பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

lமுனைவர் மு.இளங்கோவன்


lபேரன்புடையீர் ஐயா வணக்கம்.
திண்ணை கண்டேன்.மகிழ்ச்சி.
பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை சிறப்பு.ஈழத்தில் வழக்கில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை நன்கு அறிமுகம் செய்துள்ளார்.

நாட்டுப்புறப்பாடல்கள் என்ற வகையில் மக்களிடம் அறிமுகமாகத் தக்க காதல்,பக்தி சார்ந்த பாடல்களே இதுவரை நாட்டுப்புறப்பாடகர்களால் திரைப்படம், வானொலி,தொலைக்காட்சிகளில் பாடப்பட்டுள்ளனவே தவிர உழைக்கும் பெரும்பான்மை
மக்களின் கலைவெளிப்பாடுகளான நடவுப்பாடல்கள்,ஒப்பாரிப்பாடல்கள் சரியாக இன்னும் அறிமுகம் ஆகாமல் உள்ளன. இப்பாடல்களைப்பதிவு செய்தபொழுது பல்வேறு இலக்கண, இலக்கியக்கூறுகள்,வடிவங்கள் உள்ளமையை அறியமுடிகின்றது.

சிங்கப்பூரிலும்,மலேசியாவிலும் நாட்டுப்புறப்பாடல்களின் துணையோடு நான் தமிழ் இலக்கண வகுப்புகளை நடத்தியபொழுது அனைவரும் வியந்தனர். நம் மரபும் தமிழ் இலக்கணக்கூறுபாடுகளும் பொதிந்துள்ள ஒப்பாரிப்பாடல்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் பரவிவாழும் இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளமை ஒப்பீட்டு ஆய்வுக்குத்துணை செய்யும்.
கட்டுரையாளர்க்குப் பாராட்டு.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

முனைவர் மு.இளங்கோவன்



தமிழ் செவ்வியல்மொழி என்பதை நிலைநாட்ட நமக்குப் பெருந்துணையாக இருப்பன தொல்காப்பியமும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்படும் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம்,மணிமேகலை,இறையனார் களவியல் உரை, முத்தொள் ளாயிரம் முதலிய நூல்களும் ஆகும்.இந்நூல்களைப் பதிப்பித்தும்,கற்றும், உரை எழுதியும்,பயிற்றுவித்தும் சங்க நூல்கள் நிலைபெறுவதற்குத் தமிழறிஞர்கள் பலரும் பல நிலைகளில் துணைநின்றுள்ளனர்.அவர்களுள் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா, மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார், மறைமலையடிகள்,நாவலர் சோமசுந்தர பாரதியார், பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்,வ.சுப.மாணிக்கம், மு.வரதராசனார், தி.வே.கோபாலையர்,தமிழண்ணல் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அயல்நாட்டு அறிஞர்களுள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி,இராமானுசம், கமில்சுவலபில்,மார்,அலெக்சாண்டர் துபியான்சுகி, கார்ட் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்நதவர்கள்.

அடுத்த தலைமுறையில் சோ.ந.கந்தசாமி, கு.வெ.பாலசுப்பிரமணியன், சி.பாலசுப்பிரமணியன்,அ.தட்சணாமூர்த்தி, பே.க.வேலாயுதம், பெ.மாதையன் முதலானவர்கள் மிகச்சிறந்த சங்க இலக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர்.சங்க இலக்கிய ஆய்வுகள் இன்று அழகப்பா பல்கலைக்கழகம்,கேரளப்பல்கலைக் கழகங்களிலும்,அயல்நாட்டுக்கல்வி நிறுவனங்கள் சிலவற்றிலும் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டும் வருகின்றது.

அவ்வகையில் இலங்கையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கலைக் கழகத்தில் பணிபுரியும் அம்மன்கிளி முருகதாசுவின் முனைவர்பட்ட ஆய்வேடு அண்மையில் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்(2006) என்னும் பெயரில் குமரன் புத்தக இல்லம் வழி வெளிவந்துள்ளது.

சங்க நூல்களைப் பல்வேறு கோணங்களில் இந்நூல் அலசி ஆராய்ந்துள்ளது.சங்க நூல்களில் காணப்படும் திணை,துறை பற்றி இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டாலும் இவ்வாய்வின் ஊடாக வேறுபல தகவல்களும் ஆய்வோட்டத்தின் ஊடே வெளிப்பட்டுள்ளன. இளைஞர்கள் மேலாய்வுகள் நிகழ்த்தவும் பல்வேறு சிந்தனைகள்,ஆய்வுப்புலங்கள் ஆய்வாளரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அகம்,புறம் எனப் பாடுபொருளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சங்க நூல்களில் இடம்பெறும் திணை,துறை பற்றி விரிவான ஆய்வுச்செய்திகளை இவ்வாய்வேடு தாங்கியுள்ளது.பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்த்தப் பெற்றுள்ள இவ்வாய்வேட்டில் சங்கச்சமூகத்தினை ஆய்வாளர் அடையாளப்படுத்தத் தவறவில்லை. இந்த ஆய்வேடு ஆறு பகுதிகளாகவும்,பத்து அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை ஆய்வேட்டின் சிறப்பினைத் தொகுத்துரைத்துள்ளது.

பகுதி 1

01. ஆய்வுப்பிரச்சினைகள்
02. ஆய்வு மூலங்கள்

பகுதி 2

03. தொல்காப்பியம் சுட்டும் கவிதைப்பொருள் மரபு
04. சங்க இலக்கியத்தின் கவிதைப்பொருள் மரபு

பகுதி 3

05. புறத்திணைப்பாடல்களின் திணை,துறை வகுப்புமுறைச் சிக்கல்கள்
06. புறப்பாடல்களின் திணை,துறை அமைப்பும் அவை சுட்டும் சமூகமும்
07. பாடுநர் வேறுபாடுகளும் பாடல் முறைமைகளும்

பகுதி 5

08. கவிதையாக்க மரபில் மாற்றங்கள் :அகமும் புறமும் பகுப்பும் இணைவும்
09. ஐங்குறுநூறு,கலித்தொகை பரிபாடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

பகுதி 6

10. கவிதைகளின் திணை விரிவாக்கமும் அதன் பின்புலமும்
நிறைவாகத் தொகுப்புரை இடம்பெற்றுள்ளது.

சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் என்னும் இந்நூலின் தொடக்கத்தில் சங்க நூல்களை எந்த நோக்கில் ஆய்வுசெய்ய உள்ளார் என்பதை முகப்பிலேயே அறிமுகம் செய்கின்றார்.திணைக்கோட்பாடு சங்க இலக்கியத்தில் பயிலப்பட்டுள்ள தன்மைகளை விளக்கும் நூலாசிரியர், திணை என்ற சொல் சங்கநூல்களில் பல்வேறு பொருள்களில் ஆளப்பட்டுள்ளதை விவரித்துள்ளார். திணை என்பது தொடக்கத்தில் நிலத்தைக் குறித்தது.பின்னர் அவ்வந்நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், ஒழுக்கத்தைக் குறிப்பனவாகவும் மாறத்தொடங்கியது.அதுபோல் நிலம்மும் தொடக்கத்தில் நால்வகையாகப் பகுக்கப்பட்டதையும்,பின்னர் ஐந்து நிலமாகக் குறிப்பிடும் மரபும் உண்டானதையும் குறிப்பிட்டுள்ளார். நானிலவர்( ம.கா.128),நானாடு(பொ.ஆ.226) என்று வழங்கும் பாடலடிகளைக் காட்டி நிலம் நான்காகப் பகுக்கப்பட்டமையைச் சுட்டும் அம்மன்கிளி அவர்கள் மதுரைக்காஞ்சியில் ஐம்பாற்றிணை(326) என்று வருவதைக்காட்டித் திணை மரபுகளின் மாறுதலுறும் காலத்தையும்,சூழலையும் விளக்குவது இவ்வாய்வேட்டின் சிறப்புக் கூறுகளுள் ஒன்றாகச்சொல்லலாம்.

சங்க நூல்களில் சில திணை வகுக்கப்பட்டும்,சில பின்னாளில் உரையாசிரியர்களாலும்,பதிப்பாசிரியர்களாலும் வகுக்கப்பட்டும் உள்ளன.அகநானூறு,புறநானூறு,நற்றிணை என்பன திணைப்பாகுப்பட்டனைக் கொண்டுள்ளதைக் குறிப்பிடும் அம்மன்கிளி அவர்கள் ஐங்குறு நூறு,கலித்தொகையில் திணை வகுப்பைத் தெளிவாக உணரமுடியும் என்கிறார்.நற்றிணை,குறுந்தொகையில் திணை வகுக்கும் முயற்சி இராசம் பதிப்பின்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் ஆய்வாளர்.

சங்க நூல்களில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் தொல்காப்பியம் அடிப்படையில் திணைவகுப்பதில் சிக்கல் உள்ளது எனவும் முதல்,கரு,உரிப்பொருள் அடிப்படையில் திணைவகுத்துள்ள சில பாடல்களை எடுத்துக்காட்டி ஒரே உரிப்பொருள் உடைய இரண்டு பாடல்களை எடுத்துக்காட்டி ஒன்று உரிப்பொருள் அடிப்படையில் நெய்தல்திணையிலும், கருப்பொருள் அடிப்படையில் மருதத் திணையிலும் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டி(குறுந்.4, குறுந்.202) திணைப்பாகுபாடு செய்வதில் உள்ள இடையூறுகளை ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.( ப.13,14).

சங்கம்,சங்க நூல் தொகுப்பு ,சங்கநூல் பெயர்கள்,உள்ளடக்கச் செய்திகள்,அந்த அந்த நூல்களின் சிறப்புகள் ஆய்வாளரால் நுட்பமுடன் காட்டப்பட்டுள்ளன. தம் கருத்துகளையும் ஆய்வுப்பொருளையும் வலிவுடையதாக்கவும்,துல்லியப்படுத்தவும் அறிஞர் க.கைலாசபதி அவர்களின் கருத்துகளை மேற்கோளாக ஆண்டுள்ளார்.

அகநானூற்றில் 200 வரலாற்றுக் குறிப்புகளும்,நற்றிணையில்59 வரலாற்றுக் குறிப்புகளும்,குறுந்தொகையில் 27அரசியல் குறிப்புகளும் உள்ளமையை மேற்கோள் வழி நினைவூட்டுகிறார்.பொருநராற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுபவர்கள் ஒரு நாடகக் குழுவினர் எனவும்(கா.சிவத்தம்பி),அகப்பாடல் மரபு புறத்தைப் பாடுவதற்கு உரிய உத்தியாக இருந்ததைப் பட்டினப்பாலை வழி அறியலாலம் எனவும்,பொருநராற்றுப்படையில் பொருநன் செல்லும் வழிபற்றிய வருணனை இல்லை எனவும்,சிறுபாணாற்றுப்படையில் கூடல் என்பதற்குப் பதிலாக மதுரை என ஆளப்பட்டுள்ளது என்பதும் இது போன்ற பிற செய்திகளும் இந்நூலைக் கற்பவருக்குப் பேரின்பம் நல்குவனவாகும்.

சங்க நூல்களைப் படிக்கவும்,ஆராயவும் உதவும் இலக்கணநூல்களையும் ஆய்வாளர் அறிமுகப்படுத்தியுள்ளார் அவற்றுள் தொல்காப்பியம்,இறையனார் களவியல்,புறப்பொருள் வெண்பாமாலை பற்றியும் இவை சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு எந்த எந்த வகையில் துணைநிற்கின்றன என்பதையும் இடம்சுட்டி விளக்கும் பாங்கு எம்மனோர்க்கு மகிழ்வுதரும் ஒன்றாகும்.தொல்காப்பியப் பொருளதிகாரம் சங்க இலக்கிய அக,புறமரபுகளை அறியவும்,யாப்பு,அணி.உள்ளுறை,
இறைச்சிப் பொருள்களை அறியவும் பெரிதும் உதவுவதை ஆய்வாளர் நினைவூட்டியுள்ளார்.

புறப்பொருள் வெண்பாமாலை சங்க நூல்களின் புறநூல்களுக்கு இலக்கணம் குறிப்பிடுவதையும் புறநானூற்றின் திணைப்பகுப்பு புறப்பொருள் வெண்பாமாலையை அடியற்றியுள்ளது என்பதையும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திணை,துறை பற்றிய ஆய்வுக்கு இலக்கண,இலக்கியநூல்கள் இரண்டும் துணைசெய்யும் பாங்கில் பின்னிப்பினைந்து கிடப்பதை நயம்பட ஆய்வேடு சுட்டுகிறது.
தொல்காப்பியர் திணை என்றால் என்ன என விளக்கவிலை.எனினும் திணை என்பது செய்யுளுக்கு உரிய உறுப்பாகக் கொண்டுள்ளார் (தொல்.பொருள்.இளம்.சூ.416). இவ்வாறு திணையைத் தொல்காப்பியர் விளக்கவில்லை என்றாலும் அகத்திணையியல்,புறத்திணையியல் வரும் சூத்திரங்களை நோக்கும் பொழுது தொல்காப்பியருக்கும்,அவர் காலத்துப் புலவர் பெருமக்களுக்கும் திணை பற்றிய பேரறிவு இருந்துள்ளமைக்குத் தொல்காப்பியத்தில் பல சான்றுகள் உள்ளன.இவற்றைத் துணையாகக் கொண்டு அக்காலத்தில் திணைபற்றியும் திணைபற்றிய கருத்துவளர்ச்சியும் எவ்வாறு இருந்தன என்பதை விளக்க ஆய்வாளர் முனைந்துள்ளார்.அவ்வகையில் பார்க்கும் பொழுது திணை என்பது ஒழுக்கத்தைக் குறிப்பதையும்(தொல்.பொருள். இளம்,சூ.1),நிலம் குறிப்பதையும்(தொல்.பொருள்.2) நுட்பமாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நச்சினார்க்கினியர்,இறையனார் களவியல் உரையாசிரியர் ஆகியோர் திணை என்பதை ஒழுக்கம் எனும் பொருள் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார்

அறிஞர் மார் என்பவர் முல்லை,குறிஞ்சி,பாலை,மருதம்,நெய்தல் என்னும் பெயர்பற்றி கொண்ட கருத்தையும் அம்மன்கிளி காட்டத் தவறவில்லை.’முல்லை,குறிஞ்சி,பாலை,மருதம்,நெய்தல் என்பன முறையே காடு,மலை,பாலைநிலம்,பண்படுத்தப்பட்டநிலம்,கடற்கரை ஆகியவற்றில் வளரும் தாவரங்களாகும்.முதலில் இப்பெயர்கள் தாவரங்களையே குறித்தன என எண்ணுதல் நியாயமானது.அதன்பிறகு அவை வளரும் பிரதேசங்களைக் குறிக்கத் தொடங்கின'(மார் :1985:பக்.17) என்பதே அம்மேற்கோளாகும்.(இவ்விடத்தில் முல்லை,குறிஞ்சி…எனத்தொடங்கி வழங்குது சிறப்பு எனவும் மாறாகக் குறிஞ்சி,முல்லை என்தொடங்கி வழங்குவதன் வழிப் பழந்தமிழக இசையாய்வில் பெரும்பிழை ஏற்பட்டுவிடும் என்ற எம் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் கருத்தை இங்கு நினைவுப்படுத்துவதில் மகிழ்கிறேன்.)

அம்மன்கிளி அவர்கள் உள்ளுறை பற்றியும் இறைச்சி பற்றியும் விளக்கியுள்ளார்.உரிப்பொருள் நேரடியாகச் சொல்லமுடியாத இடத்துக் கருப்பொருளின் மேல் ஏற்றிச்சொல்லும் மரபு உள்ளுறை என்ற வகைக்குள் அடக்கப்பட்டது எனவும்,உள்ளுறை என்பது நேரடியாகக் கூறமுடியாத விடயங்களை மறைத்துக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உத்தியாகும் எனவும் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.

அகப்பாடல்களில் திணை,துறை வகுத்துள்ளதில் சிக்கல் உள்ளதுபோல சங்க நூல்களின் புறப்பாடல்களின் திணை,துறை வகுத்ததிலும் சிக்கல் உள்ளது.குறிப்பாகப் புறநானூற்றின் அடிக்குறிப்பு வரைந்தவருக்கும் தொல்காப்பிய விதிகளுக்கு மிடையே ஒற்றுமை காணப்படவில்லை என்கிறார் அம்மன்கிளி.தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு உரை வரைந்த உரையாசிரியர் பெருமக்கள் ஒவ்வொரு திணைக்கும் துறைக்கும் மேற்கோளாகப் புறநானூற்றை எடுத்துக்காட்டு கின்றனர்.அவ்வுரையாசிரியர் காட்டும் பாடலும்,அப் புறநானூற்றில் இடம்பெறும் திணை,துறை அடிக்குறிப்பும் வேறுபட்டு உள்ளதை அம்மன்கிளி அவர்கள் சான்று காட்டி நிறுவியுள்ளமை அவரின் ஆய்வுப் பரப்பையும்,கடும் உழைப்பையும், புலமையையும் அறியத்துணை செய்கின்றன.

புறநானூற்றில் இடம்பெறும் துறைகள் மொத்தம்64 என்று பட்டியலிட்டுக்காட்டுகிறார்(நூல்,பக.122) அடிக்குறிப்புகள் பெரும்பாலும் புறநானூற்றில் புறப்பொருள் வெண்பாமாலையின் திணை,துறை வழியில் காட்டப்பட்டுள்ளது.புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லாத சில துறைகளும் புறநானூற்றில் காட்டப்பட்டுள்ளன.அதுபோல் ஒரு பாடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திணை,துறை வகுப்புகளும் இடம்பெற்றுள்ளமையை ஆய்வாளர் நினைவூட்டி ஒரு பாடல் ஒரு திணையை, ஒரு துறையைத்தானே கொண்டிருக்கும்.அதுதானே பொருத்தமாக இருக்கும் என வினாவெழுப்புகிறார். காலப்பழைமை யும், ஏடுபெயர்த்துஎழுதியமையும்,சங்க நூல்களில் பொருள் காண்பதில் ஏற்பட்ட பிழைகளும் இத்தகு பிழைகள் நேர்ந்தமைக்குக் காரணங்களாக இருக்கும் என்று அமைதிபெறுவதே நம் நிலையாக உள்ளது.

புறப்பாடல்களில் இடம்பெறும் திணை,துறை பகுப்புகளின் வழியாக அக்காலச் சமூகத்தை நன்கு உணரமுடிவதை அம்மன்கிளி குறிப்பிட்டுள்ளார்.வேந்தர் பாடிய பாடல்களின் துறைகளை நோக்கும்பொழுது குறிப்பிட்ட துறைகளில் அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிவிடுகின்றன.அரசன் பாடியதாக அறியப்படும் புறநானூற்றின் பாடல்களுள் பொருண்மொழிக்காஞ்சியில் 5 பாடல்களும்,வஞ்சினக்காஞ்சியில் 3 பாடல்களும்,இயன்மொழியில் 2 பாடல்களும், முதுமொழிக் காஞ்சிக்கு 1 பாடலும்,கையறு நிலைக்கு 1 பாடலும் உரியனவாய் உள்ளன(பக்.150).அதுபோல் வேந்தனைப் புகழும் பாடல்கள் செவியறிவுறூஉப் பாடல்களாக உள்ளன.அவ்வகையில் 8 பாடல்கள் செவியறிவுறூஉப் பாடல்களாகும்.

சங்கப்பாடல்களில் பாடப்பட்டுள்ள அரசர்களிடையே சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளதைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கும் இந்நூல் பாடிய பாடுநர்களான புலவர்,பாணர்,கோடியர்,வயிரியர்,கண்ணுளர், கிணைஞர்,பொருநர், அகவுனர்களை இனங்காட்டுகிறது.

இவர்களுள் பாணரும் புலவரும் சங்கப்பாடல்களைப் பாடியவர்களில் முக்கியமானவர்கள்.கிணைஞர்களும்,பொருநரும் பாணருடன் இணைத்துப்பேசப்படுபவர்கள்.அகவுநர் என்போர் மந்திரச்சடங்குகளில் இணைந்தவராக அறியமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் பாணருக்கும்,புலவருக்கும் இடையே வேறுபாட்டைக் காண்பது அரிதாக உள்ளது.எனினும் சான்றுகளின் அடிப்படையில் அம்மன்கிளி அவர்கள் பின்வரும் ஒரு முடிவைச் சொல்கிறார். பாணர்கள் பெரும்பாலும் குறுநிலக் கிழார்களுடன் இணைத்துப் பேசப்படுவராகவும்,புலவர்கள் பெரும்பாலும் வேந்தருடன் சேர்த்துப் பேசப்படு பவராகவும் உள்ளனர்(பக்,201). இவற்றைப் புலவர்கள் சிலர் வழங்கும் குறிப்புகளாலும் அறியலாம்.

கபிலர் தம்மை அந்தணன் புலவன் என்பதும்,மாங்குடி மருதன்…புலவர் பாடாது… என்பதும் இதனை மெய்ப்பிக்கும். மன்னனுக்கு அறிவுரை சொல்பவர்,இடித்துரைப்பவர் எனப் புலவர் இருந்துள்ளனர். குறுநில,மன்னர்களைப் புகழ்ந்து திறமை காட்டிப் பரிசில் பெற்று வாழ்பவராகப் பாணர்கள் இருந்துள்ளனர்.எனினும் பாணர்,புலவர் பாடிய செய்யுளமைப் பிலோ,மொழிநடையிலோ வேறுபாடு காணமுடியவில்லை என்கிறார் அம்மன்கிளி.அகச்செய்திகளைப் பாடியுள்ளதில் ஆண்பால் புலவர்களுக்கும் பெண்பால் புலவர்களுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது.ஆண்பால் புலவரின் பாடலில் பெண் காமஞ்செப்பல் வலுமிக்கதாக இல்லை. அவர்கள் பெண்கள் பற்றிய சமூகக் கணோட்டத்தினையும் வாழ்க்கைபற்றிய அறத்தினையும் தமது அனுபவங்களையும் அகப்பாடல்களின் ஊடாகச் சொல்லியுள்ளமையையும் எடுத்துக்காட்டி விவரித்துள்ளார்.
அம்மன்கிளி முருகதாசு அவர்கள் சங்க நூல்கள் முழுமையும் மதிப்பிட்டுப் பின்வரும் ஒருமுடிவையும் வெளிப்படுத்தியுள்ளார்.அகப்பாடல்களும்,புறப்பாடல்களும் ஒன்றையன்று தழுவிச்செல்கின்றன.அகநூல்களில் புறச்செய்திகள் இடம்பெறுவதையும்,புறநூல்களில் அகச்செய்திகள் இடம்பெறுவதையும் இனங் காட்டியுள்ளார். அகப்பாடல்களில் புறச்செய்திகள் இணைக்கப்பட்டுள்ளமைக்குக் காரணம் இப்பாடல்கள் அரசவையில் பாடப்பட்டிருக்கலாம் என்கிறார்.

ஐங்குறுநூறு என்னும் நூல் பிற சங்க நூல்களிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளதால் அதாவது திணைக்கு ஒருபாடல் என்ற நிலையிலிருந்து திணைக்குப் பல பாடல்களைக்கொண்டு விளங்குவதால் இந்நூலினை விரிவாக ஆராயவேண்டும் என்கிறார் அம்மன்கிளி.பல வகை பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாலும்,கருப்பொருள்கள் திட்டமிட்டுப் பத்தின் பெயர்களாக உள்ளதாலும் இந்நூலை மேலும் ஆராயலாம் என மேலாய்வுக்கு வழிசொல்லியுள்ளார்.

நானிலம் ஐந்திணையாகி,எழுதிணையானமையை எடுத்துரைக்கும் இவ்வாய்வேட்டைக் கற்போர் சங்க இலக்கியத்தின்மேல் விருப்பம் கொள்வர் எனவும்,சங்க நூல்களை முன்பே கற்றவர்கள் ஆழமான ஆய்வுகள் நிகழ்த்த பல்வேறு ஆய்வுக் களங்களைக் காண்பர் என்பதும் உறுதி.

ஆய்வேட்டை அரும்பாடுபட்டு வெளிக்கொண்டுவந்த பதிப்பகத்தார் அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.உயிருக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும் தமிழீழத் தமிழர்கள் இதுபோன்ற தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை நன்றியுடன் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

நூல் : சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்
ஆசிரியர் : கலாநிதி அம்மன்கிளி முருகதாசு
வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
361, 1/ 2 டாம் வீதி,கொழும்பு
3,மெய்கை விநாயகர் தெரு,குமரன் காலனி,
வடபழனி,சென்னை-600026
ஆண்டு : 2006
பக்கம் : 424
விலை : உரூவா 225.00

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com

இணையப்பக்கம் : muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்