மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை

This entry is part of 52 in the series 20041216_Issue

அ கா பெருமாள்


14. வன்னிராசன் கதை

ஊத்துமலையில் ராமசாமித் தேவர் என்பவர் இருந்தார். அவர் தேச காவல் தொழிலைச் செய்து வந்தார். அவரது மனைவி தேவர்குளம் என்னும் ஊரைச் சார்ந்த வன்னிச்சி . அவர்களுக்குத் திருமணம் ஆகி ஆண்டுகள் பலவாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் மனம் நொந்த வன்னிச்சி புனிதத் தலங்களுக்கும் கோவில்களுக்கும் யாத்திரை சென்றாள். கடுந்தவம் இருந்தாள். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவள் பலரும் சொல்லி வழிகேட்டு சங்கரநயினார் கோவிலுக்குச் சென்றாள். அங்கு 40 நாட்கள் தவம் இருந்தாள்.

வன்னிச்சியின் தவத்தைக் கண்டு இரங்கிய சங்கரலிங்கனார் ஒரு கிழப்பிராமணனாக உருவெடுத்து வந்தார். அவளிடம் உன் குறை என்ன என்று கேட்டார். வன்னிச்சி தன் பிள்ளைக்கலியைப்பற்றிச் சொன்னாள். அவர் உனக்கு ஆண் மகன் பிறப்பான். உன் ஊருக்குத் திரும்பிச் செல்வாய் என்றார்.

வன்னிச்சியும் அதைக் கேட்டு மகிழ்ந்தாள். தன் ஊரான ஊத்துமலைக்குச் சென்றாள். சங்கரனார் வரம் கொடுத்தபடி பத்தாம் மாதத்தில்ரவள் ஓர் ஆண் குழந்தை பெற்றாள். அக்குழந்தைக்கு வன்னிராசன் எனப் பெயரிட்டாள். அவனுக்குப் போர்க்கலைகளைக் கற்பித்தாள்.

வன்னிராசனுக்கு வயது 17 ஆனது. மகனுக்கு மணமுடித்து வைக்க எண்ணினாள் தாய். தன் அண்ணனிடம் பெண் கேட்டாள். அவன் ‘ ‘ நம் குல வழக்கம் உனக்குத் தெரியாதா ? உன் மகன் நம் வழக்கப்படி களவுத் தொழிலைச் செய்து வீரத்தை காட்டி மீண்டு வரட்டும். அப்போது என் மகளைக் கொடுக்கிறேன் ‘ ‘ என்றான். வன்னிச்சி பதில் பேசமுடியாமல் திரும்பினாள்.

மாமனின் நிபந்தனையை அறிந்த வன்னிராசன் ‘ ‘ அம்மா நான் குலப்படி களவு செய்து வெற்றியுடன் வந்து மாமன் மகளை மணப்பேன் ‘ ‘ என்றான். திருட்டுத் தொழிலுக்குரிய ஆயுதங்களுடன் புறப்பட்டான். எதிர்பட்ட சகுனத்தடைகளை அவன் பொருட்படுத்தவில்லை.

வன்னியன் ஊத்துமலையிலிருந்து திருநெல்வேலி வந்தான். அங்கே சின்னக்கண்ணு என்னும் தாசி வீட்டில் தங்கினான். அப்போது ஆனி மாதம் நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா நடந்துகொண்டிருந்தது. கோவில் திருவிழா ஆதலால் விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை அம்மனுக்கும் சுவாமிக்கும் அணிவித்தனர். வன்னிராசன் கோவிலில் களவு செய்ய முடிவு செய்தான். சரியான நேரத்திற்குக் காத்திருந்தான். இரவில் கிளம்பி கோவிலினுள் கன்னம் வைத்துச் சென்றான். சுவாமியின் நகைகளைத் திருடிக்கொண்டு தப்பினான்

வன்னியன் கோவிலில் திருடிய தங்க ஆபரணங்களைச் சின்னக்கண்ணாளின் வீட்டில் மறைத்து வைத்தான். அடுத்தநாள் கோவிலைத் திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொன் ஆபரணங்கள் கொள்ளை போனதை அறிந்தனர். கோவில் காவலர் கோவிலைச் சுற்றிய வீடுகளில் சோதனை செய்தனர். சின்னக்கண்ணாளின் வீட்டில் கோவில் ஆபரணங்கள் இருப்பதைக் கண்டனர். அங்கேதான் வன்னிராசனும் இருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துக்கொண்டனர்.

அப்போது வடமலையப்பப்பிள்ளை என்பவர் நெல்லைச்சீமை பெரிய அதிகாரியாக இருந்தார். அவர் வன்னிராசனின் குற்றத்தைக் கேட்டறிந்தார். ஊர் புறத்தே அவனை வெட்டிக்கொல்ல ஆணையிட்டார். காவலர்கள் அவனை கைகால்கள் கட்டி கொண்டு சென்று கருகக்குளம் என்னும் இடத்தில் அவனை வெட்டிக் கொன்றனர்.

அவன் இறந்த செய்தியை வன்னியனின் நாய் வன்னிச்சிக்கு உணர்த்தியது. அவள் மகன் இறந்துபட்ட இடத்துக்கு ஓடி வந்தாள். தன் நாக்கைப் பிடுங்கி உயிரை விட்டாள்.

வன்னிராசன் செத்துப்போன எட்டாம் நாளில் கரிசல்குளத்திற்கு பேயாகவந்து ஆதாளி செய்தான். பலரரை அடித்தான். ஊர்க்காரர்கள் இது வன்னிராசனின் ஆவியின் வேலை என்பதைச் சோதிடர் மூலம் அறிந்து அவனை சாந்துசெய்யும்பொருட்டு அவனுக்கக் கோவில் எடுத்தனர். அங்கே வருடம்தோறும் பலி கொடுத்தனர். வன்னிராசனும் பலியை ஏற்று அவர்களுக்கு அருள்செய்தான். அவனை தெய்வமாகக் கொண்டாடினர்.

**

Series Navigation