சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்

This entry is part of 28 in the series 20050506_Issue

சின்னக்கருப்பன்


சுந்தர ராமசாமி என்ற சிறந்த எழுத்தாளர் சமீபத்தில் எழுதிய அற்புதமான கதையை படித்தேன்.

மனதாழத்தில் அமுங்கிக் கிடக்கும் வன்முறையை சுந்தர ராமசாமி ஒவ்வொரு கதையாக வெளிக்காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அது சுந்தர ராமசாமியின் வன்முறை அல்ல. அது அவர் வாழும் சமூகத்தின் வன்முறை. வன்முறையை அலங்காரம் பண்ணுபவரல்ல அவர். அதன் அவலத்தை, கும்பல் மனப்பான்மையில் வன்முறை வெளிப்படும் விதத்தை வெளிக்காட்டுபவர்.

இந்த கதையில் அவர் தலித்துகளைப் பற்றியோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியோ எழுதியிருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. இது சமூகத்தில் தொடர்ந்து மாறுபடும் உறவுகளும், அந்த உறவுகள் மூலம் மனிதர்கள் கொள்ளும் உணர்வுகளுமே கதை.

இதில் யாரும் சுய சிந்தனையோடு நடந்து கொள்வதில்லை. இதில் சுய சிந்தனையோடு நடந்து கொள்வது தாயம்மா மட்டுமே. அவளது ஒரே ஒரு சுயசிந்தனையும் ஆர்வமும், அந்த ஊரையே மாற்றுகிறது. மாற்றத்தை ஏற்படுத்துபவள் தாயம்மாதான். ஊர் பெயரை மாற்றுவதிலிருந்து ஊரை மாற்றுவதிலிருந்து முன்பு தூற்றியவர்களை இன்று பாதுகாவலர்களாக ஆக்குவது வரை மாற்றுவது தாயம்மாவின் சுய சிந்தனை. மற்ற அனைவரும் செலுத்தப்பட்டவர்களே.

பாதிரியாரும், தையல்காரரும் தங்கக்கண்ணும், ஊராரும், மோகன் தாசும் வேறொரு சிந்தனைகளின் தாக்கங்கள். வேறொரு விஷயத்துக்காக தங்களை பலி கொடுக்கின்றவர்கள். வேறொரு விஷயத்தைக் காப்பதற்காக போராடுகிறவர்கள். தாயம்மா மட்டுமே தனக்காக இருக்கிறாள்.

அவளது சுய ஆர்வம் அவளை படிக்க வைக்கிறது. அவளை பள்ளிக்கூட வாத்தியாராக ஆக்குகிறது.

பிள்ளை கெடுத்தாள் விளை – கதை யாருக்கும் எந்த போதனையையும் தருவதில்லை. பிரச்சாரம் அல்ல அது. ஒரு தலித்தின் சோகமயமான வாழ்க்கையை சொல்லுவதில்லை. அது தலித் இலக்கியம் அல்ல. தன்னைப் பற்றிய எல்லா விமர்சனங்களையும் அறிந்த சுந்தர ராமசாமி, இந்தக் கதையை எழுதியதன் மூலம் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கண்டு அஞ்சுவதில்லை என்றே பறை சாற்றுகிறார். அது மட்டுமல்ல, அப்படிப்பட்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்காமல் தான் சொல்ல வந்த கதையை சொல்லிவிட்டு போவதிலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். தன் கதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி படிக்கப்பட்டு ஒவ்வொரு வரியிலும் டாகன்ஸ்ட்ரக்ஷன் ஆட்கள் நோண்டப்போகிறார்கள் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அஞ்சாமல், அவர் தான் சொல்ல வந்த கதையை சொன்னதற்காக பாராட்டுக்கள். (என் பாராட்டுக்கள் அச்சிறந்த எழுத்தாளருக்குத் தேவையில்லை என்றாலும்.)

இந்தக் கதை மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. முதலாவது தாயம்மாவின் உண்மையான கதை. அது நமக்குத் தெரியாது. அந்தக் கதையைச் சொல்வது தங்கக்கண். தங்கக்கண் சொன்னதுதான் நமக்கு வந்து சேர்ந்ததா என்றும் தெரியாது. நம்மிடம் கதை சொல்வது தையல்காரர்.

தாயம்மாவின் கதையை தங்கக்கண் சொல்வது ஒரு தேர்ந்த கதை சொல்லியின் வார்த்தையாக வருவதாக தையல்காரர் கூறுகிறார். கதையை அழகுபடுத்துவதற்காக தங்கக்கண் சொன்னது என்ன, சொல்லாமல் விட்டது என்ன என்று வாசகரான நமக்கு தெரியாது.

சுந்தர ராமசாமி முதலாவதாக பேசுவது, கதை சொல்லியின் பங்கு கதையில் என்ன என்பது ? வியாசர் எழுதிய மகாபாரதத்தில் வியாசரே ஒரு கதாபாத்திரமாக வருவது போல தங்கக்கண் சொல்லும் கதையில் தங்கக்கண்ணும் ஒரு கதாபாத்திரமாக வருகின்றான். சஞ்சயன் பார்த்து திருதராஷ்டிரனுக்குச் சொன்னதை திருதராஷ்டிரனுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது என்று வியாசர் சொன்னகதை போல, தாயம்மாவின் கதையை தங்கக்கண் சொல்வது தையல்காரரின் வார்த்தைகளில் நமக்கு சுந்தர ராமசாமி மூலம் சொல்லப்படுகின்ற தாயம்மாவின் கதை பல அடுக்குகளுக்குப் பின்னால் உண்மையான தாயம்மாவின் கதை ஒளிந்திருக்கிறது.

இரண்டாவது, தாயம்மா கதையில் முக்கிய நிகழ்வு நிச்சயமின்றி வேண்டுமென்றே விடப்பட்டுள்ளது. அது கதைசொல்லியான தங்கக்கண்ணுக்கும் தெரியவில்லை (என்று தையல்காரர் சொல்கிறார்). ஏனெனில் அங்கு உண்மை நிகழ்வும், குற்றச்சாட்டின் உண்மையும் முக்கியமில்லை என்பதுதான். கும்பல் மனப்பான்மை மேலெழும்போதும், சமூகத்தின் வன்முறை வெளிப்படும்போதும், உண்மையை விட, நிகழ்வு எப்படி பார்க்கப்படுகிறது என்பதே முக்கியமானதாக ஆகிவிடுகிறது.

மூன்றாவது இந்த கதையை அல்லிகோரிக்கல்(allegorical) என்று எடுத்துப் பார்க்கவும், அதில் சுந்தரராமசாமியின் அரசியல் சார்பை பார்க்கவும் மிகவும் சிரம்பப்பட்டு தோண்ட ஏதுவானதாக இருக்கிறது. (சுந்தர ராமசாமி கருத்தின் படி) கிரிஸ்துவத்தின் வரவு மூலம் கல்வி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வந்தது, அதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாகவும் கல்வி கற்றவர்களாகவும் முண்டி முன்னேறுவது. அதற்கு பக்கபலமாக இருக்கும் உள்ளூர் முற்போக்கு சக்திகள் (மோகன் தாஸ் (கரம் சந்த் காந்தி!) தாயம்மாவுக்கு வாத்தியார் உத்யோகம் கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது ) அதற்கு சமூகத்தில் கொடுக்கப்படும் அரைகுறை அங்கீகாரம், மனச்சாய்வுகள் ஏதோ காரணத்தை முன் கொணர்ந்து, மற்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை குறைக்கவும் மறுக்கவும் முனைவது. ஆனால் பாதிரியாரும் மோகன் தாசும் போட்ட விதை காலம் கடந்தேனும் மாற்றத்தை கொண்டு வந்து விடுவது.

**

இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது. அது sacred க்கும் profane க்கும் உள்ள உறவு. எது வணங்கத்தக்கதாக சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறதோ அது காலபோக்கில் வணங்கத்தகுதியற்றதாக ஆக்கப்படுகிறது. இது நிலைபெற்ற விஷயம் இல்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்டவளாக இருக்கும் தாயம்மா வணங்கத்தகுதியற்றவளாக இருக்கிறாள், அவள் படித்து பள்ளி ஆசிரியையாக ஆகும்போது வணங்கத்தகுதியானவளாக ஆகிறாள். அவளை வணங்கத்தகுதியற்றவளாக சமூகத்தால் கற்பிக்கப்பட, நிகழ்வு காரணமாகிறது. நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் வணங்கத்தக்கவளாக கதை சொல்லி (தங்கக்கண்) உருவாக்குகிறான். profane ஆக இருக்கும் தாயம்மா sacred ஆவதும், அவள் பின் profane ஆவதும், மீண்டும் அவள் sacred ஆவதும் சமூகத்தால் நடத்தப்படும் நாடகமாகின்றது. அவள் இறுதியில் sacred ஆகும்போது மட்டுமே அது சமூக ஒழுக்கத்தைக் காப்பாற்ற இல்லாமல், அந்த மனுஷிக்கான மரியாதையாக ஒரு மனித வாழ்வின் மகத்துவத்துக்கான புனிதமாக ஆகின்றது.

**

தாயம்மாவின் ஆதரவாளர்கள் யாருமே தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர். பாதிரியாரும் மோகன் தாசும், சொத்தை விற்று பள்ளிக்கூடம் கட்டித்தந்தவரும், தையல்காரரும், தங்கக்கண்ணும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர். தாயம்மாவுக்கு அவர்கள் பரிந்ததும் அவள் தாழ்த்தப்பட்டவள் என்பதற்காக அல்ல. அவள் ஒழுக்கத்தில் சிறந்தவள் அதனால்தான் அவள் பக்கம் நிற்கிறார்கள் என்றும் இல்லை. அது அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. இறுதியில் அவர்கள் அவளைக் காப்பாற்றுவதற்காக பணம் எடுக்கும் போதும் அவர்களுக்குத் தெரியாது. அது நன்றிக்கடனும் இல்லை.

அதுவே இந்தக் கதையின் உன்னதத்துக்குக் காரணம். இங்கு வெளிப்படுவது உண்மையான கதை சொல்லியான சுந்தர ராமசாமியின் குற்றம், குறைகள், நிறைகள் கடந்த மனித நேயம். அவரது மனித நேயம் வெளிப்படும்போது யாரோ அதனை அறிய அங்கு இல்லை என்பது சுந்தர ராமசாமியின் தனி மனித சோகமாக ஏனோ எனக்குத் தோன்றுகிறது.

**

பின் குறிப்பு: நான் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவது இல்லை. அதற்கும் எனக்கும் வெகு தூரம். இருப்பினும், இந்த கதை பற்றிய சில கட்டுரைகளைப்படித்துவிட்டு ஆர்வம் காரணமாக சுந்தரராமசாமி அவர்களின் கதையைப் படித்தேன். தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். இது இலக்கிய திறனாய்வு கட்டுரை என்று கருதி எழுதவில்லை.

karuppanchinna@yahoo.com

Series Navigation