கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஞாநி


கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான் மறைவு அவருடைய வயதின் காரணமாகவும் கடந்த ஓராண்டில் அவர் நோயுற்றிருந்ததாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்; முதிர்ந்து பழுத்த வயதிலேயே அவர் முடிவெய்தினார் என்றாலும், அந்த மறைவு எழுப்புகிற வெற்றிடம் வேதனையை வருத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

அறுபது வயதுக்குப் பிறகுதான் அவருக்கு நவீன நாடகக்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அடுத்த முப்பதாண்டுகளில் அந்த உறவை அவர் இரு தரப்பினருக்கும் பயன் தருவதாக செழுமைப்படுத்தினார்.

கோவில் சடங்காக வட தமிழ் நாட்டில் உயிர்த்திருந்த கூத்தை கண்ணப்ப தம்பிரான் சடங்காக மட்டும் பார்க்க வில்லை. அதை நிகழ்கலையாகவே அவர் அணுகினார். அதனால்தான் கூத்துப் பட்டறையின் ஆரம்ப கால தயாரிப்புகளில் ஒன்றான ‘காளி ‘ நாடகத்துக்கு அவரால் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து ஸ்க்ரிப்ட் எழுத முடிந்தது. அந்த நாடகத்தில் பழமையின் பெயரால் மூடத்தனமான பக்தி செலுத்தும் கிராம மக்களிடையே மனிதப் பிரயத்தனத்தை வலியுறுத்தும் கிழவர் பாத்திரத்தில் அவ்ரே அற்புதமாக நடித்தார்.

தன் மகன்கள் காசியும் சம்பந்தமும் நவீன நாடக முயற்சிகளில் ஈடுபடுவதை கண்ணப்ப தம்பிரான் ஊக்குவித்தார். தானும் ஈடுபட்டார். அவருடைய ஈடுபாடு என்பது கூத்தின் கலை அம்சங்களை நவீன நாடகக்காரர்கள் கற்றுக் கொள்ள உதவுவதோடு நிற்கவில்லை. கூத்திலிருந்து நவீன நாடகத்துக்குப் பலவற்றை அளித்தது போலவே, தான் புதிதாகப் பெற்ற பலவற்றை அவர் கூத்துக்கு எடுத்துச் சென்றார். இந்த மனம் இருந்ததால்தான் அவரால் பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கூத்தாக்க முடிந்தது. லத்தீன் அமெரிக்கப் படைப்பாளி மார்க்வசின் படைப்பைக் கூத்து வடிவத்தில் நிகழ்த்த முடிந்தது.

கண்ணப்ப தம்பிரானின் கலை மனம் மரபான கலையில் ஈடுபட்டிருந்தபோதும் நவீன மனமாக இருந்தது என்று சென்னையில் பரீக்ஷா நாடகக் குழு நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியரும் நாடக ஒளி இயக்குநருமான ரவீந்திரன் குறிப்பிட்டார்.

ஒரு பக்கம் ஆட்டக்கலைஞராகவும் இன்னொரு பக்கம் படிப்பும் ஆராய்ச்சியும் பார்க்கிற விஷயங்களிலிருந்துப் பொருத்தமானவற்றை தன் கலையுடன் இணைத்துக் கொள்வதற்கான மனமும் கொண்ட கலைஞராக தம்பிரான் இருந்தார் என்று கூத்துப் பட்டறைத் தலைவர் நாடகாசிரியர் ந.முத்துசாமி தன்னுடைய அனுபவப் பகிர்வில் சொன்னார். கூத்து என்ற மரபின் பிரும்மாண்டத்தைத் தனக்கு அவர்தான் தெரியப்படுத்தினார் என்றார் முத்துசாமி. (புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றி அவருடன் உறவாடிய அனைவரின் பங்கேற்புடன் ஒரு தனி நூலே வெளியிட வேண்டிய அவசியம் இருக்கிறது.)

தமிழ் சூழலில் ஊடகங்கள் கண்ணப்ப தம்பிரான் போன்ற ஒரு மகத்தான கலைஞருக்கு வாழும் காலத்தில் மட்டுமல்ல, இறந்த வேளையிலும் நியாயம் செய்வதில்லை. ஆர்.கே.நாராயணனும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் தும்மினால் கூட அரைப்பக்கக் கட்டுரை வெளியிடும் ஹிந்துவில் தம்பிரானின் மரணச் செய்தி கூட வெளியிடப்படவில்லை. தமிழ்ப் பத்திரிகைகளே தமிழ்க் கலைஞனைப் பொருட் படுத்தாதபோது ஆங்கில ஏடுகளிடம் எதிர்பார்க்க முடியுமா ?

வர்த்தக சினிமாவைத் தவிர வேறு எந்தக் கலையும் இருப்பதாக தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் அரசியல்வாதிகள் நினைப்பதில்லை. ஒரு பாத்திரத்துக்காக விக்ரம் இளைத்தால் செய்தி. குண்டு கல்யாணத்துக்கு கலைமாமணி விருது. கூத்து, களரி, தாய்ச்-சீ எல்லாம் பயின்ற கூத்துப்பட்டறை நடிகர்களுக்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்தஸ்து மட்டும்தான்.

கண்ணப்ப தம்பிரான் போன்ற ஒரு கலைஞர் மறைந்தால் எந்த அரசியல் கட்சியாவது இரங்கல் தீர்மானமாவது போடுகிறதா ? கிடையாது. தமிழ், தமிழர் அடையாளம் என்று தமிழ் தேசிய அரசியல் பேசுகிறவர்களுக்கும் கண்ணப்ப தம்பிரான்கள் பற்றி அக்கறை கிடையாது.

கண்ணப்ப தம்பிரான் போன்றவர்கள் பற்றி வெகுஜன ஊடகங்களுக்கு அடிமனதில் பயம் இருக்கிறது. அவை தூக்கிப் பிடிக்கிற வர்த்தக மதிப்பீடுகளுக்கு எதிர் நிலையில் அவர்கள் இருப்பதுதான் காரணம். மாற்று கலாசார முயற்சிகள் எப்போதுமே ஊடகங்களுக்கு மிரட்டலாக இருக்கின்றன. இதை சமாளிக்க அவை இரண்டு உத்திகள் வைத்திருக்கின்றன.

தம்பிரான் போன்ற கிராமியக் கலைஞரானால், அதை ஓர் அருங்காட்சியக விஷயம் மாதிரி ஆக்கி ஒரு மூலையில் இடம் தந்து ஒதுக்கி விடலாம். அல்லது அவற்றின் அம்சங்களை உறிஞ்சி எடுத்து வணிக வடிவத்திற்கேற்ற மாதிரி பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேரளச் சூழலில் மம்மூட்டி, மோகன்லால் போன்ற சிறந்த வர்த்தக சினிமா நடிகர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மரியாதைக்கு எந்த விதத்திலும் குறையாத கவனம் காவாலம் நாராயணப் பணிக்கர்களுக்கும் ஊடகங்களிலும் அரசியல் தலைமையிடங்களிலும் கிடைக்கிறது. கர்நாடகத்திலும் இதே நிலைதான். இதைத் தமிழகம் கற்பது எப்போது ?

– தீம்தரிகிட அக்டோபர் 2003 இதழிலிருந்து

dheemtharikida@ hotmail.com

dheemtharikida2002@yahoo.co.in

Series Navigation

ஞாநி

ஞாநி