பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?

This entry is part of 36 in the series 20070809_Issue

கரு.திருவரசுஎழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் இயற் பெயர்களிலேயே எழுதாமல், எழுதுவதற்காகவே வேறொரு பெயர் வைத்துக் கொள்வதுண்டு.

முத்தையா எனும் பெயர் கொண்டவர் கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டார். கருப்பையா எனும் பெயர் கொண்டவர் காரைக்கிழார் எனப் பெயர் வைத்துக்கொண்டார்.

இப்படி வேறு பெயர் வைத்துக்கொள்வதைப் ‘புனைபெயர்’ என்றும் ‘புனைப்பெயர்’ என்றும் எழுதுவதைக் காண்கிறோம். இரண்டில் எது சரி?

“புனை” என்பது பொலிவு, அழகு, சீலை, மூங்கில் எனப் பல பொருள்களைத் தரும் சொல்.

‘புனை’ என்பதை வினைச் சொல்லாகக் கொண்டு பொருள் சொன்னால், இயற்று, அழகுசெய், புனைந்துகொள் என்றெல்லாம் பொருள்படும்.

‘பெயர்’ச்சொல் என்றால் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குழந்தைக்கு அதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக அல்லது அழைப்பதற்காக வைக்கப்படும் குறிப்புச்சொல்.

“புனை” என்பது “பெயர்” என்பதோடு சேரும் சொற்புணர்ச்சியால் மாறும் பொருள் மாற்றத்தைத் தெரிந்துகொள்வதே நம் நோக்கமாதலால் புனைதல், அல்லது புனைந்துகொள்ளுதல் என்னும் பொருளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

ஒருவர் தான் புனைந்துகொண்ட பெயரைப் “புனைப்பெயர்” என்று எழுதுவதோ, பேசுவதோ தவறு. புனைப்பெயர் என்றால் புனையின் பெயர், புனையாகிய பெயர் என்று பொருள். புனைந்துகொண்ட பெயர் ஆகாது.

ஒருவர் புனைந்துகொண்ட பெயரை, புனையும் பெயரை, புனைந்துகொள்ளப் போகும் பெயரை “புனைபெயர்” என்றுதான் எழுதவேண்டும், சொல்லவேண்டும்.

புனைபெயர் = புனைந்த பெயர்
புனைப்பெயர் = புனையின் பெயர்


thiruv36@yahoo.com

Series Navigation