புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2

This entry is part of 45 in the series 20081009_Issue

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.


கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். உலகில் முதன்முதலாக மனித கரங்களால் எழுதப்பட்ட இலக்கியம் என்று கருதப்படும் இந்த சுமேரிய இலக்கியம் கலாநிதி தியாகராஜாவினால் ஆங்கில மொழிமூலமாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய நாட்டில் உருக் என்ற நகரை தாபித்து ஆண்ட மன்னன் கில்கமேஷ். அவனது வரலாறு அவனது ஆட்சிக்காலத்திலேயே இதிகாசக் கதைகளாக சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. பின்னர் எழுந்த அக்காடியர்களால் கி.மு.2200-1800 காலப்பகுதியில் கில்கமேஷ் காவியம் அக்காடிய மொழியில் பெயர்க்கப்பட்டு களிமண் சாசனங்களில் எழுதிப் பேணப்பட்டது. 19ம் நூற்றாண்டில் அகழ்வாராய்;ச்சியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புதையுண்டு கிடந்த நகரங்களை அகழ்ந்து வெளிக்கொண்டுவரும் வேளை, இந்தக் களிமண் சாசனங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டன. கில்கமேஷ் காவியத்தை ஒரு வீரசாகசக் கதையாக, அறநிலை உணர்த்தும் கதையாக, துன்பியல் நாடகமாக பல்வேறு மட்டங்களில் மதிப்பிடப்படலாம். சாதாரணமான அன்றாட வாழ்வுக்கு அப்பால் வித்தியாசமான அனுபவங்களைச் சந்திக்க விரையும் மனிதசுபாவம், அறிவை விரிவாக்கிக் கொள்ள விழையும் உந்துதல், இறவாமல் என்றுமே நிரந்தரமாக வாழக்கூடிய வழியைத் தேடும் ஆர்வம், இறுதியில் மனிதவாழ்வின் நிலையாமையை உணரும்போது ஏற்படும் ஏமாற்றம் இவற்றின் அடிப்படையில் அமைந்ததே கில்கமேஷ் காவியம்.

ஈழத்தமிழருக்குப் பிறந்த மண்ணிலே கிட்டாத பல வாய்ப்புக்கள் புகுந்த மண்ணிலே கிட்டியுள்ளன. தொழில் பெறச் சுதந்திரமும், அடுத்த தலைமுறையினருக்கு வளமான உயர்கல்வி வாய்ப்புக்களை எவ்விதத் தரப்படுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இன்றி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் வழங்க வாய்ப்புக்கிட்டியது. புகுந்த நாட்டின் தேசிய மொழியைக் கற்று அதன் பலத்துடன் தொழில்வாய்ப்புப் பெற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது அந்தத் தேசிய இனத்துடன் சில எல்லைகள் வரையாவது சென்று கலந்துறவாடும் புதிய அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலே தாம் கற்ற அந்நாட்டுத் தேசிய மொழிகளுக்கூடாக அவர்களது இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் மொழிபெயர்ப்பாளர் என்ற இடைத்தரகரின்றி நுகரும் வாய்ப்பினையும் புலம்பெயர்ந்த தமிழர் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் பெற்றிருக்கிறார்கள். அதன் வழியாக புகலிட நாட்டின் வளமான புதிய இலக்கிய உலகுக்குள் சாவதானமாகச் சஞ்சரிக்க அவர்களால் முடிகின்றது.

பிரான்சில் வாழும் ஒரு தமிழ் படைப்பாளியால் விக்டர் ஹியூகோ, அலெக்சாண்டர் டூமாஸ், மாப்பசான், போல் சார்த்தர் ஆகியோருடைய இலக்கிய மேதமைக்குள் மொழிபெயர்ப்புகளுடாகவன்றி நேரடியாகவே நுழைந்து பார்க்க முடிகின்றது. இதனால் மற்றையோருக்கு தாயகத்தில் எட்டாக்கனியான சுவையான பல இலக்கிய உணர்வுகளையும் சுகானுபவங்களையும் கண்டு உணர்ந்து தமது படைப்புக்களுள் புகுத்தவும் புலம்பெயர்ந்தோரால் முடிகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் அந்த அழியா இலக்கியங்களையும் இலக்கிய மேதைகளையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிக்கேற்ப தமிழிலும் பதிந்துவைக்க முடிகின்றது. இந்த அதி உன்னதமான வாய்ப்பினை புலம்பெயர்ந்த அனைவரும் பெற்றிருந்தபோதிலும், எம்மவரில் ஒருசிலரே அதனை உணர்ந்து உள்வாங்கி, பதிவாக்கி வரலாறாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

அ.முத்துலிங்கம் கனடாவில் தற்போது வாழ்ந்துவரும் ஈழத்துப் படைப்பாளி. உலகத்தமிழ் இலக்கியங்களையும் எமது கவனஈர்ப்பைப் பெறவெண்டிய படைப்பாளிகளையும் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பாரிய பணியை அவர் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் செய்துவருகின்றார். கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது. என்ற இவரது நூல் சென்னை, உயிர்மை பதிப்பக வெளியீடாக 2006இல் வெளிவந்திருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் உலகத்து இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பதிவுசெய்யும் இந்நூலில், தன் எழுத்தாள நண்பர்களிடம் சமீபத்தில் அவர்களைக் கவர்ந்த புத்தகம் என்ன, அது ஏன் கவர்ந்தது என்று கேட்டு அவர்களது பகிர்தலை இங்கு நூலாக்கியிருக்கிறார். இதில் அம்பை, சாரு நிவேதிதா, இரா.முருகன், காஞ்சனா தாமோதரன், பி.ஏ.கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, வாசந்தி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், பொ.கருணாகரமூர்த்தி, மாலன், அ.முத்துலிங்கம், பாவண்ணன், ஷோபாசக்தி, சுகுமாரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய 20 படைப்பாளிகள் தத்தமது விருப்பத்துக்குரிய உலக இலக்கிய நூல்களைப் பற்றிய உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கின்றனர்.

வியத்தலும் இலமே என்பது அ.முத்துலிங்கம் எழுதிய மற்றுமொரு நூல். நாகர்கோவில்: காலச் சுவடு பதிப்பகம், 2006இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. தமிழ் இலக்கியத்துக்கு உலகத்துப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் முயற்சி இது. இது ஒரு நேர்காணல்களின் தொகுப்பு. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள், எளிதில் அகப்படாத புகழ்பெற்ற இவர்கள் தமிழர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர்கள். மிகச்சுவாரஸ்யமான இவர்களது நேர்காணல்கள் வாசகர்களை பரந்ததொரு உலகவாசிப்பிற்கு இட்டுச்செல்கின்றது. அமினாட்டா ஃபோர்னா, அகில் சர்மா, டேவிட் செடாரிஸ், டேவிட் பெஸ்மோஸ்கிஸ், கிறிஸ் ஃபிலார்டி, மொகமட் சஸீகு அலி, ஷ்யாம் செல்வதுரை, ஜெனி வீவ், ஜோர்ஜ் எல்ஹார்ட், வார்ரென் கரியோ, டேவிட் ஓவன், டீன் கில்மோர், மேரி ஆன் மோகன்ராஜ், மார்கிரட் அட்வூட், டேவிட் செடாரிஸ், ரோபையாஸ் வூல்ஃப், ஃபிராங்க் மக்கொர்ட், பிரிஸ்கி காஃவ்மன், எலெய்ன் பெய்லீன், அலிஸ் மன்றோ ஆகிய இருபது பேரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. புலம்பெயர் வாழ்வியலில் தான் சந்தித்த இவர்களைத் தமிழ் வாசகனுக்கும் அறிமுகமாக்கும் பணி புலம்பெயர் வாழ்வியலின் வழியாகவே இவருக்கு எளிதில் கைகூடியது எனலாம்.

புகலிட வாழ்வில், எம்மில் பலர் இன்னமும் தாயக நினைவுகளில் முற்றாக மூழ்கி அந்த உலகிலேயே 25 வருடங்கள் கழிந்த நிலையிலும் விடாப்பிடியாகச் சஞ்சரித்துக்கொண்டும் இலக்கியம் படைத்துக்கொண்டும் வாழ்கின்றார்கள். தமது அந்நிய மொழியறிவை தொழில்வாய்ப்புக்காக மாத்திரமன்றி, இலக்கிய நுகர்விற்காகவும் விருத்தியாக்கி ஈழத்து சமகாலத் தமிழ் இலக்கியங்களை புகலிட மொழிகளில் கொண்டுசென்று சேர்க்க முயலவேண்டும். அதே போல புகலிட இலக்கியங்களையும் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்த வேண்டும். எம்மால் இது முடியாது போகுமிடத்து அடுத்த தலைமுறையினருக்காவது இதற்கான பயிற்சியையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

புகலிடத்தில் தற்போதுள்ள வாழ்வியல் சூழலில் பன்னாட்டு இலக்கியங்கள் தமிழில் வெளிவருவதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றன. புகலிடத் தமிழ்க் குழந்தைகள் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் தத்தம் வதிவிட நாடுகளில் தேசிய மொழிகளில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதனால், அவர்கள் பல புகலிட இலக்கியங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுகின்றார்கள். இதுவரை காலமும் தாயகத்தில் கிடைத்திராத ஒரு இனிய அனுபவத்தை இந்த இரண்டாம் தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் உலகெங்கிலும் இருந்து பெற்று வருகின்றார்கள்.

ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, டேனிஷ் என்ற பல்வேறு மொழிகளிலும் வழங்கும் இலக்கியங்களை அவர்கள் நேரடியாகச் சுவைக்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது. ஓரளவு தமிழிலும் அவர்கள் புலமை பெற்றவர்களாக இருந்தால், அவற்றைத் தமிழாக்கும் வாய்ப்பையும், தமிழில் உள்ள இலக்கியங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கும் ஞானத்தையும் அவர்கள் காலக்கிரமத்தில் பெறுவார்கள் என்பது உண்மை. இத்தகைய சிறுவர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் புகலிடத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகள் பட்டறைகளை ஒழுங்கு செய்து வருவதாகவும் செய்திகள் கிட்டுகின்றன. இது ஒரு ஆக்கபூர்வமான விடயமாகும்.

பன்னாட்டு இலக்கியங்களில் செழுமைபெற்ற படைப்புகளை மூல மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குச் சுவைகுன்றாது கொண்டுவந்து சேர்த்த புலம்பெயர்ந்து சென்ற எம்மவரைப் பற்றியே அதிகம் இங்கு பேசியுள்ளோம். தமிழரின் வரலாற்று மூலங்களைத் தேடி உலகில் மூலை முடுக்குகளில் தேடல் தாகத்துடன் வலம்வரும் எம்மவர் பலரைப்பற்றியும் இங்கு ஒரு பதிவுக்காகக் குறிப்பிடலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் ஆய்வுப்ப்பணியாற்றும் கலாநிதி முருகர் குணசிங்கம் உலகெங்கினும் உள்ள ஆய்வு நூலகங்களுக்குள் நுழைந்து அங்கு பேணப்பட்டுவரும் ஈழத்தமிழரின் வரலாற்று மூலாதாரங்களைத் தேடிக்கண்டறிந்து அவற்றை மீளவும் எமக்குப் படையலாக்கி வருவதை அவரது அண்மைக்கால நூல்களிலிருந்து அனைவரும் அறியக்கூடியதாக உள்ளது.

முன்னர் ஒரு காலத்தில் தவத்திரு தனிநாயகம் அடிகள் தனது வுயஅடை ஊரடவரசந என்ற தமிழியல் ஆய்வு இதழில், நியூசிலாந்தில் தமிழ் பெயர் பொறித்த கப்பலில் பயன்படுத்தப்படும் பெரிய மணியொன்றினைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு நியுசிலந்தின் வெலிங்டன் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான ஆ.தா.ஆறுமுகம் விரிவான ஆய்வினைத் தொடங்கினார். நியுசிலாந்தின் மௌரியர்கள் எனப்படும் பழங்குடியினர் வாழும் பிரதேசமொன்றிலிருந்து கிழங்கு அவிப்பதற்கான ஏதனமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மணியை – அந்தத் தமிழ்மணி பற்றியும் (வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த மணிக்கும் வுயஅடை டீநடட என்றுதான் பெயரிட்டுள்ளார்கள்). அதனோடு ஒட்டியதாக 15ம் நூற்றாண்டில் அங்கு சுயபடயn பகுதியில் புதையுண்ட மரக்கலம் ஒன்று பற்றியும், அதிலிருந்த பிரித்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பட்டயமொன்று ஆய்வாளர்களால் அங்கு தொலைக்கப்பட்டது பற்றியும் பல சுவையான தகவல்களைத் தன் தேடலின்போது பெற்றுக்கொண்டார். இத்தகவல்களையெல்லாம் நியுசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலாகவும் தந்திருக்கிறார். இந்த மணியும் இந்த மரக்கலத்திற்கு உரியதென்பதே ஆய்வாளரின் கருத்தாகும். நியுசிலாந்தின் ஊhசளைவ ஊhரசஉh என்ற இடத்தில் காணப்படும் றுநமய Pயளள குகை ஓவியங்களையும் தமிழர் சார்ந்ததாக நிறுவ முனையும் திரு ஆ.தா.ஆறுமுகம்;, அதற்கு ஆதாரமாக அவ்வோவியங்களில் செறிந்து காணப்படும் திரிசூலக் குறியையும், கவனத்திற்கெடுத்துள்ளார். நியுசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற இந்நூல் ஜனவரி 2007இல் நியுசிலாந்தின், வெலிங்டன் தமிழ்ச்சங்க வெளியீடாக மலர்ந்துள்ளது. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்து தெல்லிப்பளை மேற்கில் வளர்ந்து. இளவாலையில் திருமணம் செய்த தமிழாசிரியரான பண்டிதர் ஆறுமுகம், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மு-ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய 1985இல் ஓய்வுபெற்றவர். தற்போது நியுசிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்றார்.

முதலாம் தலைமுறையினரின் தமிழ்சார்ந்த பணிகளுக்குத் தாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்று இரண்டாம் தலைமுறையினரும் இன்று புலம்பெயர் நாடுகளில் புறப்பட்டுவிட்டார்கள். சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ச் சங்கங்களை அமைப்பதிலிருந்து, தமிழின் பெருமையையும் அதன் ஆழமான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தமது பள்ளித் தோழர்களான பிறமொழியினருக்குத் தெரிவிப்பதுவரை அவர்கள் களமிறங்கிவிட்டார்கள் என்று தெரிகின்றது. இதற்கு புகலிடத்தில் இயங்கிவரும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் மேலும் சுதந்திரமான களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன.

மலரும் மொட்டுக்கள் என்ற தலைப்பில் 2005இல் ஒரு நூல் வெளியிடப்பட்டிருந்தது. நடாமோகன் நடாத்தும் லண்டன் தமிழ் வானொலி நிகழ்வுகளில் பங்குகொண்ட சிறுவர்கள் இணைந்து படைத்த 125 பக்கம் கொண்ட நூல் இதுவாகும். இதில் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களால் தத்தம் புகலிட நாட்டுத் தேசிய மொழிகளில் வழக்கிலிருந்த குட்டிக்கதைகள் உள்வாங்கப்பட்டு தமிழில் அவை லண்டன் தமிழ் வானொலியில் மலரும் மொட்டுக்கள் என்ற சிறுவர் நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டன. ஐரோப்பிய ஸ்கன்டிநேவிய பாடசாலைகளில் பயிலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் இந்நிகழ்ச்சியில் ஆவலுடன் இணைந்து தத்தம் கதைகளை வானொலியின் வாயிலாக வழங்கினார்கள். உலகத்து நாட்டார் கதைகளும், தமிழில் அதுவரை அறியப்படாத பல நீதிக்கதைகளும் இவ்வகையில் தமிழில் நுழைய வாய்ப்பினை லண்டன் தமிழ் வானொலி வழங்கியிருந்தது. இப்படி படிக்கப்பட்ட 92 குட்டிக்கதைகள் இந்நூலில் நிகழ்ச்சித் தலைப்பையே நூலின் தலைப்பாகக்கொண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. ஜேர்மனி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பரம. விசுவலிங்கம் அவர்களின் விதப்புரையுடன்கூடிய இந்நூல் கொழும்பில் அச்சிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இளைய தலைமுறையினரின் படைப்புக்களில் மற்றுமொரு மைல்கல்லாக அமைவது ஜேர்மனியிலிருந்து முற்று முழுதாக ஜேர்மன் மொழியில் வெளிவந்திருக்கும் னுநை டநஉமநசந வயஅடைளைஉhந முரஉhந டீ லெக்கர தமிழிஷ குஷ்ஷ்ஷ என்ற தலைப்பிலான ஒரு அழகான படைப்பு. தமிழில் சுவையான தமிழ் உணவுகள் என்றும் இந்நூலுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பிலும், முகவுரையிலும், சமையல் குறிப்பின் தலைப்புகளிலும் மாத்திரமே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்று முழுதாக ஜேர்மன் வாசகரையும், ஜேர்மன் மொழி தெரிந்த தமிழ் இளந்தலைமுறையினரையும் கருத்திற்கொண்டே இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை எழுதியவர் ஜோர்ஜ் டயஸ் என்ற இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த புகலிடத் தமிழ் இளைஞர் ஒருவர். தாயார் புஷ்பராணி ஜோர்ஜ் ஏற்கெனவே ஈழத்து ஆக்க இலக்கியத்துறையில் அறிமுகமானவர். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பராணி ஜோர்ஜ் 1988இல் தன் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்து வாழ்ந்து வருகின்றார்.

ஜோர்ஜ் டயசின் நூலின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ முற்று முழுதான சமையல் கலை நூல் என்ற உணர்வினை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் இந்த நூலை ஆழமாக உள்வாங்கும்போது, ஈழத்துத் தமிழரின் சுவையான சமையல் கலையை மாத்திரம் ஜேர்மனியர்களுக்குப் புரிய வைக்கும் நூல் இது அல்ல என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதற்கும் பல படிகள் மேலாகச் சென்று, ஈழத்தமிழரின் வரலாறு, பண்பாடு, குழழன உரடவரசந என்று கூறப்படும் உணவுக் கலாச்சாரத்தை புகலிடமொன்றின் அந்நியருக்கு அதுவும் – அவர்களின் தாய்மொழியில் வழங்குவதனூடாக – ஈழத்தமிழரின் விழுமியங்களை பெருமைமிகு வாழ்வியல் வழிமுறைகளை, பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் உணவுப் பழக்கவழக்கங்களை இந்நூல் புரியவைக்கின்றது.

இந்நூலின் முன்னுரையில் ஜோர்ஜ் டயஸ் குறிப்பிட்டுள்ள வாசகம் என்னைக் கவர்ந்தது.

“பிற பண்பாட்டைச் சேர்ந்தவர்களுடன் சரிக்குச் சமமாகத் தலைநிமிர்ந்து அவர்களுக்கு எம் மரபுப் பண்புகளையும் சம்பிரதாயங்களையும் எங்கள் கண்டுபிடிப்புகளையும் எம் வெற்றிகளையும் அறிமுகப்படுத்துவது பிறநாட்டவர்களுக்கும் நன்மை பயப்பதுடன் எமக்கும் ஆத்மதிருப்தியையும் பெரு மகிழ்வையும் தருமென்பது திண்ணம்”
என்று குறிப்பிடும் ஜோர்ஜ் டயஸினது அறிமுக வாசகம் – அது ஒரு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை இளைஞன் ஒருவனிடமிருந்து வெளிவருவதால்- மிகுந்த அவதானத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றது.

இலங்கைத் தமிழரின் வாழிடமும் பண்பாடும் எனத் தொடங்கும் நூலின் அறிமுகப் பக்கம் ஜேர்மன் வாசகருக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் தாயகத்தின் நிலவமைப்பையும் தாவர வளத்தையும் அவர்கள் விட்டு வந்துள்ள செழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் வண்ணப் படங்களுடன் சுருக்கமாக விளக்குகின்றது. அதையடுத்து சிங்களத்தையும் சிங்களவரின் பண்பாட்டையும் சிறிது கூறி, தமிழரின் மொழியை அதன் வரிவடிவங்களை கோடிட்டுக்காட்டி, அவர்களது வாழ்வியல் அறிமுகத்திற்கு வருகின்றது. அதையடுத்து இலங்கையும் அதில் தமிழரின் வாழிடப் பிரதேசமும் என்ற பகுதி வரைபட, புகைப்பட உதவியுடன்; இரத்தினச் சுருக்கமாக, தமிழரின் தாயகத்தை விளக்கி விரிகின்றது. ஈழத்தின் தாவர வளம், விலங்கு வளம் பற்றிய புகைப்படத் தொகுப்புடன் தொடரும் இந்நூல் தொடர்ந்து தமிழர் கலாச்சாரம் பற்றி அவர்களது மரத்தடி வழிபாடு பற்றி, கிடுகு வேலிப் பாரம்பரியம் பற்றி, திருமணத்தில் தாலி பற்றி ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு அந்நிய தேசமொன்றின் வாசகரை தான் முற்றும் அறிந்திராத தமிழரின் தாயகத்தின் கிராமமொன்றுக்கு மானசீகமாக அழைத்துச் செல்கின்றது.

இப்படியாக பல்வேறு யுத்திகளினூடாக, படிப்படியாக வாசகரை சமையலறை வரை நகர்த்திச் செல்லும் ஜோர்ஜ் டயஸ் இப்பொழுது தமிழரின் நளபாகத்தின் முக்கிய அங்கமான வாசனைத் திரவியங்கள், சுவையூட்டும் தானியங்கள் பற்றிக் குறிப்பிட வருகிறார். ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனி வாசனைத் திரவியங்களுக்கு வழங்கி தெளிவாக அவற்றை விளக்கிச் செல்கிறார். மிளகாய் என்ற பக்கத்தில் செத்தல் மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பசுமைமிகு புகைப்படங்களாகத் தந்திருப்பதுடன் பழுத்துக் குலுங்கும் மிளகாய்ச்செடிகளையும் படம்பிடித்து அதன் மூலத்தையும் வாசகருக்கு அறிவிக்கிறார். இப்படியே இஞ்சி, மஞ்சள், வெந்தயம், மிளகு, மரக்கறிகள், தேங்காய், வாழை, பனை, பழங்கள் என்று தான் பின்னர் தனது உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்போகும் பதார்த்த வகைகளுக்கான மூலப்பொருட்களை அதன் பிறப்பிடத்திலிருந்து வாசகருக்கு விளக்கிவைத்திருக்கும் ஜோர்ஜ் டயஸின் இந்தச் சுவையான தமிழ் உணவுகள் என்ற நூலை வெறும் சமையல் கலை நூல் என்று மாத்திரம் குறிப்பிடவே முடியாதுள்ளது. ஜோர்ஜ் டயஸ் இந்நூலை உருவாக்கியதற்கான காரணத்தையும் தன் முன்னரையில் தெளிவாக முன் வைக்கிறார். இந்நூலின் உருவாக்கத்தின் நோக்கம், எம் தமிழ்ப் பாரம்பரியத்தின், உன்னத சமையற் கலையையும், அதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் குறிப்பாக, எமது பிராந்தியங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ குணாம்சம் பொருந்திய பலசரக்கு வகைகள், தானியங்கள், பல்வேறு கீழைத்தேய மரக்கறி வகைகள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் முதலியவற்றையும், பாரம்பரிய தமிழர் சமையற்கலையின் சிறப்பையும் மேம்பாட்டையும் பிறநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன் அதன் மூலம் அவர்களுக்கு எமது முன்னோர்கள் தேடி வைத்த ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகளையும் புதிய சக்தியையும் மகிழ்ச்சியையும் எற்படுத்துவதே இந்நூலின் படைப்பாளி ஜோர்ஜ் டயஸ், இப்பாரிய பணியை முன்நின்று நடத்தி முடித்தமைக்குக் காரணம் என்கிறார். உலகில் மிக நாகரிகமான உணவுப் பழக்கங்களை மேலை நாட்டவரே கொண்டுள்ளனர் என்ற மாயையை இந்நூல் குறைந்த பட்சம் ஜேர்மனியரிடையேயாவது அவர்களது மொழியிலேயே விளக்கி அதை நீக்கி வைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது. ஜேர்மனியர்களின் பார்வையில் தமது நாட்டில் அகதிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர் என்ற ஒரு இனம் பற்றிய விரிவான பார்வையை இந்நூல் புகலிடத்தில் உருவாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முருகர் குணசிங்கம், நியுசிலாந்தின் ஆ.தா.ஆறுமுகம்;, டென்மார்க்கின் தர்மகுலசிங்கம், ஜேர்மனியின் சரவணபவான், லண்டனின் என்.செல்வராஜா, பின்லாந்தின் உதயணன் போன்று இன்னும் பலர் தத்தம் புகலிட தேசங்களில் இருந்துகொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சுய நிதிவளத்துடன், தனி மனித முயற்சிகளாகப் பல தமிழியல் ஆய்வுகளையும், இலக்கியத் தேடல்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரினதும் பணிகள் விரிவான பதிவுக்குள்ளாக்கப்படவேண்டியவையாகும். நாளை அவர்களது வழித்தோன்றல்களும் தமது முன்னோரின் பாதையில் அதையே செய்வார்கள். அதே வேளை நம்மில் ஒருசாரார் இலக்கிய மேடைகளிலும், கைக்கெட்டும் சஞ்சிகைகளிலும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாரதி தானாகச் சொல்லாத வார்த்தைகளை அவனே சொன்னதாக முழங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்;- இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு.

முற்றும்

Series Navigation