அலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

தேவராஜன்


தொடர்ச்சி – கரைப் பயணம்

12. எட்டாம் நாள் – டல்கேட்னா

சென்ற பாகத்தில் நாங்கள் ஸேவார்டு துறைமுகத்தில் டான் பிரின்சஸ் கப்பலி லிருந்து இறங்கி விட்டதாகச் சொன்னேனல்லவா? எங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு துறைமுகத்தின் அருகிலே யிருந்த டாக்ஸி கம்பெனிக்குச் சென்று ஒரு மினி வானை வாடகைக்கு எடுத்துக் கொண்டு டல்கேட்னா (Talketna) நகரை நோக்கிப் புறப்பட்டோம். ஸேவார்டிலிருந்து டல்கேட்னா வுக்குப் பிரயாண நேரம் ஐந்து மணிகளாகும். டல்கேட்னா நகரம் வட அமெரிக்காவிலேயே உயரமான சிகரமாகிய மக்கன்லீ (Mt. McKinley) என்ற மலைச் சிகரத்துக்கு அருகாமையில் உள்ளது. இச் சிகரத்தை விமானத்திலேறி வலம் வருவதும், மறுநாள் டல்கேட்னாவி லிருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள டெனாலி தேசீயப் பூங்கா எனப்படும் வன விலங்கு பாதுகாப்பிடத்தையும் பார்ப்பதும் எங்கள் குறிக்கோள்.

ஸேவார்டு துறைமுக நகரத்திலிருந்து புறப்பட்ட சில மைல் தூரத்தில் Exit Glacier “அஸ்தமிக்கும் பனியாறு” என்று அழைக்கப்படும் பனியாற்றுக்குச் சென்றோம். இப் பனியாறு தன் பெயருக்குத் தக்கபடி அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது, அதாவது குறுகி மறைந்து கொண்டு இருக்கிறது. அனேக வருடங்களுக்கு முன்பு மலைச் சிகரத்திலிருந்து தரை மட்டம் அடைந்தபிறகு சில மைல் தூரம் பனியாறாக ஓடி பிறகு பனி கரைந்து நன்னீர் ஆறாக மாறி இன்னும் சில மைல்கள் ஓடிக் கடலில் கலந்து கொண்டிருந்தது. ஆனால் சில நூற்றாண்டுகளில் பனியாற்றின் நீளம் குறுகி நன்னீர் ஆற்றின் நீளம் நீண்டு வருகிறது. சமீப காலத்தில் பனி வெகு வேகமாகக் கரைந்து வருகிறது. எனவே மலை யடிவாரத்தின் அருகிலேயே பனி மறைந்து நன்னீர் ஆறு துவங்கி விடுகிறது. பனியாற்றை நோக்கி நாம் செல்லும் பாதையில் வரிசையாக எந்தெந்த வருடம் பனியாறு எங்கே முடிந்து, நன்னீர் ஆறு தொடங்கிற்று என மைல் கற்களைப் பதித்திருக்கிறார்கள். ஐயோ பாவம், அஸ்தமிக்கும் பனியாற்றின் வாழ்க்கை எப்படி குறுகிவிட்டது என அங்கலாய்த்துக் கொண்டேன்.

இப் பனியாற்றின் அருகில் என் பேரன் எடுத்த புகைப் படங்களைக் காணவும்.

பனியாற்றின் வாழ்க்கை முடிவை நினைத்துக் கொண்டு புறப்பட்டு உணவு விடுதியைத் தேடிச் சென்றோம். வழியில் Moose Pass “மூஸ் பாஸ்” என்ற கிராமத்தில் அழகான உணவகம் தென்பட்டது. எங்கள் விருப்பப்படி சைவ உணவைத் தயார் செய்து தர உணவக முதலாளி ஒப்புக் கொண்டார். சாப்பிட மேஜையில் உட்கார்ந்ததும், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! சுவரில் “Shakthi Atta Mills, Noida’ என்ற பெயர் பொறித்த காலண்டரைப் பார்த்தோம். எங்கள் கண்களை நம்ப முடியவில்லை. எங்கள் வியப்பைக் கண்ட முதலாளி, தான் டெல்லிக்கு அருகிலுள்ள நோய்டாவில் சக்தி மாவு மில் என்ற மாவு மில்லைச் சில வருடங்களுக்கு நடத்தி வந்ததாகச் சொன்னார். அலாஸ்காவுக்கும், நோய்டாவுக்கும் இடையே பல தடவை பிரயாணம் செய்து வந்ததாகவும், சென்ற வருடம் மாவு மில் தொழிலைக் கைவிட்டு அலாஸ்காவில் உணவகத்தை ஆரம்பித்ததாகவும் சொன்னார். “The world is small” உலகம் சிறியது என்ற ஆங்கிலப் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. அமெரிக்காவின் வட கோடிக்கு வந்து நோய்டாவில் வாழ்ந்த அமெரிக்க தொழிலதிபரைச் சந்திப்போமெனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்!

மூஸ் பாஸ்ஸிலிருந்து சில மணி நேரப் பிரயாணத்துக்குப் பிறகு டல்கேட்னா விமான நிலையத்தை அடைந்தோம். இங்கேயிருந்து தான் விமானம் மூலம் மக்கின்லீ சிகரத்தைப் பார்ப்பது என ராதிகா ஏற்பாடு செய்திருந்தாள். உலகத்தில் ஏழு கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்திலும் மிக உயரமான மலைச் சிகரம் எனக் கருதப்படும் ஏழு மலைச் சிகரங்களில் இதுவும் ஒன்று. 20,320 அடி உயரமான இச் சிகரம் வட அமெரிக்காவிலேயே மிக உயரமான மலைச் சிகரமாகும். மலைச் சிகரம் ஏறும் சில சாகச வீரர்களுக்கு தம் வாழ்க்கைக் காலத்தில் இந்த ஏழு சிகரங்களை ஏறி வெற்றி காண்பது குறிக்கோளாகும்.

இவ்வேழு சிகரங்கள் எவையென்றால், அவையாவன:-

ஆசியா கண்டத்தில் எவரஸ்ட் (Everest).
தென் அமெரிக்கா கண்டத்தில் அகன்காகுவா (Aconcagua).
வட அமெரிக்கா கண்டத்தில் மக்கின்லீ (McKinley).
ஆப்பிரிக்கா கண்டத்தில் கிளிமஞ்சரோ (Kilimanjaro).
ஐரோப்பா கண்டத்தில் எல்ப்ரஸ் (Elbrus).
அண்டார்ட்டிகா கண்டத்தில் வின்ஸோன் மாஸ்ஸிப் (Vinson Massif).
ஆஸ்திரேலியா கண்டத்தில் கோஸ்சிஉஸ்கோ (Kosciusco).

(இந்தோனேஷியாவிலுள்ள கார்ஸ்டென்ஸ் (Carstensz) என்ற சிகரம் கோஸ்சிஉஸ்கோவை விட அதிக உயரமாயிருந்தாலும் இந்தோனேஷியா ஒரு கண்டமல்லவாதலால் இச் சிகரத்தை ஏழு கண்டச் சிகரப் பட்டியலில் சேர்க்கவில்லையாம்).

முதன் முதலாக 1985 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்கர் இச் சாதனை புரிந்தார். அதன் பிறகு இது வரை எண்பதுக்கு மேற்பட்ட சாகச வீரர்கள் வெற்றி பெற்றிருக்கிறதாகக் கேள்விப்பட்டோம்!

சென்ற ஆண்டு இந்தியர் ஒருவர்- மல்லி மஸ்தான் பாபு என்ற மின் பொறியாளர்- 172 நாட்களில் இந்த ஏழு சிகரங்களையும் வென்று சரித்திரப் புகழ் பெற்றதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சாதாரண மக்களான எங்கள் சௌகரியத்துக்காக பறந்து போய் பார்ப்பதற்காகச் சிறிய விமானங்கள் நான்கு இவ் விமான தளத்தில் இருந்தன. நாங்கள் போய்ச் சேர்ந்த சற்று
நேரத்தில் அலாஸ்கா கடற் பிரயாணத்தில் எங்களுடன் வந்த மற்ற குடும்பத்தினரும் வந்து விட்டார்கள். ஒரு விமானத்தில் 4, 5 பேர் மட்டுமே பறக்க முடியும். நானும் என் மனைவியும் ஒரு விமானத்தில் ஏறினோம். விமானியே வழிகாட்டியும் கூட. புரபல்லர் (propeller) விமானமாகையால், புரபல்லர் சுற்றும் ஓசை காதைத் துளைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு earphone ஐக் கொடுத்த விமானி அதனை மாட்டிக் கொண்டு கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ள இயலுமென அறிவித்தார். பறக்கும் நேரம் ஒரு மணி எனவும், தரையிலிருந்து ஆகாயத்தில் எகிறி மலைத்தொடர், பனியாறுகள், கணவாய்கள் இவற்றின் மேல் நாம் பறந்து செல்வோம், சிகரத்தைச் சுற்றிப் பறந்துவிட்டு பனியாறு ஒன்றின் மேல் விமானம் இறங்குமெனவும் அறிவித்தார். ஐயகோ, பணியாற்றின் மேலா இறங்குவது என நினைத்தேன்.

விமானத்திலிருந்து தென்படும் காட்சி வியக்கத் தக்க, மறக்க முடியாத தொன்றாகும். பச்சைப் பசேலென்ற பள்ளத்தாக்குக் காடுகளைத் தாண்டி, பனியாறுகள் கரைந்ததால் தோன்றிய சதுப்பு நிலத்தைப் பார்க்கிறோம். ஆமை வேகத்தில் ஓடும் துல்லிய வெண்மை நிறப் பனியாறுகள் பல. மலைத் தொடரின் இடையில் கிடு கிடு பள்ளத்தாக்குகள். சுற்றுப் பக்கமெங்கும் பனி யடர்ந்த சிகரங்களுக்கு மத்தியில் மக்கின்லீ சிகரம் கம்பீரமாகக் காட்சி யளிக்கிறது. இத்தகைய விமானச் சுற்றுலாக் காலங்களில் அநேக நாட்கள் மேகக் கூட்டங்கள் இச் சிகரத்தை மறைத்து விடுமாம். எத்தனையோ தடவை சிகரத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் பயணிகள் திரும்புவது மிகச் சகஜமாம். எங்கள் அதிர்ஷ்டம் வானம் பளிச்சென்று கதிரவன் கிரணங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கீழே ஒரு பள்ளத்தாக்கில் ஒரு சில மனிதர்கள் குழுமியிருந்ததைக் காட்டி, அவர்கள் மலைச் சிகரத்துக்கு ஏறும் வீரர்கள் என விளக்கினார். எங்கள் விமானம் மக்கின்லீ சிகரத்தை வலம் வந்து ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிற்று. ரூத் பனியாறு (Ruth glacier) என்ற பனியாற்றின் மேல் விமானத்தை விமானி இறக்கினார். விமானத்தின் சக்கரங்களில் சறுக்கும் சாதனம் (sledge) பொறுத்தப் பட்டிருப்பதால் சக்கரங்கள் கல் போல உறைந்துள்ள பனியில் மூழ்கவில்லை. விமானத்தைச் சுற்றிலும், பின்னால் மலைச் சரிவிலும் பனிக் கட்டிகள் கண்ணைப் பறிக்கின்றன. சூரிய கிரணங்கள் வெண் பனியில் பட்டு பளிச்சென்று பிரகாசிப்பதால், திடீரென்று தற்காலிகக் குருடு ஏற்படும், ஆகையால் கறுப்புக் கண்ணாடி அணிவது அத்தியாவசியமாகும்!

எங்கள் விமானம் தான் அன்றைய விமானப் பயணங்களில் கடைசி நடையாகும். நான் முன் சொன்னபடி பனியாறு நகருவதைச் சிறிதும் உணர முடியவில்லை. எங்கள் காலடியில் மூன்று, நான்கு ஆயிரம் அடி கனத்துக்குப் பனி உறைந்திருக்குமாம். பிரமாண்டமான பனியாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பு சற்று பீதியை உண்டாக்குகிறது. ஆயினும் பயமில்லை என விமானி தைரியம் தந்தார். நாங்கள் விமானத்திலிருந்து இறங்கி மேலும், கீழும் நடந்து தலைக்கு மேல் தெரிந்த சிகரத்தைத் தரிசனம் செய்தோம். இச் சிகரம் இந்தியாவில் இருந்திருந்தால், பள்ளத்தாக்கில் ஒரு கோயிலை நிர்மாணித்து வருடந்தோறும் தீர்த்த யாத்திரையை ஏற்பாடு செய்திருப்போம் என நினைத்துக் கொண்டேன்.

நானும் என் மனைவியும் சேருவதற்கு முன்னே எங்களுக்கு முன் மற்ற குழுவினருடைய விமானங்கள் இறங்கித் திரும்பிச் சென்றுவிட்டன.

எங்கள் பேரன் எடுத்த புகைப் படங்களை இங்கே காணலாம்.

சற்று நேரத்தில் கதிரவன் மலைகளின் மத்தியில் மறைந்து விடுவான், குளிர் நடுக்கி விடும், திரும்பிச் செல்லவேண்டும் என விமானி எச்சரித்தார். விமானத்தில் ஏறி திரும்பி விமான தளத்துக்குத் திரும்பினோம் இந்தப் பயணத்துக்கு வாடகை தலா 175 டாலராகும்.

அன்றிரவு டல்கேட்னாவில் Denali Overlook Inn என்ற லாட்ஜில் தங்கினோம். இரவு பத்து மணியானாலும் வெளிச்சம் மறையவில்லை. (Land of the midnight sun) நள்ளிரவுச் சூரியன் தேசம் என்று கூறுவது சரி தான்.

13. ஒன்பதாம் நாள்

இன்று காலையில் நாங்கள் இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் டெனாலி தேசியப் பூங்கா என்ற வன உயிரினப் பாதுகாப்பிடத்தை அடைந்தோம். பல நூறு சதுர மைல் பரப்பளவான இந்த வன உயிரினத் தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு வனத் துறைப் பேருந்துகள் அரை மணி இடைவெளியில் ஓடிக் கொண்டிருக்கின்றன. பேருந்து ஓட்டும் டிரைவரே வழிகாட்டியாகவும் பணி செய்கிறார். புறப்படு முன்னர் அவர் பிரயாணிகளுக்கு சில விதிகளை விவரித்தார். வழியில் நாம் உணவுப் பண்டங்களைச் சாப்பிடக்கூடாது, பான வகைகள் அருந்தக் கூடாது. குறிப்பிட்ட விடுதியில் மட்டும் அவற்றை உட்கொள்ளலாம். வழியில் விலங்குகளைப் பார்த்தால் எந்த விதமான தீனியையும் வழங்கக் கூடாது. இத்தியாதி. அவ்வப்போது வழியில் காட்டு விலங்குகள் கண்ணில் தென் பட்டால், வண்டியை நிறுத்தி நமக்கு அவற்றைக் காட்டினார். பழுப்பு நிறக் கரடிகள், கரிபூ (Caribou), மூஸ் (Moose), முள்ளம் பன்றி போன்ற பல வகை மிருகங்கள் சுயேச்சையாகத் திரிவதைப் பார்த்தோம். பொதுவாக இந்த மிருகங்கள் பேருந்து ஓடும் பாதையை அணுகாமல் இருப்பதைக் கவனித்தோம். சில பிரயாணிகள் வண்டியை நிறுத்தும் போது இறங்கிக் கொண்டு காட்சிகளைப் பார்த்து விட்டு அடுத்த பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். மிருகங்களைச் சீண்டாவிட்டால் அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. சுமார் எட்டு மணி நேரம் சுற்றினோம். வேனிற் காலத்தில் மட்டும் இந்தச் சுற்றுலாவுக்காக பார்க் திறந்திருக்கும். குளிர் காலத்தில் எங்கும் பனி உறைந்திருக்குமாகையால் பார்க்கை மூடிவிடுவார்கள். மிருகங்கள் இக் குளிர்ப் பிரதேசப் பிராணிகள், எனவே பத்திரமாக குகைகளிலும், மற்ற வளைகளிலும் பதுங்கிக் கொண்டு விடும்.

நாம் பேருந்திலிருந்து இறங்கி யிருக்கும் போது கரடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற உக்திகளைப் பற்றி ஒரு அறிக்கையை வழிகாட்டி கொடுத்திருந்தார். கரடிகள் இருக்கும் பிரதேசத்துக்குப் போனால் உரக்கப் பேசவோ, கூக்குரல் எழுப்பவோ, பாடவோ வேண்டும்; அப்படிச் செய்தால் கரடிகள் நம்மை அணுக மாட்டா. குட்டிகளுடன் உள்ள கரடிகள் நம்மை விரோதிகளாக நினைக்கும். எனவே அவற்றை நாமும் அணுகக் கூடாது. எதிர் பாராமல் நாம் கரடியைச் சந்தித்தால், பயந்து ஓடாமல் ஒரே இடத்தில் நின்று கரடியை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு மெதுவாகப் பின் வாங்கவேண்டும். ஓடினால் கண்டிப்பாகக் கரடி நம்மைத் துரத்தும்! இத்தியாதி!! ஈஸஃப் நீதிக் கதைகளில் “இரு நண்பர்களும் கரடியும்” என்ற கதை ஞாபகத்துக்கு வந்தது. அக் கதையில் கரடியிடமிருந்து தப்புவதற்காக ஒரு நண்பன் செத்துப் போனது போல் பாசாங்கு செய்து தப்பித்துக் கொண்டதாகப் படித்திருக்கிறீர்களல்லவா? எங்கள் பேருந்து ஓட்டும் பெண்மணி அக் கதையில் சொல்லப்பட்ட உக்தியைப் பரீட்சை செய்து பார்க்கவேண்டாம் எனச் சொல்லிச் சிரித்தார்!

சுமார் எண்பது மைல்கள் காட்டில் சுற்றினோம். மிகச் சிறிய பாகத்தைத் தான் எட்டு மணி நேரத்தில் எங்களால் பார்க்க முடிகிறது. பிரமாண்டமான வன விலங்கு பாதுகாப்பு பூங்காவை விட்டு மாலை நேரத்துக்கு விடுதிக்குத் திரும்பினோம். நாங்கள் தங்கி யிருந்த விடுதியின் பெயர் “Denalai Overlook Inn” என்பதாகும். எங்கள் அறையிலிருந்து வெளியே நோக்கினால் நேர் எதிரே டெனாலி மலைத் தொடரும், மக்கின்லீ பனிச் சிகரமும் தெரிந்தன. ஆநந்தமாகப் பார்த்துக் கொண்டே யிருக்கத் தோன்றுகிறது. உள்ளக் களிப்பைக் கவிதையாக வடிக்கத் தோன்றிற்று. ஆனால் கவிதை எழுதும் திறமில்லையே!

14. பத்தாம் நாள் – பயண முடிவு

மறு நாள் காலையில் டல்கேட்னாவை விட்டுப் புறப்பட்டு ஏங்கரேஜ் (Anchorage) என்ற விமான நிலையத்துக்குச் சென்றோம். இது அலாஸ்காவில் மிகப் பெரிய விமான தளமாகும். அலாஸ்கா பிரதேசப் படங்களைக் கொண்ட காலண்டர் ஒன்று வாங்கிக் கொண்டு அன்றிரவு டர்ஹாமுக்குத் திரும்பும் பயணத்தைத் துவக்கினோம். இக் காலண்டரில் எழுதியிருந்த அலாஸ்கா மாநிலம் பற்றிய விவரணை கீழ் வருமாறு.

அலாஸ்கா எவ்விதத்திலும் அமெரிக்கா தேசத்தில் உயர்வானது எனச் சொல்வது மிகையாகாது. ஏனெனில் இம் மாநிலத்தில் தான் அமெரிக்காவிலேயே மிக உயரமான மலைச் சிகரம். எல்லாவற்றிலும் நீளமான கடற் கரை. எல்லா மாநிலங்களையும் விட பெரிய நிலப் பரப்பு, எல்லாவற்றைக் காட்டிலும் அதிக ஆறுகள், பனியாறுகள், எல்லாவற்றிலும் நீண்ட பெட்ரோல் குழாய், எல்லாவற்றிலும் அதிக எண்ணிக்கையில் வன விலங்குகள் என்று பெரும்பட்டியல் அடுக்கிக் கொண்டே போகலாம் .அதே மாதிரி மிகச் சிறிய வேனிற்காலம், மிகக் குறைந்த சாலைகள், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம், மிகக் குறுகிய பகற்காலம் என்று பல விதங்களிலும் ஸூபர் என்று பெருமைப் படுகின்றது!

சென்ற பத்து நாட்கள் பயணத்தில் நாங்கள் கண்டு மகிழ்ந்த அநுபவங்களை வழி நெடுக எண்ணி மகிழ்ச்சி யடைந்தோம்.


devarajanvenkata@hotmail.com

Series Navigation

தேவராஜன்

தேவராஜன்