பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்

This entry is part of 43 in the series 20070104_Issue

பி.கே.சிவகுமார்


மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் – பாகம் I எனிஇந்தியன் வெளியீடாக சென்ற ஆண்டு வெளிவந்தது. துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்தார். அவரின் மொழிபெயர்ப்பிலேயே பாகம் – II எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகம் – I வாசகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு பாகம் – IIஐ சாத்தியமாக்கியிருக்கிறது.

“மார்க்ஸியத்தின் இயந்திரத்தனமான புரிதலைத் தாண்டி, வரலாற்றின் கலாசாரப் பதிவுகளை நோக்குவதற்கு மார்வின் ஹாரிஸ் அடித்தளம் அமைத்துத் தருகிறார். ஒரு குழு இன்னொரு குழுவின் மீது ஏற்படுத்தும் அதிகாரத்திற்கான அடிப்படைக்குக் குறிப்பிட்ட பண்புகள் கொண்ட கடவுள் கொள்கை ஒரு காரணம். இன்னொரு காரணம், உயர்நிலை கொண்ட நாம் – தாழ்நிலை கொண்ட மற்றவர் என்ற இருமை. இந்தக் காரணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் வரலாறு சொல்லித்தரும் வெறுப்புகளைத் தாண்டி மனிதகுலம் ஒருமித்து எளிய மக்களை முன்னேற்ற முயற்சிகள் செய்ய முடியும். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றுத் தழும்புகள் நம் நிகழ்காலத்தின்மீது கரிய நிழலைப் படரவிட்டுக் கொண்டே இருக்கிறது. கடந்த காலத்துக்கு நிவாரணம் என்ற பெயரில் நிகழ்காலக் கொடுமைகளை நியாயப்படுத்தியும் நிரந்தரப்படுத்தியும் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

இந்த நூலை மொழிபெயர்க்க துகாராம் அவர்கள், கிறிஸ்துவ மதத்தின் ஆதிகால வரலாற்றையும், பூர்வகுடிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து கற்க வேண்டி இருந்தது. அப்படிக் கற்றதனால் மொழிபெயர்ப்பு தெளிவான முறையில் விளக்கமாய் அமைந்துள்ளது. மார்வின் ஹாரிஸ் கிறிஸ்துவ வரலாற்றின் வழிவந்த சமூகத்தில் இருந்து வந்ததால், அந்த வரலாறே அவருடைய ஆய்வுகளுக்கு அடிப்படை ஆகிறது. ஆனால் இந்திய வரலாற்றையும் கீழ்த்தேசங்களின் வரலாற்றையும் இதன் ஊடாகப் பொருத்திப் பார்ப்பது சாத்தியமே.” என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

மொழிபெயர்ப்பைச் சரிபார்த்து இரண்டாம் பாகத்திற்கும் முன்னுரை எழுதியிருக்கிறார் ‘பிரக்ஞை’ ரவிஷங்கர். பல்கலைக்கழக அறிவுஜீவிகள் பொதுஅரங்குக்கு வருவதை நாடாதவர்கள் என்று முன்னுரையில் ஆரம்பிக்கிற ரவிஷங்கர் அதற்கான காரணங்களைப் பின்வருமாறு சொல்கிறார்.

“மார்வின் ஹாரிஸ் தம் காலத்திலேயே நிறையக் கவனம் ஈர்த்தவர். பொதுவாகப் பல்கலைக் கழக அறிவுஜீவிகளுக்குப் பொதுஅரங்கில் அங்கீகாரம் கிட்டுவது மிகக் குறைவு. அவர்கள் பொதுஅரங்குக்கு வருவதை நாடாதவர்கள். ஏனெனில் பொதுஅரங்கு என்பது சகலவிதமான மக்களும் பங்கெடுக்கும் இடம். அதில் கூர்மையாக, எடுத்த பொருளை மட்டும் கவனித்த விவாதங்களை நடத்துவது எளிதல்ல. அங்கு நாடகத்தன்மை, ஜிகினா வேலைகளுக்கு அதிகம் மதிப்பு இருக்கும். நன்மை புன்மையின் முன் தோற்றுப் போகும் என்பது பல்கலை அறிவுஜீவிகளின் கருத்து. அது பெருமளவு உண்மையும்கூட.

சமகால ஆதிக்க மதிப்பீடுகளுக்கு எதிராக அறிவாய்ந்த கருத்துகளை முன்வைப்பவர்கள், எளிதாகவே பொதுஅரங்கிலிருந்து விரட்டப்படுவார்கள். அப்படி ஒரு சம்பவத்தை, தலைகுனிவை எதற்காகத் தேடிப் போக வேண்டும். அதைவிடப் பின்னறைகளில் இருந்து அரசு மேலும் சமூகப் பொருளாதார நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்வது ஆடம்பரமும் தேவையற்ற கவனமும் இல்லாத, ஆனால் மிகவும் தாக்கும் சக்தி உள்ள ஒரு நிலை. அந்தப் பின்னறை மதியாலோசனையைத்தான் பெருவாரி அறிவிஜீவிகள் விரும்புகிறார்கள். மார்வின் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் ஆடம்பரம், பரபரப்பு, அரசியல் லாபம் இவற்றுக்க்காகப் பொதுஅரங்கில் ஏறவில்லை. ஆனால், பொதுமக்களின் சமூகப் பிரக்ஞை மேம்படுத்தப்பட வேண்டும், அறிவியல் பார்வை சாதாரண வாழ்வில் பரவ வேண்டும் என்று சில எளிய அவசியமான நோக்கங்களுக்காகப் பொதுமக்களுக்கு என்று நூல்கள் எழுதியதோடு நிறையப் பொதுஅரங்குகளில் பேசவும் செய்தார்” என்று முன்னுரையைத் தொடங்குகிறார் ‘பிரக்ஞை’ ரவிஷங்கர். அதன்பின்னர் அறிவியல் பார்வை, மார்வினிடம் காணக் கிடைக்கும் ஆறு கருத்துகள் என்று முன்னுரை ஆழமான தளங்களில் விரிந்து புத்தகத்திற்கு அழகு சேர்க்கிறது.

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை புத்தக மொழிபெயர்ப்பின்போது வரலாற்றின் கசப்புகளை அறிந்தபோது, அவர் பெற்ற அனுபவங்களை விவரிக்கிறது.

மாயச்சரக்குப் பெட்டிகள், யூத மீட்பாளர்கள் (மெஸையாக்கள்), சமாதான பிரபுவின் ரகசியம், சூனியக்காரர்களின் துடைப்பங்களும் சூனியக்காரர்களின் கூட்டு வழிபாடுகளும், சூனியக்காரர்களைப் பற்றிய பெரும்பீதி, மீண்டும் சூனியக்காரர்கள், முடிவுரை ஆகிய பகுதிகள் புத்தகத்தில் உள்ளன.

பின்னிணைப்பாக பாகம் – I-க்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன மானிடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி எழுதிய விமர்சனமும், கல்வெட்டியல், தொல்லியல், வரலாற்றியல் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய விமர்சனமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

புத்தகத்தின் அட்டைப்படம்: The Spanish Inquisition by Pedro Berrugete. Sanit Dominic Presiding over an Auto-da-fe-created 1475. Oil on wood. Prad Museum, Madrid.

ஏறக்குறைய 175 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 110.


pksivakumar@yahoo.com

Series Navigation