Rooms நாடகமாக மேடயேறியிருக்கிறது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளென கிட்டத்தட்ட இருபத்தைந்து படைப்புகள் ட்ரூமன் கப்போட்டுடைய ஆளுமையால் இலக்கியத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கின்றன.

————————————————————————————————————
1. Truman Capote (1924-1984)
2. In Cold Blood – A true account of a multiple murder and its consequences- Vintage Books, a division of Random house,inc.New york-U.S.A.
3. ‘புனைவு அற்ற நாவல்’ வகைகளுக்கு இலக்கிய உலகில் வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன: ஆவண நவீனம் (Roman-Document), யதார்த்த நவீனம்(Roman non fictionnel), அபுனைவு(Non fiction), நாளிதழ் நவீனம்(Roman journalistique), நாளிதழ்க் குறிப்பு(Journalisme narratif)

Series Navigation