கார்ல் பாப்பரின் வெங்காயம்-6

This entry is part of 41 in the series 20050415_Issue

சோதிப் பிரகாசம்


கடவுள் நிலை

‘பரம் பொருள் நிலை ‘ என்பது இப் பாலை ஆனது என்றால், ‘கடவுள் நிலை ‘யோ அப் பாலை ஆனது என்பதற்கு ஈண்டு விளக்கம் எதுவும் தேவை இல்லை. அதாவது, பரம் பொருள் நிலை என்பது மனிதர்களின் பாற் பட்டது என்றால், கடவுள் நிலை என்பதோ மனிதர்களுக்கு அப்பாற் பட்டது, அவ் வளவுதான்!

எனவே, முற்றான—-முழுமையான—-நேர்த்தியான—-நிலைவான—-ஓர் அறிவு நிலையினை நாம் எய்தி விட்டோம் என்னும் கூற்றிற்கு, நமது அறிவு வளர்ச்சி முற்றுப் பெற்று விட்டது என்றுதான் பொருள்! பொன்றாமையான அறிவினை (infinite knowledge) நாம் எய்தி விட்டோம் என்றும் இதற்குப் பொருள்!

இங்கே, காலம் கடந்த நிலை என்று—-எல்லை இல்லாத நிலை என்று—-முக் காலங்களையும் அறிந்து விட்ட நிலை என்று—-முற்றும் நிலைவும் ஆன அறிவு நிலை என்று—-சமய வாதிகள் கூறிக் கொண்டு வந்து இருக்கின்ற கருத்துகளின் உண்மையினை நாம் புரிந்து கொண்டு விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சி நமக்குள் ஏற்பட்டு விட வில்லையா ?

ஒளி மயமான ஒரு நிலை இது! முழுமையான ஒரு நிலை இது! அலைவு இல்லாத ஒரு நிலை இது! நிறைவின் நிலை என்பதும் இதுதான்!

அம்மம்மா, என்ன தவம் செய்து இருக்க வேண்டும், இந் நிலையினை நாம் எய்துதற்கு!

எனினும், இந்த நிலைக்குப் பின்னர் நமக்கு ஏற்படப் போவதோ அழிவுதான்—-பாழ் நிலைதான்!

ஏனென்றால், முழுமையான இந்த நிறைவிற்குள்—-பன்மையில் இல்லாத இந்த ஒருமைக்குள்—-வளர்ச்சியின் அவசியம் எதுவும் இல்லை; உண்மையும் இன்மையும் (being-nothing) ஆன முரண் நிலையில் இருந்து புதியது ஒரு நிலைக்கு மாறி (becoming) ஆக வேண்டிய உயிர்மை (spirit) இல்லை—-உயிர்த் துடிப்பும் இல்லை!

அதாவது,

இருள் இல்லாத ஒளி—-குறைவு இல்லாத நிறைவு—-அலைவு இல்லாத அமைதி—-இயக்கம் இல்லாத இறுக்கம்—-செயல் இல்லாத கிடப்பு—-விழிப்பு இல்லாத உறக்கம்

—-கனவு இல்லாத நனவு—-பதற்றம் இல்லாத தளர்வு!

அருணகிரி நாதரின் ‘பாழ் ‘ என்பது கூட இதுதானே!

ஆக, ‘முற்றான நிலை ‘ என்பது ஓர் ‘அழிவு நிலை ‘தான் என்பதில் ஐயத்திற்கு இடம் எதுவும் இல்லை. ஏனென்றால், வளர்ச்சிக்கு அவசியம் இல்லாத ஒரு நிலை அது!

இந்த நிலையினைத்தான் கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருந்து இருக்கிறார்; ஒர் ஐயப்பாட்டு வாதியாகவும் நமக்கு அவர் காட்சி அளிக்கிறார். ஏனென்றால், நிலைவான உண்மையினை எய்திட முடியாத மனிதர்களின் ‘இயலாமை வாதம் ‘தான் ஐயப்பாட்டு வாதம் என்பது ஆகும்!

முற்றான உண்மையும் மனிதர்களும்

முற்றான உண்மையினைக் கண்டு பிடித்துதான் ஆக வேண்டும் என்கின்ற முனைப்பு ஆதியில் இருந்தே மனிதர்களிடம் இல்லாமல் இருந்து இருக்க முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், முற்றான உண்மையினை நோக்கிய மனிதர்களின் நகர்வுதான் அவர்களது அறிவினைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு வந்து இருக்க வேண்டும்.

இதனால்தான், அறிவைப் பற்றிய அவ நம்பிக்கைகளை—-எல்லாவற்றையும் மனிதர்களால் அறிந்து கொண்டு விட முடியாது என்னும் அவ நம்பிக்கைகளை—-அவர்கள் வளர்த்துக் கொண்டு வந்து இருக்க வில்லை எனலாம். ஏனென்றால், அரை-குறையில் இருந்து முழுமையை நோக்கி நகர்கின்ற ஒரு பயணமாகத்தான் அவர்கள் இடையே அறிவு வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டு வந்து இருக்கிறது.

அதே நேரத்தில், தங்கள் அறிவு வளர்ச்சியின் மேல் மனிதர்கள் வைத்துக் கொண்டு வந்து இருந்த—-வந்து இருக்கின்ற—-இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், முற்றான உண்மையின் தேடலை அவர்களால் விட்டு விடவும் முடிய வில்லை போலும்!

எனவேதான், தங்கள் கனவுகளில் அதனை ஓர் அப் பாலைப் பொருளாக அவர்கள் சுமந்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

ஆக, முற்றான உண்மையின் அப் பாலைத் தன்மைதான் கடவுள் என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை என்பது தெளிவு.

கடவுளும் பேய்களும்

பேய்களைப் படைத்தவர் கடவுளாக இருந்திட முடியாது என்பதில் ஐயம் இல்லை; அப்படி எந்த ஒரு மதமும் கூறுவதாக நமக்குத் தெரியவும் வர வில்லை. அதே நேரத்தில், ஆதி சங்கரரின் பரம் பொருளிலோ பேய்களுக்கு இடமே இல்லை!

எனினும், முற்றான உண்மையின் அப் பாலைத் தன்மைக்கு எதிரான ஒரு திறலாகத்தான் பேய்களைப் படைத்து மண்ணில் அவற்றை மனிதர்கள் உலவ விட்டு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லை என்றால், கடவுளுக்கு எதிராகப் பேய்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வந்து இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால், முற்றான உண்மையினை எதிர்த்துப் போராடிக் கொண்டு வந்து இருக்கின்ற தீவிரவாதிகள்தாம் பேய்கள் ஆகும்; அறிவில் அரை-குறை ஆனவையும் ஆகும்.

இந்த முற்றான உண்மை நிலையினை எய்தி விட்ட கடவுள், அரை-குறையான அறிவினை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? எனவேதான், மனிதர்களின் அறிவு வளர்ச்சியினைக் கடவுள் விரும்பிட வில்லை என்று விவிலியம் சித்தரிக்கிறது போலும்!

தமது கட்டளையையும் மீறி ஒரு கனியினை உண்டு விட்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் தமது தோட்டத்தில் இருந்து கடவுள் அடித்துத் துரத்தி விட்டதாக விவிலியம் கூறுகிறதே, அந்தப் பழம் எந்தப் பழம் ? அறிவுப் பழம்தானே!

இதில் பேயின் பங்குதான் புரட்சிகரம் ஆனது. தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மனிதர்களை அது தூண்டி விடுகிறது; கடவுளின் வல்லதிகாரத்தை விட்டு விலகி, விடுதலையாக அவர்களை அது நடமாட வைக்கிறது; அரை-குறையான அறிவைக் கொண்டும் மனிதர்களால் வாழ்ந்திட முடியும் என்னும் நம்பிக்கையினையும் அவர்களுக்கு அது ஊட்டுகிறது.

காலப் போக்கில், பேய்களின் வெற்றியில் கடவுளுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது போலும்! எனவேதான், அடுத்த கட்டமாக, மனிதர்களுக்கு உதவுவதற்கு அவரே முன் வருகிறார்; ஆண்டைகளின் அடக்கு முறைகளில் இருந்து அடிமைகளை விடுவிப்பதற்கும் அவர் முற் படுகிறார்.

இதற்காக, முற்றான அறிவின் உறைவிடமாக அவர் திகழ்ந்து கொண்டு வந்து இருப்பதை அவரால் மறந்து விட முடியுமா ?

மோயீசனைக் காண்பதற்காக வருகை தருகின்ற கடவுள், அவருக்கு ஒரு முள் செடியில் காட்சி அளிக்கிறார். தம் அருகே வருமாறு அவரை அழைக்கவும் செய்கிறார்; ஆனால், செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டுத்தான் தமது முன்னிலையில் அவர் வர வேண்டும் என்று மோயீசனுக்கு ஒரு கட்டளையினையும் கடவுள் விடுக்கிறார்.

மோயீசனின் காலில் முள் தைத்து விடுமே என்று அவர் கவலைப் பட வில்லை. கடவுளின் அதிகாரத்திற்குக் குறுக்காக மோயீசனின் கால் செருப்பு வந்து எப்படி நின்றிட முடியும் என்று எண்ணிப் பார்ப்பதற்கும் அவருக்குத் தோன்றிட வில்லை.

இப்படி, ஆண்டைகளின் அடக்கு முறைகளில் இருந்து அடிமைகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு முன் வருகின்ற கடவுள் கூட, ஓர் ஆண்டையைப் போலவே அடிமையிடம் நடந்து கொள்கிறார். ஏனென்றால், முற்றான உண்மைக்கு—-முற்றான அறிவிற்கு—-சொந்தக் காரர் அவர்!

முற்றான அறிவாக மாறி விட்டதன் பின்னர், அரை-குறை அறிவினைக் கடவுளால் எப்படி மதித்திட முடியும் ? இதனால்தான், தமக்கு மனிதர்கள் அடி பணிந்திட வேண்டும் என்றும் தம்மை அவர்கள் வழி பட்டிட வேண்டும் என்றும் கடவுள் எதிர் பார்க்கிறார் போலும்!

முற்றான அறிவின் உறைவிடங்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு வந்து இருக்கின்ற எத்தனையோ மனிதர்களின் வரலாறு இதற்குச் சான்று பகர்ந்து கொண்டு வந்து இருக்கிறது.

மனிதக் கடவுள்கள்

‘நானே வழியும் உண்மையும் ஆவேன் ‘ என்று கூறிய ஏசு, தமது உண்மையினை முற்றான ஓர் உண்மையாகக் கருதிட வில்லை போலும்!

இல்லை என்றால், ஒரு கன்னத்தில் அடித்தவர்களின் மறு கன்னத்தை அவர் பிய்த்து எறிந்து இருப்பார். தமது ஆதிக்கத்தை எதிர்க்கின்ற புரட்சி வாதிகள் அனைவரையும் குறுக்கத்தில் அறைந்து கொன்று புதைத்துக் கொண்டு வந்து இருப்பார். உயிர்த்து எழுந்து மீண்டும் யாரும் வந்து இருக்கவும் முடியாது.

ஹிட்லர் யார் ? ஸ்தாலின் யார் ? முற்றான உண்மையின் உறைவிடங்கள்தாமே!

இதனால்தான், எதிர்க் கருத்துகளை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. ஒரே ஓர் உண்மையாக நின்று கொண்டு, எதிர்க் கட்சிகளை அவர்கள் தடை செய்தார்கள்; எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டும் வந்தார்கள்!

முற்றான உண்மைக்கு ஆயுதங்கள் வேண்டும். ஏனென்றால், கொலைக் கருவிகளால் மட்டும்தாம் தன்னை அது பாது காத்துக் கொள்ள முடியும்.

இன்றோ, பல் வேறு மதங்களின் முற்றான உண்மைகளும் மோதிக் கொண்டு வருகின்றன. கொலை வெறியில் தங்கள் அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டும் அவை வருகின்றன.

முற்றான உண்மையின் ஏளனம்

முற்றான உண்மை என்பது முழுமை ஆனது; நேர்த்தி ஆனது; நிறைவு ஆனது! எனவே, முற்றான ஒரு தற் பெருமையில் அது திளைத்துக் கொண்டு வருவது தவிர்த்திடவும் முடியாதது! ஏனென்றால், அதற்குத் தெரியாதது எதுவும் இல்லை.

எனவேதான், அரை-குறை அறிவினைச் சுமந்து கொண்டு, கூடவே, பெருமை அடித்துக் கொண்டும் வருகின்ற அனைத்து மனிதர்களையும் இளக்காரமாக அது கருதுகிறது; ஏளனத்துடன் நோக்குகிறது; எள்ளி நகைக்கிறது.

ஏனென்றால், உண்மையின் உறைவிடம் அது; உச்சி மண்டையும் அதுதான்!

25

—-

25 ‘கோட்பாட்டாளர்களின் கூற்றுப் படி, வரலாற்று வளர்ச்சி அனைத்தும், அவ் அக் காலத்தின் மெய்ப் பொருண்மை யாளர்கள் மற்றும் சமய வாதிகளின் ‘மண்டைகளில் ‘ வடிவம் பெறுகின்ற …. தேற்ற முறையான நுண்மைப்பாடுகளினுள் அடங்கிக் கிடக்கின்றன. இந்த அனைத்து மண்டைகளையும் ‘ஒன்று கூட வைத்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து, வாக்கெடுப்பு நடத்துவது ‘ முடியாதது என்பதால், புனிதமான மண்டை என்று ஒன்று இருந்தாக வேண்டும். இந்த மண்டைதான் மெய்ப்பொருண்மை மற்றும் மத வாத மண்டைகளின் உச்சம். இந்த உச்சி மண்டைதான் அனைத்து ‘மட மண்டைகளினதும் ‘ ஒன்றிப்பு—-பாது காவலர்! ‘ (மார்க்ஸ், ஜெர்மன் கோட்பாடு, பக்.561; வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு: பக்.70.)

—-

விளைவாக, அரை-குறை அறிவினை அது புறக் கணிக்கிறது; தனது காலில் விழுந்து மன்றாடும் படி பணிக்கிறது; பணிவில் நிறைவு அடைந்ததன் பின்னர் அதற்கு வழி காட்டிடவும் அது முன் வருகிறது.*

—-

*இப்படித்தான், தேர்தலும் நடை பெறாமல், யாரும் தேர்ந்து எடுக்கவும் படாமல், தட்டிக் கேட்பதற்கு எந்த ஓர் எதிர்க் கட்சியும் இல்லாமல், கட்சிக்குள் ஒரு பொது நாயகமும் இல்லாமல், ருஷ்யாவில் ஒரு வல்லதிகார முற்றாண்மை ஆட்சி அன்று நடை பெறத் தொடங்கி இருந்தது. ஏனென்றால், :போல்ஷவிக் கட்சியினைத் தவிரப் பிற எல்லாக் கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக ருஷ்யாவில் தடை செய்யப் பட்டுக் கொண்டு வந்தன.

சரியான வழியில் மக்களைச் சரியாக வழி நடத்திடத் தக்க சரியான அறிஞர் ஒருவர், மிகவும் சரியாக உலகில் தோன்றி விட்டதன் பின்னர், வேறு பட்ட அறிஞர்களின் வேறு பட்ட கருத்துகளுக்கு உலகில் அவசியம் எதுவும் ஏற்பட்டு விட முடியாது அல்லவா!

ஆனால், அறிஞர்களின் அறிவை எல்லாம் உரசிப் பார்த்து உதறி எறிகின்ற வரலாற்றின் மெய்மையின் முன்னால், இந்த அறிவுப் பெட்டகங்கள் எல்லாம் எம் மாத்திரம் ? எனினும், இத் தகு ‘சரியான ‘ அறிஞர்களுக்கு மட்டும் நாட்டில் என்றும் பஞ்சம் ஏற்படுவது இல்லை போலும்! (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு: பக்.138-39.)

—-

ஏனென்றால், எங்கும் எதிலும் அது காண்பது பிழைகளைத்தாம்—-அரை-குறை அறிவின் பிழைகளை!

இப்படி ஒரு மன நிலையில் நின்று கொண்டுதான் ‘பிழையாக்கும் இயன்மை ‘யைப் பற்றிக் கார்ல் பாப்பர் பேசுகிறார் என்றால் அது மிகை ஆகாது.

ஆனால், ‘தேற்றம்-செயற்பாடு ‘ என்னும் கோணத்தில் இதனை நாம் நோக்கிடுவோம் என்றால், இவை போன்ற மாயச் சிந்தனைகளுக்குத் தேவையே இருந்து இருக்காது என்பதுதான் உண்மை!

மீண்டும் கார்ல் பாப்பருக்கு நாம் வருவோம்.

எல்லைக் கோடு

Thus the problem which I tried to solve by proposing the criterion of falsifiability was neither a problem of meaningfulness or significance, nor a problem of truth or acceptability. It was the problem of drawing a line (as well as this can be done) between the statements, or systems of statements, of the empirical sciences, and all other statements – whether they are of a religious or of a metaphysical character, or simply pseudo-scientific.

Years later – it must have been in 1928 or 1929 – I called this first problem of mine the ‘problem of demarcation. ‘ The criterion of falsifiability is a solution to this problem of demarcation, for it says that statements or systems of statements, in order to be ranked as scientific, must be capable of conflicting with possible, or conceivable, observations என்று கூறுகிறார் கார்ல் பாப்பர். அவரைக் கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

பிழையாக்கும் இயன்மை என்னும் தமது அளவு கோலின் மூலம் கார்ல் பாப்பர் சாதித்திட விரும்பி இருந்தது எதனை ? விஞ் ஞானத்தின் பொருள் பொதிந்த தன்மையினையா ? அல்லது அதன் தனிச் சிறப்பினையா ? இல்லை!

உண்மையின் பிரச்சனையினையா ? அல்லது அதன் ஏற்பு உடைமையினையா ? இல்லவே இல்லை!

மாறாக, பல் வேறு கூற்றுகளுக்கும் இடையே ஓர் எல்லைக் கோட்டினை வரைவதுதான் அவரது நோக்கம்—-அனுபவ விஞ் ஞானங்களாக அவை இருந்தாலும் சரி; சமயம் மற்றும் மறை பொருள் வாதங்களாக அவை இருந்தாலும் சரி; அல்லது, வெறுமனே போலியான விஞ் ஞானங்களாக அவை இருந்தாலும் சரி!

நான் எடுத்துக் கொண்டு இருந்த பிரச்சனையை எல்லைக் கோடு பற்றிய ஒரு பிரச்சனையாக 1928-29 வாக்கில் நான் குறிப்பிட்டு இருந்தேன். எல்லை கட்டுகின்ற இந்தப் பிரச்சனையின் தீர்வுதான் பிழையாக்கும் இயன்மை என்பதும் ஆகும். விஞ் ஞான முறையானது என்று எந்த ஒரு கூற்றினையும் நாம் தரப் படுத்திட வேண்டும் என்றால், நாம் எதிர் பார்த்து இருக்கக் கூடிய விளைவுகளுடன் மோதுவதாக அது இருந்திட வேண்டும்—-கார்ல் பாப்பர் கூறுகிறார்.

ஆக, விஞ் ஞானத்திற்கும் அஞ் ஞானத்திற்கும் இடையே ஓர் எல்லைக் கோட்டினை வரைந்து விடுகின்ற பிரச்சனைதான் கார்ல் பாப்பரின் பிரச்சனை என்பது தெளிவு. இந்த எல்லைக் கோட்டினை வரைவதற்காக அவர் கண்டு பிடித்து அளித்து இருக்கின்ற ஓர் அளவுகோல்தான் ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்பதும் ஆகும்.

ஆனால், அரை-குறை அறிவின் முடிவுகள் அனைத்தும் பிழைகள்தாம் என்று நாம் கூறி விட முடியுமா ? என்பதுதான் கேள்வி!

(தொடரும்)

04-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation