பயணக் குறிப்புகள் 2003

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

காஞ்சனா தாமோதரன்

இது வடிவ இலக்கணத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. என் ஜனவரி மாதத்திய சென்னைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகள் இவை. குடும்பம், தொழில், பிற பணிகள் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கிய பின், மீதிப் பகுதிகளைத் திண்ணை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

இரண்டு வாரத் தங்கல் போதவில்லை.. நுண்ணுணர்வுள்ள நண்பர்கள் சில சந்திப்புகளை ஏற்பாடு செய்ததால், ஒரே நேரத்தில் பல இலக்கிய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. ஆனாலுமே, பார்க்க வேண்டுமென நினைத்த பல உறவினர்கள், நண்பர்கள், தொழில்முறை நண்பர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள் பலரையும் பார்க்க முடியவில்லை;

இன்னும் பல மணி நேரங்கள் நீண்டிருக்கலாமே என்று நினைத்த ஒரு சந்திப்பு உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் உணவகத்தில் நடந்தது. ஞானக்கூத்தன், க்ருஷாங்கினி, அழகியசிங்கர், ரவி சுப்ரமணியம், வெங்கட் சாமினாதன், ஆர்.வெங்கடேஷ், சிபிச்செல்வன் (செல்வராஜ்), விட்டல் ராவ், எம்.ஜி.சுரேஷ், ஆர்.ராஜகோபாலன் முதலியோர் கூடியிருந்தோம். இந்திரா பார்த்தசாரதி பற்றிச் சாகித்திய அகாதெமிக்காகத் தான் எடுக்கும் குறும்படம் பற்றி ரவி சுப்பிரமணியம் சிறிது நேரம் பேசினார். சிபிச்செல்வன் தனது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருப்பதைக் குறிப்பிட்டார். ‘கணையாழி ‘ இதழில் ஓவியங்கள் பற்றிக் க்ருஷாங்கினி சில வருடங்களுக்கு முன் எழுதிய தொடர் பற்றிப் பேசினோம்; அவரது கணவர் ஓவியர்.

‘பெண்மொழி என்றால் என்ன ? ‘ என்பது பற்றி மெல்லிய நகைச்சுவை இழையோட அனைவரும் விவாதித்தார்கள்; விவாதத்தின் தொனியிலிருந்தும், யார் என்ன சொல்வார்கள் என்று பொதுவாக எல்லாருக்கும் தெரிந்திருந்ததாலும், இது ஏற்கெனவே அங்கு நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் தொடர்ச்சி எனப் புரிந்தது. சிலர் பெண்மொழி என்று ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லிச் சீண்டவும், ஆண்கள் உருவாக்கிய மொழியில் பெண்கள் தமக்கான இடத்தைத் தேட வேண்டியுள்ளது என்றார் க்ருஷாங்கினி. ஞானக்கூத்தன் ‘பெண் கவிகளின் கவிதைகள் ‘ என்று தொகுப்புகள் வருவதால், ‘ஆண் கவிகளின் கவிதைகள் ‘ என்று தொகுப்பு வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறதே என்று விளையாட்டாய்ப் பதிலளித்த பின், பெண்களின் பார்வைகள், அனுபவங்கள், கதை சொல்லும் முறை, கதையாடலில் இடம் பெறும் பொருள்கள் எனப் பல விதமான வித்தியாசங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றார்.

ஆண் பெண்ணென்று ஏன் படைப்பாளிகளைப் பிரிக்க வேண்டுமென்பது உள்பட்ட பல பார்வைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மெல்ல மாறி வரும் இன்றைய சூழலில், பல துறைகளிலும் பெண்கள் எப்படித் தமக்கான இடங்களை இயல்பாய் உருவாக்கித் தக்க வைத்துக் கொள்கிறார்கள், ஆண்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், ஆண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதமாய் இது அமைந்தது. இருபத்தியெட்டு வருடங்களுக்கு முந்தைய இந்தியாவில் பொறியியல் படிப்பு துவங்கி இன்றைய அமெரிக்க-உலக வர்த்தகத் துறை வரை, ஆண்களே எண்ணிக்கையில் மிகுந்திருக்கும் கல்வி-தொழில் சூழலின் சவால்களையும், மன அழுத்தங்களையும், நம்பிக்கையளிக்கும் மாற்றங்களையும் நேரடி அனுபவம் மூலம் உணர்ந்த எனக்கும் என்னைப் போன்ற பிற பெண்களுக்கும், இவ்விவாதத்தின் அடிப்படைக் கேள்விகள் புதிதல்ல; தமிழக இலக்கியத் துறையில் நிலவும் சில பார்வைகளைப் புரிந்து கொள்வது பயனுள்ளதாய் இருந்தது.

அமெரிக்காவில், பிற துறைகளில் பின் நவீனத்துவம் இன்னும் தங்கியிருந்தாலும், இலக்கியத்தில் பின் நவீனத்துவம் தேய்ந்தது பற்றிப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். தமிழக இலக்கியச் சூழலில் பின் நவீனத்துவம் என்பது பலரையும் மிரட்டுவதற்கே இது வரை பயன்பட்டுள்ளது என்பது இவர்களின் கருத்தாக இருந்தது. எம்.ஜி.சுரேஷை நோக்கி நட்பான சீண்டல் புன்னகைகள் வீசப்பட்டன. க்யூபிஸம், பின் நவீனத்துவம் என்று தொடர்ந்து படைப்பிலக்கியப் பரிசோதனை செய்து வரும் எம்.ஜி.சுரேஷ் ( ‘அட்லாண்டிஸ் மனிதன் ‘, ‘சிலந்தி ‘ முதலிய நாவல்கள்) கிண்டல்களைப் புன்னகையோடு எதிர்கொண்டார். பல்வேறு பின்னணி கொண்ட அலெக்ஸாண்டர்களை வைத்து எழுதியிருக்கும் தன் சமீபத்திய நாவல் பற்றிச் சொன்னார்; நிறைய ஆய்வு தேவைப்பட்டிருக்கும் என்று தோன்றியது, இனிதான் வாசிக்க வேண்டும். மேற்கில் பின் நவீனத்துவம் தேய்ந்தாலும், தமிழிலும் அதை முயன்று பார்ப்பது அவசியம் என்று நம்பும் எம்.ஜி.சுரேஷ், தன் நாவல்கள் வாசகரை மிரள வைக்கும் மொழியில் எழுதப்பட்டதல்ல என்றார். பின் நவீனத்துவம் என்ற பதத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே முகஞ்சுளித்து ஒதுங்காமல், பின் நவீனத்துவ இலக்கிய முயற்சிகள் முடிந்த பிறகு ஒரு முடிவுக்கு வரலாமே என்றார். இப்படிச் சீர்தூக்கி அலசிப் பார்க்கத் தேவைப்படுவது காத்திரமான இலக்கிய விமரிசன மரபும், தொடர்ச்சியான விமரிசனங்களும்தானே என்றேன். அவர் மறுக்கவில்லை. தமிழக நவீன இலக்கிய விமரிசன மரபு பற்றி நாங்கள் மேலே பேசிக் கொள்ளவில்லை. தன் அடுத்த நாவல் யதார்த்தவாதப் பிரதியாக இருக்கக் கூடுமென்று சொல்லும் எம்.ஜி.சுரேஷ் ‘பன்முகம் ‘ சிறுபத்திரிகையை நடத்தி வருகிறார்.

சந்தைச் சக்திகளுக்கு உட்பட்ட, ஐந்தாறு பெரிய பதிப்பக வணிகநிறுவனங்களே ஆளும் இன்றைய அமெரிக்க இலக்கிய உலகில், புதிய பரிசோதனை முயற்சிகள் குறைவு என்ற தனிப்பட்ட கருத்தைப் பகிர்ந்து கொண்டேன். பின் நவீனத்துவத்தின் பல கூறுகள் இன்றைய நவ-யதார்த்தக் கதைகளில் தெரிவதையும், இன்றைய யதார்த்தப் புனைவு பழைய இலக்கண வரம்புகளையெல்லாம் உடைத்து மீறியதாய் இருப்பதையும் சுட்டிக் காட்டினேன். நாற்பது வருட காலத்திய அமெரிக்கப் பின் நவீனத்துவ இலக்கியத்தின் கணிசமான பகுதி விமரிசனமே இல்லாமல் ஒதுக்கப்பட்டு விட்டதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எந்த avante-garde இயக்கமும் அதன் முக்கியக் கூறுகள் மையநீரோட்டத்தில் இணைந்தவுடன் மங்கிப் போவது பற்றியும், யதார்த்தப் புனைவு சாகாவரம் பெற்றிருப்பது பற்றியும், பேச்சுத் தொடர்ந்தது.

எழுத்தின் நீடித்த ஆயுளை உறுதி செய்வதில் பல்கலைக்கழகங்களுக்கும் ஆங்கில மொழித்துறைகளுக்கும் கணிசமான பங்குண்டு என்பதைச் சொன்னேன். இன்றைய அமெரிக்கச் சிறுபத்திரிகைகளில் பல பல்கலைக்கழகங்களைச் சார்ந்தவை, எனவே பொருள்வசதி ஓரளவுக்கு (ஓரளவுக்குத்தான்!) உள்ளவை, பன்முக ஆசிரியர் குழுவுடன் இயங்குபவை. எனக்குப் பல விமரிசனங்கள் உள்ள நைப்பால் போன்றவர்களின் எழுத்து, காலப்போக்கில் பல்கலைக்கழகப் ‘பின் காலனியத்துவப் படிப்பின் ‘ பகுதியாகி விடுகிறது. பல்கலை நிலையை விட்டுப் பள்ளிகளைப் பார்க்கலாமே: சில எட்டாம்-ஒன்பதாம் வகுப்புகளில், ‘உலகக் கலாச்சாரம் ‘ என்று மேற்கத்திய+கீழைத்தேய வரலாறு-கலாச்சாரங்கள் பற்றிப் படிக்கையில், துணை நூல்களாய் வாசிக்கப்பட்டு வகுப்பில் விவாதிக்கப்படுபவை ப்ளேட்டோவின் ‘நியூ ரிப்பப்ளிக் ‘, சினுவா ஆச்சிபியின் ‘திங்ஸ் ஃபால் அப்பார்ட் ‘ நாவல், மற்றும் ஆர்.கே.நாராயண், பாரதி முகர்ஜி உட்பட்ட உலக எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு போன்றவை — சமூகப்பாடத்துக்குத் துணையாய் நின்றவை தத்துவ நூலும் படைப்பிலக்கிய நூல்களும்!

‘நவீன விருட்சம் ‘ வெளியீடாக வரவிருக்கும் தனது புதிய கவிதைத் தொகுப்பைப் பற்றி ஞானக்கூத்தன் பகிர்ந்து கொண்டார்; அவரது முந்தைய கவிதைகளை விடப் புதிய கவிதைகளில் இறுக்கம் குறைந்திருப்பதாய்ச் சொன்னார். இறுக்கம் என்று அவர் எதைச் சொல்கிறார் என்று புரிந்து கொள்வதற்காக, என் நினைவிலிருந்த அவரது பழைய கவிதை வரிகளைச் சொல்லி, அவற்றில் எங்கு இறுக்கம் இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். புதுப் புத்தகம் வந்த பின் பழைய கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்: காலமும் சூழலும் அனுபவமும் சேர்ந்து எழுத்தையும் எழுத்தாளரையும் எப்படி மாற்றுகிறதென்று அலசுவது சுவையானது.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த என் ‘இக்கரையில்… ‘ நாவல் பற்றிக் கேட்டார் ஞானக்கூத்தன். அக்டோபர் 2001-ஏப்ரல் 2002 காலகட்டத்தில், ‘கல்கி ‘ இதழில் ஆறு மாதத் தொடராய் இதன் மூல வடிவம் வெளிவந்ததையும், தேவைப்பட்ட பல பதிப்பாசிரியத்துவ மாற்றங்களுடன் இப்போது புத்தகமாய் மாற்றியிருப்பதையும் சொன்னேன். வாராவாரம் ‘திருப்பம் ‘ இல்லாத கதையைத் தொடராக எப்படிப் போட்டார்கள் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; பல நண்பர்களும் ‘கல்கி ‘ அத்தியாயங்களை வாசித்திருப்பதும், அப்படித் தாம் வாசித்ததை ஒப்புக் கொண்டதும் என்னை ஆச்சரியப்படுத்திற்று. கதைச் சுருக்கம் சொன்னேன்….. இன்னும் கூடச் சில சமூகங்களில் ‘ஓய்ந்து போன நடுத்தர வயதாய்க் ‘ கருதப்படும் நாற்பதை ஒட்டிய, உயிர்த்துடிப்புள்ள இரு பெண்களின் கேள்விகளை மையமாய்க் கொண்ட கதை; அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பது கிராமத்துப் பூர்வீகக்காரியின் கேள்வி; அமெரிக்காவும் குடும்ப வாழ்க்கையும் தனக்கு ஒட்டாததாய் நினைப்பவள் இன்னொருத்தி. இவர்களின் இளமைக்கால நினைவுகள் கதைநெடுக ஊடுபாவியிருக்கும்; எதிர்காலத்துக்கான பதில்களின் துவக்கத்தைத் தம் கடந்த காலத்திலிருந்து உணர்வதுதான் கதை. கலைத்துப் போட்ட கால-இடக் குறுக்குவெட்டுகள் மூலம் கதை சொல்லுவது சுவையானது என்றார் ஞானக்கூத்தன்.

நாவல் என்றால் என்ன என்பது பற்றிப் பேச்சுத் தொடர்ந்தது. பழகிய யதார்த்தப் புனைவிலிருந்து ஒரு பாத்திரத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும் புனைவு வரை, நாவலில் பல வகைகள் இருப்பதால், இக்கேள்விக்கான பதில் பெரியது.

(குறிப்பு: பத்திரிகை வாசித்திருந்த பொற்காலத்தில், யமுனா ராஜேந்திரனும் ஜெயமோகனும் ‘நாவல் ‘ புத்தகம் பற்றித் ‘திண்ணை ‘யில் விவாதித்ததாய் நினைவு. புத்தகத்தையும் விவாதங்களையும் மீள்வாசிப்புச் செய்ய வேண்டும்.)

‘இக்கரையில்… ‘ பற்றிய விவரணையைக் கேட்டுக் கொண்டிருந்த க்ருஷாங்கினி, அந்நிய மண்ணில் நடக்கும் கதைகளைப் புரிந்து கொள்ளக் கவனமான வாசிப்பு தேவைப்படுகிறது என்றார். 2002 தீராநதி சிறுகதைச் சிறப்பிதழில் வெளிவந்த என் ‘கண்ணி ‘ என்ற சிறுகதையின் நியூ ஜெர்ஸி ‘டாட்பஸ்டர்கள் ‘ நிகழ்வையும் கலாச்சாரப் பின்னல்களையும் உதாரணமாய்க் குறிப்பிட்டார்; ஒரு தேசத்தில் பெரும்பான்மைக் கலாச்சாரமாகக் கருதப்படுவது புலம்பெயர்ந்த தேசத்தில் சிறுபான்மைக் கலாச்சாரமாகி, வன்முறைக்கு ஆளாகும் பின்னணி கொண்ட கதை அது. உண்மையில் நடந்தது என்ற குறிப்பு கதையிறுதியில் இருந்தாலும், அதன் பரிமாணங்கள் அனைத்தையும் உணர்வதற்கு வாசக முயற்சி தேவைப்படுகிறது என்றார் க்ருஷாங்கினி. இது முக்கியமான அவதானிப்பு என்று எனக்குத் தோன்றியது. அதிகம் விளக்கினால் அழகியல் குறையும்; எனவே, அடிப்படை மனிதக் கேள்விகள் ஒன்றானாலும், எனது அமெரிக்கத் தமிழ்க் கதாபாத்திரங்களுக்கும் தமிழக வாசகர்களுக்குமிடையே ஒரு மெல்லிய திரை எப்போதும் இருக்குமோ என்ற கேள்வியை என்னுள் எழுப்பியது. (மேற்கத்திய நாடுகள் தவிர்த்த) பிற உலகத் தமிழ் வாசகர்களும் இத்தகைய திரையை உணரக் கூடுமோ என்ற கேள்வியும். கூடவே, இன்றைய மின்வேக மின்பிம்ப உலகில் தடுப்புத் திரைகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்ற கேள்வியும்.

அழகியசிங்கர் சற்று மாறுபட்ட பார்வையை முன்வைத்தார். இருபத்திமூன்று வருடங்கள் அமெரிக்காவில் இருந்திருக்கிறீர்களே, உங்கள் கதைகளில் ஏன் தமிழக — குறிப்பாக நெல்லை — மணம் எப்போதும் இருக்கிறது, எப்போது ‘முழு அமெரிக்கக் ‘ கதை எழுதப் போகிறீர்கள் என்றார். சில மாதங்களுக்கு முன் ‘திண்ணை ‘யிலும் பின்பு ‘கணையாழி ‘யிலும் வந்த ‘ஓட்டைக் காலணாக்கள் ‘ கதையை உதாரணமாய்க் காட்டினார். வேருள்ள பாத்திரங்கள் கனமானவை அல்லவா என்று அழகியசிங்கரைக் கேட்டார் ஞானக்கூத்தன். விட்டல் ராவும் ஆர்.ராஜகோபாலனும் தலைமுறைகளுக்கிடையே ஏற்படும் உரசல்களும் உறவுகளும், இரண்டு தலைமுறைகளைக்கும் அப்பாற்பட்ட ஒரு பரிமாணத்தைப் பாத்திரங்களுக்குக் கொடுப்பதாய்ச் சொன்னார்கள்.

நெல்லைமணம் இட்டுக்கட்டி வலிந்து புகுத்துவதல்ல. மேலும், முழு அமெரிக்கன் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. உலக வந்தேறிகளால் ஆன இந்தத் தேசத்தில் ஒற்றை அடையாளம் ஏது ? அப்படி இருந்தாலுமே வந்தேறியான நான் எப்படி முழு அமெரிக்கனாய் உணர முடியும் ? கேள்விகளைப் பகிர்ந்து கொண்டேன்.

அனைவரும் பேச்சு மும்முரத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் உட்லண்ட்ஸ்காரர்கள் கடை மூடும் நேரமென்று சொல்லி எங்களைக் கிளப்பி விட்டார்கள். மரத்தடிகளில் நின்று நின்று பேசிக் கொண்டே அவரவர் வாகனங்களை அடைவதைத் தள்ளிப் போட்டோம். யாருக்குமே கிளம்பிப் போக மனமில்லை. எம்.ஜி.சுரேஷ், சிபிச்செல்வன் முதலியோர் தமது கையெழுத்திட்ட புத்தகங்களைப் பரிசளித்தார்கள். எதிர்பாராத விதமாய் ஒரு நல்ல கலந்துரையாடலாக இது அமைந்து விட்டதாய் ரவி சுப்பிரமணியம் சொன்னார். வேலைப் பளுவால் தாமதமாய் வர முடிந்ததற்கு ஆர்.வெங்கடேஷ் வருத்தப்பட்டார். முழுநாள் சந்திப்பாக ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற ஆதங்கம் அனைவருக்குமே இருந்தது.. ஆனால், எல்லாருக்கும் வேலையென்று ஒன்றிருக்கிறதே!

க்ருஷாங்கினியையும் வெங்கட் சாமினாதனையும் அவர்கள் வீடுகளில் இறக்கி விடப் போகும் வழியிலும் பேச்சுத் தொடர்ந்தது. புறநகர்ப் பகுதியில் தான் வசிக்குமிடத்தில் சிட்டுக்குருவிகளைக் காணவில்லையென்றும் சில வருடங்களாகவே அவற்றைத் தேடிக் கொண்டிருப்பதகவும் சொல்லி, வெங்கட் சாமிநாதன் ஆச்சரியப்பட வைத்தார். வீடு திரும்பும் வழி நெடுகச் சிட்டுக்குருவிகள் இல்லாத தமிழகத்தைக் கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனேன். நெல்லையில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருப்பதாய் அம்மா சொன்னார்கள்.

அந்த வாரத்தில்தான் பத்மஸ்ரீ விருதாளராய் அறிவிக்கப்பட்டிருந்த வைரமுத்து தனது கிராமத்து வாழ்க்கை பற்றிப் பேசினார். மண்வெட்டி பிடித்தும், ஏர்பிடித்து உழுதும் கழித்த இளவயது வாழ்க்கை. என் முதல் திரைப்பாடல் வெளிவந்த போது நீங்கள் எங்கிருந்தீர்கள் என்றார். மாணவியாய் இங்கு வந்து விட்டதையும், நான் கண்ணதாசன் வாலி/விஸ்வநாதன் ராமமூர்த்தி பாட்டுக்களைக் கேட்டு வளர்ந்த தலைமுறை என்பதைச் சொன்னேன். பல்வேறு பொறுப்புகளால், தமிழ்ச் சினிமாவுடன் எனக்கு ஏற்பட்ட இடைவெளியினால் அவரது பாடல்கள் காலம் தள்ளிப் பரிச்சயமானது பற்றியும் சொன்னேன். நாட்டுப்புறப் பாடல்களும் தமிழிலக்கியமும் என்பது பற்றியும், வைரமுத்துவின் திரைப்பாடல்களில் பழந்தமிழிலக்கியம் பற்றியும் சிறிது பேசினோம். ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘ ‘வைரமுத்து கவிதைகள் ‘ என்ற நூல்களை அடுத்த நாள் அனுப்பி வைத்தார்; இரண்டாம் நூல் யாப்புக் கவிதைகளும் புதுக் கவிதைகளும் அடங்கிய பெரிய தொகுப்பு.

பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இராம. குருநாதன், தமிழகத்தில் கல்லூரியளவில் தமிழ்ப் படிப்பின் மீதான பிடிப்பு வெகுவாகக் குறைந்து விட்டதென்று கவலைப்பட்டார். அதே நேரத்தில் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் படிக்க மாணவர்களின் ஆர்வம் கூடியிருப்பதாகவும், அக்கல்லூரியில் படித்தால் திரைக்குப் பாடலெழுதும் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமென்றும் கூறினார். வைரமுத்து பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்; பேராசிரியர் குருநாதனின் பாராட்டுக்குரிய மாணவராயும் இருந்தவராம்.

காகங்களை வைத்தீஸ்வரனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறந்த கவிஞராகப் பெரும்பாலும் அறியப்படும் இவர், ஓவியரும் சிறுகதையாளரும் கூட. இவரது ஓவியங்கள் பல பாணிகளைச் சார்ந்தவை. ஓவியங்களில் எத்தனை காகங்கள்! அமெரிக்காவில் காகமாய்ப் பெயர்பண்ணி உலவும் அண்டங்காக்கைகள் அல்ல இவை. சிறிய மெலிந்த உடலும் மென்மையான சாம்பல் நிறக் கழுத்தும் ஒளியுள்ள கண்களும் கொண்ட இக்காகங்கள், சிறகொடுக்கியும் விரித்தும், பல்வேறு பின்னணிகளுடன் வைத்தீஸ்வரனது படங்களில் தோன்றுகின்றன. பொதுவாகவே பறவைகள் பிடிக்குமென்றும், அதிலும் காகங்கள் மேல் தனிப் பிரியமென்றும் சொன்னார். திருமதி வைத்தீஸ்வரன் சர்க்கரைப் பொங்கலுடன் சுவை சேர்த்தார். இன்னும் நான்கு மணி நேரத்தில் நான் விமானமேற வேண்டியிருந்ததால் அதிகம் பேசாமல் ஓட வேண்டியிருந்தது. வைத்தீஸ்வரன் அவரது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைப் புத்தகத்தையும், ‘கால் முளைத்த மனம் ‘ சிறுகதைத் தொகுப்பையும் பரிசளித்தார்.

தன் எழுத்தைப் போலவே எளிமையான புறத்தோற்றமுள்ள மனிதர் அசோகமித்திரன். எழுத்தைப் போலவே பேச்சிலும் அடக்கமான நகைச்சுவையும் அர்த்தங்களின் அடுக்கும் ஒளிந்திருக்கின்றன. குடும்பத்தினர் சூழ இருந்து பேசினார்; குடும்பத்தினரும் அவ்வப்போது மிக இயல்பாய்க் கலந்து கொண்டார்கள். பேச்சில் இலக்கியம் ஒரு பகுதியாகத்தான் இருந்தது–வாழ்வைப் போலவே. இவரது மூன்று புத்தகங்களின் ஆங்கில மொழியாக்கத்தைச் சமீபத்தில் ஓரியண்ட் லாங்மன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவரைப் பற்றிய சாகித்திய அகாதெமி குறும்படத்தை அம்ஷன்குமார் இயக்கியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன், என் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட போது இருந்ததை விட, இப்போது அசோகமித்திரனின் உடல்நிலை தேறியிருப்பதாய் எனக்குத் தெரிந்தது. குட்டிப் பேத்திப் பெண் உடனே என்னிடம் ஒட்டிக் கொண்டது; பொன்னகை அணியாத நான் கையில் வளையலின்றி இருப்பது குழந்தைக்கு ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருந்திருக்க வேண்டும் — தனது வேலைப்பாடுள்ள அழகிய கண்ணாடி வளையல்களைக் காண்பித்து, உள்ளே இன்னும் நிறைய வைத்திருக்கிறேன், வேண்டுமா என்று நெகிழ்வித்தது.

சிவசங்கரி தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், பலதரப்பட்ட அறுபது எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘நெஞ்சில் நிறைந்தவை ‘ என்று வெளியிட்டிருக்கிறார். என் சிறுகதையும் அதில் இருப்பதால் எனக்காக ஒரு பிரதி காத்திருப்பதாய்ச் சொல்லியிருந்தார். என் சிறுவயதுத் தமிழ் வாசிப்பின் ஒரு பகுதியாக இருந்த சிவசங்கரியை, முதன்முறையாக நேரில் சந்தித்து அறுபதாவது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மறைந்த கணவருடன் தென்னை நிழலில் சிரித்துக் கொண்டிருக்கும் பெரிய படம் வீட்டின் பிரதான அம்சம். சிவசங்கரியின் அன்புக் கட்டளையை எதிர்த்து, அவரது வயதான தாயார் தனது மதிய உறக்கத்தை உதறி விட்டுத் தன் இளவயதுக் காலம் பற்றிப் பேசினார்– சமூகப் பின்னணிகள் எவ்வளவுதான் வேறுபட்டாலும், பெண்களின் வாழ்க்கைக் கதைகளூடே பொதுவான ஒரு சரடு இழையோடி,

மனம் நெகிழச் செய்து விடுகிறது.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு ‘ என்ற பெரிய இலக்கியப் பணிக்காக நாடு முழுதும் அலைந்து திரிந்து பல தகவல்களைத் திரட்டிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னார் சிவசங்கரி. இப்பணிகளில் முழு ஈடுபாடு இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் எழுதுவதை இவர் நிறுத்திப் பல வருடங்கள் ஆகின்றனவாம்; இன்று வரை, பல வாசகிகள் இவர் கதைகள் தம் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களாம். தன் எழுத்து, பிற பணிகள் முதலியவற்றைப் பற்றி உற்சாகத்துடன் பேசுகிறார். தனது ‘பாலங்கள் ‘ என்ற நாவலைக் கையெழுத்திட்டுப் பரிசளித்தார்.

மாலன், திருமதி மாலன் ஆகியோருடன் பேசும் போது, ‘சன் ‘ தொலைக்காட்சியில் புத்தகம், இசை முதலியன பற்றிப் பேசுவதற்கான ஒரு நிகழ்ச்சியை மாலன் நடத்திக் கொண்டிருப்பதாய் அறிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் மாலனும் அமெரிக்கவாழ் எழுத்தாளர்-இசைக்கலைஞர் கீதா பென்னெட்டும் இணைந்து பாடகர் உன்னிகிருஷ்ணனுடன் நடத்திய நேர்காணலைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. முன்பு தான் நடத்திய ‘திசைகள் ‘ சிறுபத்திரிகையை மின்னிதழாய் வெளிக்கொணருவது பற்றி மாலன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார், குட்டி ரேவதி, செந்தூரம் ஜெகதீஷ், சிவகுமார் ஆகியோரைக் காலையுணவு நேரத்தில் சந்தித்தேன். வேலை நாள் என்பதால் அதிக நேரம் பேச முடியவில்லை. அமெரிக்க சிகரெட் நிறுவனங்களின் செயல்பாடுகள், ஒரு படைப்பின் வாசிப்பு எவ்வாறு அதன் தற்காலச் சூழலால் பாதிக்கப்படுகிறது, தமிழகக் குழந்தைகளின் கல்வி, புதுப் புத்தகங்கள், என்று பேச்சு பல தளங்களை மெல்லத் தொட்டுச் சென்றது. கண்மணி குணசேகரன், உமா மகேசுவரி ஆகியோரது புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டியவை என்றார்கள்; வாசிக்க ஆவல். இன்றைய முன்னணிக் கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் குட்டி ரேவதி சித்த மருத்துவத்தில் பி.எச்டி. மாணவி. அவரை 2000 வருடத்தில் நான் சந்தித்த போது தமிழினி வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பைத் தந்திருந்தார். தற்போது ‘ ‘முலைகள் ‘ என்னும் பெயரில் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தலைப்பு அதிர்ச்சி உண்டாக்கியதா என்று கேட்டேன். ஆமாம், ஆனால் கவிதைகளின் மேல்தான் கவனம் விழுந்திருக்கிறது என்றார். அர்த்தமுள்ளதாய் நிறையச் செய்ய வேண்டும் என்ற துடிப்பு இவருக்கு நிறைய இருப்பது புரிகிறது, சந்தோஷமாயிருக்கிறது.. என்ன செய்யப் போகிறாரென்று காத்திருந்து பார்க்கலாம். தாய்மொழி அல்லாத தமிழையே தன் எழுத்து மொழியாகக் கொண்டுள்ள செந்தூரம் ஜெகதீஷின் ‘கிடங்குத் தெரு ‘வென்ற நாவல் தமிழினி பதிப்பாய் வெளிவரவிருக்கிறது. தமிழ்நாடு அரசு விருது பெற்ற ‘ரத்த உறவு ‘ நாவலாசிரியரும், ‘உயிர்த்திருத்தல் ‘ சிறுகதையாளரும், கவிஞரும், ஓவியர் மாரிமுத்துவும் ஆகிய யூமா வாசுகியின் ஆசிரியத்துவத்தில் நடக்கும் ‘மழை ‘ என்ற சிறுபத்திரிகை பற்றிச் சச்சிதானந்தம் சொன்னார்; ‘டெமி ‘ அளவிலான ஒரு புத்தகம் போன்ற வடிவமைப்புடன் இப்பத்திரிகை வெளிவருகிறது.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பிக்குப் பாராட்டு விழாவை அவரது புத்தகங்களைப் பதிப்பித்த கவிதா பதிப்பகம், சுபாலிகா பதிப்பகம், மாணிக்கவாசகர் பதிப்பகம் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன. அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, ஒளவை நடராசன், ஜெயகாந்தன், கே.எஸ்.சுப்ரமணியன், மெய்யப்பன், கமல்ஹாசன் இவர்களோடு நானும் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டிருந்தேன். சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வாழ்த்துக் கூட்டம் என்பதால் இறுக்கம் தளர்ந்த மகிழ்ச்சியான சூழல். நான் மேடையில் சொன்னபடியே, எனக்கு முன்னால் பேசிய பெரியவர்களும் அறிஞர்களும் சொல்ல வேண்டியதை என்னை விட நன்றாய்ச் சொல்லி விட்டதால் நான் அதிகம் பேசவில்லை; சிற்பியின் சில கவிதை வரிகளைச் சொல்லி, ‘ஒரு கிராமத்து நதி ‘ தொகுப்புக் கவிதைகளின் வார்த்தைகள் நகரத்திலிருந்து கிராமத்துக்குத் திரும்பும் ஒருவரின் இனந்தெரியாத இழப்பைச் சொன்னாலும், எனக்கு அவை வேறு தளத்தில் அர்த்தப்படும் தனிப்பட்ட வாசக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். மேடையிலிருந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுப் பொன்னாடைகள் போர்த்தப்பட்டன. ‘கல்கி ‘ இதழ் சார்பில் உதவியாசிரியர்கள் ஏக்நாத் ராஜும் ஆர்.சி.ஜெயந்தனும் சிற்பிக்குப் பூங்கொத்து அளித்தார்கள். விழாவுக்கு வர இயலாத வைரமுத்து பூங்கொத்து அனுப்பியும், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பொன்னாடை அனுப்பியும் சிற்பிக்குத் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். இத்தகைய விழா எனக்கொரு புதிய அனுபவம்.

என் புத்தகங்களை வெளியிட்ட கவிதா பதிப்பக அலுவலகத்தில் இன்னும் சில எழுத்தாளர்களைச் சந்தித்தேன். சா.கந்தசாமி சிங்கப்பூர் மகன் வீட்டிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். தான் அங்கு சந்தித்த இலக்கியவாதிகள் பற்றிச் சொன்னார். பிரபஞ்சன் தான் எழுதிக் கொண்டிருக்கும் சமகால நாவல் கருவையும் அதன் புராணிகப் பின்புலத்தையும் பற்றி விரிவாய்ச் சொன்னார். பெண்ணாய்ப் பிறப்பது பற்றிய பின்புலக்கதையும் எனக்குப் புதிதானதால், ‘ம்ம்…அப்புறம் ? ‘ என்று இரண்டு கதைகளையும் கேட்பது சுவையாக இருந்தது. அசோகமித்திரனின் ‘ஒரு பார்வையில் சென்னை நகரம் ‘ கட்டுரைத் தொகுப்பு, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும் ‘ மறுபதிப்பு, சா. கந்தசாமியின் ‘இரவின் குரல் ‘, ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள் ‘, எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘வாரணாசி ‘ (சிற்பியின் மொழிபெயர்ப்பு), கே.எஸ்.சுப்பிரமணியனின் ‘சிந்தனை அலைகள் ‘ கட்டுரைத் தொகுப்பு, ஜெயமோகனின் ‘கூந்தல் ‘ சிறுகதைத் தொகுப்பு, சுரையா-கமலா தாஸின் ‘சந்தன மரங்கள் ‘ ஆகியவை கவிதா பதிப்பகத்தின் பிற சமீபத்திய வெளியீடுகள். பதிப்பக நிறுவனர் சேது சொக்கலிங்கத்தின் மகளும், இம்மாதத்தில் மணமகளாகப் போகிறவரும், பதிப்பக நிர்வாகியுமான கவிதா, சில சமையல் புத்தகங்களைக் காண்பித்தார். வழுவழுக் காகிதத்தில், பிரமாதமான உணவுப் படங்களுடன், தயாரிப்பு நேர்த்தியில் மேற்கத்தியச் சமையல் புத்தகங்களுக்கு நிகரான, கலையழகுள்ள தமிழ்ச் சமையல் புத்தகங்களைப் பார்த்ததும், எனக்கும் ஒரு சமையல்கலை சார்ந்த புத்தகம் எழுதும் ஆசை வந்தது 🙂 ‘அசத்துங்க ஆண்ட்டி! ‘ என்று சிரித்தார் கவிதா.

திலீப்குமாரின் புத்தகக் கடையில் அப்போதுதான் புத்தகக் கண்காட்சியிலிருந்து திரும்பிய மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். அனைத்துப் புத்தகங்களையும் பார்க்க நேரமில்லை. க்ரியா, தமிழினி, காலச்சுவடு, காவ்யா, கவிதா, விடியல், சந்தியா, உயிர்மை, அகரம் முதலிய பல பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்க்கும் போது தமிழ்ப் பதிப்புத் தரம் பரவலாக முன்னேறியிருப்பது புரிகிறது. இரண்டரை வருடங்களுக்கு முன் நான் பார்த்ததை விட அதிகமான சிறுபத்திரிகைகள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன; தமிழ் எழுதிப் படிப்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலைக்குரல்கள் ஒருபுறம் கேட்டாலும், இத்தனை பத்திரிகைகள் இருப்பது அந்தந்த இடங்களில் இலக்கிய வட்டத்தை உருவாக்கி, எழுத்தை ஊக்குவிக்கக் கூடும். சிறந்த எழுத்தாளர் என்பதுடன், அனைத்துப் பதிப்பகங்களின் முக்கிய வெளியீடுகளைக் கவனித்து, தனது ஒவ்வொரு வாடிக்கையாளரின் ரசனையையும் புரிந்து புத்தகங்களை அக்கறையுடன் தேர்வு செய்து கொடுப்பதால், திலீப்குமாரின் கடையில் புத்தகம் வாங்குவதே ஒரு வித்தியாசமான இலக்கிய அனுபவமாகி விடுகிறது.

(குறிப்பு: நண்பர்கள் பரிசளித்த புத்தகங்களும் நான் வாங்கிய புத்தகங்களும் கடல்வழி இக்கரை வந்து சேர மூன்று நான்கு மாதங்களாகி விடும். இம்முறையும் கடந்த முறையுமாய், எனக்குத் தம் புத்தகங்களை அன்புடன் பரிசளித்தோர் எல்லாருக்கும், பதில் மரியாதையாய், என் புத்தகத்தை அனுப்பி வைத்தாயிற்று.)

தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களுக்குப் பல துறைகளிலிருந்தும் வித்தியாசமான சுவாரஸ்யமான விருந்தாளிகள் தேவைப்படுகிறார்கள், அழைப்பது இயல்பு. படைப்பாளிகள் ஊடகங்களை அணுக வேண்டிய நிலை மெல்ல மாறி, ஊடகங்களே படைப்பாளிகளைத் தேடி அணைத்துக் கொள்வதாய்த் தெரிகிறது. இதுவொரு நல்ல தொடக்கம். முழுமையான மாற்றம் காலத்துடன் நிகழக் கூடும்.. ‘சன் ‘னின் சகோதரத் தொலைக்காட்சியான கே-டிவியில் கஜேந்திரன் புத்தக-எழுத்தாளர் அறிமுகங்கள் செய்து வைக்கிறார். நான் இருந்த இரு வாரங்களிலும் எம்.ஜி.சுரேஷின் நேர்காணல் இரு பாகங்களாய் கே-டிவியில் ஒளிபரப்பாயிற்று . ஜெயா தொலைக்காட்சியில் சுதாங்கனின் புத்தக விமரிசனம் ‘முதல் பக்கம் ‘ என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. சன் தொலைக்காட்சியின் ‘வணக்கம் தமிழகம் ‘ காலைநிகழ்ச்சியிலும் ஜெயா தொலைக்காட்சியின் ‘காலைமலர் ‘ நிகழ்ச்சியிலும் படைப்பாளிகளும் சிறப்பு விருந்தினராய் வந்து போகிறார்கள். நான் சென்னையிலிருந்த போது, எஸ்.ஷங்கரநாராயணன், அழகியசிங்கர் ஆகியோர் ‘காலைமலர் ‘ நிகழ்ச்சியிலும், உஷா சுப்ரமணியமும், இன்குலாபும் ‘விண் ‘ தொலைக்காட்சியில் வாஸந்தியின் விருந்தினராகவும் பங்கேற்றனர். ‘தூர்தர்ஷனும் ‘ முடிந்த அளவு உதவுகிறது. ‘ஸ்டார்-விஜய் ‘யிலும் இலக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கக் கூடும்.

பழைய, இடைப்பட்ட, புதிய தலைமுறை என்று தமிழகத்தின் பல பகுதி எழுத்தாளர்களும் சின்னத்திரையியில் தொடர்ந்து தோன்றுவதாய்ச் சொன்னார்கள். தொலைக்காட்சி எத்துணை சக்தி வாய்ந்த ஊடகம், இவ்வளவு போதுமா என்ற கேள்விக்கு நியாயமான பதில் ‘இல்லை ‘ என்பதுதான். ஆனால், தமிழ்ச் சின்னத்திரை இன்னும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. தற்போது பெரியதிரையின் நீட்சியாகவே பெரிதும் செயல்படும் சின்னத்திரை தனக்கென்று ஓர் அடையாளத்தை வகுத்து வளரும் காலம் வரக் கூடும். பலவருடத்திய மகாதொடர்களும், ‘ரியாலிட்டி ஷோ ‘, ‘ஜோ மில்லியனேர் ‘, ‘பேச்சலரெட் ‘ என்றும், ‘எங்கேயோ போய் விட்ட ‘ ஐரோப்பிய/அமெரிக்கத் தொலைக்காட்சிகள் போல் ஆகிவிடாமலிருந்தால் சரி.

எனது நேர்காணல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் அமைந்தது சலிப்பில்லாமல் இருந்தது. கேள்விகளைச் சாரமுள்ளவையாய் அமைத்த அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். நேர்காணல்களினால் சில எதிர்பாராத நல்ல விளைவுகள் ஏற்பட்டன….

‘அவசரநிலைக் ‘ காலத்து இந்தியாவில் கல்லூரி வாழ்க்கை, வாசிப்பு-எழுத்து, தாயக வளர்ச்சிக்கு அயல்வாழ் இந்தியர்களின் பங்களிப்பு, என்றிருந்த தி.ராமகிருஷ்ணனின் ‘ஹிந்து ‘ பத்திரிகைப் பேட்டியைப் பார்த்ததும், என் பள்ளித் தோழி என்னை அடையாளம் கண்டு கொண்டார்; அவரது கணவர் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியாம்! அவர் மூலம் எனது பிற வகுப்புத் தோழிகளுடனும் கூடிப் பேசி, இன்னும் இனிமையான பள்ளிப்பருவ நினைவுகளையும், அப்போதைய எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இப்போது எங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறதென்பதையும் பகிர்ந்து கொண்டது முக்கியமான வாழ்வானுபவம்; இளம்பருவத்து நட்புகளின் இதமே தனி!

‘விண் ‘ தொலைக்காட்சிக்கான வாஸந்தியின் நேர்காணல் முடிந்த பிறகு, அடுத்த நேர்காணலுக்காக ஸ்டூடியோவுக்கு வந்திருந்த கவிஞர் இன்குலாபை முதன்முறையாகச் சந்தித்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி. ‘விளக்கு ‘ அமைப்பு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு ‘ நாவலுக்கு விருது கொடுத்தது பற்றிப் பேசினோம் (நாவலைப் படிக்க ஆவல்.). சென்ற வருடம் நான் எழுதிய இரண்டு சிறுகதைகளையுமே தான் படித்ததாய்ப் பெருந்தன்மையுடன் சொல்லிய இன்குலாப் தன் விமரிசனங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது கவிதைகள் பற்றிச் சிறிது பேசினோம்.

வாஸந்தி இலக்கியக் கூட்டங்களுக்காக வெளியூர்களுக்கு அலைந்து கொண்டிருந்தால், நேர்காணலுக்கு வெளியே அதிகம் பேச முடியவில்லை — தனது தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம், சில முக்கிய இந்திய-ஆங்கிலப் பதிப்பாளர்களின் பாராட்டையும் நல்ல விமரிசன வரவேற்பையும் பெற்றிருப்பதாய்ச் சொன்னார்; ஆங்கில ‘இந்தியா டுடே ‘யில் விமரிசனம் வருகிறதாம்.

‘தூர்தர்ஷனின் ‘ இளைஞர் நிகழ்ச்சியில், அயல்நாடு செல்ல விரும்பும் இளைஞர்கள், இன்றைய இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகள், மனிதவள மேம்பாடு, நேரத்தைச் சரியாக நிர்வகித்தல் பற்றிய கேள்விகளைப் புவனேஸ்வரி கேட்டார்–பார்க்க வாய்ப்பில்லை.

‘சினேகிதி ‘க்கான பேட்டி, தினசரிச் செயல்பாடுகள், நேர நிர்வாகம், இன்றைய இரு-சம்பள/பல-சுமைக் குடும்ப அமைப்பு, சில அமெரிக்கப் பெருநிறுவனங்களின் ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் தொந்தரவு விதிமுறைகள், மகப்பேறு விடுப்புக் கொள்கைகள் என்பது போன்றவற்றைத் தொட்டுச் சென்றது; பேட்டியாளர் தளவாய் சுந்தரம் இதழியல்-பொதுத் தொடர்புத் துறையில் பி.எச்டி. மாணவர் என்று அறிந்து கொண்டேன்.

ஜெயா தொலைக்காட்சியில் ‘இக்கரையில்… ‘ விமரிசனம் பற்றிக் கேள்விப்பட்டேன், பார்க்க வாய்ப்பில்லை. ‘நவீன விருட்சம் ‘ சிறுபத்திரிகைக்காக அழகியசிங்கரும் சிபிச்செல்வனும் துவங்கிய பேட்டி நேரமில்லாததால் பாதியில் நிற்கிறது.

‘சன் ‘ தொலைக்காட்சியின் ‘வணக்கம் தமிழகத்தின் ‘ நேர்காணல் பன்முகத் தன்மையுள்ளதாய் அமைந்தது: கல்வி-தொழில் பின்னணி, அயல் சூழலில் குழந்தை வளர்ப்பும் பிற பிரச்சினைகளும், முதல் ஆங்கிலக் கதை, என் தமிழ் நாவல், தமிழில் பேசி எழுதுதல், பழந்தமிழிலக்கிய வாசிப்பு, அமெரிக்கவாழ் இந்தியர்கள், இன்றைய தமிழகத்தில் தமிழ், தாயகத்திலிருந்து எடுத்துச் சென்ற தனிப்பட்ட மதிப்பீடுகள், ‘இந்தியாவின் உலகமயமாதல் ‘ பற்றி எனது தனிப்பட்ட கருத்துக்கள்.

(அமெரிக்க) ஊடக உலகுடன் தொழில்முறைத் தொடர்புள்ள எனக்கு, ஊடகங்களைப் பற்றி எவ்விதக் கற்பனாவாதப் பிரமைகளும் இல்லை. ஆனாலும், இந்நிகழ்ச்சிகளில் சிலவற்றைக் கண்ட முகந்தெரியாத பார்வையாளர்கள், பொது இடங்களில் என்னைப் பார்க்கையில் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது எனக்குள் பெரிய நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இவர்கள் பொருளாதார மேல்தட்டு/ உயர்மத்திய வர்க்க மக்கள் அல்ல, மெத்தப் படித்தவர்களும் அல்ல; ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆசைப்படுபவர்கள். ஆங்கிலத்தில் முழுத் தேர்ச்சியில்லா விட்டாலும், இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையை மாற்றும் — அறிஞர்களால் ஆங்கிலத்திலேயே பெரிதும் விவாதிக்கப்படும் — உலகமயமாதல் மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், கருத்துச் சொல்லவும் ஆர்வமிருக்கிறது, உரிமையிருக்கிறது. அந்தந்தத் துறையில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ளவர்கள் இயல்பாய்ப் பேசினால், பல மேலோட்டமான பேதங்களைத் தாண்டிப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வதாய்த் தெரிவது நம்பிக்கையளிக்கும் விஷயம்.

காவேரிப் பகுதி வறட்சி நிலைமையும் இன்னும் தொடர்கிறது. குறுவை, சம்பா என்று இரண்டு விளைச்சல்களுமே பாழாய்ப் போன நிலையில், விவசாயிகளின் உடனடி வாழ்க்கைப் பிரச்சினை பெரிது. நான் அங்கிருந்த போதே கர்நாடக, தமிழக முதல்வர்கள் (தனித்தனியாக) பிரதமரைச் சந்தித்துப் பேசினார்கள்; மூன்று நாட்கள் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட்ட பின், மீண்டும் பெருந்தன்மைகள் வறண்டு மதகுகள் அடைத்துப் போயின. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ளும் போது, மாநில அளவில் பல அதிகாரங்கள் இல்லையென்பதே தெளிவாகிறது. நவீன மழைநீர்ச் சேகரிப்பு, ஏரி குளங்களைத் தூர்வாறல், நிலத்தடி நீரை மாசு நீக்கிப் பாதுகாத்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காடுகளை அழிக்காதிருத்தல் என்று தமிழகம் செய்யக் கூடியவை பல–ஆனால், இவை உடனடிப் பசிக்குத் தீர்வுகள் அல்ல. இன்றைய பசி, (பஞ்சத்தின் விளைவாக அனேகமாக) தமிழகத்தில் இனி உயரக் கூடிய அரிசி விலை, அடுத்த விளைச்சலுக்கான விதைகள், என்று வறட்சி நிவாரணத்துக்குப் பல பரிமாணங்கள் உள்ளன. மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதி இன்னும் வந்திருக்கவில்லை. இன்னும் பல மாநிலங்களிலும் வறட்சி உள்ளதால் ஏற்படும் தாமதம் என்று சொன்னார்கள். இந்த அளவிலான வறட்சியும் பஞ்சமும் எங்கிருந்தாலும் அது ‘அவசரநிலை ‘ இல்லையா என்ற ஆதங்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கைத்தறி நெசவாளர்களின் நிலைமையிலும் மாற்றம் பெரிதாக இல்லை. கைத்தறித் துறை புதிதாய்ப் பல மோஸ்தர் சேலைகளையும் பிற உடைகளுக்கான துணியையும் நெய்து கொடுத்ததாய் அறிந்தேன்; தள்ளுபடிகள் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் அத்துறை முயற்சி செய்து வருகிறது. தமிழக மக்களிடம் சமூகப் பிரக்ஞை இல்லாமல் இல்லை. பல கல்லூரி மாணவ மாணவியரும் கைத்தறி உடை வாங்கி அணிவதை ஒரு நாகரீகப் போக்காக்கியிருக்கிறார்கள். என் குடும்பத்துப் பெண்கள், சினேகிதிகள் அனைவரும் பொங்கலுக்குக் கைத்தறிப் புடவைகளையே தமக்காகவும் பிறருக்குப் பரிசளிக்கவும் வாங்கியதாய்ச் சொன்னார்கள். அழகிய கைவண்ணமுள்ள சேலைகள். மண்ணின் உயிர்ச் சித்திரங்கள் நேய்த சேலைகள். நான் வாங்கிய ஒரு கைத்தறிச் சேலையைச் சட்டமிட்டு ஓவியம் போல் சுவரில் மாட்டி விடலாம்–அதில் நெய்யப்பட்ட படங்களின் நுணுக்கம் அப்படிப்பட்டது! உடல் முழுதும் மானும் மயிலும், தோளிலிருந்து நீளும் முந்தானை முழுதும் பற்பல வேலைகள் செய்து நிற்கும் பழங்காலத்தியப் பெண்களும், என்றிருந்த சேலையின் விலை இந்திய ரூ.500 மட்டுமே; அவ்வளவு உழைப்பும் திறமையும் சேர்த்து நெய்ததை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்குகிறோமே என்ற குற்ற உணர்வு இன்னும் அரிக்கிறது. காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து, சமையலை முடித்து, அள்ளிப் போட்டுக் கொண்டு, அரக்கப் பரக்க அலுவலகத்துக்கு ஓடும் தமிழக மத்திய வர்க்கத்துப் பெண்ணிடம், கசங்கிப் போகும் கைத்தறிப் புடவையைத் தினசரித் தேய்த்துக் கட்டுவதற்கு நேரமோ பணமோ இல்லை. இதை மனதில் கொண்டு தொழில்நுட்பவாதிகள் கைத்தறித் துணியை மேம்படுத்தலாமே, இன்றைய ‘மார்க்கெட்டிங்-மாடலிங் ‘ யுகத்தில் உயர் வர்க்கப் பெண்களுக்கு வேறு விதங்களில் கைத்தறியைக் கவர்ச்சிகரமாக ஆக்கலாமே என்று நினைப்பு ஓடுகிறது; அத்துறை சார்ந்தவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்களென நம்புகிறேன். மண்ணில் வேர் கொண்ட கலாபூர்வமான ஒரு தொழில், கண்முன்னாலேயே நலிந்து போவதில் ஓர் ஆழமான சோகம் இருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரெஸ் பத்தியாளார் ஜார்ஜுடனான சந்திப்பு தற்செயலாய் அமைந்தது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றி ஆழமான ஆய்வொன்றை ஜார்ஜ் செய்து வருகிறார். சுப்புலக்ஷ்மியின் இசையும் வாழ்வும் உட்படப் பல விஷயங்கள் பற்றிச் சிறிது நேரம் பேசினோம்.

நான் அவ்வப்போது பத்திக் கட்டுரைகள் எழுதும் ‘தினமணி ‘ பத்திரிகைக் குழுவில் சில இலக்கியவாதிகளும் இருக்கிறார்கள். ‘பிரக்ஞை ‘ சிறுபத்திரிகைக் குழுவிலிருந்த சிவகுமார், ‘கொல்லிப்பாவை ‘ சிறுபத்திரிகைக் குழுவிலிருந்த ராஜமார்த்தாண்டன், எஸ்.மனோஜ்குமார், தினமணி கதிர் பொறுப்பாசிரியர் இளையபெருமாள், சிறுவர்மணி பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன் ஆகியோரையும், பத்திரிகைத் துறையில் நீண்ட கால அனுபவமுள்ள தினமணி ஆசிரியர் இராம.சம்பந்தத்தையும் பார்த்தேன். சிவகுமாரிடமும் ராஜமார்த்தாண்டனிடமும் பேசினால் அக்காலத்திய தமிழக இலக்கிய உலகு பற்றிய சுவையான தகவல்களைக் கதை போல் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்; இவர்களிருவரும் இணைந்து, பழந்தமிழ்க் கவிதைகளும் புதுக் கவிதைகளும் அடங்கிய ஒரு முக்கியமான கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரவிருப்பதாய்ச் சொன்னார்கள். பிரேமாவும் நானும் சிறுவர்களுக்காக அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிக் கலந்தாலோசித்தோம். சிறுவர்மணி மூலம் அறிமுகமான தமிழகச் சிறுவர் சிறுமியர் எனக்குத் தொடர்ந்து எழுதும் கடிதங்கள் பற்றிப் பிரேமாவிடம் பகிர்ந்து கொண்டேன். சில கடிதங்கள் உள்நாட்டு உறையில் எழுதப்பட்டிருந்தும் அஞ்சல்துறைத் தயவால் என்னிடம் வந்து சேர்ந்திருக்கின்றன; எத்தனை சேரவில்லையோ! எங்களை உலுக்கியெடுத்த ஒரு கடிதத்தின் சாரம்: ‘சிறுவர்மணி சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டமைக்காக நீங்கள் அனுப்பிய பரிசுக்கு நன்றி…..அப்பாவுக்கு வேலை இல்லை. அம்மா மற்ற வீடுகளில் வேலை செய்கிறார்கள். நானும் அங்கங்கே கிடைக்கும் சிறு வேலைகள் செய்து கொண்டே படிக்கப் போகிறேன்…….. தினமணி, தினமலர், தினத்தந்தி எல்லாம் வாங்க என் குடும்பத்தில் வசதி கிடையாது. அன்றன்றைக்கு இரவலாக எது கிடைக்கிறதோ அதைத்தான் வாசிப்பேன். நல்ல வேளையாக சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்த தினமணி-சிறுவர்மணி என் கைக்குக் கிடைத்தது…… ‘ வாழ்வில் எதையெதையோ நிஜமென்று நம்பித் துரத்திக் கொண்டிருக்கும் நம் உலகத்தில் இவர்களின் குரல்கள் கேட்கப்படாமலே நசுங்கிப் போகுமோ ? பயமாக இருக்கிறது.

இருபத்திமூன்று வருடங்கள் கழித்து, என் இளங்கலைப் படிப்புக்கு உதவி செய்த வாசன் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.பாலசுப்பிரமணியத்துக்கு நன்றி சொல்ல முடிந்தது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. சில கடன்கள் தீராதவை. வார்த்தைகளால் கொச்சைப்படுத்தக் கூடாதவை.

இருபத்திமூன்று வருடங்கள் கழித்து, நான் படித்த பொறியியல் கல்லூரிக்குச் சென்றது இன்னொரு முக்கியமான அனுபவம். முன்பு ஆங்கிலப் பெயர் மட்டுமே உண்டு. இப்போது ‘இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ‘ என்ற தமிழ்ப் பெயர் பொறித்த பளிங்குப் பலகையும், ஆங்கிலப் பலகையுடன் சேர்ந்து, முகப்பை அலங்கரிக்கிறது. தற்போதைய இயக்குநர் தமிழர் — அப்போது ஓர் இளம் பேராசிரியராய், என் வகுப்புக்குத் தெர்மோடைனமிக்ஸும் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸும் சொல்லித் தந்த முனைவர் எம்.எஸ்.அனந்த். பாடத் திட்டத்துக்கு வெளியேயும் நிறையச் செய்ய வேண்டுமென்று எங்களை அந்தக் காலத்திலேயே ஊக்குவித்தவர். கடந்த பல வருடங்களாய்த் தமிழகத்தில் நான்ரென்ன செய்கிறேன் என்பது அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. என் நாவலின் இரண்டாவது பிரதியை அவரிடம் கொடுத்தேன் (நூல்வெளியீட்டு விழா கிடையாது; ‘அன்றைய விதிகளை மீறி எனக்குக் கல்வியைத் திறந்து விட்ட என் அம்மாவுக்கு ‘ முதல் பிரதி.) பழைய வகுப்புத் தோழர்கள், தற்போதைய நிலைமை, சமூக எதிர்காலம் என்று பல விஷயங்களை இயக்குநரிடம் திறந்த மனதுடன் பேசிய பிறகு, ‘உற்சாகத்துடன் செயல்படுபவர்கள் இன்று தேவை, ‘ என்ற அவரது மனமார்ந்த அழைப்புடன் சந்திப்பு முடிந்தது. புள்ளிமான்கள் பயமில்லாமல் திரியும் பச்சைப்பசேல் வளாகத்துக்குள் வெகு நேரம் சும்மா அலைந்து கொண்டிருந்தேன்.

தமிழகத் தங்கலை இரண்டரை வாரங்களுக்கு மேல் நீட்டிக்கவில்லை. சென்னையிலேயே இன்னும் நிறைய பேரைப் பார்த்திருக்கவில்லை; சென்னைக்கு வெளியே உள்ளவர்களைத் தொலைபேசி அழைத்திருக்கவில்லை; அம்மா முதலியோருடன் எவ்வளவு நேரம் விழித்திருந்து பேசினாலும், பேசித் தீர்ந்தபாடில்லை. ஆனால், போர்க் குரல்கள் ஓங்கிக் கேட்டதால், இங்கு என் கணவருடனும் மகளுடனும் இருப்பதே முக்கியமெனத் தோன்றியது. எனவே, நினைத்துப் போன எல்லாக் காரியங்களையும் முடிக்காமலேயே இங்கு வந்தாயிற்று. சென்னை-வாஷிங்டன் விமானச் சன்னல் வழியே மீனம்பாக்கமும் பல்லாவரக் குன்றும் சென்னை நகரமும் சிறு புள்ளிக்கோலமாய் மறைந்த பிறகுதான், இப்பயணத்தில் என்ன செய்தோம், யாரைப் பார்த்தோம், என்ன பேசினோம் என்பதையே கோர்வையாக நினைத்துப் பார்க்க முடிந்தது. அப்போது ‘லேப்டாப் ‘ கணினியில் எழுதத் தொடங்கிய குறிப்புகளின் பகுதிதான் இவை.

இக்கரை விமான நிலையத்தில் என் குடும்பத்தினரின் முகங்களைப் பார்த்ததும், வீடு திரும்பிய உணர்வு. இரண்டரை வாரங்களுக்கும் பத்தாயிரம் மைல்களுக்கும் முன்னால், இன்னொரு விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஏற்பட்ட அதே உணர்வு.

திண்ணை.காம்

மார்ச் 2003

Series Navigation