அ.முத்துலிங்கம் பரம்பரை -5

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சிவஸ்ரீ


நூலகத்துக்கு வெளியிலிருக்கும் சுரங்கப் பெட்டியில் புத்தகத்தை விழப் போட்டதும், அது விழுந்தெழுந்து வந்து அதன் அடுக்கு வரிசைக்கு வரும் வரைக் காத்திருக்க முடியாத நேரங்களில், கெடு முடியுமன்று ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘யைக் கொண்டு போய் அந்தச் சுரங்கப் பெட்டிக்குள் பதவிசாய்ப் போட்டு விட்டு, மறுநாள் போய், முனா வரிசையில் பார்த்தால் பட்டுப்போல ஒயிலாய் சாய்ந்து நிற்கும். கண்டதும் காதலான தினத்திலிருந்து ஒவ்வொரு முறையும் அப்படித் தான். ஆனால் கடந்த இரு வாரங்களாக, மதுரைக்கு வந்த சோதனை போல் எனக்கு வந்தது. முதல் நாள் போட்டு வந்த புத்தகத்தை மறுநாள் காணவில்லை. வரிசை மாறிப் போயிற்றோவென, மானா, மாவன்னா, முனா, மெளவன்னா மட்டுமல்லாமல், ஆனாவைக் கூடத் தேடி விட்டேன். இனிஷியல் அ-வென்றிருப்பதால். மறுநாள், அதற்கு மறுநாளென, இது நாள் வரை கண்ணில் படவேயில்லை. நூலகத்தின் இணைய தளத்தில் தேடினால் எப்போதும் ‘On Loan ‘ காட்டுகிறது.

நாலு நாள் முன்பு, நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த மற்றொரு நண்பரின் கையில் நூலக முத்திரையுடன் ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘! அனுமாரைப் போல ‘கண்டேன் நண்பனை! ‘ எனக் கூவத் திறந்த வாயைக் குவித்து, ‘இதைப் படிக்கிறீங்களா ‘ என உளறினேன்.

‘திண்ணை படிக்கிறேன்ல! ‘ சிரித்தார் நண்பர்.

‘நூலகத்தில் இதைக் காணாது தேடினேன் ‘ என்றேன்

‘அங்கு காணாமப் போக நீங்க தானே காரண ‘ மென்றார்.

இனி நூலகத்தை நம்பிப் புண்ணியமல்ல என்று நண்பன் ‘ஆர்டர் ‘ பண்ணிய ‘முத்துலிங்கம் கதைகள் ‘ தொகுப்பு எங்கு ‘ஆர்டர் ‘ பண்ணியது என்று கேட்டேன்.

‘நான் யாரையும் ‘ஆர்டர் ‘ எல்லாம் பண்ணுவதில்லை ‘ என்றான்.

‘அட ராமா! ‘ கண்டிப்பாய் அவன் எதிரில் பர்மாக்காரி இருப்பாள். வேறெப்படி பேசுவான் ? ‘பின் என்ன செய்தாய் புத்தகத்தைத் தருவிக்க ? ‘

‘ரெக்வெஸ்ட் தான் செய்தேன் ‘

‘ரெக்வெஸ்ட் என்றால் எப்படி, எந்த முகவரிக்கு எழுதனும் ? ‘ கேட்டேன்.

‘ம், அப்படிக் கேள். சொல்கிறேன் ‘

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

‘ஒரு வக்கீல் நோட்டாஸ் எடுத்து, கீழ்க்கண்ட புத்தகத்தை, இந்த நோட்டாஸ் கண்ட பத்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எழுது. அதை நான் வாங்கிய ‘நியூ புக் லாண்ட்ஸ் ‘ முகவரிக்கும் அனுப்பலாம். காலச்சுவடு பதிப்பகத்துக்கும் அனுப்பலாம். மறக்காமல் பிரதியெடுத்து இன்டர்போலுக்கும் அனுப்பி விடு ‘

‘அந்தப் பதிப்பகம் எங்கிருக்கு ? ‘

‘ம், அது இன்டர்நேஷனல் போலிஸ். முத்துலிங்கம் ஐ.நா சபையிலும் பணிபுரிந்திருக்கிறார் அல்லவா, ஒரு பிரதியை ஐ.நா-க்கும் அனுப்பி விடு ‘ என்றான். !!!

என் சந்தேகங்களுக்கு இப்படி இடக்கு மடக்காமல், தெளிவு சொல்ல நல்ல நண்பன் உங்களில் யாருமாவது இருக்க மாட்டார்களா ? ? ?

அப்படி நீங்கள் சொல்லும் வரையில் ‘வம்சவிருத்தி ‘ தான் ரட்சிக்கிறது.

//{

‘நாய்கள் நல்ல புத்திக் கூர்மை உடையவை. அவைக்கு ட்ரெயினிங் தேவையில்லை. ட்ரெயினிங் எல்லாம் உங்களுக்குத் தான் ‘ என்று அந்த மெக்ஸிகோக்காரன் என்னைச் சுட்டிக்காட்டிக் கூறினான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

நாலே நாலு வார்த்தைகள் தான் எங்களுக்குக் கற்பித்தான். அதன் பிறகு துரியில் எவ்வளவு மாற்றம். ‘கம் ‘ வா என்பது; ‘சிட் ‘ இரு என்பது; ‘ஸ்டே ‘ நில் என்பது; இவை எல்லாவற்றையும் நானும் துரியும் வெகு சிரத்தையாகக் கற்று விட்டோம். வீட்டுப்பாடம் கூட சரியாக செய்தோம். ஆனால் ‘ஹீல் ‘ என்பது எங்கள் இரண்டு பேரையும் வாட்டி எடுத்து விட்டது. இடது கையால் நாயுடைய சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நாயையும் இடது பக்கமாக நடத்திச் செல்ல வேண்டும். செய்து பார்த்தால் தெரியும் வினை. நடக்கும் போது நாய் என்னுடைய குதிகாலுடனேயே வந்து கொண்டிருக்க வேண்டும். நான் நிற்கும் போது அதுவும் நிற்க வேண்டும்; நடக்கும் போது அதுவும் நடக்க வேண்டும். கொஞ்சம் முந்தியும் போகக் கூடாது. பிந்தியும் வரக் கூடாது. நாயுடைய வேகத்துக்கேற்ப நான் என்னுடைய வேகத்தை மட்டுப்படுத்தப் பார்ப்பேன். மெக்ஸிகோக்காரன் கத்துவான். நாய் தான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்; நானல்ல. காசையும் கொடுத்து இந்த மெக்ஸிகோக்காரனிடம் இப்படிப் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று நான் என்னை நொந்து கொள்வேன். கடைசியில் ஒருவாறாகப் பரீட்சையில் இருவரும் பாஸாகி விட்டோம்.

இதுதவிர மெக்ஸிகோகாரன் ஒரு விசிலும் தந்திருந்தான். அந்த விசிலை ஊதினால் சத்தமே கேட்காது. அந்தச் சத்தம் நாய்க்கு மாத்திரம் தான் கேட்கும். அது எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடும்.

}//

முத்துலிங்கத்தின் இந்த ‘துரி ‘யைப் படித்ததும் என் மாமாவின் பெயரை வைத்துக் கொண்டு, அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குரைத்து ஊரைக் கூட்டி, அதன் பேர் சொல்லி அதட்டும் போதெல்லாம் மாமாவையும் நெளிய வைக்கும் மணியின் ஞாபகம் தான் எனக்கு வருமென்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல. எனக்கு எங்கள் ‘காட்டு ராணிக் கோட்டை ‘ – ஆச்சி பெண்கள் கல்லூரி தான் ஞாபகம் வருகிறது இதைப் படிக்கும் போது. அச்சுப் பிசகாமல் இதே போன்றதொரு ட்ரெயினிங்கைப் பழுதின்றிக் கொடுத்து, மூன்று வருட முடிவில் துரியை விடத் திறமையாய்ச் சுணங்காமல் செய்து விடுவோம், அது யோசித்துச் செய்யக் கூடியவைகளைக் கூட. துரிக்காவது கையில் ‘டெஸ்ட் ட்யூப் ‘பும், அதில் சல்ஃப்யூரிக் அமிலமும் இருக்காது, விசில் ஊதும் போது. அதை அப்படியே பொத்தென்று போட்டு விட்டு, போடும் போது தெறிக்காமல், உடையாமல், அதன் தாங்கித் துளையில் விழுமாறு போட்டு விட்டு, வழியில் காணும் சோதனைக் கூடச் சோதனைகளை யெல்லாம் பாய்ந்து தாண்டி, தலைதெறிக்க ஹெச்.ஓ.டியை நோக்கி ஓடி, அவர் மீது மோதிவிடாமல், ஓடிய வேகத்தில் அவர் மூக்கில் மூச்சுவாங்காமல் ‘அட்டென்ஷனில் ‘ நிற்கப் பழக்கித் தருவார்கள் சேர்ந்ததுமே.

அப்படி ஓடி நின்றதும் ‘இன்னிக்கு என்ன கிழமை ? வெள்ளிக்கிழமைச் சந்தை இன்னிக்குத் தானா ? ‘ என்ற அவரது வினாவுக்குத் தலையாட்டும் போது, வெகுஜாக்கிரதையாகக் கண்களைக் கீழ திருப்பி வைத்து விடுவது நல்லது. இன்றேல் எங்கள் பார்வையில் இருக்கும் ‘இதுக்குத் தானா! ‘வைக் கண்டிப்பாய்க் கண்டுபிடித்து விடுவார். உடனே ‘உன் ஒன்டர்ஃபுல் பார்வையெல்லாம் வெளிலே கழட்டி வச்சுட்டு வா ‘ என்ற வசையோடு போகாது, ‘இன்டர்னல் ‘ தேர்விலும் மதிப்பெண் ‘ஒன்டர்ஃபுல் ‘ ஆகிவிடும் என்பதையும் பழக்கித் தருவார்கள்.

//{ துரியின் கண்களுக்கு மேலே இரண்டு வட்டங்கள். அது படுத்து நித்திரை கொள்ளும் போதும் கண் விழித்திருக்கிறது போன்ற பிரமையை உண்டு பண்ணும். ஆட்டு மந்தைகளை மேய்க்கும் போது ஆடுகள் இது தூங்கும் போதும் விழித்திருக்கிறது என்று நினைத்து மயங்கி பயபக்தியோடு செயல்படுமாம் }// இப்படி விழிப்பா தூக்கமா என்று வகுத்தறிய முடியாதவொரு வசீகரப் பார்வை வகுப்பறையிலேயே வரப் பெற்றிருந்தோம். நாளடைவில் எப்போதும் எல்லாத்துக்கும், எல்லாம் கடந்த ஒரு ஞானப் பார்வையும் கிடைக்கப் பெற்றிருந்தோம்.

ஆனாலும் மந்தையில் ஒட்டாத என் பார்வைக்குக் காரணம் கண்டுபிடித்து வைத்திருந்தார் உயிரியல் பேராசிரியை.

‘இவள் மகா திமிர் பிடித்தவள் ‘ என்றார் தமிழ்ப்பேராசிரியையிடம்.

‘என்னிடம் ஒழுங்கா நடக்கிறாளே, நீங்க அவளுக்குப் பாடம் எடுத்தீர்களா ? ‘ என்றிருக்கிறார் தமிழ்ப் பேராசிரியை.

‘சீச்சீ, அவளோடு யார் பேசினார், அவள் நடையைப் பார்த்தால் தெரியலையா ? ‘

‘ஏய், கம் ஹியர் ‘ என்றார் என்னை

போய் ‘குட்மார்னிங் மேடம் ‘ நின்றேன்.

தமிழாசிரியையிடம் கண்ணைக் காட்டினார் உ.பேராசிரியை, ‘சொன்னேனே, பார்த்தீர்களா ‘ என்று.

‘நீ ஆச்சிப் பள்ளில படிக்கல ? ‘

‘அங்க தான் படிச்சேன் ‘

‘அதுக்கு முன்ன ? ‘

‘மெட்ராஸ் ஆல்ஃபா கான்வென்ட் ‘

‘கோ-எட்-டா ? ‘

‘ஆமா மேடம் ‘

‘அதான். சொன்னேன்ல ‘ உ.பேராசிரியை த.பேராசிரியையைப் பார்த்தார்.

‘மெட்ராஸ்ல எத்தன வருஷம் படிச்ச ? ‘ என்றார் தமிழாசிரியை

‘ரெண்டு வருஷம். எல்.கே.ஜி, யூ.கே.ஜி ‘

‘போ ‘ என்றனர் இருவரும்.

அங்கிருந்த பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் எல்லாம் இப்பவும் ‘குட்மார்னிங் ‘ சொல்லும் போது ஒரு இராணுவ வீரரைப் போல ‘சல்யூட் ‘ அடித்துச் சொல்லக் கூடாது. முட்டிக்காலிடப் போவது போல, ஆனால் முழுக்க முட்டியிடாது, முதுகை C போல வளைத்து, கழுத்தை மேல் கீழாய் அசைத்துச் சொல்ல வேண்டும். தெருவில் தான் தலைகுனிந்து நடக்க, அப்பத்தா நியாயமான காரணம் சொன்னார். வாசல் கதவைத் தாண்டி வாட்ச்மேன் கூட நுழைந்து விடாத காட்டு ராணிக் கோட்டையில் எதற்குக் குனிய வேண்டும் என்ற என் கேள்வியை நான் யாரிடமும் கேட்காததால், பதில் கிடைக்காததாலும், ஆறாவது படிக்கும் போதே

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் ‘

என்ற பாட்டுக்கு, இப்படி இருப்பவர்கள் தான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் எனக் கோனார் தமிழுரை சொல்லித் தந்ததாலும், அப்பத்தா இல்லாத இடங்களில் தலைகுனிந்து நடப்பதென்பது நடவாததாயிற்று. பாரதியின் புதுமைப் பெண்ணாயிருக்க யாருக்குத் தான் ஆசையில்லை, கல்லூரி மேடைகளில் மட்டும் ?

ஆனால் அந்தக் காட்டு ராணிக் கோட்டைக்குத் தான் நெடிய கதவுகள் உண்டு, அங்கு எங்களை ஏற்றிச் செல்லும் அஸ்வமேதப் புரவிக்குக் இருபுறமுமே கதவுகள் இல்லை. அதற்கு அண்டை ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள் வைத்த பேர் தான் ஃபேரி டேல். அதன் நெற்றியில் எழுதியிருந்த பேரோ 8-ம் நம்பர் மகளிர் மட்டும் டவுன்பஸ். அதில் வேறு எப்படியும் ஏறுவதற்கு இயலாது என்பதால் ஒருநாள் மட்டும் ஓட்டுநராகவோ, நடத்துநராகவோ வேடமிட்டு வந்து முத்துலிங்கம் பார்த்திருப்பாரேயானால், இத்தகு திறமிகு பெண்கள் ஆபிரிகத்தில் மட்டுமேயுண்டு என்று நினைத்திருக்க மாட்டார்.

‘விழுக்காடு ‘ கதையில்

//{ அமீனாத்து தேர்வுக்கு வந்த போது ஊழியர்கள் எல்லாருடைய கண்களும் அவளோடு போய் விட்டன. ‘சலீர், சலீர் ‘ என்று அவளுடைய பாதங்கள் கேட்காத ஒரு தாளத்துக்கு நடந்து வருவது போல இருந்தது. முதுகை நேராக நிறுத்தி, கால்களை எட்டி வைத்து அவள் நடந்தது கறுப்பு தேவதை ஒன்று வழி தவறி வந்து விட்டது போல இருந்தது. ஆபிரிக்கப் பெண்களின் அழகைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ‘மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும் ? ‘ என்ற கவிதைகளுக்கெல்லாம் அங்கே வேலையில்லை.

}//

என்ற வரிகள் எல்லாம் போதாது தமிழ்நாட்டுப் பெண்களின் சாமர்த்தியத்தை வர்ணிக்க என்ற முடிவுக்கு வந்திருப்பார்.

பொதுவாக எல்லாப் பேருந்துகளுமே பிதுங்கித் தான் வழியும். ஆனால் மற்றப் பேருந்துக்கும் மகளிர் பேருந்துக்கும் இடையே உள்ள ஆறு வித்தியாசங்களில் முதன்மையானது என்ன ? சொல்லி விடுபவர்களுக்கு ‘முத்துலிங்கம் கதைகள் ‘ எனக்குக் கிடைத்தவுடன் உங்களுக்கும் கிடைக்க வழி செய்வேன். அதாவது அதை விற்கும் பதிப்பகத்தின் சரியான முகவரியைக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவேன்.

தொடரும்… (அடுத்த வாரம்)

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ