கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4

This entry is part of 39 in the series 20060512_Issue

வே.சபாநாயகம்குமாரம்பட்டி
19 – 6 -68

பிரிய நண்பர்க்கு,

நமஸ்காரம்.

தங்கள் கடிதம் கிடைத்தது.

இந்த வாரக் குமுதத்தில் ‘கங்கபட்டன்’ வையவன். விகடனில் வந்த “செண்பக மரங்கள்” வையவனிடமிருந்து வந்த கதைகளுள் எனக்கு மிகவும் திருப்தி தராத ஒரு கதை. “ஆச்சாள் புரத்துச் செண்பக மரங்கள்” என்கிற ஒரு அழகான தலைப்பு இப்படிப் பாழ்பட்டிருக்க வேண்டாம். வையவன் அவசரத்தில் எழுதுகிற எந்தக் கதையிலும் எதாவது ஒன்று எனக்குப் பிடித்திருக்கும். முழுக்க ஏமாற்றம் தந்தது இந்தக் கதை.

– இதெல்லாம் இப்போது பிரச்சினையில்லை. வையவனின் எழுத்து நோக்கம் இப்போது வேறு. அந்த நோக்கம் எனக்கும் பிடித்திருக்கிறது. அந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு காரியமாற்றுவது கூட ஒரு கலைதான். வையவன் அதை மிகத் திறமையாகச் செய்கிறார்.

எப்போதும் போல் இல்லாமல், வெளியூர்ப் பயணத்துக்கு எவ்வளவு ஆசையிருக்கிறதோ அவ்வளவு தடைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு நான் செப்டம்பரில் அங்கு வருவது சிரமம்தான். ஆனாலும் வர முயற்சிக்கிறேன். வருவேன்.

மே மாத ஆரம்பத்தில் ஒரு பத்து நாட்கள் JKவுடன் பாண்டி, தஞ்சை, திருச்சி, பாபநாசம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் என்று சுற்றினேன். ஜூலை மாதம் சென்னை போயிருந்தபோது சுந்தர ராமசாமியைப் பார்த்தேன். ஜூன் கடைசி வாரத்தில் JK இங்கே குமாரம்பட்டிக்கும், வெள்ளக்குட்டைக்கும், ஏலகிரிக்கும் வந்திருந்தார்.

– நமது இடைவெளி ரொம்ப stuff ஆனது. நிகழ்ச்சிகளின் நெருக்கம் அதிகம். எனவே நேரில் பேசச் சுவையகத்தான் இருக்கும்.

என்ன கொழுப்பு பாருங்கள் மனசுக்கு? சந்திப்பையும் சுவையையும் பற்றி என்ன இன்பமாய்க் கற்பனை செய்கிறது! அலுப்பு சலிப்பான – மிகக் கசக்கும் சம்பவங்களும் நேரங்களும் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ?

– இலக்கியத்தில் எதுவும் சாதிக்க முடியாது! பேசாமல் – காசுக்கு எழுதுகிற கலை
கைவந்தால் அதுவே போதும்!

கவிதை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்!

அரசியலில் மிகுந்த அவநம்பிக்கை!

வாயில் எல்லாம் சாபங்களாக வருகின்றன. ரொம்பப் பண்படாத – பக்குவப்படாத
ஒரு மனநிலை மிக ஆபத்தானது. மெள்ள மெள்ள பழைய நிலைக்கு மாறினாலொழிய
உய்வில்லை.

அனைவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும். செல்வன்.அகிலனின் பிறந்த
நாளில் அவசியம் கலந்து கொள்ள முயல்வேன்!

தங்கள் – பி.ச.குப்புசாமி.

——— 0 ———-

Series Navigation