“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி

This entry is part of 33 in the series 20070913_Issue

விஜயன்என் எழுத்துலக நண்பர்கள் தொடங்கி, என் மகள் முடிய நான் ஏன் எழுதக் கூடாது, என்று சதா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏதோ ஒரு தயக்கத்தில், பொழுதுபோக்காய் கதைத்துக் கொண்டிருந்தாலும், உருப்படியாக எதையும், எழுதும் எண்ணத்தை அமல் படுத்தவில்லை…
இதற்கு வேறு சில உள் காரணங்களும் உண்டு. எண்பதுகளின் நடுவில் நானும் பதிப்புக்கு அனுப்பாமல் என் சிந்தனைகளை புதுக்கவிதைகளாக எழுதி வைத்துக் கொண்டது உண்டு. அப்படி ஒரு வேலையில் இலங்கைப் பிரச்சனை, தமிழர்களின் தலைவர்களுக்குள்ளேயே வேற்றுமையாய் இருந்து, தங்களை அழித்துக் கொண்டிருந்த வேலையில், “தனித்தனி முக்கனி பிழிந்து” என்று ராமலிங்க சுவாமிகளின், சரணத்தில் தொடங்கி “கோர்பச் சேவைப் பிடுங்கி திரிகோன மலையில் நடலாமா! என்று முடித்திருந்தேன்.
“கோர்பசேவ்” என்ற ரஷ்ய அதிபர் சமாதானத்தின் சின்னமாகவும், களாஸ்நாஸ்ட், “பெரெஸ்ட்ரோய்கா” போன்ற வார்த்தைகள் பெரிதாக உலக அளவில் பிரச்சாரம் செய்யப் பட்ட காலம் அது. என்னுடைய இந்தக் கவிதை வரிகள் எண்ணி மூன்று வருட காலத்தில், காலாவதியானது. இன்று கோர்ப சேவ் ஒரு சமாதானத்தின் குறியீடும் அல்ல, சோவியத் நாட்டின் வரை படமும் சித்தாந்தமும் மாறிவிட்டது. இப்படி என் பதிவுகள் 5 வருட இடை வெளிக்குள்ளேயே புஸ்வானமாகிப் போனதால் எழுதும் எண்ணத்தை தள்ளிப் போட்டுவிட்டேன்.
இப்ப மீண்டும் தலைத்தூக்க வைக்க, என் நண்பர்கள் முயற்சித்தபோது “என்னடா இது சோதனை பாண்டிய நாட்டுக்கே வந்த வேதனை” என்று திருவிளையாடலில் சொன்னதுபோல எழுத முற்பட்டுவிட்டேன். என்ன, எனக்கு சிவபொருமான் திருவிளையாடல் புரிந்து “பாட்டும் நானே பாவமும் நானே” என்று பின்னனி பாடவில்லை.
சோதனை என்றவுடன் “சத்ய சோதனை” பற்றி என் அனுபவத்தை எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. முதலில் காந்திய சரிதையில், “சத்ய சோதனை” “சுய தர்மமா”, சகதர்மமா என்ற கேள்வி எழக் காரணமாய் இருந்த கோர்ட், நடவடிக்கை ஒன்றைச் சொல்கிறேன்.
சென்னை உயர்நீதி மன்றத்தில், மூத்த நீதிபதியாய் இருந்த ஒரு நேர்மையான நீதிபதி. தான் படித்துணர்ந்த “சத்ய சோதனையை” ஒரு குற்றம் சாட்டப்பட்டவர்மேல் பிரயோகித்து, குற்றவியல் சட்டத்தில், சீர்திருத்தும் பணியாக ஒரு முயற்சி செய்தார். “பெயில்” கேட்டு வந்த ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு பெயில் கண்டிஷனாக நீ போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது மாஜிஸ்ட்ரேட் முன்னோ கையெழுத்திடுவதற்கு பதிலாக, காந்தியடிகளின் சத்ய சோதனையை படித்து நூலகத்தில் கையெழுத்துப் போடுமாறு உத்தரவிட்டார். அந்த ஆடுயுவும் அப்படியே செய்தார். பின்னர் பலசமயங்களில் அந்த நீதிபதி இந்த முயற்சியை வழக்கறிஞர் கூட்டங்களில் மேற்கோள் காட்டிவந்தார். பிரச்சனை இப்போது நீதிபதியின் சீர்திருத்த முயற்சி பற்றி அல்ல. சங்க காலம் முதல் ஆத்திச்சூடி, பதினொன்கீழ் கணக்கு நூல்கள் வரை பஞ்சமில்லாமல் பல நன்நெறிகள் சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், நன்நெறிகள் மட்டும் மனிதனை மாற்றுமா என்பது கேள்விக்குறிய விஷயம். ஏனவே அறிவுரையை சொல்பவர் பரிட்சித்து பார்க்காமல் மற்றவர் மேல் சோதனை செய்து பார்ப்பது என்ன விளைவை ஏற்படுத்தியது என்பதுதான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
அந்த MLA திருந்தினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இந்த சோதனைக்குப் பின்னால் அந்த MLA காங்கிரஸ் கட்சியை விட்டு வேறு திராவிடக் கட்சியில் சேர்ந்தார் என்பது மட்டும் தெரியும். அந்த கழகங்கள் மட்டும், சத்ய சோதனையை துறந்தவர்களை, கூண்டாக தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பது பரவலான பேச்சு.
இப்போது பிரச்சனை “சத்ய சோதனையை நாமே நமக்கு பரிட்சித்துக் கொள்வதா அல்லது நம் ஆளுகைக்கு கீழ் உள்ளவர்கள்மேல் செலுத்துவதா. என்பதே! ஓரு குருவிடம் (தலைவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்). ஒரு தாய் தன் மகன் அதிகமாக சக்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த அறிவுரைக்குமாறு கேட்ட போது, அந்த குரு பத்து நாள் கழித்து வரச் சொல்லி, அதன்பின் அறிவுரை கூறியதாக ஒரு கதையுண்டு. அந்த பத்துநாள் இடைவெளிக்குக் காரணமாக “தான் அறிவுரை சொல்லு முன், தானே அதை சோதித்துப் பார்க்க நினைத்ததுதான்!.
அப்படின்னா, மருத்துவக் கண்டுபிடிப்பு மருந்துகளை முதலில் மனிதன் மேல் சோதிப்பதற்கு முன்னால், எலி, குரங்கு இவற்றில் சோதித்துதானே தருகிறார்கள் என்று அறிவு சார்ந்த கேள்வியை முன் வைக்கலாம் அதற்கு பதில், தற்சமயம் ஹோமிசைட் 1PC 302 தண்டனை சட்டம் மனித வதைக்கு மட்டுமே உள்ளது, மிருக வதை, ஆராய்ச்சிக்கு இல்லை.
நன்நெறிகள் சில சமயம் குள்ள நரிகளாகவும் வாய்ப்புண்டு!


kmvijayan@gmail.com

Series Navigation