கார்ல் பாப்பரின் வெங்காயம்-5

This entry is part of 42 in the series 20050408_Issue

சோதிப் பிரகாசம்


ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பது என்ன ?

ஐன்ஸ்ட்டானது தேற்றத்தின் பதிப்பமான (impressive) விசயம் அதன் முற் கூற்றில் அடங்கி உள்ள துணிவம்தானாம்! அது முற் கூறுகின்ற விளைவு ஏற்படாமல் இருந்து இருந்தால், தவறாக்கப் பட்டு அது இருந்து இருக்குமாம்! அதே நேரத்தில், ஏற்கனவே நாம் கவனித்துக் கொண்டு வந்து இருக்கின்ற விளைவுகளுக்கு ஏற்பு உடைய ஒரு தேற்றமாகவும் அது இல்லையாம்—-குறிப்பாக, ஐன்ஸ்ட்டானுக்கு முந்தியவர்கள் எதிர் பார்த்து இருக்கக் கூடிய விளைவுகளுக்கு!

ஏற்கனவே கார்ல் பாப்பர் சித்தரித்து இருந்த சூழ் நிலைகளில் இருந்து வேறு பட்ட ஒரு சூழலாம் இது! மிகவும் முரண் பாடான மனிதப் பழக்கங்களுக்குக் கூட ஏற்பு உடையனவாக அத் தேற்றங்கள் இருந்தனவாம்! இதனால், எந்த வகையான மனிதப் பழக்கத்தையும் கூட அவற்றிற்கு ஏற்பு உடையனவாக நாம் எடுத்துக் கொள்வதற்கு நேர்ந்து விடுமாம்!

இங்கே, ஐன்ஸ்ட்டானின் தேற்றத்தில் இருந்து மனிதர்களின் பழக்கங்களுக்குக் கார்ல் பாப்பர் தாவி இருப்பதை நாம் காண்கிறோம்.

அதே நேரத்தில், ஐன்ஸ்ட்டானுக்கு முந்தியவர்களின் தேற்றங்களில் அடங்கிக் கிடந்த பிழையாக்கும் இயன்மையினை ஐன்ஸ்ட்டானின் தேற்றம் நிருபித்து இருக்கிறது என்பதுதான் கார்ல் பாப்பருக்கு முக்கியம்!

இதன் விளைவுகளைச் சற்று நாம் பார்ப்போம்.

அறியும் ஆற்றல்

முந்திய ஒவ்வொரு தேற்றத்தையும் பிந்திய ஒவ்வொரு தேற்றமும் பிழையாக்கிக் கொண்டு வருகின்றன. இப் பிந்திய தேற்றங்களைப் பிழையாக்கிக் காட்டுகின்ற பல புதிய தேற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கவும் செய்யும்.

இப்படி, பிந்திய ஒவ்வொரு தேற்றமும் முந்திய தேற்றங்களினது பிழையாக்கும் இயன்மையின் ஒரு நிருபணம்தான் ஆகிறது. அதாவது, பிழையாக்கும் இயன்மை என்பதுதான் ஒவ்வொரு தேற்றத்திற்கு உள்ளும் அடங்கிக் கிடக்கின்ற ‘நிலைவான உண்மை ‘ (eternal truth) என்று ஆகி விடுகிறது.

அப்படி என்றால், ஒவ்வொரு தேற்றமும் பிழையானது என்று பொருள்; அறிவாக நமது தலையில் நாம் சுமந்து கொண்டு வருபவை அனைத்தும் பிழைகள்தாம் என்று பொருள்! எனவே, எந்த உண்மையையும் முழுமையாக நாம் தெரிந்து கொள்ள முடியாது என்றும் பொருள்!

அப்படி என்றால், முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் மனிதனின் அறிவுக்கு இல்லை என்பதுதான் கார்ல் பாப்பரின் முடிவு என்பது தெளிவு. ஆக, ‘எதையும் நாம் அறிந்திட முடியாது ‘ என்பதுதான் நமது ‘அறிவு ஆற்றலின் ‘ உண்மை!

இப்படி, ஐயப்பாட்டு வாதத்தில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் கார்ல் பாப்பர்; அல்லது, அப்படி அவர் கருதிக் கொள்கிறார்.

ஐயப்பாட்டின் விளைவுகள்

எதையும் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதால், எவ் வளவுதான் முயன்று பார்த்தாலும் ‘உண்மை ‘யை நாம் கண்டு பிடித்து விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நமது அறிவு முயற்சிகளைக் கை விட்டு விட்டு, உணர்ச்சிகளுக்கு உள்ளும் உணர்மங்களுக்கு உள்ளும் நாம் தஞ்சம் புகுந்து விடுவதுதான் நமக்கு ஏற்பு உடையது; மனிதனால் இயன்றிடக் கூடியதும் இதுதான்!

எனவே, கதை-கவிதைகளின் பரப்புகளில் பறந்து திரிந்து தங்களுக்குத் தேவையான அறிவினை மனிதர்கள் தேடிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை—-கலை-இலக்கியம்தான் எல்லாம் என்கின்ற மன நிலையினை இன்று எய்தி விட்டு இருக்கின்ற கவிஞர் இன்குலாப்பைப் போல!

இப்படி எல்லாம் கூறுவதற்குக் கார்ல் பாப்பர் முற்படுகிறாரா ? இல்லையா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. ஆனால், இப்படித்தான் அவரை நம் நாட்டுச் சிந்தனையாளர்கள் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதிலோ ஐயமும் இல்லை.

அதே நேரத்தில், கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருப்பதோ முற்றான உண்மையை—-நிலைவான உண்மையைத்தான்—-ஆகும்.

சித்தர் பத்திர கிரியாரைப் போல,

‘அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவினை ‘த்

தேடிக் கொண்டு இருப்பவர் கார்ல் பாப்பர்!

வளப் படுத்தும் இயன்மை

பிழையாக்கும் இயன்மையைப் பற்றிப் பெரிதாகப் பேசுகின்ற கார்ல் பாப்பர், வளமாக்கும் இயன்மையைப் பற்றிப் பேசிட வில்லையே, ஏன் ?

தமக்கு முந்திய விஞ் ஞானிகளின் தேற்றங்களை எல்லாம் ஐன்ஸ்ட்டான் பிழையாக்கி விட்டு இருந்ததாகக் கார்ல் பாப்பர் கூறுகிறாரே, அவற்றை எல்லாம் ஐன்ஸ்ட்டான் வளப் படுத்தி இருந்ததாக எடுத்துக் கொள்வதற்குக் கார்ல் பாப்பரால் ஏன் முடிய வில்லை ?

ஏனென்றால், நேர் முறையான ஒரு நோக்கு அல்ல கார்ல் பாப்பரின் நோக்கு; மாறாக, எதிர் முறையான ஒரு நோக்கு!

இதனால்தான், நிலைவான உண்மையைக் காட்டிட முடியுமா ? என்னும் பான்மையில் அவரது ஐயங்கள் வெளிப் படுத்தப் பட்டு இருக்கின்றன. இல்லை என்றால், முந்திய உண்மைகளை வளப் படுத்திடக் கூடிய வாய்ப்புகள் என்ன ? என்னும் பான்மையில் அவரது கேள்விகள் வெளிப் படுத்தப் பட்டு இருந்து இருக்கும்.

பிழையாக்கும் இயன்மையும் வளமாக்கும் இயன்மையும்

ஒரு தேற்றத்தில், அதனைப் பிழையாக்கிக் காட்டுகின்ற இயன்மை இருந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுகிறார்.

இதனால்தான், அறிவைக் கொண்டே அறிவை அளந்து விடுகின்ற முற்றான அறிவு வாதியாக நமக்கு அவர் காட்சியும் அளிக்கிறார். அதாவது, ஒரு தேற்றத்திற்கு எதிராக இன்னொரு தேற்றத்தினைக் கொண்டு வந்து அவர் நிறுத்துகிறார்.

ஆனால், பிழையாக்கும் இயன்மை அடங்கிக் கிடப்பது ஒரு தேற்றத்தில் அல்ல! மாறாக, எந்த நிகழ்வினைப் பற்றி ஒரு தேற்றம் பேசுகிறதோ, அந்த நிகழ்வின் இயக்கத்தில்—-அதன் இயங்கு விதியில்! ஏனென்றால், எந்த ஒரு தேற்றத்தின் உள்ளும் அடங்கிக் கிடப்பது அதனை வளப் படுத்துகின்ற இயன்மைதானே ஒழியப் பிழை படுத்துகின்ற இயன்மை அல்ல!

எனினும், கார்ல் பாப்பரின் பிற கூற்றுகளையும் இங்கே நாம் பார்த்து விடுவது நல்லது.

கார்ல் பாப்பரின் பிற கூற்றுகள்

3. Every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.

5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.

7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers – for example by introducing ad hoc some auxiliary assumption, or by reinterpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a ‘conventionalist twist ‘ or a ‘conventionalist stratagem. ‘)

இவற்றுள், 5 மற்றும் 7-ஆவது கூறுகளை நாம் விட்டு விடலாம்.

ஏனென்றால், பிழையாக்கும் இயன்மை, பரிசோதிக்கும் இயன்மை, தவறாக்கும் இயன்மை, ஆகிய வற்றைப் பற்றி மீண்டும் கார்ல் பாப்பர் பேசுகின்ற வெறும் மீட்பாடுகள்தாம் (repetition) அவை!

எனவே, அவரது 3-ஆவது கூறினை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பர் கூறுவது என்ன ?

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று—-அல்லது, a theory must be refutable by a conceivable event in order to be a scientific one என்று—-கூறுகின்ற கார்ல் பாப்பர், மேலும் கூறுகிறார்—-every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is என்று!

நாம் எதிர் பார்த்திடக் கூடிய ஒரு நிகழ்ச்சியினால் தவறாக்கிடப் பட முடியாத ஒரு தேற்றம், அஞ் ஞானத் தன்மை வாய்ந்தது என்று கூறுகின்ற கார்ல் பாப்பர் ‘நல்ல ‘ ஒரு விஞ் ஞானத் தேற்றம் என்பது ஒரு விலக்கம் என்றும் வேறு சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விடுவதை அது தடுத்து நிறுத்தி விடுகிறது என்றும் கூறுவதை இங்கே நாம் காண்கிறோம்.

அப்படி என்றால், மூன்று வகையாகத் தேற்றங்களை அவர் வகைப் படுத்துகிறார் என்பது தெளிவு: (1) அஞ் ஞானத் தேற்றம் (2) விஞ் ஞானத் தேற்றம் (3) ‘நல்ல ‘ விஞ் ஞானத் தேற்றம்!

விஞ் ஞானத் தேற்றம் என்பது வேறு; நல்ல விஞ் ஞானத் தேற்றம் என்பது வேறு; என்று விஞ் ஞானத் தேற்றங்களை வகைப் படுத்திக் கொள்வதற்கு முயல்கின்ற கார்ல் பாப்பரது முயற்சிகளுக்கு அவரது குழப்பங்கள்தாம் காரணம் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை!

ஏனென்றால், விஞ் ஞானம் என்று வந்து விட்டதன் பின்னர், நல்ல விஞ் ஞானம்; கெட்ட விஞ் ஞானம்; என்று அதனை வகைப் படுத்திப் பார்த்திட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதனை விட, விஞ் ஞானம் என்றால் என்ன ? என்று வரையறுப்பதற்கு அவர் முயன்று இருந்தார் என்றால், தேற்றங்களை நாம் புரிந்து கொள்வதற்கு வசதியாக நமக்கு அது இருந்து இருக்கக் கூடும்.

முற்றான உண்மை (absolute truth)

விஞ்ஞான முறையான தேற்றம் என்பது ஒரு தடையாம்—-அது முற் கூறுகின்ற நிகழ்ச்சிகளைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் நிகழ்ந்திட முடியாது என்கின்ற ஒரு தடையாம்!

அப்படி என்றால், தவறாக்கிடப் பட முடியாத தேற்றங்களும் உண்டு என்றும் அவையும் விஞ்ஞான முறையானவைதாம் என்றும் கார்ல் பாப்பர் நம்புகிறார் என்பது நமக்குத் தெளிவு ஆகிறது.

ஆனால், அதே நேரத்தில், தவறாக்கிடப் பட முடியாத ஒரு தேற்றம், அஞ் ஞான முறையானது என்றும், அதாவது, விஞ்ஞான முறையானது அல்ல என்றும், அதாவது, a theory which is not refutable by any conceivable event is non-scientific என்றும் அவர் கூறி இருக்கிறாரே, ஏன் ?

‘தவறாக்கும் இயன்மை ‘ என்பதுதான் ஒரு தேற்றத்தினது விஞ் ஞானத் தன்மையின் அளவு கோல் என்றால், ‘தவறாக்கிட இயலாமை ‘ என்பது எப்படி ஒரு ‘நல்ல ‘ விஞ் ஞானத் தன்மையின் அளவு கோல் ஆகி விட முடியும் ?

அப்படி என்றால், முற்றான உண்மையினை மனிதர்கள் எய்திட முடியும் என்று கார்ல் பாப்பர் நம்புகிறார் என்று பொருள்; ஒரு நிகழ்வின் முற்றான உண்மையினை வெளிப் படுத்திக் காட்டுகின்ற தேற்றம் மட்டும்தான் சிறப்பான ஒரு விஞ் ஞானத் தேற்றம் என்று அவர் கருதுகிறார் என்றும் பொருள்!

ஏனென்றால், தனது முற்கூற்றினைத் தவிர, வேறு பிற முற்கூற்றுகள் அனைத்தையும் அந்தத் தேற்றம் தடை செய்து விடுகிறது; ஒரே ஓர் உண்மையாகத் தன்னை மட்டும் அது நிலைநிறுத்தியும் கொள்கிறது. அதாவது, every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen.

எனவே, தவறாக்கும் இயன்மைக்கு அப்பாற் பட்ட தேற்றங்கள் மட்டும்தாம் ‘சிறப்பான விஞ்ஞானத் தேற்றங்கள் ‘ ஆகும்; மாறாக, தவறாக்கும் இயன்மைக்கு உட்பட்ட தேற்றங்களோ ‘பொதுப் படையான விஞ் ஞானத் தேற்றங்கள் ‘ மட்டும்தாம் ஆகும்.

ஆக, முற்றான உண்மையினைத்தான் கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருக்கிறார் என்பதும், எனவேதான், ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்னும் ஓர் ஏட்டுச் சுரைக் காயினை அவர் உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கிறார் என்பதும் தெளிவு.

நிலைவான உண்மை (eternal truth)

முற்றான உண்மை என்பதும் நிலைவான உண்மை என்பதும் ஒரு-பொருள்-கிளவிகள்தாம் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது.

இந்த நிலைவான, அல்லது முற்றான உண்மையினைத்தான் கடவுள் என்று சமயங்கள் கருத்துப் படுத்திக் கொண்டு வந்து இருக்கின்றன. ஆதி சங்கரரின் பரம் பொருள் கொள்கை கூட, முற்றான உண்மையினை நோக்கி நகர்ந்திடக் கூடிய ஒரு கருத்தமைவுதான் எனல் வேண்டும்.

இதனால்தான், சிவனையும் விண்ணவனையும் கூட, ‘பரம் பொருள் ‘ என்பதற்குள் கொண்டு வந்து மனிதர்களுடன் அவர்களை அவர் சமன் படுத்தி விடுகிறார்.

எனவே, கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருக்கின்ற நிலைவான உண்மை என்பது புதியதும் அல்ல; யாரும் புரிந்து கொள்ள முடியாததும் அல்ல!

ஆனால், ‘முழுமை ‘, அல்லது ‘முற்று ‘ என்பதோ, ‘அழிவின் ‘ தொடக்கமாகத்தான் இருந்திட முடியுமே ஒழிய, நிலைவின் நீடிப்பாக அல்ல!

அதே நேரத்தில், தவறாக்கும் இயன்மை என்கின்ற அடிப்படையில் அல்லாமல், தேற்றம்-செயற்பாடு என்னும் அடிப்படையில் இதனை நாம் நோக்கிடுவோம் என்றால், நமது குழப்பங்களை எல்லாம் நாம் தவிர்த்திடவும் முடியும்.

இங்கே, ஏங்கெல்ஸைச் சற்று நாம் நாடிப் பார்ப்போம்.

ஏங்கெல்ஸ்

‘அனைத்தையும் விஞ்சிய செல்தகையும் உண்மையைக் கண்டு விட்ட முற்றான உரிமையும் வாய்ந்த சிந்தனை முடிவுகளுடன், ‘நிலைவான உண்மை ‘களின் மூலம் மட்டும்தான் இனிச் செயல் ஆற்றிட வேண்டும் என்கின்ற கட்டத்தை என்றாவது மனித இனம் எய்தி விட முடியும் என்றால், உள்ளுறைவான நிலையிலும் உண்மமான நிலையிலும், ‘அறிவாண்மை உலகின் பொன்றாமை ‘ என்பது தீர்ந்து போய் விட்ட கட்டத்தை அது எட்டி விட்டது என்றுதான் பொருள்! ‘ (ஏங்கெல்ஸ், டூரிங்கிற்கு எதிராக, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.103.—-வாழ்க்கையின் கேள்விகள் (2002), பக்.66.) என்று ஏங்கெல்ஸ் கூறுகிறார்.

(1) அனைத்துச் சிந்தனைகளையும் அடித்து நொறுக்கி விட்டு, முற்றான உண்மையினைக் கண்டு பிடித்து விட்ட ஒரு முற்றான சிந்தனை! இந்த சிந்தனைக்கு மட்டும்தான் முழுமையான உரிமை! இப்படி ஒரு நிலையினை மனித இனம் எய்தி விடுகிறது.

(2) எனவே, அரை-குறையான உண்மைகளை எல்லாம் கணக்கில் நாம் எடுத்துக் கொண்டு இருக்க முடியாது. நிலைவான உண்மையை மட்டும்தான் நாம் மதிப்போம்; ஏற்றும் கொள்வோம்! ஏனென்றால், அறிவின் பொன்றாமையினை (infinity) நமது தலையால் நாம் அளந்து முடித்து விட்டோம்!

(3) இனிமேல், அரை-குறையான உண்மைகளை வைத்துக் கொண்டு நம்மால் செயல் ஆற்றிட முடியாது; நிலைவான உண்மையின் மூலமாக மட்டும்தான் நாம் செயல் ஆற்றிட முடியும்.

இப்படி ஒரு நிலையினை நாம் எய்தி விடுகின்ற பொழுது, ஒரு கடவுளாக நாம் மாறி விடுகிறோம் என்பதில் ஐயம் ஏது ?

எனவே, ஒரு கடவுளாகக் கொஞ்சம் நாம் மாறிப் பார்ப்போம்.

(தொடரும்)

01-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation