பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

This entry is part of 43 in the series 20070125_Issue

ப்ரவாஹன்


எடுத்தேன் படித்தேன்
ப்ரவாஹன்
(எழுத்தாளர் – சமூகவியல் ஆய்வாளர்)

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் – 2
மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)
பக். 176 ரூ. 110
எனி இந்தியன் பதிப்பகம் (www.anyindian.com)
#102, எண் 57 பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, சென்னை-600017

அமெரிக்க மானுடவியலாளர் மார்வின் ஹாரிஸின் “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்” – பாகம் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மாய சரக்குப் பெட்டிகள், மெஸையாக்கள் மற்றும் சூனியக்காரர்கள் பற்றிப் பேசுகிறது. பசிபிக் தீவுகளின் பின்தங்கிய மக்களை ஐரோப்பியர்கள் பொருட்கள் கொடுத்து அடிமைப்படுத்தி, மதமாற்றி, சரக்குப் பெட்டியின் வரவுக்காக அவர்களை ஏங்கச் செய்ததை முதலாளித்துவ தொழில்மய உலகில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் அதனடியாக உற்பத்தியாகின்ற செல்வம் வினியோகிக்கப்படும் விதத்தையும் ஒப்பிட்டு மார்வின் ஹாரிஸ் விளக்கிச் செல்லுவது அசாதாரணமானது.

1933இல் மடாங் பகுதி மக்கள் கிறித்துவ போதகர் ரோலண்ட் ஹாவ்ஸல்மனிடம் கொடுத்த மனுவில், “எங்களுக்கு ஏன் சரக்குப் பெட்டி இரகசியம் இன்னமும் கற்றுக்கொடுக்கப்படவில்லை? கறுப்பு மக்களாகிய எங்களுக்கு கிறித்தவ மதம் நடைமுறை வாழ்க்கையில் எதற்கும் உதவவில்லை. வெள்ளைக்காரர்கள் சரக்குப் பெட்டி இரகசியத்தை மறைத்து வைக்கிறீர்கள்” எனக் குற்றஞ்சாட்டும் வகையில் கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் இருந்துள்ளன.

கிறித்து சகாப்தத்தின் தொடக்கத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்த கொந்தளிப்பான சமூக நிலைமை, ரோமானிய காலனி ஆதிக்கத்திற்கெதிராக நிகழ்ந்த போர்கள் மற்றும் அதன் அடிப்படையில் இராணுவ மெஸையாவாகத் தோன்றிய ஏசு கிறித்துவின் நடவடிக்கைகள் பின்னர் ரோமானிய சாம்ராஜ்யம் வெற்றி பெற்ற நிலையில் அமைதி மெஸையாவின் செயல்களாக மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பழைய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அவரது இராணுவச் செயல்பாடுகளையும் அதற்கான தேவையையும் அக்கால சமூகத்தின் பொருளாயத அடிப்படையிலிருந்து ஆழமாக விளக்கியுள்ளார்.

சிலை வழிபாடு நீக்கமற நிறைந்திருந்த ஜெருசலேமில் வாள் முனையில் அத்தகைய பழக்கம் ஒழிக்கப்பட்டது இந்நூலிலிருந்து தெளிவாகிறது. பகுத்தறிவு என்பது கடவுளை மறுத்து கடவுளர் சிலைகளை உடைப்பது என்பதான நிலவரம் உள்ள தமிழ்ச் சூழலில், கடவுளர்கள் தோன்றியதற்கான பொருளாயத நிலைமைகளையும், அத்தகைய நிலைமைகள் நீடிக்கின்றவரை சிலைகளை உடைப்பதன் மூலம் கடவுள் நம்பிக்கையைப் போக்கிவிட முடியாது என்பதையும் மார்வின் ஹாரிஸின் நூலிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

15-16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 5 இலட்சம் மக்கள் சூனியக்காரப் பட்டம் சூட்டப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சூனியக்காரர்கள் சாத்தான்களோடு தொடர்புடையவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். மறுவுலகின் பிரதிநிதியாக ஆக்கப்பட்ட கிறிஸ்துவை விட இவ்வுலகின் பிரதிநிதியாக வல்லமை வாய்ந்த சாத்தான் உருவாக்கப்பட்டு, சர்ச்சுக்கு எதிரான சிந்தனைகளை ஒட்ட நறுக்குவதற்காக மதவிசாரணை என்கிற பெயரில் சூனியக்காரர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்த பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து கிறித்தவப் பின்புலத்திலிருந்து வந்த மார்வின் விளக்கியுள்ளார்.

பழமைவாத சர்ச்சுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுமுறைகளின் தொடர்ந்த மாற்றங்களும் கீழ்வர்க்கம் புரட்சி செய்யும் என்ற பயமுறுத்தலும்தான் கொஞ்சம் கொஞ்சமாக புரோட்டஸ்டண்ட் சீர்திருத்தத்தை நோக்கி ஐரோப்பாவைத் தள்ளியது என ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மொத்தத்தில் தமிழில் முதன் முதலில் வெளிவந்துள்ள பண்பாட்டு மானுடவியல் குறித்த ஆழமான இந்நூலை பொருள்முதல்வாத அடிப்படையில் சமூக வரலாற்றை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்கான ஒரு பாடநூலாகவும் கொள்ளலாம். இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள துகாராம் கோபால்ராவின் பணி பாராட்டுக்குரியது.


Series Navigation