குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998

This entry is part of 28 in the series 20050506_Issue

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்


ஓ வி விஜயனுடன் என் பேட்டி இது. என்ன அற்புதமான மனிதர். கம்யூனிசம் என்ற பம்மாத்தை ஊடுருவிக் காணத் தெரிந்தவர். ஆன்மீக ராஜ்யத்துக்குள் நுழையத் தெரிந்தவர்.

இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர் ஓ வி விஜயன் என்பதில்ஐயமில்லை. கவிதையின் அழகும், வெவ்வெறு தளங்களில் அர்த்தமாகும் தன்மையையும் உள்ளடக்கிய படைப்புகள் அவருடையது. ‘கஸாக்கிண்ட இதிகாசம் ‘ என்ற அவருடைய நாவல் மலையாளத்தில் ஒரு பரபரப்பையே உண்டு பண்ணிற்று. நெகிழ்வான கற்பனையுலகிலிருந்து நவீன உலகிற்கு மலையாள இலக்கிய உலகை அழைத்துச் சென்றது இந்த நாவல். கடந்த ஐம்பதாண்டுகளில் ‘கஸாக் ‘ அளவு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். எழுத்திற்கு ஒரு விடிதலை அளித்து சோதனை முயற்சிகளை உருவிலும் உள்ளடக்கத்திலும் மேற்கொள்ளக் காரணமாய் இருந்தது அந்த நாவல்.

பின்னர் ‘குருசாகரம் ‘ கேரள சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றது.1997-ல் அவர் எழுதிய ‘தலைமுறைகள் ‘ மாஸ்டர்பீஸ் என்றே சொல்லலாம். இன்னமும் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.

‘தர்மபுரி காதை ‘ , ‘கஸாக் ‘ , ‘முடிவிலி ‘, ‘தூக்கிலிடப்பட்ட பிறகு ‘ என்று தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பு – ஆங்கில மொழிபெயர்ப்பில் பென்குவின் வெளியீடாய்க் கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளும் தொகுக்கப்பட்டு வைகிங் பென்குவின் வெளியீடுகளாய்க் கிடைக்கின்றன.

விஜயனை அவருடைய சிகந்தராபாத் இல்லத்தில் சந்தித்தேன். வாசல் ‘தெரெசா ‘ ‘விஜயன் ‘ என்று எளிமையாய் சொல்கிறது. அன்று காலையிலேயே நான் வந்திருக்கவேண்டும், ஆனால் இரவு பத்து மணியாகிவிட்டது. ஆனால் அவர்கள் அதைப் பற்றி முகங்கோணவில்லை.

விஜயன் (அவர் மனைவி அவரை ஓவி என்றழைக்கிறார்) உயரமாக், ஒல்லியாக இருக்கிறார். நீளமான, ஒல்லியான, வெள்ளையான தாடி. பார்கின்சன் நோய் தனக்கிருப்பதாய்த் தெரிவிக்கிறார்.அதனால் குரலும் பாதிக்கப் பட்டுள்ளது. எழுத்தாளரும், கார்ட்டூன் வரைபவருமான விஜயனுக்கு பார்கின்சன் நோய்.

அமெரிக்கா பற்றி விசாரிக்கிறார். அவருடைய மகன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். அவர் அமெரிக்கா வந்ததுண்டா என்று கேட்கிறேன். கிட்டத்தட்ட டிக்கெட் எல்லாம் எடுத்தபின்பு, கடைசியில் போகவில்லை என்று தெரிவிக்கிறார்.

சான் ஃப்ரான்சிஸ்கோ பற்றியும், சிலிகன் பள்ளத்தாக்கு பற்றியும் தெரிவிக்கிறேன்.

உபசரிப்பில் மிக கருத்துள்ளவராய் இருக்கிறார். அவருடைய அரசியல் கார்ட்டூன்கள் பற்றிக் கேட்கிறேன். 70-களிலும், 90-களிலும் அவர் வரைந்த கார்ட்டூன்களைக் காண்பிக்கிறார். அங்கதமும், கூர்மையான பார்வையும் கொண்டவை. அந்தக் கார்ட்டூன்களை இன்று பிரசுரம் செய்தாலும் பொருத்தமாகத் தான் இருக்கும்.

‘நீங்கள் பல புத்தகங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகப் பிடித்ததாய் உள்ளது எது ? சாகித்ய அகாதமி பரிசு ‘முடிவிலி ‘க்குக் கிடைத்தது. ஆனால் ‘கஸாக் ‘கிற்குக் கிடைத்திருக்கலாம் என்று உணர்ந்தீர்கள் இல்லையா ? ‘

‘என்னை சரியாக மேற்கோள் காட்டவில்லை போல. நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப்புத்தகம் வெளிவந்தபோது அத்தோடு உணர்வுப்பூர்வமாக உறவுகொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அகாதமியின் உறுப்பினர்கள் சிலர் சொன்னார்கள். ‘ முடிவிலி ‘ அதனை விட அதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்டது..

கஸாக் தான் நான் என்னையே அர்ப்பணித்து எழுதிய நாவல் என்று சொல்லவேண்டும். என்னுடைய முதல் நாவல் என்ற வகையில் அதற்கு சிறப்பிடம் உண்டு. நான் ஒரு அத்தியாயம் எழுதி மாத்ருபூமி ஆசிரியரிடம் கொடுத்தேன். ஆனல் அது சிறுகதை என்று பிரசுரிக்கப் பட்டு விட்டது. தலைமுறைகளும் என் மனதிற்கு மிக உவப்பான நாவல், ஏனென்றால், அது இப்போதில்லாத மனிதர்களையும் ,இடங்களையும் பற்றிப் பேசுகிறது. ‘

‘தில்லியில் வசித்தபோது பத்திரிகையாளர் பணியிலும் இருந்தீர்கள், அல்லவா ? ‘

‘கிட்டத்தட்ட 40 வருடங்களாக எழுதி வருகிறேன். தில்லியில் 35 வருடங்கள் அரசியல் நோக்காளனாகவும், கார்ட்டூனிஸ்டாகவும் இருந்தேன். ஸ்டேட்ஸ்மன், தி ஃபார் ஈஸ்டர்ண் எகனாமிக் ரிவ்யூ, போல சில பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். ‘

‘உங்களது படைப்புக்களைப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு புரட்சியாளராக ‘கஸாக் ‘க்கில் இருந்து, அனைத்தையும் கடந்தவராக ‘முடிவிலி ‘யில் ஆகி, அதன் பின்னர் ‘தீர்க்கதரிசியின் பாதை ‘யில் ஒரு தேசியவாதியாகவும் ஆகியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிறகு நீங்கள் உங்களது மூதாதையரது குடும்பத்தைப் பற்றி தலைமுறைகள் புத்தகத்தில் எழுதினீர்கள். நீங்கள் இப்படி மாற ஏதேனும் காரணமுண்டா ? ‘

‘என்னை மாற்றும் பாதிப்புகள் மாறுகின்றன என்பது நான் மாற மாற அல்லது வளர வளர என்னை பாதிக்கிற விஷயங்களும் மாறிக்கொண்டே போகின்றன என்பதுதான். நான் ஆரம்பிக்கும்போது, நான் எதைப்பற்றி எழுதுகிறேன் என்பதைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருந்தது. என்னுடைய பூர்வீகமான பாலக்காடும் அதன் கிராமப்புறமும் அதன் பரந்த வெளிகளும் என் மனத்தில் எல்லையற்ற ஆனந்தத்தை உருவாக்கின என்பதைத் தவிர வேறொன்றும் உணராதிருந்தேன். அதைக்கூட முழுமையாக உணராமலிருந்தாலும், அது நிச்சயமாக என் மொழியையும் கஸாக்கில் நான் கையாண்ட வார்த்தைகளையும் பாதித்தது. மேற்குதொடர்சி மலையினூடாக விசிலடிக்கும் காற்று பாலக்காட்டை தழுவுவதையும் அதன் காட்சிகளும் ஒலிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. நான் கதையில் முழுக்கவனம் செலுத்தினேன், என் மீது அல்ல. அதை நான் மிகவும் ஆராயவில்லை. ‘

‘மலையாளம் வாசகர்களில் இளைய தலைமுறை உங்கள் எழுத்தின் பால் மிக ஈர்ப்புக் கொண்டிருந்தது. காட்சர் இன் த ரை புத்தகத்துக்குப் பிறகு அமெரிக்க முரட்டு இளைஞர்களிடையே இருந்த ஒரு பக்திமயமான பின்பற்றுதல் போல உங்களுக்கு ஏதேனும் குழாம் இருந்ததா ? எப்படி கஸாக் ஒரு குழும செவ்விலக்கியம் -cult work – ஆனது ?

‘பாதிப்பில் இது போன்றதொரு ஒற்றுமை இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கேட்சர் போல கஸாக் ஒரு புரட்சி புத்தகமல்ல. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இதனைச் சொல்வது ஆபத்தானதாக இருக்கலாம். இருந்தாலும், அது ஒரு ஆழமனத்தின் இந்து கட்டுமானம் கொண்டது. மலபாரின் முஸ்லீம் நாட்டுப்புற வாழ்வியலின் கூறுகளையும் இணைத்து அதன் அனுபவங்களையும் இணைத்து உருவானதுதான் கஸாக். ‘

‘கஸாக் ஒரு கடினமான புத்தகம் ‘

‘அது ஆழமான உணர்வுப்பூர்வமான முறையில் தொடர்ந்த பிரபஞ்ச மர்மத்தைத் தேடி நகர்ந்து செல்கிறது. ‘

‘புனிதமானது-கொச்சையானது ( sacred profane) என்ற பின்னணியில் இன்னொரு புத்தகத்தைப் பற்றி கேட்க விரும்புகிறேன். ‘தீர்க்கதரிசியின் பாதை ‘. சீக்கியர்களுக்கு நடந்த விஷயங்கள், கதார் கட்சியின் கதை, கோமகாடு மாரு…. இதில் அதன் வரலாற்றுப்பூர்வமான் விஷயங்களிலும் உணர்வுப்பூர்வமான விஷயங்களிலும் மிகவும் அற்புதமான புத்தகம். ‘

‘அது ஏறத்தாழ ஒரு மதவியல் கட்டுரையாக ஆகிவிட்டது. ஆனால் அது தெளிவானது. படிக்க எளிதானது. 1984ஆம் வருட கலவரங்களில் டெல்லியில் வசித்துவந்தேன். சீக்கியர்கள் அப்போது தாக்கப்பட்டார்கள். முதல் அப்பாவிக்குழந்தைகளின் கதறல் என்று பெயரிட்டேன். அவர்கள் இந்தியாவுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள்! மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை! சீக்கியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை! ‘

‘அது எதிர்ப்பின் குரலா ? உங்கள் மற்ற புத்தகங்களும் அப்படியா ? ‘

‘அப்படியெல்லாம் இல்லை. கஸாக்கில் கூட, நான் ஒரு அனார்க்கிஸ்ட். ஆனால் அதில் எதிர்ப்புக்குரலில்லை. அதில் ஏதும் இருந்தால் அது மென்மையான வாய்மூடிய அனார்கிஸ்ட். ‘

(அடுத்த வாரம் மீதி)

(ரீடிஃப் இணைய இதழில் வெளிவந்தது. )

Series Navigation