எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)

This entry is part of 52 in the series 20081120_Issue

வே.சபாநாயகம்1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.

2. உனக்கென – உன்னுடையது எனத்தக்க ஒரு தனித்தன்மை இருக்குமானால் அதை எழுது. அப்படி ஒன்றும் இல்லையானால் அதை நீ பெற்றாக வேண்டும். திறமை என்பது மிகுந்த பொறுமையின் விளைவு. நீ எழுத மேற்கொண்ட பொருளைப்பற்றி ஆழ்ந்து அதிக நேரம் எண்ணிப்பார். அதன் பின்பு வேறெவரும் கண்டுணராததை – வெளியிலே சொல்லாததைப் பற்றி எழுது. எதிலுமே ஆய்ந்து பாராத – அகழ்ந்து காணாத பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம், யாராவது கண்டு எண்ணியதை நம் நினைவிலே கொண்டுதான் எதையுமே பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். மிகமிக அற்பமான பொருள் எனப்படுவதில்கூட நமக்குத் தெரியாதது ஒன்று இருக்கத்தான் செய்யும். நாம் அதனைக் கண்டு பிடிக்கவேண்டும். எரியும் தீப்பிழம்பையோ, எதிரே
நிற்கும் பசுமரத்தையோ வருணிக்க முற்படும்போது அந்தப் பிழம்பும் மரமும் எவருக்குமே சொல்லாத புதுக்கருத்தை – விளக்கத்தை நமக்குத் தரும் வரை அவற்றின் முன்பு நாம் நிற்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் ‘நம்முடையது’ என்று ஒன்றைத் தரும் நிலைமையை அடைய முடியும்.

3. கடையொன்றின் முன்புறத்திலே உட்கார்ந்திருக்கும் ஒரு வணிகனை யும், புகைபிடித்தபடி நிற்கும் வாயில் காவலன் ஒருவனையும், ஒரு குதிரை லாயத்தையும் பார்ப்பதாக நினைத்துக் கொள். ஒரு திறமை மிக்க ஓவியன் வணிகனையும், வாயிற்காப்போனை யும் நம் கண்முன் காட்டுவது போல் வருணிக்க வேண்டும். அவர்களது உள்ளப் போக்கு களையும் எழுத்திலே வடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவ்விருவரை யும் வேறு பல வணிகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையில் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு உன்னுடைய படைப்பு இருக்க வேண்டும்; அதைப் போல வண்டியிழுக்கும் அந்த ஒரு குதிரையை முன்னும் பின்னும் ஐம்பது குதிரைகள் நிற்கும்போது கூட பிரித்துணரக்கூடிய வகையில் ஒரு வார்த்தையாலே இலக்கணம் வகுத்து எழுது.

4. ஒரு நாவலுக்கு உரிய ஒரு நல்ல விஷயம் எடுத்த எடுப்பிலேயே மொத்தமாகவும், ஒரே உந்தலிலும் வருகிறதோ அதுதான் தாய்க்கருத்து. அதிலிருந்துதான் மற்ற எல்லாம் பெருக்கெடுத்து வழிகின்றன. இதையோ அதையோ ஏதாவது எழுதிவிட அவ்வளவு சுதந்திரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் தன் விஷயத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கி றான் என்பதல்ல. இதைத்தான் பொதுமக்களும் விமர்சகர்களும் அறிந்து கொள்வதில்லை. விஷயத்துக்கும் ஆசிரியரது சுபாவத்துக்கும் இடையே ஏற்படுகிற ஒருமைப்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கிறது பெரும் படைப்புகளின் வெற்றிரகசியம்.

(இன்னும் வரும்)

Series Navigation