பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)

This entry is part of 42 in the series 20031023_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘நீ வாழும் சமூகத்தின் நோக்கம் உன்னை அழிப்பது….. அப்படி அழிப்பதற்கு இச்சமூகம் கையிலெடுக்கும் ஆயுதம் உன்னை ஒரு பொருட்டாக கொள்ள மறுப்பது.. அதனை அனுமதித்துவிடாதே. எதிர் கொள் ‘.- ஹூல்பெக்

ஹூல்பெக் என்கின்ற இந்த வம்புக்காரரிடம் எல்லா திறனும் உண்டு.. கவிதை, இலக்கியம், புதினம், அறிவியல், இசை, சினிமா எனத் தோள்தட்டும் சகலாகலாவல்லவன்.

பிறந்த ஆண்டு 1958. பிறந்தவிடம் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரஞ்சு அரசின் ஆட்சிகுட்பட்ட ‘La Reunion ‘ என்கின்ற தீவு. தந்தை மலையேறுவதற்கான பயிற்சியாளர். தாய் ஒரு மருத்துவர். பிள்ளைகளை அலட்சியப்படுத்துகின்ற சராசரி ஐரோப்பியர்கள். எனவே வளர்ந்ததனைத்தும் தந்தை வழி பாட்டியிடம். இருபது வயதில் பாட்டியையும் இழக்க,. ஹூல்பெக்கின் இளமைக்காலம் நாற்சந்தியானது. திசை தெரிந்தும், தெரியாமலும் பாய்மரக்கப்பலாக பயணித்தவர். உரிய வேலைகிடைக்காத துயரம். நண்பனின் சகோதரியை மணந்து ஓர் ஆண்குழந்தைக்கு தந்தையான நிலையில், மண வாழ்வில் குழப்பம், பின்னர் விவாகரத்து. முடிவாக மனநிலை பாதிக்கப்பட்டு, மனநல

காப்பகங்களில் தங்க நேரிடுகின்றது.

பிறப்பின்போது பெற்றோர்களாலும், இல்லறத்தின்போது மனைவியினாலும் அவரது இருப்புக் கேள்விக் குறியாக, மனித உறவுகள் மரித்துப்போனது. உறவுகள் மட்டுமல்ல அவற்றை உயிர்ப்பிப்பதாக நம்பப்படுகின்ற மதங்களும் அவற்றின் ஹீரோக்களும் கூட ஹூல்பெக்கிடம் மரியாதை இழந்து போனார்கள். .உலகத்தின் மீதான அவரது பார்வை, குரலாக வெளிப்பட்டு, எதிர்வினைகளைப் பற்றி அக்கறைகொள்ளாது எப்போதும் ஓங்கியே ஒலிக்கும். அவர் எண்ணங்கைளை ஓவியத்தில் கொண்டுவருபவரல்லர். பார்வைகளை எழுத்தில் கொண்டுவருபவர். அவரது எழுத்து அபிப்ராயங்களேயன்றி தீர்வாகாது என்பதை அவரது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

‘தீர்வுகள் காண்பதைவிட வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச்சுவதில் தேர்ந்தவன் நான். இலக்கியமென்பது விடைகாண்பதல்ல, விளக்குவது ‘ (Je suis plus habile a retourner le couteau dans la plaie qu ‘a retouver des solutions. Cela n ‘aurai rien a voir avec la litterature. Litterature signifie pour moi decrire) என்பது அவரது வாதம்;

‘சீட்டுக்கட்டினேன் பணம் போய்விட்டது ‘ என்று புலம்பும் மனிதனிடம் ‘வீட்டையிடி தீர்வுகாணலாம் ‘ என்கின்ற வாஸ்து எழுத்தாளர்கள் மலிந்துவிட்ட இலக்கிய உலகில், வாசகனின் தோள்தொட்டு அக்கறையாய் பேசும் குணம்.. வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியவர் என்பதாலோ என்னவோ உலகம் என்பது ‘ வேதனைகளால் விரிந்தது (une souffrance deployee) ‘ வாழ்க்கையென்பது ‘இதயத்தை சுக்குநூறாகுக்கும் (brise le Coeur) ‘ தன்மையதென அங்கலாய்க்கிறார்.

அவரது நூல்களைப் படித்துமுடிக்கும்போது முடிவான எந்த பதிலும் கிடைப்பதில்லை.. வாசிப்பின் முடிவில் ? முடிவில்லா உரையாடலையும், விவாதத்தையும், விமர்சனங்களையும் ஆரம்பித்துவைக்கின்ற வகையில் வாசகன் நெஞ்சில் வைக்கப்படும் அவரது அக்கினிக்குஞ்சு திடுமென்று நம்மிடம் பற்றிக்கொள்ளும்; அதில் சாம்பலாவது பெரும்பாலும் கோழைகுணங்களே.

சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது Lanzarote. இந்நூலிலும், இலக்கியம், உறவுகள், அறிவியல் முன்னேற்றம், பத்திரிகைகள் என தனது அபிராயங்களை ஹூல்பெக் சொல்லிப் போகிறார். ஐரோப்பிய சுற்றுலாவாசியாக தன்னைத் சுவீகாரமெடுத்துக்கொண்டு, ஏற்படும் அனுபவங்கள்மூலம் இருபதாம்நூற்றாண்டு எப்படி முடிந்திருக்கிறது ? என்பதை பாடம் நடத்தும் முயற்சி.

சுவாரஸ்யமான ஆரம்பம், 1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிலவாரஙகள் உல்லாசபயணம் சென்றுவரலாம் என்ற எண்ணத்தில் நாயகன், ஒரு சுற்றுலா நிறுவனத்திற்குள் நுழைகிறான். வழக்கமான சம்பிரதாய உரையாடல்களுக்குப் பிறகு, சுற்றுலாநிறுவன பெண்மணி சில இடங்களைச் சொல்லிக்கொண்டேபோக, அதிலொன்று மொராக்கோவின் தென்பகுதி .நாயகன் அதை மறுக்க, அவள் ‘ஏன் ‘ என கேள்வியெழுப்புகிறாள். இவனிடம் எகத்தாளமான பதில். காரணம் இவனுக்கு அரபு நாடுகைளை பிடிக்காதாம். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அரபு நாடுகள் பிடிக்கும் ஆனால் முஸ்லீம்கள் இருக்கக்கூடாது என உளறிவிட்டு ‘முஸ்லீம்கள் இல்லாத அரபு நாடு ஏதேனுமிருந்தால் சொல்லேன் ‘ என அவளைச் சீண்டுகிறான். படிக்கின்ற நமக்கும் கோபம் வருகிறது. இப்படித்தான் எதையாவது எழுதிவிட்டு, பேசிவிட்டு வம்பை விலை கொடுத்து வாங்கிவிடுவார். இவர்மீது வழக்குகளும் உள்ளன. இறுதியில் சுற்றுலா நிறுவனப் பெண்ணின் சிபாரிசின்படி ஸ்பெயின் ஆதிக்கத்தில் உள்ள Lanzarote தீவுக்கு வருகிறார். நிறைய எதிர்பார்ப்புகளுடன் தீவுக்கு வந்தால், ஏமாற்றம். எந்தத் தகுதியும் இல்லாத தீவு. ஐயோ பாவம் ரகம் ‘; கண்ணில் தென்பட்ட கொஞ்சூண்டு சுற்றுலாவாசிகளும் பல்போனதுகள். அதிர்ஷடவசமாக ரூடி என்கின்ற ‘லக்சம்பர்க் ‘ கில் பிறந்த பெல்ஜிய வாசி திடார் அறிமுகம், போதாதற்கு இரண்டு ஜெர்மானிய ஓரினச் சேர்க்கைப்பெண்கள். ஆபாசமென கூச்சல்போடுபவர்கள் படிக்கக் கூடாத பகுதிகள் நிறைய. பிறகு Religion Raelienne ‘ என்கின்ற சமயக் குழுமம் வருகிறது. இந்தக் கூட்டத்தில் சேர்ந்த ரூடி இளம்பிள்ளைகளுடனான பாலுறவிற்காகத் தண்டிக்கபடுவதாக கதை முடிகிறது. அப்படி இப்படியென சில பகுதிகளிருப்பினும் படித்து முடித்தபோதும் ஹூல்பெக் நம்மோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். வாழ்க்கைச்சுமைகளிலிருந்து தப்புவதற்குநினைக்கும் ஒரு சராசரி மனிதன் எவ்வளவுச் சுலபமாக இதுபோன்ற வலைகளிற் சிக்கிக் கொள்கிறான் என்பதை ஹூல் பெக் சரளமாக எழுதியிருக்கிறார், இடைக்கிடை அறிவியல், மதம், ஊடகம், போர், ஆண் பெண் உறவின் வக்கிரங்கள் இருபதாம் நூற்றாண்டின் எச்சமாக உமிழபப்படுகின்றன.

அவரது படைப்புகளில் முக்கியமானவை 1. Plateforme 2.Les particules Elementaires 3..Extension du domaine de la lutte 4.HP Lovecraft, contre le monde, contre la vie

Series Navigation