கார்ல் பாப்பரின் வெங்காயம்-7

This entry is part of 29 in the series 20050422_Issue

சோதிப் பிரகாசம்


ஆட்சித் தலைவர்கள்

எழுதப் படாத தாள் என்று உழவர்களின் மூளைகளைச் சித்தரித்து இருந்தார் மாவோ! ஆனால், உழவர்களின் கருத்துகளைத் தமது மூளையில் பதித்துக் கொண்டதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு இருந்தவர்தாம் அவர்!

ஏனென்றால், அந்தந்த மக்களின் கருத்துகளுக்கு—-உள்ளக் கிடக்கைகளுக்கு—-நலன்களுக்கு—-வெளிப்பாடு நல்குபவர்கள்தாம் அவர்களின் தலைவர்கள் ஆவர். ஆனால், உழவர்களின் மூளைகளில் தமது கருத்துகளைத் தாமே எழுதி விட்டதாக மாவோவோ கற்பனை செய்து கொண்டு இருந்தார்; ‘முற்றான அறிவின் உறைவிடமாக ‘த் தமது மூளையை அவர் கருதிக் கொண்டும் இருந்தார்.

தமது கருத்துகளில் இருந்து வேறு பட்ட கருத்துகளை எல்லாம் அரை-குறையான கருத்துகளாக—-எனவே, பிழையான கருத்துகளாக—-மாவோ கருதியதால்தானே, ‘நூறு பூக்கள் மலரட்டும்! ‘ என்று சொல்லி, கரசியமாக ஆங்கு ஆங்கே பதுங்கிக் கிடந்து கொண்டு வந்து இருந்த எதிர்க் கருத்துகளை வெளியே கொண்டு வந்து, பின்னர் அவற்றை அவர் அழித்து ஒழித்து விடவும் நேர்ந்து இருந்தது!

புரட்சிகர உணர்மையினைத் தன்னியல்பாக உழைப்பாளர் வருக்கம் வளர்த்துக் கொண்டு விட முடியாது என்று கார்ல் காவுட்ஸ்கியை அடியொற்றி லெனின் கூறுகிறாரே, முற்றான உண்மையின்—- ‘முழுமையான புரட்சிகர உணர்மை ‘யின்—-உறைவிடமாகத் தம்மை அவர் கருதிக் கொண்டு இருந்ததுதானே, இதற்குக் காரணம்! இவை போன்ற கருத்துகளைப் பின்னர் அவர் மாற்றிக் கொள்ளவும் நேர்ந்து இருந்தது என்பது வேறு விசயம்!

நம் நாட்டு ஸ்தாலினிச வாதிகளோ, மார்க்சியம், லெனினிசம், புரட்சி, சுரண்டல், பருமை வாதம், கருத்து வாதம், தனி உடைமை, பொது உடைமை, என்று எல்லாம் ஒரு சில சொற்களை உச்சரிப்பதற்குத் தெரிந்து கொண்டு விட்டாலே போதும், ‘முற்றான உண்மை ‘யின் உறைவிடங்களாகத் தாங்கள் மாறி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்; தங்கள் ‘பிறவி ஞானத்தை ‘ மற்றவர்களுக்கு எல்லாம் போதித்துக் கொண்டு வருவதற்கும் முற்பட்டு விடுகிறார்கள்.

எனினும், அறிவாளர்களின் ‘தேற்ற முறையான ‘ புரட்சிகர உணர்மை என்பதும் உழைப்பாளர் வருக்கத்தின் ‘செயற்பாட்டு முறையான ‘ புரட்சிகர உணர்மை என்பதும் ஒன்றானவை அல்ல என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம். ஏனென்றால், வருக்கங்களின் செயல் முறையான நடவடிக்கைகள் இல்லாமல், தலைவர்களின் கையால் ஆகாத தேற்றங்களினால் ஆகப் போவது எதுவும் இல்லை.

அதே நேரத்தில், அரை-குறை அறிவுக்கு வழிகாட்டிடத் தகுந்த ஒரு முற்றான அறிவின் உறைவிடமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளாமல் யாரும் தலைவர் ஆகி விட முடியுமா, என்ன!

இப்படித்தான், அரை-குறை அறிவினை ஏளனமாக நோக்குகிறார் கார்ல் பாப்பர்!

எனினும், கார்ல் மார்க்ஸைக் கொஞ்சம் அவர் அணுகிப் பார்த்து இருந்தால், பிழையாக்கும் இயன்மையில் அல்லாமல் ‘வளப் படுத்தும் இயன்மை ‘யில்தான் மனிதர்களின் வளர்ச்சி அடங்கிக் கிடக்கிறது என்பது அவருக்குக் கொஞ்சம் தெளிவு ஆகி இருந்து இருக்கும்!

குறையும் பிழையும்

அரை-குறையான அறிவு அனைத்தும் பிழையான அறிவுதான் என்று நாம் கூறி விட முடியுமா ? என்றால், முடியாது!

மனிதர்களுக்கு ஏன் பசி எடுக்கிறது ? உணவினை உண்டவுடன் அந்தப் பசி ஏன் அடங்கி விடுகிறது ? உடம்புக்கும் பசிக்கும் உணவிற்கும் இடையிலான நிகழ்ப்பாடு என்ன ? என்பனவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல், பசித்தவுடன் உணவினை உண்டு தனது பசியினை ஆற்றிக் கொள்கின்ற ஒரு மனிதனின் அறிவு, அரை-குறை ஆனதுதான் என்பதில் ஐயம் இல்லை; ஆனால், பிழையானது அல்ல!

ஏனென்றால், பசியைப் பற்றிய அவனது கணிப்பு, செயற்பாட்டில் நிருபிக்கப் பட்டு இருக்கிறது. இதனால்தான், ‘கூழின் உண்மை அதனைக் குடிப்பதில் இருக்கிறது ‘ என்று ஏங்கெல்ஸ் எடுத்து உரைத்தார்.

‘தேற்ற முறையான அறிவின் ‘ நிருபணம் என்பது ‘அனுபவ முறையான செயற்பாட்டில் ‘ மட்டும்தான் கிடைத்திட முடியும் என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

‘அம்மா என்று தாயை விளிக்கின்ற பொழுது, அந்த ‘வரையறை ‘யை ஒரு குழந்தை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இப் பொழுது தாயாகி விட்ட ஒரு நங்கை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது அல்லவா ? எனினும், இந்த இருவரின் வரையறைகளும் சரியான வரையறைகளே ஆகும். ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: பக்.234-35.)

ஏன், நேர்த்தியான அறிவினை எய்தியதன் பின்னர்தான் கருவிகளைச் செய்திட வேண்டும் என்று மனித இனம் கருதிக் கொண்டு வந்து இருந்தால், எந்த ஒரு தொழில் நுட்பமும் இன்று வரை வளர்ச்சி அடைந்து கொண்டு வந்து இருக்க முடியுமா ?

ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற மாற்றங்களை, முந்திய தொழில் நுட்பத்தின் பிழையாக்கமாகக் காண்பதில் தவறு இல்லை என்று நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அரை-குறையான முந்திய தொழில் நுட்பத்தின் வளமாக்கமாக அதனை நாம் கண்பதுதான் பொருத்தம் ஆகும். ஏனென்றால், முந்திய தொழின் நுட்பத்தினை நுகர்ந்து நாம் பயன் அடைந்து இருக்கிறோம்.

ஆக, தேற்றத்தில் அல்லாமல் செயற் பாட்டில்தான், விஞ் ஞானம் நிருபிக்கப் படுகிறது என்பதும் செயற்பாடுகளின் விளைவுகளில் இருந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியினை எய்தி அது வளம் பெற்றிட முடிகிறது என்பதும் தெளிவு.

ஏனென்றால், ‘நேர்த்தியான அறிவு ‘ என்று ஒன்று என்றும் இருந்திடவே முடியாது.

நேர்த்தியான அறிவு

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ‘அறிவின் தேற்றம் ‘ என்னும் ஓர் ஆங்கில நூலை நான் படித்தேன்; அதன் ஆசிரியர் பெயர்தான் என் நினைவில் இல்லை.

‘ ‘நேர்த்தி என்பது நமது கற்பனை; அப்படி ஒன்று மெய்மையில் இல்லை; எடுத்துக் காட்டாக, நேர்த்தியான வட்டம் எதுவும் மெய்மையில் இல்லை; எனினும், நேர்த்தியான ஒரு வட்டத்தை நாம் வரைந்து கொள்கிறோம்; பின்னர், அதனை ஓர் அளவு கோலாகக் கொண்டு, கால் வட்டம், அரை வட்டம், முதலியவற்றை நாம் புரிந்தும் கொள்கிறோம். நமது கரணிய முறையான (rational), அல்லது தருக்க முறையான (logical) சிந்தனையின் விளைது இது ‘ ‘ என்று அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

இங்கே, முதலாண்மைச் சமுதாயம் பற்றிய கார்ல் மார்க்சின் கருத்துகளை நாம் எடுத்துக் கொள்வோம். முற்றான முடிவுகள் என்றும் நேர்த்தியான கணிப்புகள் என்றும் அவரது கருத்துகளை நாம் எடுத்துக் கொண்டு விட முடியுமா ? என்பதனைச் சற்று நாம் பார்ப்போம்.

கார்ல் மார்க்ஸ்

முதலாண்மைச் சமுதாயத்தை ஆராய்ந்திடத் தொடங்கிய கார்ல் மார்க்ஸ், ஓர் எடுத்துக் காட்டாகக் கொண்டு இருந்தது இங்கிலாந்தைதான்! எனினும், தனது சாயலில் ஓர் உலகத்தையே முதலாண்மை படைத்திடப் போகிறது என்றும் அவர் கூறி இருந்தார். அதே நேரத்தில், ஒரே ஒரு கை மாற்று உறவில் இருந்து—-ஒரே ஒரு முதலாளி-உழைப்பாளி உறவில் இருந்தும் கூட—-இதனை அவர் முற்கூறி இருந்து இருக்கவும் முடியும்.

இங்கே, தமது சாயலில் ஓர் உலகைத்தைப் படைத்திடப் போகிறது என்று முதலாண்மையைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் முற்கூறி இருந்தது பொய் ஆகி விட்டது என்று நாம் கூறி விட முடியுமா ? என்றால், முடியாது! அதே நேரத்தில், பழைய சமுதாய அமைப்புகளை எல்லாம் அழித்து ஒழித்து விடும் என்று முதலாண்மையைப் பற்றி அவர் முற்கூறி இருந்த கணிப்புகள் அப்படியே நிறைவேறி விட்டனவா ? என்றால், அதுவோ இல்லவே இ ல்லை!

ஏனென்றால், பழைய பண்ணைய (feudal)ச் சமுதாயத்துடன் முதலாண்மை இணங்கிச் செல்வதை நாம் பார்த்து இருக்கிறோம். சிற்றுடைமை யாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ‘அரசு-முதலாண்மை ‘யாக அது வளர்ந்து கொண்டு வந்து இருப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதனால்தான், எதிர்ப் புரட்சிக் காரர்களாக முதலாளர்கள் மாறி விட்டு இருந்தனர் என்று கார்ல் மார்க்ஸ் கூட கருத்துக் கூறிடவும் நேர்ந்து இருந்தது.

இங்கே, கார்ல் மார்க்சின் ‘கணிப்பு ‘ப் பிழையாகி விட்டது என்பது உண்மைதான்! இதற்காக, அவரது ‘தேற்றமும் ‘ பிழையாகிப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், இங்கே பிழை படுத்தப் பட்டு இருப்பது அவரது கணிப்பு மட்டும்தான் ஆகும். இந்தப் பிழைகளைக் களைந்து அடுத்த கட்டத்திற்கு மார்க்சியத்தை வளர்த்துக் கொண்டு செல்வது அடுத்த தலைமுறையினரின் பணியும்தான் ஆகும்.

ஏனென்றால், ‘அறிவின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாம் சென்று கொண்டு இருக்கின்ற பொழுது, ‘அறிஞன் ‘ என்று கொட்டை எழுத்துகளில் எழுதி நமது நெற்றியில் நாம் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அறிவின் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திட நாம் முற் படுகின்ற பொழுது நம்மை வரவேற்பது, ‘மூடனே, வருக! ‘ என்னும் குரல்தான்!

நாமாக எழுதி ஒட்டிக் கொண்டு இருந்த அறிஞன் பட்டத்தைக் கிழித்து எறிந்து விட்டு, நம்மை வரவேற்று நிற்கின்ற மூடன் பட்டத்தை நமது நெற்றியில் நாம் ஒட்டிக் கொள்ளாமல், அறிவின் அடுத்த கட்டத்தைக் கடந்து சென்றிட நம்மால் முடிவது இல்லை. மூடன் பட்டத்தை இப்படி ஒட்டிக் கொள்ள மறுப்பவர்கள், அறிஞன் பட்டத்துடன் அறிவின் முந்திய கட்டத்திற்கு வேண்டும் என்றால் திரும்பிச் சென்று விடலாமே ஒழிய, அறிவின் அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து சென்றிட முடியாது! ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.229.)

மார்க்சும் ஏங்கெல்சும்

முதலாண்மையை அழித்து ஒழித்து விட்டு ஆட்சியை அமைத்துக் கொள்கின்ற உழைப்பாளர் வருக்கம், ஒரு வல்லதிகார ஆட்சியினை அமைக்கும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர்.

ஆனால், ஒரு வல்லதிகார ஆட்சியாக உழைப்பாளர் வருக்கத்தின் ஆட்சி இருந்திட வேண்டுமா ? அல்லது ஒரு பொது நாயக ஆட்சியாக அது இருந்திட வேண்டுமா ? என்னும் முடிவினை, ஆட்சி அமைத்து ஆளப் போகின்ற உழைப்பாளர் வருக்கம் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவதற்கு அவர்களுக்குத் தோன்றிட வில்லையே, ஏன் ?

ஆட்சியினை அமைத்திடக் கூடிய ஒரு வருக்கத்திற்கு, எப்படி அந்த ஆட்சி இருந்திட வேண்டும் என்று முடிவு எடுத்திட முடியாமல் போய் விடுமா, என்ன! எனினும், மார்க்சும் ஏங்கெல்சும் முந்திக் கொள்கிறார்கள்—-எதிர் கால உழைப்பாளர்களின் ஆட்சிக்கு வழி காட்டுகின்ற ‘நல் எண்ணத்தில் ‘!

ஈரோப்பை ஒரு புதிய பூதம் பிடித்து ஆட்டி வைத்திடப் போகிறது என்று உலகையே அச்சுறுத்திய வண்ணம் தங்கள் பொதுமைக் கட்சியின் அறிக்கையினை வெளியிட்டு இருந்த மார்க்சிற்கும் ஏங்கெல்சிற்கும், எல்லோரையும் முந்திக் கொண்டு சில விளைவுகளையும் முற்கூறிட வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டு இருந்ததில் வியப்பு இல்லைதான்! சீடர்களின் எண்ணிக்கை அதிகமாகி, குரு பீடத்தில் அமர்த்தி வைக்கப் படுகின்ற பொழுது, எல்லாக் குருக்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடிய ஓர் ஆர்வக் கோளாறுதான் என்றும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், துணிவமான இந்த ஆர்வக் கோளாறோ, ஸ்தாலினிசத்திற்கு ஆதரவான—-அதே நேரத்தில், மார்க்சியத்திற்கு எதிரான—-ஒரு கணிப்பாகத்தான் பயன்பட்டிட முடிந்தது—- இன்றும் கூட!

ஏனென்றால், ‘அதிகார வருக்கத்தின் ‘ வல்லதிகாரத்தை ‘உழைப்பாளர் வருக்கத்தின் ‘ வல்லதிகாரமாகவும்—- ‘அரசு முதலாண்மை ‘ப் பொருளாதாரத்தைச் ‘சமுகாண்மை ‘ப் பொருளாதாரமாகவும்—-பொதுமை வாதிகள் புரிந்து கொண்டு மலங்கிப் போவதற்குதான் இந்த ஆர்வக் கோளாறு பயன் பட்டு வந்து இருந்தது.

பொது ‘உடைமை ‘ அல்ல, மாறாக, அதன் அழிவின் அடிப்படையில் கொள்ளப் படுகின்ற ‘உறவு ‘தான், பொதுமைச் சமுதாயத்தினைக் குணவரைப் படுத்திட முடியும் என்னும் தெளிவு மார்க்சிய வாதிகள் இடையே ஏற்படாமல் போய் இருப்பதற்குக் கூட இவர்களின் ஆர்வக் கோளாறுதான் காரணம்!

எப்படியும், முதலின் ஒன்றாம் பாகத்தினைக் கார்ல் மார்க்ஸ் எழுதி முடித்து இருந்த காலத்தில்—-பாரிஸ் கம்யூனினின் வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னர் இருந்தே—-மார்க்சியம் பக்குவப் படத் தொடங்கி இருந்தது எனலாம்.

அரசு-முதலாண்மை

பொதுமைக் கட்சியின் அறிக்கையினைச் சற்று நாம் பார்ப்போம்.

ஆட்சியைக் கைப் பற்றிய உடன் உற்பத்தித் திறல்கள் அனைத்தையும் உழைப்பாளர் வருக்கத்தின் அரசு நடுமைப் படுத்தி விடும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர். சோவியத் ருஷ்யாவில் என்னவோ இதுதான் நடந்தும் முடிந்து இருந்தது. எனினும், கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தி இருந்த தனி மனித விடுதலையைத்தான் யாரும் அங்கு காண்பதற்கு முடிய வில்லை—-அரசு முதலாண்மையின் அடக்கு முறையினைத் தவிர!

அப்படி என்றால், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் கணிப்புப் பிழையாகிப் போய் விட்டது என்பதில் ஐயம் இல்லைதான்! அதற்காக, இந்தப் பிழையைப் புரிந்து கொண்டு மார்க்சியத்தை யாரும் வளப் படுத்திட முடியாது என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா ?

‘சமுகாண்மையின் கூறுகளாக மூன்று நிகழ்வரங்களை (factors) …. மார்க்ஸ் வலியுறுத்திக் கூறுகிறார். ஒன்று: உணர்மை முறையான உழைப்பு; இரண்டு: பொதுவிலான உற்பத்திச் சாதனங்கள்; மூன்று: விடுதலையான தனி மனிதர்கள்!

முதலாண்மை நிகழ்வரங்களுடன் இந்த நிகழ்வரங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, முதலாண்மைக்கு அடுத்ததாக வந்திடக் கூடிய புதிய சமுதாயத்தின் தன்மையினை நாம் புரிந்து கொள்வது ஒன்றும் நமக்குக் கடினம் அல்ல.

கூலி உணர்மையுடனும் ஆதாய உணர்மையுடனும் உற்பத்தியில் இன்று ஈடு பட்டு வருகின்ற மனிதர்கள், உற்பத்தி உணர்மையுடன் உழைப்பில் ஈடுபடுதல்; தனி உடைமை அடிப்படையில் இன்று அமைந்த உற்பத்தி உறவுகள், பொதுமை அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளப் படுதல்; உறவுகளில் விடுதலை இல்லாத தனி மனிதர்கள்—-சரக்குகளின் மூலமாக மட்டும் தங்களுக்குள் உறவுகளை இன்று ஏற்படுத்திக் கொண்டு வருகின்ற தனி

‘c1னிதர்கள்—-தங்கள் உறவுகளையும் விடுதலையாக ஏற்படுத்திக் கொள்ளுதல்; ஆகியவை, சமுகாண்மை நிகழ்வரங்களாக இங்கே நமக்கு வெளிப் படுத்தப் பட வில்லையா ? ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக். 228.)

இந்த அடிப்படையில்தான் மார்சியத்தை நாம் வளப் படுத்திக் கொள்கிறோம்—- ‘விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவு ‘களின் தொகுப்புதான் பொதுமைச் சமுதாயம் என்று! அதே நேரத்தில், அரசு-முதலாண்மையின் அடக்கு முறையில் இருந்து நாம் தெரிந்து கொண்டு இருக்கின்ற செயற்பாட்டு முறையான ஒரு படிப்பினையின் விளைவுதான் இதுவும் ஆகும்!

ஏனென்றால், பிழையான கணிப்புகளினால் மட்டும் ஒரு தேற்றம் பிழை பட்டுப் போவது இல்லை; வெறும் சிந்தனையின் மோதல்களாக மட்டும் புதிய அறிவு-வளர்ச்சி ஏற்பட்டு விடுவதும் இல்லை.

செயற்பாடு

‘நேருரை (thesis) என்றும் எதிருரை (antithesis) என்றும், ஒரு சில கருத்துகளைப் பிற சில கருத்துகளுடன் மோதிப் பார்ப்பதன் மூலம் வடிவாக்கப் படுகின்ற துணிபுரைகள்தாம் (synthesis) புதிய சிந்தனைகள் என்கின்றது ஒரு பிழையான கருத்து, சிந்தனை யாளர்கள் இடையே பரவலாகப் பதிந்து போய்க் கிடக்கிறது.

இத் தகு மோதல்களின் இடையே இருந்து, வெறும் சிந்தனையினால் மட்டும் தீர்த்திட முடியாத சிக்கல்கள் எழுந்து வருகின்ற நேரங்களில், ஐயப்பாட்டு வாதச் சிந்தனைகளை அவர்கள் வடிவு ஆக்குகிறார்கள்; மனிதனுக்கு விடிவே இல்லை என்கின்றது ஒரு ‘சோர்வு வாதமாக ‘ இந்த ஐயப்பாட்டு வாதம் வாழ்க்கையில் வெளிப் படுகிறது.

ஆனால், மனிதர்கள் மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளின் ‘வெற்றி ‘ மற்றும் ‘தோல்வி ‘கள்தாம், ‘நேருரை ‘யாகவும் ‘எதிருரை ‘யாகவும் மோதி நின்று, சிந்தனையினை வளர்க்கின்றன என்பதையும் சிந்தனையினால் தீர்த்து வைத்திட முடியாத மெய்ப்பொருண்மைச் சிக்கல்கள் எல்லாம், புதிய செயற்பாடுகளின் மூலமாக மட்டும்தான் தீர்த்திடப் பட முடியும் என்பதனையும், மிகவும் எளிதாக இவர்கள் மறந்து விடுக  2றார்கள்.

எனவேதான், ‘எல்லாச் சமுதாய வாழ்க்கையும், சாரத்தில் செயற்பாட்டு முறையானவை; தேற்றங்களை மாய வாதத்திற்குள் உந்தித் தள்ளுகின்ற புதிர்கள் அனைத்தும், மனிதர்களின் செயற் பாட்டிலும் இந்தச் செயற் பாட்டினைப் புரிந்து கொள்ளுவதிலும்தாம், கரணிய முறையான தமது தீர்வினைக் காண்கின்றன ‘ என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். (ஃபாயர்:பாக் பற்றிய 8-ஆவது நேருரை) மிகவும் சிந்தித்து நோக்கிட பே 5ண்டிய ஒரு கூற்று இது என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆக, ஐயப்பாட்டு வாதத்தின் கேள்விகளுக்குச் செயற்பாடு மட்டும்தான் சரியான விடைகளை இறுதியாக இறுத்திட முடியும் என்பதும், செயற்பாடுகளின் மூலமாக மட்டும்தான் சிந்தனை என்பது செழுமைப் பட்டிடவும் முடியும் என்பதும், யாரும் மறுத்து விட முடியாத உண்மைகள் ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.99.) என்பது தெளிவு.

அப்படி என்றால், செயலுக்கும் முந்திய தேற்றத்தின் தன்மை என்ன ? என்பது கேள்வி.

(தொடரும்)

09-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation