பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)

This entry is part of 48 in the series 20040610_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கடந்த வருடம் என்னைத் தொடர்ந்து வருத்திக்கொண்டிருக்கும் (இதை எழுதும்போது கூட) முதுகு வலிக்காக குடும்ப மருத்துவரிடம் சென்றபோது, வழக்கம்போல ஊர்க்கதைகள் பேசிவிட்டு, எழுத்தாளர் பங்க்ராஸியின் புதிய நாவலான ‘துரிதகதியில் எல்லாம் முடிந்தது ‘ (Tous est passe si vite)பற்றி மிகவும் சிலாகித்தார். இதற்கு முன்னால் அந்த எழுத்தாளரை அறிந்ததில்லை என்பதால் மருத்துவரின் பேச்சை வலதுகாதுவழியே வரவேற்று இடதுகாது வழியே அனுப்பிக் கதவைத் சாத்திவிட்டு வீட்டிற்குத் திரும்பிய சிலநாட்களுக்குள், செய்தித்தாள்களில் பங்க்ராஸியின் புகழைப் பக்கம்பக்கமாக இலக்கிய விமர்சகர்கள் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.

காரணத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் ஏதுமில்லை. பிரெஞ்சு மொழி பீடம் 2003 -2004க்கான சுமார் 7400 யூரோவுக்கான(சுமார் நான்கு லட்சம் இந்திய ரூபாய்) இலக்கியப் பரிசுக்கு மேற்கண்ட நாவலை பதின்மூன்று வாக்குகளுடன் தேர்வு செய்திருந்தது. ஒன்பது வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருந்த நாவல் ‘ஆகஸ்ட்டு மாதம் 31ந் தேதி ‘( ‘Le 31 du mois d ‘aout ‘) எழுதியவர் லொரான்ஸ் கொஸ்ஸே (Laurence Cosse).

பிறப்புமுதல் ஒவ்வொரு கணமும் இறப்பை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். இறப்பென்பது எப்போதுவேண்டுமானாலும் நம்மீது பிரயோகிக்கப்படலாம். அந்த ‘எப்போது ‘ நமக்கு அறிவிக்கப்படாதவரை – அதாவது இறப்பு வருகின்ற நேரத்தின் ‘நிச்சயமற்றத் தன்மை ‘ காக்கப்படும்வரை- இடையூறின்றி வாழ்க்கையைத் தொடருகிறோம்.

ஆனால் மரணத்தைச் சற்றேவிலகியிரும் பிள்ளாய் என அறிவிக்கும் துணிவுள்ள மருத்துவம், தோல்வியுற்று மரணத்தின் தேதியை தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும்போது உயிர்படும்பாட்டை, இறுதி நாட்களின் கோரமுகத்தை, படைப்பாளர் பங்க்ராஸி தன்னிதயத்தின் குருதியுடனான எழுத்தில் அறிமுகபடுத்துகிறார்.இறப்பின் பலிபீடத்தில் நிறுத்தபட்டு, புற்றுநோய் கொலைவாளுக்குக் கொஞ்சகொஞ்சமாய் அறுபடும் உயிரின் வதையை உணர்ச்சி பொங்க எழுத்தில் வடித்திருக்கிறார்.

மரணவாயிலில் இருக்கும் ஒரு பெண்படைப்பாளியின் இறுதி நாட்கள் குறித்த கதை. நெகிழ்ச்சியோடு, ஓர் உறவின் இழப்பாய் மனதிற் பதியம் செய்யபடுகிறது. முற்றிய புற்றுநோயுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும், எழுத்தாளர் பெண்மணியாக அவதாரமெடுத்தும், அவரருகே நெருங்கி நின்றும் அப்பெண்மணியின் வேதனைகளும், வெறுப்புகளும், உணர்வுகளும், விருப்புகளும் சுற்றியுள்ள சுயநலங்களால், பேராசைகளால் எவ்வாறு அலட்சியப்படுத்தப்படுகின்றன, என்பதனை இரக்க மனதோடு இந்நாவலில் சொல்லப்டுகிறது.

‘துரிதகதியில் எல்லாம் முடிந்தது ‘ என்பதாக தமிழில் இந்நாவலின் தலைப்பினை மொழிபெயர்ப்பது பொருத்தமென்றாலும், ‘ஆடு புலி ஆட்டம் ‘ என்பதுப் பொருத்தமாகத் தோன்றியது.

ஏதோ ஒருவகையில் புகழின் உச்சியில் இருப்பவர் ஒருவர்- நமது தமிழ்நாட்டுச் சூழலில் அவர் ஓர் அரசியல்வாதியாகவும் இருக்கலாம் அல்லது நடிகனாகவும் இருக்கலாம் – இன்றைக்கோ நாளைக்கோவென்று அவரது உயிர் ஊசலாடும் சூழலில், ஊரும் உறவும் பிழைக்கவேண்டுமென பிரார்த்தனை செய்கிறது. சிலர் உணர்ச்சி வேகத்தில் தங்கள் தலைவனுக்காக தங்களையே எரித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள் அனைத்துமே நாடகக் காட்சிகள் என்பதை நாம் அறிவோம். இந்நாடக காட்சிகளுக்கிடையே, செய்யும் தொழிலால் தங்கள் அசலான முகத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் ஒரு கூட்டத்திற்கு உள்ளது. புகைப்படக் கருவியும், கையேடுமாகக் சம்பந்தப்பட்ட நபர், எப்போது இறப்பாரென தொழில் தருமம் கருதி காத்திருக்கும் ஊடகக்காரர்களை அலட்சியம் செய்ய முடியுமா என்ன ? இவர்களுக்கு ஊசலாடும் உயிர் மீதுள்ள அக்கறையானது, சமுதாய கண்ணோட்டம் சார்ந்ததல்ல. அச்செய்தியானது, அடுத்தச் சிலநாட்களுக்கு எடுக்கின்ற அவதாரத்தினால், கிடைக்கின்ற விளம்பரமும் வியாபாரமும் சார்ந்தது.

இந்நாவலிலும், இன்னொரு அசலான உறவு -பதிப்பாளரும் படைப்பாளிக்குமான உறவு – அடையாளப்படுத்தப்படுகிறது.

பொருளீட்டும் பிரேமையில் உள்ள இவ்வுலகத்தின் செயல்பாடுகள் அனைத்துமே பொருள்சார்ந்தது என்பது வெளிப்படை. ‘என்ன செய்யுதுசார் ? எதிர்த்தாப்புல எமனிருப்பதாகப் பிரமையா ? கோழை தள்ளுதா ? எழுதிக்கொடுங்க புத்தகமா போட்டுடுவோம். ‘ என்பதாக எந்தத் தமிழ்படைப்பாளிகளும் அரக்கத்தனமாக கட்டிலில் கிடக்கும் எழுத்தாளர்களிடம் நடந்துகொள்ளமாட்டார்களென நம்புவோம். உண்மையில், கடைசிமூச்சினை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் புகழ்பெற்ற எழுத்தாளரின் அனுபவங்களைக் காசாக்க எந்த பதிப்பாளருக்குத்தான் ஆசைவராது. இந்நாவலில் வரும் பதிப்பாளர் பெண்மணி விவியான் ஆசையும் அத்தகையதுதான். அதிலும் தன் பதிப்பகத்துக்கு வேண்டப்பட்ட எழுத்தாளர் எலிஸபத் புற்று நோய்க்கு எப்போது வேண்டுமானால் இறக்ககலாம் என்கின்ற நிலையில், அவர் விடும் மூச்சுக்குக்கூட வாசகர்கள் உண்டு என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, உடனுக்குடன் எழுத்தாக்கப்படவேண்டும் என்கின்ற யோசனையை எழுத்தாளரிடம் சொல்கிறார். விவியான் என்கிற புதிய தலைமுறை பெண் பதிப்பாளர்மூலம், பரபரப்பு தகவல்களுக்கு முக்கியத்துவம் காட்டும் இன்றைய பதிப்புலக போலிகளைத் தோலுரிக்கிறார்

இறப்பின் விளிம்பிலிருக்கின்ற மக்களின் உணர்வுகளை எடுத்துரைப்பதும், அவர்களுக்காகக் குரல்கொடுப்பதும் எழுத்தாளர் பங்ராஸியின் குணம். ஏற்கனவே அவரது தந்தை மற்றும் தாயின் அந்திம நாட்கைளை மிக மென்மையாகத் தனது படைப்பினூடே தெரிவித்துள்ளவர் என்று சொல்லப்படுகிறது. வாசகனை, கதையின் நாயகியான எலிஸபெத்தின் இறுதி நாட்கள்வரை இட்டுச் செல்லும், இந்நாவலின் கதைசொல்லியை பங்க்ராஸியாகவேக் கருதலாம். இக்கதை சொல்லியும் எலிஸபெத் போலவே ஓர் எழுத்தாளன், இருவரது படைப்புகளுக்குமே பதிப்பகமும் ஒன்று. தவிர, இவர்களது எழுத்தாளர்கள் மீதான அபிப்ராயங்களும் ஒன்று, மொழிகள் ஒன்று, வெளிப்பாடு ஒன்று, துக்கங்கள் ஒன்று, துவேஷங்கள் ஒன்று.

கதையின் நாயகியாகவும், கதைசொல்லியாகவும் இரு வேறு அவதாரங்களிள் ஒன்றியும், தள்ளிநின்றும் சாட்சிமொழிகளாக மனச்சங்கடத்துடன் கொண்டு போகிறார். எலிஸபெத் மலைமலையாய் பாராட்டுதல்களும், பரிசுகளும் குவிந்தக்காலத்தும் மயங்காவொரு எழுத்தாளர். தன் தகுதிக்குப் பொருந்தா கிரீடம் தலையில் சூட்டப்படுவதாக நம்பியவள். குறைநாட்களை கடந்தகால சந்தோஷ நினைவுகளோடு கடக்கவிழைபவளுக்கு, சுயநலங்கள் வேப்பிலை அடிக்கின்றபோது நம் மனது பதறுகிறது. கனவில்கூட இச்சுயநலமிகளை எதிர்த்துக் குரல்கொடுக்கின்ற நிலையில் அவளில்லை. உடல் மட்டுமல்ல உள்ளம் கூட உலுத்துப் போய்விட்ட பெண்மணி..

ஒருவர் மற்றவர்க்காக கைத்தட்டுவதென்பது வரவேற்கப்படவேண்டியதே. எதற்காக கைத்தட்டுகிறோமென எண்ணிப் பார்ப்பதுண்டா ? வீடு தேடிச் சென்று நாம் உதவுவதென்பது பல நேரங்களில் உபத்திரவங்களன்றி வேறில்லை என்கிறார் நாவலாசிரியர். குறிப்பாக நலிந்தவர்கள், நோயாளிகள், அப்பாவிகளுக்கெனச் நாம் செய்யப்போகும் உதவிகள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவை, அவர்களுக்கு உபத்திரவம் சேர்ப்பவை என்பது எழுத்தாளர் பங்க்ராஸியின் கருத்து.

ஒருபக்கம் வாழ்வில் நெறிமுறை, கட்டமைப்பு, இவற்றிற்குத் தன்னைப் பழக்கி உயர்வான எண்ணங்களுடன் வாழப்பழகியவர்கள், மற்றொருபக்கம் வலையில் சிக்கவிருக்கும் பூச்சிகளுக்காக காத்திருக்கும் சிலந்தி மனிதர்கள். நாவலில் வருகின்ற மனிதர்கள் சமூகத்தில் நாம்காண்கின்ற இருவேறு எச்சங்களின் பிம்பங்கள். ஒவ்வொரு தீபமாய் அைணைத்துக்கொண்டு இருட்டைநோக்கிப் பயணிக்கும் அப்பெண்மணிக்குத் தோள்கொடுத்து அழைத்துச் செல்லும், கதைசொல்லி பங்க்ராஸி அவளது கடைசி மூச்சுவரைது உடனிருக்கிறார்.

எழுத்தாளர் பெண்மணியின் இறுதிக்கால உள்மனத்தின் போராட்டங்கள் ஆசிரியரால் தெளிவாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இறுதி நாட்களில், எல்லா நிலைகளிலும் எதிரெதிர் பயணம். விதி அப்பெண்மணியை இருவெறு உலகத்திற்கானவள் எனக் கிழித்துப் போட்டிருக்கிறது. வாழவேண்டுமென்ற ஆசை ஒருபக்கம். இறப்பு காத்திருப்பதுகுறித்தான கவலை மறுபக்கம். நோயால் நேர்ந்த தனது துயர்படிந்த தற்போதைய வாழ்வின் வக்கிரம் ஒருபக்கம், வானத்து நிலவாய் பிரகாசித்த கடந்தகால வாழ்க்கை மறுபக்கம். உண்மையாய் புகழ்ச்சிகளை பெற்றகாலம் ஒருபக்கம், பொய்யாய் தன் சுய நலத்துக்காக அக்கறைகாட்டுகின்றவர்கள் மறுபக்கம். இருப்பதால் சந்தோஷம், இல்லாமல் கரையவிருப்பதால் துக்கம் ஆக அனைத்துமே துரித கதியில் அவளது முடிவுக்குக் காத்திருக்கின்றன;.

அப்பெண்மணிக்காக நாம் அழுகிறோம்.

எழுத்தாளர் எலிசபெத்தின் ஊடாக இக்கால படைபாளர்களின் உள்முகங்களை அறிவதற்கு நமக்கொரு வாய்ப்பு. இன்றைய படைப்பாளிகள், பதிப்புலக நிர்வாகத்தின் கம்புகளுக்கு எப்படித் தலையாட்டவேண்டியிருக்கின்றது என்பதனை தேவைக்கு அதிகமாகவே சொல்லியிருக்கிறார்.

1949ம் ஆண்டு பிறந்த ழான்-நோயெல் பங்க்ராஸி சுமார் பன்னிரண்டு படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் Rene Camps ‘, ‘Corse ‘, ‘Long sejour ‘, ‘Madame Arnoul ‘ முக்கியமானவை.

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation