பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பி.கே சிவகுமார்


1877-ஆம் ஆண்டு பிரதாப சந்திர விலாசம் “ஜனசமூக நாடகமாக” (social drama) ப.வ. இராமசாமி ராஜூ அவர்களால் எழுதப்பட்டது. திண்ணை.காமில் இந்த நாடகத்தை அறிமுகப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதினார். இந்த நாடகம் எப்படி சமூக மாறுதலையும், சமூக மாறுதல்களினால் ஏற்படும் மனப்போக்குகளையும் ஆவணப்படுத்துகிறது என்று அக்கட்டுரையில் விவரித்தார் இந்திரா பார்த்தசாரதி. அதுவே, நாடகத்தை நூலாக வெளியிடும் ஆவலை அளித்தது என்கிறார் எனிஇந்தியனின் பதிப்பாசிரியர் கோபால் ராஜாராம். இந்நாடகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணியத்திற்கும் முந்தையது என்கிறார் இ.பா. அச்சில் இல்லாத பழைய அரிய நூல்களை மீண்டும் வெளிக்கொணர வேண்டும் என்ற எனிஇந்தியனின் உந்துதலால் வெளிவரும் புத்தகம் இது.

“இந்த நாடகத்தின் இன்னொரு சிறப்பு, மொழி நடையின் ஓர் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது. இன்றைய தமிழ்நடைதான் என்றும் இருந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். மணிப்பிரவாளம் ஒரு காலகட்டத்தில் கோலோசியது. ஆனால், இந்த நாடகத்தில் மணிப்பிரவாள நடை இல்லை என்பதும் ஆய்வுக்குரியது. இன்றைய தமிழ் நடையின் உருவாக்கத்தில் இந்த நாடக மொழி ஒரு முக்கிய படிக்கட்டு என்று சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் எழுந்த உரைநடை நூல்களும்கூட இதுபோன்ற ஒரு புதிய மொழி நடைக்கான வார்ப்புகளாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வார்த்தைகள் சேர்த்து எழுதப்படுதல் செய்யுள் நடையிலிருந்து உரைநடை விடுபடத் தடுமாறும் ஒரு போக்கினைக் குறிக்கிறது. தெலுங்கு சரளமாய்த் தமிழ் நாடகத்தில் புழங்குவதும், தனிப்பட்ட மொழிகளாய் இவற்றைக் காண்கிற பிரக்ஞையைத் தாண்டி மக்களிடையே புழங்கும் வேறுவேறு மொழிக்கான அங்கீகாரமாய் விளங்குகிறது. பரஸ்பரம் ஒரு இனக்குழு மற்ற இனக்குழுக்களைக் குறித்துக் கொண்டிருந்த அவநம்பிக்கையும் அதே போன்ற இணக்கமும் வெளிப்படக் காண்கிறோம்” என்றும் பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

“தமிழின் முதல் இசை நாடகம்” என்ற தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி இந்த நாடகத்திற்கு எழுதிய அறிமுக உரையும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடகத்தைப் பற்றி விமர்சகர் வெங்கட் சாமிநாதன் எழுதிய விமர்சன உரையும் நூலில் உள்ளது. “பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக நாம் நாடகத்தையும் நாடக ஆசிரியரையும் கருதலாம்” என்று வெ.சா.வின் விமர்சன உரை ஆரம்பிக்கிறது.

நாடக ஆசிரியர் வரலாறும் நூலில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 200-பக்கங்கள் உடைய இந்நூலின் விலை ரூபாய் 100. இந்நூல் கண்டிப்பாகச் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் கடை எண் 326-இல் கிடைக்கும்.


pksivakumar@yahoo.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்