உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

ஜெயமோகன்

சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம் கலவை . அது மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டை வலம் வருவதற்கான காரணங்கள் பல இருக்கலாம் . முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை .

அறிவார்ந்தது , முக்கியமானது ,பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது .இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்கவேண்டும் . இவர்கள் எதையும் உழைத்து தெரிந்துகொள்வதிலோ சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள் . அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்த செயலையும் ஒருவகை எரிச்சலுடனோ நக்கலுடனோ பார்ப்பவர்கள் . சமூகசேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டாக்கடையில் உட்கார்ந்து அதை கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்துவிடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் . அறியமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் .

லியோனி அவ்வுரையில் பெரியபுராணத்தை நக்கல் செய்கிறார் .ஒரு கிராமத்துக்கு அவர்கள்குழு சென்று ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் … ‘ என்று பாட , உள்ளூர் விவசாயிகள் ‘ ‘அய்யா என்ன பாடுறீங்க ? ‘ என்று கேட்கிறார்கள். ‘ ‘பெரியபுராணம் ‘ ‘ என்கிறார் இவர். ‘ ‘எங்க புராணம்தான் பெரியபுராணமா கெடக்கே. சினிமாப்பாட்டு எதாவது பாடுங்க ‘ என்கிறார்கள். அப்படித்தான் இவர்கள் ‘எளிய மக்களிடையே ‘ இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள் .

லியோனிக்கு தெரிந்த அந்த ஒரே பெரியபுராணப்பாடல் அக்காவியத்தின் துவக்கக் கவிதை. .காவியத்தை எழுததிட்டமிட்டபிறகு நெடுநாளாகமுயன்று அதற்கு ஒரு தொடக்கம் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சேக்கிழாருக்கு கருவறையின் இருளில் இருந்து சிவபெருமானே ‘உலகெலாம் ‘ என அடியெடுத்துக் கொடுத்ததாக புராணக்கதை . இலக்கியத்தின் செயல்முறை புரிந்தவர்களுக்கு எத்தனை ஆழமான உருவகம் இது என புரியும். எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்துவரும் ஒரு சொல்லை வைத்து சட்டென்று தொடங்கிவிடுபவையாகவே எல்லா பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது ‘ வரை கவிஞனால் எதையுமே எழுதமுடிவதில்லை . அது வந்தபிறகு காவியம் தன்போக்கில் எழுதப்பட்டபடியே இருக்கிறது.

அந்த முதல் சொல் ‘உலகெலாம் ‘ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! ஒரு கவிஞனை பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளிவிடவேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க ‘ என்ற சொல்லுக்கு பல தளங்கள் . இதோ உலகெலாம் கேட்கும்பொருட்டு சொல்கிறேன் . உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லிவிடப்போகிறேன்……பெருங்காவியங்களின் முதல்ச் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம் ‘ ‘ என சீவகசிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும். ‘ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்.

ஆனால் அடுத்த வார்த்தையிலேயே சேக்கிழாரின் சுயபோதம் திரும்பிவருகிறது . உலகெலாம் உணர்ந்தாலும் அறியமுடியாதவனைப் பற்றிய காவியம் இது என அவரது விவேகம் அவருக்குச் சொல்கிறது.கவிஞனின் மன உத்வேகத்துக்கும் மெய்ஞானியின் அடக்கத்துக்கும் இடையேயான மோதலும் சமரசமுமே ‘திருத்தொண்டர் புராண ‘த்தை பெரியபுராணமாக ஆக்குகிறது என்பேன்.

இந்த முதல் கவிதையிலேயே இக்காவியத்தை உருவாக்கிய மன எழுச்சியும், மனப்போராட்டமும் உள்ளடங்கியுள்ளன.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் [ அசை பிரித்து எழுதபட்டுள்ளது ]

இவ்வரிகளின் பொருளை கூர்ந்து பார்க்கும்போது ஆழமான வியப்பு நம்மை ஆட்கொள்கிறது . உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணரமுடியாதவன் , உலகத்தில் உள்ளவர்கள் எவராலும் உணரமுடியாதவன் என முதல்வரி அறிவுக்கு அப்பாற்பட்டவனாக ஈசனை கற்பிதம் செய்கிறது . அடுத்த வரி நிலவை சூடியவன் கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறது . அடுத்தவரி எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில் அதற்கடுத்தவரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது . அருவமும் உருவமும் ஆனவனின் பாதங்களை பணிவோமென அறைகூவுகிறது இப்பாடல் .

உண்மையில் புராணங்களுக்கு உள்ள கடமையே இதுதான் . அறிவுக்கும் அளவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கும் புலன்அனுபவங்களுக்கும் உட்பட்டதாக வகுத்து உரைக்க முயல்பவை அவை. புரணங்களின் கற்பனை வீச்சு முழுக்க இதற்குத்தான் பயன்படுத்தப் படுகிறது. தமிழ் புராணங்களில் முதன்மையானதாகிய பெரிய புராணம் முழுக்கவே கடலை சிமிழில் அடைத்துக்காட்டவும் ,வானை ஆடியில் பிரதிபலித்துக்காட்டவும் மாபெரும் கவிமனம் செய்யும் முயற்சியைக் காணலாம்.

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation