இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)

This entry is part of 45 in the series 20081009_Issue

வெங்கட் சாமிநாதன்


தமிழின் சங்கப் பாடல்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும் ஜைனமும் தான்.) மொழி வேறாயினும் இரண்டு தொகுப்புக்களின் பாடல்களும் சாதாரண மக்களின் காதல் வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றன. இரண்டு இலக்கியங்களுமே நன்கு வளர்ந்துள்ள இலக்கிய மரபுகளைத் தம்முள் கொண்டுள்ளன. இவை பேசும் கருப்பொருள், சொல்முறை, கவிதைக்கூறுகள், வாழ்க்கை அம்சங்கள் போன்றவையும் இரண்டிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. மலரைத் தேடி அலையும் வண்டுகள், மழைப் பருவம், பயணத்தில் இருக்கும் மக்கள் இவற்றைக் குறிக்கும் உவமைகளும் குறியீடுகளும் கூட தமிழ், பிராகிருத மொழி கவிஞர்களை ஒற்றுமைப்படுத்துகின்றன.

அனேக கவிஞர்களின் பெயர்களில் கூட ஒற்றுமை காணப்படுவதைக் குறிப்பிடவேண்டும். இவை தமிழ்ப் பெயர்கள் அல்ல. ஜைனப் பெயர்கள்.( உதாரணமாக, கபிலர், வன்மீகியார், கேசவனார், கருவூர் பவுத்திரனார்…..) ஒரு வேளை தமிழ் நாட்டுக்கு வந்த ஜைனர்கள், அவர்கள் பேணும் ஜனபாத பரிக்ஷா விதிக்கும் கடமையாக, தமிழ் கற்றுத் தேர்ந்து தமிழ் கவிதை இலக்கியத்துக்கும் தம் பங்களிப்பு செய்தார்களோ. (உதாரணமாக, தாமோதரனார், உருத்திரனார், நாகனார், கேசவனார், மல்லனார், சல்லியம் குமாரனார், பூதனார்….. ) தமிழ் அகப்பாடல்களில் காணும் நிறைய கவிஞர்களின் பெயர்கள் காதாசப்த சதியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை ஜைன பௌத்த பெயர்கள் தாம். சிலருடைய பெயர்களோடு அவர்களின் கோத்திரங்களின் பெயர்களும் பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளன .(உதாரணமாக, காசிபன் கீரனார், வாதுளி நற்சேந்தனார், கோசிகன் கண்ணனார், கௌனியன் பூதத்தனார் ….) கோத்திரத்தின் பெயரை தம் பெயரோடு இணைத்துக்கொள்ளும் வழக்கம் அன்றைய தமிழ் வாழ்க்கையில் இருந்ததில்லை. இதிலிருந்து பெறப்படும் செய்தி, தமிழ் நாட்டுக்கு வந்த ஜைன முனிவர்கள் தமிழ் கற்றது மட்டுமல்லாமல், தம் இலக்கிய மரபுகளையும் தமிழுக்குச் சேர்த்தனர், தமிழ் இலக்கியத்துக்கும் கணிசமான பங்காற்றியிருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில், அதாவது கிட்டத்தட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை, வடமொழியான சமஸ்கிருத இலக்கியமே கூட, தன் கவிதையில் இம்மாதிரியான இலக்கியக் கூறுகளை, கவிதை மரபுகளைத் தன்னுள் கொண்டிருக்கவில்லை. அன்று வரைய சமஸ்கிருத மொழிக் கவிதை, எளிமையானது, வர்ணனைகள் கொண்டது, தீவிர கதை சொல்லும் பாங்கிலானது அவற்றில் சொல்லாமற் சொல்லும் தொனியோ, குறியீட்டு மரபுகளோ இருந்ததில்லை.

எனவே, பரதமுனி தன் நாட்டிய சாஸ்திரத்தை இயற்றிய போது, அவரது புகழ் பெற்ற ரசங்கள் பற்றிய சித்தாந்தத்தை உருவாக்க அவருக்கு உதவியிருக்கக்கூடியது பிராகிருத மொழியின் காதா சப்த சதியில் காணும் கவிதைக் கூறுகளும், மரபுகளுமே அன்றி, சமஸ்கிருத மொழியின் கவிதைகள் அல்ல. ஏனெனில், அக்கால கட்டத்தில் சமஸ்கிருத கவிதை காதல் உலகைப் பற்றிப் பேசத் தொடங்கவில்லை. பரதமுனி பரவசத்தோடு குறிப்பிடும் நகக் குறிகள், பற்குறிகள், சிவனின் காதல் விளையாட்டுக்கள், எட்டு வகை நாயகிகள் எல்லாம் அக்கால கட்டத்து சமஸ்கிருத கவிதையிலிருந்து பெறப்பட்டிருக்கமுடியாது. அந்த வகை காதல் வாழ்க்கை உலகம் பிராகிருத கவிதைகளிலிருந்து தான், குறிப்பாக காதா சப்த சதியிலிருந்து தான் வெளிப்படத் தொடங்கியது. காதல் வாழ்க்கையில் இத்தகைய கவிக்கூறுகள் முதன் முதலில் சமஸ்கிருத கவிதை இலக்கியத்தில் காணத் தொடங்கியது காளிதாஸனின் காவியங்களிலிருந்து தான். காளிதாசன் காதா சப்த சதியின் காலத்துக்குப் பின் வந்தவன் தான். திரும்பவும், காஷ்மீரத்திலிருந்து வந்த ஆனந்த வர்த்தனர் தன் த்வன்யலோகம் நூலில், சிறப்பித்துப் பேசியுள்ளதும், எல்லா உயர் கவிதைக்குமே ஆத்மா என்றே சொல்லத்தகுந்த த்வனி என்ற சித்தாந்தமே காதா சப்த சதியை ஆதாரித்துத் தான் எழுந்துள்ளது.

பிராகிருதத்தைத் தவிர, இந்திய துணைக்கண்டத்தில் இத்தகைய உலகம் விரிவது தமிழில் காணும் அகப்பாடல்களில் தான். இவற்றுக்கு ஆதரிசமாகவும் இருந்தது மட்டுமல்லாமல், ஒரு வேளை தாமும் தம் பங்களிப்பைத் தந்துள்ளவர் ஜைனர்கள். தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றியதும், ஒரு ஜைனர் தான். அவர் சங்க காலக் கவிதைகளுக்கும் மட்டும் அல்ல, சங்கக் கவிதைகளுக்கு முன்னோடியோ அல்லது உடன்நிகழ் காலத்ததோ ஆன காதா சப்த சதிக்கும் மட்டும் கடன் பட்டவர் அல்ல. (இவை இரண்டிலும் காணும் வாழ்க்கைக் கூறுகளும், கவிதைக் கலைக் கூறுகளும் பொதுமைத்தானவை.) பரதரின் நாட்டிய சாஸ்திரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், பின் ஜைனர்கள் இயற்றிய மாபுராணம், பூத புராணம் போன்றவையும் அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன. தொல்காப்பியர், பிராகிருத இலக்கியம் வளர்த்துள்ள ஹியதி என்றும் பரமாதா சித்தாந்தங்களுக்கு இணையாக உள்ளுறை, இறைச்சி என்னும் சித்தாந்தங்களை முன் வைக்கிறார், ஜைனர்களின் விதி, துறவு போன்ற சித்தாந்தங்களிலும் நம்பிக்கை உடையவர். அதேபோல ஜைனர்கள் நம்புவது போலவே இல்லற இன்பமும், களவொழுக்க இன்பமும் கடைசியில் துறவுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் நம்புகிறார். இறையனார் களவியல் உரை இயற்றிய இன்னொரு இலக்கண ஆசிரியரான நக்கீரரும், தொல்காப்பியரைப் பின்பற்றி களவொழுக்கமும் காம உணர்வுகளும் உத்தரகுருவுக்கு மனித ஜீவனை இட்டுச் செல்லும் பாதைகள் தாம் என்று அவற்றைச் சிறப்பித்து நியாயப் படுத்துகிறார். உத்தர குரு கந்தர்வர்கள் வாழுமிடம். ஜைனர்கள் அடைய விரும்பி, கொண்டாடும் ஸ்வர்க்க பூமி. ஜைனர்கள் பார்வையில் துறவு நிலை கசப்பானது தான். அக்கசப்பு மருந்துக்கு பூசப்பட்ட இனிப்பு தான் காமம் என்று காமத்திற்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

காதா சப்த சதி பேசும் காதல் உணர்வு நிறைந்த உலகை ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சமஸ்கிருத கவிதை எடுத்தாளத் தொடங்குகிறது. இதற்கு முன்னாலேயே காளிதாசனின் சாகுந்தலம், குமார சம்பவம் போன்ற காவியங்களும் காதல் உலகைச் சித்தரிப்பவை தான். இருந்தாலும், காதா சப்த சதி போன்றே சமஸ்கிருதத்திலும் அமரு சதகம் என்றொரு தொகுப்பிலிருந்து தான் சமஸ்கிருத கவிதை காதல் உணர்வுகளை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது.

உதாரணமாக, பிராகிருதத்திலும், தமிழிலும் காணப்பட்ட காதல் வாழ்க்கைக் காட்சிகளுக்கும், கூறுகளுக்கும் இணையாக கீழ்க்கண்ட சமஸ்கிருத கவிதைகளைச் சொல்லலாம்.

“இனி எப்போது சந்திப்போம்?”
யாரும் அறியாது?
(கேட்பது தலைவன்)

“அவள் பதில் பேச இயலவில்லை
அவர்களைச் சுற்றி இருந்தனர்
எண்ணற்றவர். அவனை ஏறிட்டு நோக்கி
தன் கையிலிருந்த தாமரை இதழ்களை
குவித்து மௌனித்திருந்தாள்”

(இரவில் என்று குறிப்புணர்த்தப்படுகிறது) (261. தண்டியின் காவ்ய தர்சனம்)

இன்னொன்று: யாரும் அறியாது காதலனைக் காணச் செல்வதாக எண்ணிச் சென்றால் நிலவு பார்த்து விட்டதே என்று சலித்துக் கொள்ளும் காதலி

சலங்கைகளும் உறங்கி விட்டன
அயலாரும் உறங்கி விட்டனர்
வெளியே மெத்தென காலெடுத்து வைத்தேன்
காஷ்மீரத்துப் பாவையின் ஸ்தனம் போல்
ஒளிவீசிப் பார்த்திருக்கும் இப்பாதகன்
சந்திரனும் (834. சுபாஷித ரத்னகோசம்)

இதே சலிப்பை வெளியிட்டு அலுத்துக்கொள்ளும் தலைவி ஒருத்தியை சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில் நாம் பார்த்து விட்டோம்.

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புல்கிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே (நெடு வெண்ணிலவினார் – குறுந்தொகை 47)

இதே உணர்வுகளை பிராகிருத காதா சப்தசதியிலும் வெளியிடுகிறாள் இரவில் தன் காதலனைத் தேடிச் செல்லும் ஒரு மங்கை

முன்பொரு நாள்
ராகு கொய்தானே
இம்மூடன் தலையை
திருந்துவானில்லை.
பகைவன் இவன்
காதல் கன்னியருக்கு.
கொண்டு செல்லட்டும்
இப்பாவி தலையை
இன்னொரு முறை (515. காதா சப்தசதி)

ஆனால் இவ்வகப்பாடல்களின் மரபு காதா சப்தசதி மூலம் சமஸ்கிருத கவிதைக்கு வந்து சேர்ந்த ஏழாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், சுதந்திரமான இம்மரபு தமிழில் இலக்கணச் சட்டகங்களாக ஆக்கப்பட்டுவிட்டன. கவிஞனின் இயல்பான கவித்வ வெளிப்பாடு, இலக்கணமாக விதிக்கப்பட்டு விடவே அவை கவிஞர்களால் மீறப்படவேண்டியவைகளாகிவிட்டன. அன்னிய மதப் போதகர்களும் துறவிகளும் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரம் மக்களிடையே விரோத உணர்வைத் தூண்டின. இதன் காரணமாக, ஹிந்து மதம் புணருத்தாரணம் பெற்று மக்களிடையே திரும்ப செல்வாக்கு பெறத் தொடங்கியது. தெய்வம் தூர நின்று வரம் அளிக்கும் ஒன்றாக அல்லாது ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு மிக நெருங்கிய ஒருவனாகக் காணப்படத்தொடங்கியது. அகப்பாடல்களிலிருந்து பரிணாமம் பெற்ற பார்வையாக கடவுள் காதலனாக கற்பிக்கப்படுதல் மதுர பக்தி எனப்பட்டது. மன்னனின், கொடை வள்ளல்களின் புகழ் பாடும் புறப்பாடல்களிலிருந்து பெற்ற பரிணாமம் தான் கடவுளுக்குத் தன்னை அடிமையாக பாவிக்கும் தாஸ்ய பக்தி எனப்பட்டது. அகப்பாடலகளில் தலைவனக் குறிக்கும் பெயர் சொல்லப்படாத ‘அவன்’ தான், பக்திப் பாடல்களில் தெய்வத்தைக் குறிக்கும் ‘அவன்’ ஆக பரிணாமம் அடைந்தது. அதே போல தலைவனின் காதலுக்கு ஏங்கும் தலைவியைக் குறிக்கும் ‘அவள்” கடவுளின் அருளுக்கு ஏங்கும் பக்தன் தன்னைப் பெண்பாலாகக் கற்பித்துக் கொண்டு ‘அவள்’ ஆகிறான்,. தலைவனுக்கும் தலைவிக்கு இடையே தூது செல்லும் அகப்பாடற் ‘சகி’யின் இடத்தை பக்தனைக் கடவுளின் பாதங்களுக்கு இட்டுச் செல்லும் ஆசார்யன் எடுத்துக்கொள்கிறான். பெரும்பாலும், கண்ணனோ, முருகனோ, சிவனோ ஆன ‘அவனுடன்’ கவிஞனும் பக்தனுமான ‘அவள்’ நேராகவே பேசிவிடுகிறான். இடையே சகி வருவதில்லை பெரும்பாலும்.

உதாரணத்திற்கு திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாசுரத்தைப் பார்க்கலாம்

தஞ்சம் இவர்க்கென் வளையும் நில்லா:
நெஞ்சமும் தம்மதே, சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி,
வாய்திறந் தொன்று பணித்ததுண்டு
நஞ்ச முடைத்திவர் நோக்கும் நோக்கம்;
நானிவர் தம்மை யறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்றிவர் ஆர்கொல்? என்ன:
அட்டபுயகரத் தேன் என்றாரே. ( பெரிய திருமொழி, திரிபுரம் – 1126 )

அகப்பாடலகளில் குறிப்பிடப்படும் அதே ‘அவன்’-ம் ‘அவள்’-ம் தான். தன் காதலனுக்காக ஏங்கும் தலைவியின் கைகளில் நில்லாது நழுவும் அதே வளையல்கள் தான். இவர்களையும் இந்த கைகளில் தங்காது நழுவி விழும் வளையல்களையும் முன்னர் காதா சப்தசதியிலும் அகப்பாடல்களிலும் பார்த்தோம். இங்கு காதலுக்கு ஏங்கித் தவிக்கும் ‘அவள்’ இடத்தில் இருப்பது கவிஞன். கவிஞன் தன்னை ‘அவள்’-ஆக கற்பித்துக்கொள்வது மட்டுமல்லாமல், தனக்கு திருமங்கை என்று பெண்பால் பெயரையும் சூட்டிக் கொள்கிறான்.

வெங்கட் சாமிநாதன் (தொடரும்)

Series Navigation