தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நேச குமார்


சமீபத்தில் ஹிந்து நாளிதழில் [அக்டோபர் 10, 2004], தியோடர் பாஸ்கரன், தஞ்சைப் பெரிய கோவில் பிரகாரங்களில் புத்தர் வாழ்வைச் சிந்தரிக்கும் சிற்பங்கள் இருப்பது குறித்து விரிவாக அலசியிருந்தார். அவரது நன்பர் டாக்டர் ஜாப் தாமஸ் சுட்டிக் காட்டிய இச்சிற்பங்களைப் பற்றி, பெரும்பாலான ஆவனங்களிலும், நூல்களிலும் எந்தக் குறிப்புகளும் இதுவரை இல்லாததை கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் புத்தகங்களும் இவற்றைப் பற்றி மெளனமாக இருப்பதையும், குறிப்பிட்டுகிறார். இச்சிற்பங்களைப் போலவே, உட்பிரகாரத்தில் சோழர்கால ஓவியங்களில், அமர்ந்த நிலையில் காவியுடையணிந்து இருக்கும் புத்தர் பற்றியும் குறிப்பிட்டு, ஒரு சிவாலயத்தில் புத்தர் இடம்பெற்றிருப்பது புதிராக உள்ளதென்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த எனக்கு திபெத்தில் வழக்கில் இருக்கும் வஜ்ராயன புத்தமதம் நினைவுக்கு வந்தது.

தமிழர்கத்தில் நான் அறிந்த வரையில், சைவத்திற்கும், புத்தமதத்தின் சித்தர் பரம்பரைக்கும் உள்ள தொடர்பை நினைவு கூறுவதில்லை. புத்த மதத்திற்கும், விஷ்ணுவுக்கும், வைணவத்திற்கும், விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப் படும் புத்தருக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றிய விவாதங்கள் , சிந்தனைகளே நம்மை ஆக்கிரமித்துள்ளன.

எப்படி இலங்கையின் புத்த மதப் பிரிவு விஷ்ணுவை தனது வரலாற்றோடும், இயைந்த தெய்வமாயும் சம்பந்தப் படுத்திக் கொள்கிறதோ, அதே போன்று திபெத்திய, நேபாள புத்தப் பிரிவுகள் சிவனோடும் உமையோடும் தம்மை சம்பந்தப் படுத்திக் கொள்கின்றன. எல்லா தந்திர சாஸ்திரங்களிலும் உயர்வானதாக திபெத்தியர்களில் பலர் கருதும் குஹ்ய சமாஜ தந்திரம், சாக்தர்களிடமிருந்தும், சக்தி வழிபாட்டிலிருந்தும் தோன்றியது என்று கருதப் படுகிறது.

காஞ்சிபுரமும், ஸ்ரீ பர்வதமும் பல திபெத்திய புத்த கதைகளில் குறிப்பிடப் படுகின்றன. இவை இரண்டும் சைவ-சாக்த சித்தர்களுடன் சம்பந்தப் பட்டவை. இராமேஸ்வரமும், இராமேஸ்வரத்தில் இராமர் எழுப்பிய சிவன் கோவிலும் ஆங்காங்கே திபெத்தியர்களின் குறிப்புகளிலும், புத்தசித்தர் பற்றிய கதைகளிலும் காணப் படுகின்றன.

அனைவருக்கும் சித்த மார்க்கத்தை போதிக்க வேண்டாம், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் தீக்ஷை அளிக்க வேண்டும் என்று கோரக்ஷர் எனும் புத்தசித்தருக்கு சிவன் கட்டளையிட்டதாகவும் திபெத்திய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கோரக்ஷர் மற்றும் மச்சேந்திர நாதர் ஆகியோர் தமிழகத்தின் பதினென் சித்தர் பரம்பரையிலும் இடம் பெறுகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கோரக்ஷர் என்றால் பசுக்களைக் காப்பவர் என்று பொருள் படும். ஆன்மீக சிந்தனையுள்ள , ஆனால் இன்னமும் மாயையில் உழலும் அடியார்களை ‘பசு ‘ என்று அழைக்கும் முறை நம் சைவ சித்தாந்தத்திலும் உள்ளது. திபெத்தியர்களின் நம்பிக்கையின் படி, இந்த கோரக்கர் இன்றும் முக்தி அடையாமல் அண்டிவரும் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு, மனித குலத்திற்கு தொண்டாற்றி வருகிற சித்தராவார். திபெத்திய குறிப்புகளில் காணப்படும் கோரக்கர் பாடிய பாடலொன்றில் நமது சித்தர்களின் பாடல்களில் காணப்படும் ஜாதியம் தாண்டிய அன்புணர்வு காணப்படுகிறது :

‘ உன் பிறப்பு எதுவாகிலும்,

நீ தாழ்ந்தவனோ, உயர்ந்தவனோ,

உன்னுடைய சூழலை உபயோகித்து,

கர்மச் சுழலை தடுக்காமல்,

உன் இலக்கை எட்டலாம்.

எனது வாய்ப்புகளை பயன்படுத்தி,

கெளரங்கிக்கு சுயநலமில்லா சேவை செய்து,

முக்திக்கு வித்திட்டேன்.

இறவாமைக்கான அமிர்தத்தை,

அசிந்தன் அளித்த பின்னே,

கோரக்கன் யான் அத்வைதப் பார்வை பெற்று,

மூவுலகிலும் ஆநிரைகளின் அரசனானேன் ‘

திபெத்திய புத்த சித்தர்களில் சிலரோடு தமிழகமும் சம்பந்தப் பட்டிருக்கிறது. என்பத்து நான்கு புத்த சித்தர்களுள் ஒருவரான தாரிக பாதர் காஞ்சிபுரத்தில் ஒரு தாசியின் வீட்டில் வேலைக்காரராக வாழ்ந்தவர் என்று சில திபெத்திய கதைகள் தெரிவிக்கின்றன. தாரிகை என்றால் வேசி. வேசியின் வேலைக்காரன் அல்லது அடிமை என்ற அர்த்தத்தில் தாரிகபாதர் என்ற பெயர் வந்ததாகக் கூறப் படுகிறது. இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து, போதித்து மஹா முத்ர சித்தி ( Mahamudra Siddhi – மோக்ஷம்) அடைந்தாராம். திபெத்தியர்கள் நடத்தும் காலசக்ர பூஜையின் நான்காம் மண்டலத்தில் இவர் தெற்கத்தி பிராம்மனர் என்று குறிப்பிடப் படுகிறார்.

இவர், மஹாசித்தr ல்யூபா வினால் சம்வர மண்டல தீக்ஷை அளிக்கப்பட்டு, சித்த மார்க்கத்தில் இணைத்தார் என்று கூறப்படுகிறது. இதில் மிகவும் சுவாரசியமான விஷயம், திபெத்தியர்களால் மஹாசித்தர் என்று போற்றப் படும் இந்த ல்யூபா அல்லது மீனவச்சித்தரின் கதையில் , நமது இளங்கோ அடிகள் கதையின் மெல்லிய சாயல் தெரிவது.

திபெத்திய குறிப்புகளின் படி, ல்யூபா இலங்கையில் அரச குமாரனாக இருந்தவர். அரசனின் இரண்டாவது மகனான இவரின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், அரசனின் இவர் அரியனையில் ஏறினால் தான் நாடு வளமுடனும், வலுவுடனும் இருக்கும் என்று ஆரூடம் சொல்லவே, இவர் அரியனை ஏறவேண்டியதாயிற்று. ஆயினும், இக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்த இவர், அரச பதவியை வெறுத்து, இரவோடு இரவாக இலங்கையிலிருந்து இராமேஸ்வரம் தீவிற்கு தப்பை ஓடினார். திபெத்தியர்கள் கதையில் இராமேஸ்வரத்தில் முன்பு ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது. திபெத்திய புத்தர்களின் நம்பிக்கையின்படி, உலகில் உள்ள இருபத்து நான்கு சக்தி பீடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இராமேஸ்வரமும், காஞ்சிபுரமும் இடம் பெறுகின்றன.

இரமேஸ்வரத்தில் தனது கிரீடத்தையும், ஆபரனங்களையும் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக மான் தோலையும், விபூதி நிரம்பிய படுக்கையையும் பெற்று இலங்கை இளவரசர், ல்யூபா என்ற யோகியானார். யோகியான இளவரசர், நாடுகள் பலவற்றைக் கடந்து பாடலீபுரம் அடைந்து அங்கே பிச்சையெடுத்து, தனது தியானத்தைத் தொடர்ந்துவந்தார். ஒரு நாள் ஒரு தாசி அவருக்கு நாற்றமடிக்கும் பழைய உணவை பிச்சையிடவே, ல்யூபா அதை கீழே கொட்டிவிட்டார். அதைக்கண்ட அத்தாசி, கோபத்துடன், உணவின் தூய்மையைப் பற்றி இந்த அளவுக்கு கவலைப் படும் நீ எப்படி முக்தி அடையமுடியும் என்று வினவவே, அது ல்யூபரின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மனம் இன்னமும் முந்தைய சிந்தனை முறைகளிலிருந்து மாறவில்லை என்பதை உணர்ந்த அவர், அன்றிலிருந்து கங்கைக் கரையில் அமர்ந்து அங்கே தீவிர சாதனை மேற்கொண்டார். தனது மன அழுக்கைப் போக்கிட, மிகவும் நாற்றமடிக்கும் படியான மீன்களின் குடல்களை தின்று தனது யோகத்தை மேற்கொண்டார். ல்யூபா என்றால் மீனின் குடல்களைத் தின்பவர் என்று பொருள்படும் பெயரும் அவருக்கு வழங்கலாயிற்று. சக்தி தந்திரத்தின் உயரிய ஆசானாக திபெத்தியர்கள் இவரைப் போற்றுகின்றார்கள். இவர்தான் திபெத்திய சித்தர் பரம்பரையின் ஆதிகுரு என்றும், இவரே மச்சேந்திர நாதர் அல்லது மீனபர் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.

இச்சித்தர்கள், தமிழகத்தின் சித்தர்களைப் போன்றே, தமது ஆன்மீக முயற்சிகளையும், முறைகளையும் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்பவர்கள். ல்யூபா பாடுகிறார்:

‘ வெறிநாயின் மூக்கில் தேனைத் தடவினால்

காண்பவை எல்லாவற்றையும் கடித்துக் குதறிவிடும்;

சித்தர்களின் ரகசியங்களை மாயையில் உழலுபவனிடம் தருவது

அவனையும் அழித்து, சித்தர் பரம்பரையையும் அழித்துவிடும்;

பிறக்கா உண்மையை உணர்ந்த தகுதியுடைய மனிதனுக்கோ,

சித்தர்கள் தரிசிக்கும் சுத்த ஒளியின் சிதறலே

மனதின் மாயையை மதம் பிடித்த யானைபோல் அழிக்க போதுமானது ‘

ல்யூபாவின் கதையில் அவர் விபூதி படுக்கையை வாங்கினார் என்று குறிப்பிடுவது ஆச்சர்யமானது. சைவ சம்பிரதாயத்தில் விபூதிக்கு இருக்கும் உயரிய இடம் நாம் அறிந்ததே. புத்தசித்தர்கள் பற்றிய பல கதைகளில் விபூதி அணிந்தவர்களாக – மயானத்தையே தங்குமிடமாகக் கொண்டவர்களாக அவர்கள் காட்சியளிக்கின்றனர். சிவனை வணங்குபவர்களாக சில சித்தர்கள் காட்டப் பட்டாலும், மஹாமுத்ர சித்தி அடைந்த ஒருவன் எல்லா கடவுள்களையும் விட பெரியவன் என்ற புத்த கருதின் அடிப்படையில் , சில இடங்களில் சிவனை தன்னுடைய இளைய தம்பி என அழைக்கும் சித்தர்களும் உண்டு. ஏனைய புத்த பிட்சுக்களால் இகழப் பட்ட , விரூபர் என்ற சித்தர் அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக, சிவனே தன்னை கெளரவித்ததாகக் கூறுகிறார்.

திபெத்தியர்களின் வஜ்ர வராகி வழிபாடும் உமை வழிபாட்டின் வழிதோன்றலாக தோன்றியிருக்கலாம். விரூபர் என்ற சித்தர் பாடுகிறார்:

‘ மனதின் சுய நிலையான சுத்த நிலையே

மூலமான வஜ்ர வராகி .

அவள் எம்முள்ளே உறைகிறாள்,

எங்கும் தேடவேண்டாம்,

வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது.

மனதின் உண்மை நிலையானது,

எல்லாக் கற்பித்தல்களையும் கழிப்பது

அதுவே மிக உயரிய சித்தி ‘

சிவனை வழிபடுபவர்கள் புத்த சித்தர்களாக போற்றப் படுவது, தமிழர்களாகிய நமக்கு புதியது. நிறைய சிந்தனைக்கு உரியது. சக்தியைப் போற்றும் புத்த சித்தர்கள் பலர் உண்டு. காஞ்சிபுரத்து தாரிகபாதர் பாடுகிறார்:

‘ எமக்குள் உறைபவள் சுகவதி

ஆயினும் மாயை அவளை மறைக்கின்றது;

விவேகம் கூட்டிடுவோம்

உணர்வில் லயித்திடுவோம் சுகவதியை தரிசிப்பதற்கு

நூறு பிறவிகள் எடுத்தாலும் குருவின் துணையின்றி

சுகவதியின் சுகத்தை உணர இயலாதே ‘

பல புத்த சித்தர்கள், சிவன் வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்ட சித்தர்களைக் குருவாகக் கொண்டிருக்கின்றனர். நாதர் மரபில் விஷேச இடம் வகிக்கும் கோரக்கர், திபெத்திய மரபிலும் காணப்படுவது இதைக் குறிக்கிறது. சைவ-சாக்த பிரிவுகளோடு தொடர்புடைய இந்த புத்தசித்தர்கள் திபத்தியர்களின் வாழ்வோடும், மதத்தோடும், சமூகக் கதைகளோடும் சம்பந்தப் பட்டிருந்தாலும், இவர்கள் இந்தியாவின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள். தெற்கே இலங்கையிலிருந்து, வடக்கே இன்றைய பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியம் வரையும், கிழக்கில் திரிபுரா வரையும் இவர்கள் பரவியிருந்திருக்கின்றனர். இவர்களைப் பின்பற்றிய புத்த பிக்குகளும், ஏனையோரும் பின்னர், இஸ்லாமிய படையெடுப்புகளின் காரணமாக தங்களது பாரம்பர்யங்களையும், சித்த முறைகளையும் காப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பின் வாங்கி திபெத்தை நோக்கி தங்களது குறிப்புகளுடன் சென்று விட்டதாக கீத் டொவ்மேன் தனது மாஸ்டர்ஸ் ஆப் மஹா முத்ரா என்ற நூலில் தெரிவிக்கின்றார்.

இந்திய புத்தசித்த நூல்கள் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் வந்த இஸ்லாமிய படையெடுப்புகளில் நாலந்தா போன்ற புத்தப் பல்கலைக்கழகங்கள் அழிக்கப் பட்டாலும், இவை திபெத்தில் காப்பாற்றப் பட்டன என்று கீத் டொவ்மேன் கூறுகிறார். இக்கால கட்டமே சோழர்கள் தலையெடுத்து, ஓங்கிய காலமென்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. பின்னர் ஏற்பட்ட சைவ – பெளத்த மோதல்களால் பாதிக்கப் படாத புத்த கருத்துக்கள் திபெத்திலும் நேபாளத்திலும் தங்கிவிட்டது கூட இந்த புத்தசித்தர்களின் சைவத் தொடர்பு அறுந்து போகாமலிருக்கக் காரணமாயிருக்கலாம்.

சைவர்களுக்கும் புத்தர்களுக்கும் இடையேயான வித்தியாசங்கள் பலப்பட்டதற்கும், பிற்காலத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமை கொண்ட மார்க்கங்களானதற்கும் பின்னனியில், அரசியல் மோதல்கள், சைவ பக்திக் கலாசாரத்தின் எழுச்சி போன்றவை காரணமாக இருந்தாலும், பிரதான காரணமாக , சைவத்திற்கும் பெளத்தத்திற்கும் பாலமாக இருந்த இந்த புத்தசித்த மரபு அழிந்து போனதே காரணமாயிருக்கக் கூடும்.

தமிழக சித்தர் பரம்பரை பற்றி ஆய்வோர், இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இப்புதிர் விடுபட வாய்ப்புள்ளது.

– நேச குமார் –

nesa_kumar2003@yahoo.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்