தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

ஜெயமோகன்

தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] ‘தமிழ் உலகம் ‘ இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி கருத்து சொல்ல எனக்கு சில தகுதிகள் உண்டு என நம்புகிறேன். என் தாய்மொழி மலையாளம். எங்கள் பகுதியின் செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தது. எங்கள் குடும்பத்தில் தமிழறிஞர்கள் உண்டு. என் அம்மாவும் தமிழ் நன்கறிந்தவர்கள். பள்ளியில் நான் கற்றது தமிழ். தமிழில் இலக்கிய ஆக்கங்கள் எழுதுகிறேன். பன்னிரண்டு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. எந்த தடையுமில்லாமல் பழந்தமிழின் எப்பகுதியையும் படிக்குமளவுக்கு தமிழ் தெரியும். பழந்தமிழ் குறித்து நவீன நோக்கில் நிறையவே எழுதி வருகிறேன்.

அதேபோல மலையாளத்திலும் பல வருடங்களாக எழுதி வருகிறேன். ஒரு நூல் வெளிவந்துள்ளது, இன்னொன்று அச்சில் உள்ளது. பழைய மலையாளத்தின் எல்லா அடுக்குகளிலும் பழக்கம் உண்டு . புராதன மலையாள சாசன மொழி குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இரு மொழிகளிலும் பல முக்கியமான அறிஞர்களுடன் நேரடி தொடர்பு பல காலமாக உண்டு. மலையாள அறிஞர்கள் ஆற்றூர் ரவிவர்மா, பி கெ பாலகிருஷ்ணன் , டாக்டர் எம் கங்காதரன் ஆகியோருடனான என் உறவு ஆழமானது. தமிழில் பேராசிரியர் ஜேசுதாசன், அகாபெருமாள், வேதசகாயகுமார், குமரிமைந்தன் ஆகியோருடன் நெருக்கமான உறவுகள் உண்டு. இருமொழிகளையும் ஒப்பிடுவதும் அவ்வப்போது கருத்துக்கள் சொல்லி பிரச்சினைக்குள் மாட்டிக் கொள்வதும் என் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருப்பதை நண்பர்கள் அறிவார்கள்.

மலையாளத்தை தமிழுடன் ஒப்பிடும்போது நம் கண்ணுக்குப் படும் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் தமிழில் எழுத்துக்கும் பேச்சுமொழிக்கும் இடையேயான பெரும் வேறுபாடு மலையாளத்தில் இல்லை என்பதே. ‘அவர்கள் ‘ என்று எழுதி ‘அவங்க ‘ என்று பேசுவதில்லை. ‘அவர் ‘ என்றே எழுதுவார்கள். ‘அவர் ‘ என்றே சொல்வார்கள் .மலையாளிக்கு தமிழ் படிக்கும்போது வரும் முக்கியமான சிக்கலும் இதுதான். தமிழ் நன்கறிந்த ஆற்றூர் ரவிவர்மா ஃபோனில் ‘அருண்மொழி நங்கை இருக்கார்களா ? ‘ ‘ என்று கேட்கும்போது என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்வாள். இந்த சிறப்பம்சம் அவர்களுக்கு எப்படி வந்தது ?

மலையாள மொழிக்கு லிபி வடிவம் எப்படிப்பார்த்தாலும் 16 ஆம் நூற்றாண்டில்தான் உருவாயிற்று. அதாவது துஞ்சத்து எழுத்தச்சனின் ‘அத்யாத்ம ராமாயணம் ‘ உருவான காலகட்டத்தில் . அதற்கு முன்பு கேரளத்தில் புழங்கிய இலக்கிய ஆக்கங்களான ‘ராம சரிதம் ‘[ சீராம கவி ] கண்ணச்ச ராமாயணம் [கண்ணச்சன் சகோதரர்கள்] ஆகியவை சுத்தமான தமிழ்ச் செவ்விலக்கியப் படைப்புகள் மட்டுமே. ராமசரிதம் பன்னிரு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்தது. கம்பராமாயணம் போட்ட குட்டி அது . அதற்கு முன்பே மலையாளம் அதன் பண்டை வடிவில் அங்கு பேசப்பட்டிருந்தது. அது தமிழின் ஒரு வாய்மொழி வடிவமாக இருந்தது. அது மலையாண்மை என்று சொல்லப்பட்டது.

என் சொந்த வாழ்க்கைப்பின்னணியில் இருந்து இதை இவ்வாறு புரிந்துகொள்கிறேன். எங்கள் குடும்பத்தில் முக்கியமான பெரியவர்கள் மேற்கோள் என்று வந்தால் தமிழ் மேற்கோளையே சொல்வார்கள். சோதிடம் வைத்தியம் முதலிய நூல்கள் தமிழில் இருந்தன. திருவிதாங்கூர் அரச கட்டளைகள் பெரும்பாலும் தமிழிலேயே இருந்தன. அதாவது மலையாளம் புழக்க மொழி . தமிழ் செவ்வியல் மொழி ,ஆகவே அதிகாரத்தின் மொழி . ராமசரிதம் தம்ழி ஆட்சியாளர்களால் கேரளம் மீது வைக்கப்பட்ட செவ்வியலாக்கம் என்று கொள்ளலாம். பலவகையான ‘பாட்டுகள் ‘ [நாட்டார் ஆக்கங்கள் அதற்கு முன்னராகவே அங்கு மக்களிடையே இருந்திருக்கின்றன.அவற்றிலிருந்து உருவான மக்கள் காவியம் எழுத்தச்ச ராமாயணம். அது ‘கிளிப்பாட்டு ‘[ கிளிக்கண்ணியின் ஒரு வகை ] வடிவில் இருந்தது .இன்றும் அதுவே கேரளத்தில் மிகப் பிரபலமான நூல். எந்த மலையாளிக்கும் அது எந்த விளக்கமும் இல்லாமல் புரியக்கூடியது .இது கிரந்த எழுத்துக்களை ஒட்டி உருவான ஒரு எழுத்துருவில் எழுதப்பட்டு அதுவே மலையாள லிபியாக மாறியிருக்கலாம்.

ஆகவே பேச்சு மொழிக்கு மிகப்பக்கத்தில் எழுத்து மொழி இருக்கிறது அங்கு. பேச்சு மொழியை பதிவு செய்வதாக உள்ளது அது. பேச்சு மொழி சாதாரணமாக முன்னகரும் , எழுத்து மொழி அப்படி நகராது. எழுதப்பட்ட ஆக்கம் அதுவரையிலான செவ்வியல்மரபின் பகுதியாக ஆகிவிடுகிறது . அந்த பின்புலத்தை உதறி அது நகராது.நகரவும் கூடாது. அதை பேச்சு மொழி நோக்கி நகர்த்துவதே படைப்பாளிகள் செய்யும் பங்களிப்பு.அதாவ்து செவ்வியலை மொத்தமாக இழுத்து பேச்சுமொழிக்கு பக்கத்துக்கு கொண்டு வருவது. உ வே சாமிநாதய்யர் உரைநடையிலிருந்து புதுமைப்பித்தனின் நடை வரை ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால் உரைமொழிக்கு பக்கமாக எழுத்துதமிழ் வந்ததுதான். மலையாளத்தில் எதை பேசுகிறார்களோ அதையே எழுதுகிறார்கள்.உதாரணமாக எழுந்நு ஏல்க்குக[ எழுந்து ஏற்றல்] என்ற சொல்லாட்சியை எழுந்நேல்குக என்றுசொல்லி ,அது எணீற்று என்றுமாறி ,அதையே எழுதுகிறார்கள். நாம் எழுந்து இருங்கள் என்பதனை ‘ எந்திரிங்க ‘ என்கிறோம்.

இருமொழிகளையும் வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இவ்விஷயம் ஒரு பெரிய வித்தியாசமாகத் தோன்றலாம். தமிழுக்கு பழம்சுமை அதிகம் என்று படும். ஆய்வாளர் பானி பேட்ஸ் இப்படி என்னிடம் சொல்லியிருக்கிறார் .இந்த அடிப்படையில்தான் ஜார்ஜ் எல் ஹார்ட் அப்படி சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. செவ்வியல் மரபு சுமையல்ல. செல்வம் சற்றுகனக்கும் அவ்வளவுதான். மலையாளம் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் பயன்படுத்தப்பட் ஆரம்பித்ததுமே அது மக்களிடமிருந்து அன்னியமாக ஆரம்பித்துவிட்டது. அதற்கு சொற்களஞ்சியம் இல்லை. ஆகவே சம்ஸ்கிருதத்தை மிதமிஞ்சி நம்ப ஆரம்பித்தது. இன்று அங்கு பெரும்பாலான சொற்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. சாதாரண மக்கள் பல சொற்களை உச்சரிக்கவே முடியாது. National Milk Producing Corporation Ltd என்பதை ராஷ்ட்ரீய க்ஷீர விகஸன சங்ஹடன க்ளிப்தம் என்கிறார்கள். பால் என்ற சொல் மக்களுக்கு புரியும். பால்பொருட்கள் என்பத க்ஷீர என்று ஆக்கும்போது எனக்கெல்லாம் மூச்சு திணறுகிறது .

எம் கோவிந்தன்[ கேரள சிந்தனையின் நவீனத்துவபோக்குகளை அறிமுகம் செய்த முன்னோடி சிந்தனையாளர். ஈவேரா ,அண்ணாதுரை ஆகியோரின் நண்பர். நாராயணகுருவை வழிகாட்டியாககொண்டவர். ஆனால் முக்கியமாக எம் என் ராயின் சீடர் . ராய் துவங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் கேரள அமைப்பாளராக இருந்தார்] கேரளத்தில் மலையாளத்தின் செவ்வியல் மரபாகவும் சொற்களஞ்சியமாகவும் தமிழே இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் .அதற்காக அதிதீவிரமாக போராடினார்.அவரது மாணவர்களில் ஆற்றூர் ரவிவர்மா தவிர எவருமே அக்கருத்தை ஏற்றுக் கொண்டவர்களல்ல.அது ஒரு தோற்ற தரப்பு .காரணங்கள் பல . 1993 ல் மலையாளத்தில் மாத்ரு பூமி நாளிதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அதன் காரணங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி அது ஒரு விவாதத்தை உருவாக்கியது கட்டுரையின் பெயர் என்றெ அம்ம கறுத்திட்டாணு . என் அம்ம கரியவள் . ஆற்றூர் ரவி வர்மாவின் கவிதை வரி அது .[ எல்லாருடைய அம்ம்மாவும் வெள்ளை நிறம் என் அம்மாவுக்கு கருப்பு நிறம்..] கேரளத்தின் தாழ்ந்த சாதிகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் தமிழின் பாதிப்பு இப்போதும் அதிகம். அவர்கள் நிறம் கருப்பு. பணியர் போன்ற பழங்குடிகள் பேசும் மொழி தமிழின் ஒரு வடிவமே. நாராயண குருவின் காலம் வரை கடுமையான தீண்டாமை நிலவிய மண் அது என்பதை மறுக்கக் கூடாது. ஆக தமிழுக்கு இரு முகங்கள்.அது ஆதி மொழி. ஆதிக்கம் செய்யவந்த செவ்வியல் மொழி. ஆகவே இரு தளங்களிலும் தமிழை உதறி மலையாளம் சம்ஸ்கிருதம் நோக்கி திரும்பியது .

சம்ஸ்கிருதமே அழகு இனிமை உயர்ந்தது என்ற ஆழமான நம்பிக்கை மலையாளத்தின் இயல்பாகும் .நான் என்மாத்ருபூமி கட்டுரையில் சுட்டிககாட்டியதுபோல ‘கருத்த சந்தமுள்ள பூவே ‘ என்றால் அது பேச்சு , ‘சியாம சுந்தர புஷ்பமே ‘ என்றால் கவிதை [ஓ என் வி குறுப்பு எழுதிய வரி] என்பது மலையாளிகளின் நம்பிக்கை ஆகவே அவர்கள் செவ்வியலாக சம்ஸ்கிருதத்தையே நாடுகிறார்கள் .மெல்ல மெல்ல இரண்டு மலையாளம் உருவாகியுள்ளது . அந்த ‘உயர்ந்த ‘ சம்ஸ்கிருத மலையாளம் இன்றும் மக்களுக்கு அன்னியமானது. சில விதிவிலக்கான எழுத்தாளர்கள் மட்டுமே கோவிந்தனின் குரலை பிரதிபலிப்பவர்கள். கேரள நவீன விமரிசனம் ,சித்தாந்த ஆய்வுகள் எல்லாம் சுத்தமான சம்ஸ்கிருதத்தில் எழுதப்படுகின்றன என்றால் மிகையல்ல. கேரள கவிஞர் கல்பற்றா நற்றாயணன் ஒருமுறை எழுதினார் இரண்டு மார்க்ஸிசம் உண்டு. ஒன்று ‘நாடன் மார்க்ஸியம் ‘ [நாட்டார் மார்க்ஸியம்] இன்னொன்று சம்ஸ்கிருத மார்க்ஸியம் .

இது ஒரு நிலைமை என்றால் இதற்கு மறுபக்கம் ஆங்கில ஆதிக்கம். நவீன விஷயங்களை சொல்ல சொற்கள் இல்லை, உள்ள சொற்களை பேசினால் நாக்கு பல்லில் கடிபடும் ஆகவே நேரடியாக ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறார்கள். ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டேன்[ பாஷா போஷிணி /2000 .கேரள கவிதை பற்றிய மதிப்பீடு] மலையாள மனோரமா நாளிதழில் ஒரு தலைப்பு இப்படி இருந்தது ‘ ‘ பார்லமெண்டில் இரிகேஷன் பில் பாஸ் ஆயி ‘ இதில் இல் , ஆயி என்ற இரு இணைப்பு சொற்கள் மட்டுமே மலையாளம். முன்பு ஒரு சுவரொட்டி கண்டேன். ‘ ஃபரண ஃபாஷா [ஆட்சி மொழி ] மலையாளத்துக்கு ஆக்கக் கோரி லோனப்பன் நம்பாடன் நடத்தும் ‘சைக்கிள் ராலி ! ‘

செவ்வியல் தமிழுக்கு இங்கு இத்தகைய அன்னியத்தன்மை இங்குள்ள மக்களிீடம் இல்லை .தமிழக கிராமங்களில் மக்களிடம் இன்று கலெக்டர் என்று சொல்வதை விட மாவட்ட ஆட்சியர் என்று சொன்னாலே புரியும். மிகச் சாதாரண மக்கள் கூட விண்ணப்பப் படிவம் , பதிவேடு , ஆவணம் , வட்டம் , மாவட்டம் போன்ற பலநூறு சொற்களை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள் . பெரும்பாலானவர்கள் அச்சொற்கள் 1970 வாக்கில் அறிஞர்களால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதை நம்பவே தயாராக இல்லை . டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் என்று சொல்வதை விட போக்குவரத்த்கு கழகம் என்றால்தான் மக்களுக்கு புரியும் இன்று . நவீன உபயோகத்துக்கு தமிழை பயன்படுத்துவது மலையாளத்தைவிட பல மடங்கு , ஒப்பிடவே முடியாத அளவுக்கு எளிது .மலையாளத்தில் சிடுக்காக ஆகும் சம்ஸ்கிருத சொல்லையோ , அன்னிய உச்சரிப்பு கொண்ட் ஆங்கில சொற்களையோ பயன்படுத்தாமல் எழுதுவது மிக மிக கஷ்டம் .நான் கோவிந்தன் , ஆற்றூர் ரவிவர்மா மரபினன் என்பதனால் நான் அவற்றை தவிர்த்து தமிழ் சொற்களை நேரடியாக பயன்படுத்துவேன் . ஒரு கொள்கையாக பயன் படுத்தும்போது வாசக எதிர்ப்பு உருவாகிறது . அவ்வெதிர்ப்பு கோவிந்தனுக்கு இருந்தது. ஆனால் நான் படைப்பூக்கம் கொண்ட கதைக் கட்டுரைகளில் அவற்றை பயன்படுத்துகையில் அவை ஏற்கப்படுகின்றன. பல சொற்கள் அப்படி புழக்கத்துக்கும் வந்துள்ளன[ நெடும்பாதை, நிலக்காட்சி முதலியவை]

தமிழின் இலக்கண அமைப்பும் மலையாளத்தை விட மேம்பட்டது. ஆகவே இங்கு பலவிதமான புது சொற்றொடரமைப்புகளை உருவாக்க முடிகிறது. மலையாளத்தில் இன்னமும் அது சாத்தியமல்ல. ஆணு[ ஆகும்] என்று எல்லா சொற்றொடர்களுடனும் சேர்ப்பது அளிக்கும் சோர்வு என்னை மலையாளத்தில் மிக கஷ்டப்படுத்துகிறது. அங்கு கூட்டு சொற்றொடர்கள் அமைப்பது ஒருவகை கம்பிவிளையாட்டு போல.

எழுவாயை மையப்புள்ளிீயாக நிறுத்தி துணைசொற்றொடர்களை இணைத்தபடியே போக தமிழில் வாய்ப்பு அதிகம் . மலையாளத்தில் அது முடியாது . உதாரணமாக இது என் சொற்றொடர் . ‘மொழி , அது கலச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பு மற்றும் மனத்தின் வெளித்தெரியும் ஒரே பிரதியமைப்பு என்ற நிலையிலும் கூட அதை மானுட அகத்தின் ஒரே கட்டுமானமென்றோ, அல்லது மனம் என்பது மொழியே என்றோ, அல்லது தெரிதா முதலியோர் கூறுவது போல மொழிக்கு அப்பால் எதுவுமேயில்லை என்றோ சொல்ல நான் தயாராகமாட்டேன். ஒரு படைபாளியாக என் அகம் மொழிக்கு அப்பாற்பட்டதென்ற என் உள்ளுணர்வும், அது என்ன என்பதனை தெரிதாவைவிட திருமூலர் எனக்கு விளக்கிவிடமுடிகிறது என்ற தெளிவும் என்னை அதிலிருந்து தடுக்கும்போது கார்ல் பாப்பர் போன்றவர்கள் தெரிதாவுக்கு எதிரான தரப்பை மேற்கத்திய தருக்கத்திலேயே சொல்லியிருப்பது எனக்கு கைகொடுக்கிறது. ‘ [மொழி என்ற கட்டுரை]

இந்த சொற்றொடரமைப்பு ஏன் தேவை ? மேலே சொன்ன இரு சொற்றொடர்களும் இரு தனி கருத்துக்கள் . சித்தாந்த விவாதத்தில் ஒரு கருத்து ஒரு சொற்றொடராக அமைதல் என்பது ஒரு மரபு. அக்கருத்தின் பல்வேறு உட்கூறுகள் துணைசொற்றொடர்களாக அமைய வேண்டும். கூட்டுச் சொற்றொடர்களை விதவிதமாக அமைக்காமல் ஒரு மொழியில் அறிவியல் தேற்றங்களையோ சித்தாந்த விவாதங்களையோ எழுதிவிட முடியாது .தமிழில் இன்று , சிற்றிதழ் சார் அறிவுலகம் மொழியை பல தளங்களுக்கு இழுத்து விரிவடையச்செய்தபிறகு கூட்டு சொற்றொடர்களை ஆங்கிலமளவுக்கே அமைக்க முடியும் . மேற்கண்ட இரு சொற்றொடர்களையும் நாம் மலையாளத்தில் எழுதினால் அது பல சொற்றொடர்களாக உடைபட்டுவிடும் .அப்போது அவை இரு கருத்துக்கள் அல்ல. அது ஒரு சொல்லாடல் ஆகிவிடும் .

காப்பியை குழம்பி என்று சொல்லும் மொழியாக்கத்தை உதாரணமாகக் காட்டி தமிழ் கலைச்சொல்லாக்க முயற்சிகளை நிராகரிக்கும்போக்கு மிக மேலோட்டமானது. 10 வருடம் முன்பு சுந்தர ராமசாமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் இதே மனநிலையை முன்வைத்தார் .நான் ‘ஒளிச்சேர்க்கை ‘ என்ற சொல்லைப்பற்றி சொன்னேன். Photo synthesis என்ற சொல்லுக்கு பண்டிதர்கள் அளித்த மொழியாக்கம் அது . அதை சி. மணி தன் கவிதை நூலுக்கு தலைப்பாக்கி முற்றிலும் புதிய பொருளை அளித்தார். மண்ணுக்கு வானுடன் ஒளியுடன் உள்ள ஆன்மீகமான உறவை சொல்கிற கவித்துவமான உருவகமாயிற்று அச்சொல் . சொல் அப்படி பல புதிய சாத்தியங்கள் கொண்டது .Discourse என்ற மொழியியல் கலைச்சொல்லுக்கு நாகார்ச்சுனன் அளித்த மொழியாக்கம் சொல்லாடல் . அது இன்று மிக விரிவான தளத்தில் பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியச் சொல். சொல்லாக்கத்தின் சாத்தியங்கள் எண்ணற்றவை.

ஆம் ,பல தேவையற்ற சொற்கள் வரும் .அதை தவிர்க்க முடியாது.சுருக்கம், பொருட்செறிவு, ஒலியிசைவு , விரிவாக்கப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொற்கள் நிலைபெறுகின்றன, அழிகின்றன. சிற்றிதழ் சூழலில் தினமும் கலைச்சொற்கள் பிறக்கின்றன. உலக சிந்தனைகளில் ஒரு முக்கிய பகுதி இங்கு பேசப்படுகிறது . அதற்கேற்ப கலைச்சொற்கள் பிறந்தபடியே இருக்கின்றன. நான் எப்போதுமே ஆங்கிலச்சொல்லை பயன்படுத்துவதில்லை . சொற்கள் இல்லையென்றால் நானே கண்டடைவேன், தமிழின் பழமரபில் அது இருக்கும். அப்படி நான் உருவாக்கிய 50 சொற்களேனும் இப்போது பரவலாக புழக்கத்தில் உள்ளன.[ பட்டியலிட இரும்பவில்லை. என் ஏராளமானஎதிரிகள் உடனே அச்சொற்களை தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்]

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் தமிழில் குறைவே. காரணம் அவற்றை புழங்கும் சூழல் இங்கு இல்லை. ஆனால் அரசியல் , இலக்கிய சித்தாந்த தளங்களில் எதையுமே சொல்லுமளவுக்கு கலைச்சொற்கள் உள்ளன. உண்மையில் சிற்றிதழ் சூழலின் வலிமையும் சிக்கலும் இதுவே . ஒரு தீவிர வாசகன் இரண்டு வருடம் இடைவெளி விட்டால் கூட சிற்றிதழ்களை புரிந்துகொள்வது கடினமானதாகிவிடும். புதியவர் ஒருவர் கலைச்சொற்களை புரிந்துகொண்டு உள்ளே நுழைவது அதற்குரிய உழைப்பிற்கு பிறகே சாத்தியமாகும். எத்தனையோ உலகியல் விஷயங்களில் கடுமையான உழைப்பையும் சிரத்தையையும் செலுத்தும் தமிழ் வாசகர்கள் இலக்கியத்தில் மட்டும் அதற்கு தயாராக இருப்பதில்லை . ஐம்பது வருடங்களாக சீரான வளர்ச்சி அடைந்துள்ள ஒரு துறைக்குள் சாதாரணமாகப் புகுந்து குழம்பி, மனம் புண்படுகிறார்கள். ‘எனக்கே புரியலை சார்! ‘ என்ற குற்றச்சாட்டை தமிழ் வாசகர்களிடமிருந்து சிற்றிதழ் எழுத்தாளர்கள் அனேகமாக தினமும் சந்திக்கிறார்கள். தாழ்வுணர்ச்சியின் விளைவான நக்கல் எரிச்சல் போன்றவை சாதாரணம் . ஆனால் பலவிதமான பிழைகள் , சிக்கல்கள் ஆகியவற்றைத் தாண்டி மிக ஆக்கபூர்வமான பணிகள் நடக்கும் தளம் இது.

ஏறத்தாழ 2000 புதிய இலக்கியக் கலைச்சொற்களை நான் 10 வருடங்களாக சேர்த்து வைத்திருக்கிறேன். நூலாக போட நிதி இல்லை. மருதம் இணைய தளத்தில் போடலாமென எண்ணுகிறேன். இச்சொற்களை நம் அறிவுச்சூழல் உருவாக்கியது மட்டுமல்லாமல் புழக்கத்துக்கும் கொண்டுவந்திருப்பது எளிய விஷயமல்ல .

பிற தளங்களைப் பற்றி எனக்குத் தெரியாது , நான் புழங்கும் இத்தளத்தில் , அரசியல் அழகியல் சித்தாந்தங்களின் தளத்தில் தமிழ் எல்லாவகையான நவீனக் கருத்துக்களையும் பேசக்கூடிய தகுதி கொண்டதாகவே உள்ளது. இத்தகுதி நிச்சயமாக மலையாளத்திற்கு இல்லை. கன்னடத்தில் இல்லை என்றே என் நண்பர்கள் பாவண்ணன், ஹெச் எஸ் சிவப்பிரகாஷ், டி ஆர் நாகராஜ் முதலியோர் சொல்லி அறிந்திருக்கிறேன். ஆட்சிமொழியாக தமிழ் அடிமட்டத்தில் சாதாரணமாகவே இங்கு புழங்குகிறது . நான் வேலை செய்யும் துறையில் தமிழ் அனுமதிக்கப்படுவதில்லை — இது தேசிய நிறுவனம் . ஆனால் மனுக்களில் 90 விழுக்காடு தமிழிலேதான் வருகின்றன. அலுவலர் பெயர்கள் மக்களாலேயே மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன. பிறமொழியினர் புழங்கும் தளத்தில் இது இயல்வதாக இல்லை என்பது வேறு . தமிழ் பேச்சுமொழியாக இல்லாமலாகிறது என்ற இணையதள கவலைகளுக்கெல்லாம் என் வாழ்வில் பொருளே இல்லை . வீட்டில் ஆங்கிலம் பேசுவதெல்லாம் சென்னை சார்ந்த, , பெரிதும் அய்யர் மற்றும் வடகலை அய்யங்கார்கள் சார்ந்த, உயர் வற்க /உயர் மத்திய வற்க நடைமுறை மட்டுமே . அப்படிப்பட்டவர்களை நான் சந்திப்பது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைகூட இல்லை . எனக்கே ஆங்கிலம் ஒழுங்காக வாயில் நுழையாது.அதைப் பேச என் வாழ்வில் சந்தர்ப்பமே இல்லை .

ஆனால் நான் அதிதூய தமிழ்வாதத்தை நடைமுறையில் ஏற்கக் கூடியவனல்ல.நம் மூதாதையர் திசைச்சொல் என்று இலக்கணம் வகுத்து அளித்திருப்பது வெறுமே அல்ல . மொழியில் அதை தவிர்க்க கூடாது ,முடியாது. சொல்லை தமிழக்குவது காதின் மூலம் தீர்மானிக்கப்படவேண்டும். என்னை பொறுத்தவரை செக்ரடரியேட் என்று சொல்ல மாட்டேன் .ஆனால் பஸ் என்று சொல்வேன் . ஆனால் என் ஆசிரியரான கேரள வரலாற்றாசிரியர் பி கெ பாலகிருஷ்ணன் ஒருமுறை சொன்னதுபோல ‘ ‘ எந்த தூய்மைவாதமும் இன்றியமையாததே ,அது முன்னகர்வை சிதறலாக அல்லாமல் நிலைநிறுத்தும் நங்கூர சக்தி ‘. மொழித்தூய்மைவாதம் இல்லாமலிருந்தால் நாம் இன்று எழுதும் மொழி ‘பார்லமென்டில் பில்.. ‘ போல இருக்கும்.பேச்சு மொழி பற்றி நாம் அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை. அது அறிந்தும் அறியாததுமான பல்லாயிரம் சக்திகளால் இயக்கப்படும் ஒரு பெரும் போக்கு. அது வரலாற்றின் நிழல். உண்மையிலேயே தமிழ் அழிவது வரலாற்றின் விதி என்றால் நாம் மொழி சீர்திருத்தங்கள் மூலம் அதை கட்டுப்படுத்திவிடமுடியாது . நம்மால் செய்யமுடிவது செம்மொழியை சீராக வைத்திருத்தலே .அது தொடர்ந்து பேச்சுமொழியை கட்டுப்படுத்துகிறது என்று நான் மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் மூலம் அறியலாம்.

அடுத்த வினா இங்கு எழுவது அறிவார்ந்த தளத்தில் இங்கு நடைபெறும் மாற்றங்கள் சாதாரண மக்களின் வாழ்வை பாதிக்கிறதா, அன்றாடத்தமிழ் எப்படி உள்ளது என்பதே . அன்றாட தமிழ் பலவகையான பாதிப்புகளுடன் பலவிதமான தேவைகளுடன் இயங்குகிறது . எக்காலத்திலும் அது அப்படியேதான் இருந்துள்ளது. நமது மொழி உருது மேலோங்கியதாக ,மராட்டியம் மேலோங்கியதாக , சம்ஸ்கிருதம் மேலோங்கியதாக இருந்துள்ளது. இப்போது ஆங்கிலம். அதை கட்டுப்படுத்தும் நெறிப்படுத்தும் சக்தியாக நமது செவ்வியல் பிரக்ஞ்ஞை இருந்துள்ளது , இருந்து வருகிறது. நேற்று சிற்றிதழ்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட புதிய சொற்கள் அன்றாட மொழிக்கு பிரபல இதழ்கள் வழியாக வந்துசேர்வதை நானே ஆதாரபூர்வமாக காணமுடிந்துள்ளது — நான் இதில் ஈடுபட்டு 15 வருடங்களே ஆகின்றன. உதாரணம் படிமம் , ஆளுமை . தினத்தந்தியில் ‘மூப்பனாரின் ஆளுமை ‘ என்று முன்பு பார்த்தபோது சற்று வியப்படைந்துதான் போனேன். தமிழ் அதன் இயல்பான போக்கில் நவீன வாழ்க்கையின் தேவைக்கு ஈடு கொடுக்கிற்து என்பதுதான் என் எண்ணம். இலக்கிய தளத்தில் அது முழுமையாகவே சாத்தியமாகியுள்ளது என்றே சொல்லதுணிவேன்.

===========================================

[பி.கு ]

1] ஹார்ட் பற்றி

===========

பேரா. ஹார்ட் 30 ண்டுகளாகத் தமிழின் தொன்மையையும், தமிழ்மொழி எவ்வளவு தூரம் வடமொழியில் ஊடுருவித் தனது கொடையை அளித்துள்ளது என்றும் ய்வேடுகளாகப் பல்கலைக் கழகங்களில் எழுதியுள்ளார். முக்கியமாக, தமிழ், திராவிட மொழிநாடுகளின் மரபுதான் அக இலக்கியம், ரியர் இந்தியாவில் நுழைந்தபோது அது இல்லை. வடமொழி அக இலக்கியம் தோன்றத் தமிழின் சங்க இலக்கியமே காரணம் என்று நிறுவினார். அதிலும் முக்கியமாக, அகவல் என்னும் யாப்புநடை, இந்தோ-ரிய மொழிகளுக்குத் தமிழில் இருந்துதான் சென்றது எனவும் விரிவாகக் காட்டியுள்ளார். மேலும், சங்கம் மரீய காலத்தே வந்த வடமொழித் தாக்கத்தால் தமிழ்நிலை தாழ்த்தப்பட்டது. இருக்குவேத காலத்திலேயே, திராவிட மொழிகளினால்தான் இந்தோ-ஆரிய மொழிகளுக்கு நா-வளை (retroflex letters, ட, ண போல்வன) எழுத்துக்கள் தோன்றின என்றும் அறிஞர் அறிவிப்பர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பேரா. ஹார்ட் தமிழால் வடமொழிக்கு வந்த வளம் பற்றிச் சொன்னவை சிந்திக்கத்தகுந்தன.

நா. கணேசன்

2. ஹார்ட் எழுதியது

==============

Our task is to create a usable Tamil standard which people will use. Yes, it is wonderful to say koTTai vaTi niir for coffee, but no one will understand it! Similarly, the great majority of people who use Tamil (regardless of political affiliation) need grantha characters (s, h, j). They are not an abomination, nor are they a subtle political attempt by any caste or political group to get control of the language. They are indispensable if Tamil is to become a modern language, pure and simple — not only for transliterating Sanskrit, but for transliterating almost any other language. They are pronounced in modern Tamil (does anyone say kari for hari, or caina for jaina ?)

For heaven ‘s sake, let ‘s face facts. Thomas Malten has discovered that Tamil has only 50% of the words that are shared between modern German and English. This means that Tamil is NOT a usable or viable language for modern purposes — that is one reason why English is used almost exclusively in Tamil Nadu for purposes of technology and science. Tamil is LESS usable for modern purposes than Malayalam, which has been blessed with considerably more linguistic insight and rationality than Tamil.

Purging the alphabet of symbols and sounds in common usage among the Tamils is not our purpose. If people want to write without the grantha letters — and there are styles of Tamils where this is desirable and even necessary — they can do so. But we must have a standard in which people can write borrowed words from English, Sanskrit, Telugu, Arabic, Russian (try Stalin), and other languages if they wish. This can only enrich Tamil. Any other course would permanently and disastrously close Tamil off to any rational efforts at modernization, and I for one refuse to have anything to do with such a course. I love the language too much.

We live in a global, interconnected world. Like it or not, no language is an island.

George Hart

[தமிழ் உலகம் இணையக் குழுவில் வெளியான கடிதத்தின் மறு ஆக்கம் ]

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation