தலித் கலை இலக்கியம்–இன்றைய சூழலில்….

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

கே.ஏ.குணசேகரன்

தலித் கலை இலக்கிய வாதிகள் விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்திற்குள்(main streem) நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மையம் என்பது உயர் சாதியினருக்கும் உயர்ந்த வர்க்கத்தாருக்கும் ஆனதாக அவர்களாலேயே கட்டமைக்கப்பட்டதாகும். விளிம்புநிலை மக்கள் மைய நீரோட்டத்திற்குள் நுழையத் தொடர்ந்து போராட்டம் நடத்திச் செய்ய முயற்சிக்கும் வேளையில் மையம் செயற்கையான தடைகளை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஒருபுறம் தடுப்புச் சுவர்களைக் கட்டிக் கொள்ளும் மைய நீரோட்டம் மறுபுறம் விளிம்பு நிலை மக்களது கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருவதையும் காண முடிகிறது. மையம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கவர்ச்சிப்படுத்தித் தம் சந்தையை பலப்படுத்திக் கொள்ள வேண்டி கவர்ச்சித் தன்மையை ஏற்படுத்திச் சந்தைப் பொருளை(product) வியாபாரமாக்கிட நாகரீகத்தின் ஒரு சில பகுதிகளை அல்லது கூறுகளை மைய நீரோட்டம் உள்வாங்கிக் கொள்கிறது.

மலையின் மக்களின் கைவினைப் பொருள்கள் நாகரீகப் பெண்களின் பகட்டுப் பொருள்களாகவும், அணிகலன்களாகவும் விளங்குவதை அவதானிக்க முடியும். தொலைக்காட்சிகளின் விளம்பரங்களில் காணும் பின்னல் வடிவச் சட்டை, கண்ணாடிப் பதித்தச் சட்டை, கொண்டை, சடைப் பொருட்கள் போன்றவை மலையின மக்களின் உடை ஒப்பனை பொருட்களின் சாயல்களும், பாணிகளும் ஆகும். மலையின மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் மைய நீரோட்டத்திற்கு உள்வாங்கிக் கொள்ளும் போது கவர்ச்சியான சந்தைப் பொருள்களாக்கப்பட்டு தொன்மை பண்பாட்டுச் சின்னம் தம் அடையாளத்தை இழக்க நேரிடுகிறது. விளிம்பு நிலை மக்களின் கலாச்சாரச் சின்னங்கள் கொண்டுள்ள பலம்(cultural power) என்பது அடையாளமிழந்து மைய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுவிடக் காண நேர்கிறது.

கர்நாடக இசை பாடும் மேட்டுக்குடி மக்கள் மேடைகளில் கடைசியாக மேடை கவர்ச்சிக்காக ‘துக்கடா ‘ என ஒரு பகுதியைப் பாடுவது வழக்கம். இதில் நாட்டுப்புற மக்கள் இசை வடிவங்களான சிந்து, தெம்மாங்கு, பள்ளு, குறவஞ்சி, இசை போன்றவைகளுள் ஏதேனும் ஒன்று அல்லது கலந்த நிலை இசை பாடப்படுவது உண்டு. மேட்டுக் குடியினர் பாடும் மேடைக் கச்சேரிகளில் மேட்டுக் குடியினரே பார்வையாளராக இருக்கின்ற மேடைகளில் உழைக்கும் மக்களின் இசை ‘துக்கடா ‘ எனும் பெயரில் சிறுமைப்படுத்தப்பட்ட பெயரில் அனைவரும் மகிழத் தக்க வகையில் அமைந்து கவர்ச்சிக்கான சந்தைப் பொருளாக மாற்றி விடும் போக்கினை நாம் கவனிக்க முடியும்.

‘பரதநாட்டியம் ‘ எனும் மேட்டுக் குடி மக்கள் ஆடும் செவ்வியல்(Classical Dance) நடனமான இது மேட்டுக்குடி மக்களே பார்வையாளராக இருந்து ரசிக்கக் கூடியதாகும். இதில் குறத்தி நடனம், பாம்பு நடனம், மயில் நடனம் என்பன போன்ற நாட்டுப்புற உழைக்கும் மக்களின் நடனங்களைப் பரதநாட்டியப் பெண்மணி ஆட்டத்தின் இறுதியில் ஆடிக்காட்டி பார்வையாளர்களின் கவர்ச்சியான ரசனைக்கு விருந்து படைப்பாள்.

உழைக்கும் மக்களின் இசை, நடனம், உடை, ஒப்பனை ஆகியவற்றில் உள்ள கலைத் தன்மையின் பலம் என்பதை செவ்வியல் கலையாளர்கள் தமக்கு உரிய சந்தைப் பொருளாக ஆக்கிவிடும் முறையினைக் கவனிக்க முடியும். மேலாதிக்கச் சமூகத்தின் மனோபாவம் என்பது சுரண்டும் தன்மையிலிருந்து தம்மை தகவமைத்துக் கொள்வதை இன்றைய வெகுசன ஊடக வளர்ச்சிகளுக்குள் வரை தெளிவாகக் காணமுடிகிறது.

பறை கொட்டுதல் என்பது முன்பெல்லாம் சாவுக்குப் பறையடிக்கும் அடிமைச் செயலாக இருந்தது. தலித் போராளி அய்யா இளைய பெருமாள் பறையர்கள் பறையடிப்பதை விட்டொழிக்க வேண்டும் எனும் போராட்டத்தைச் சிதம்பரம் பகுதியில் நடத்தி வெற்றியும் கண்டார். தலித் எழுச்சிக் காலகட்டமான இன்று தலித் இயக்கங்கள் பலம் பொருந்தி வருகின்றன. தலித் அரசியல் கட்டமைப்பதில் முன்னேற்றமடைந்து வரும் காலமாக இன்று மாறிவருகிறது. சாவுக்கான பறை என்பது கூடாது என்பதோடு, தலித்துகளின் போர் முழக்கச் சின்னமாகப் பறையடிக்க தலித்துகள் முன்வரவேண்டும் எனும் கருத்தை முன்வைத்து எங்களைப் போன்றோர் கலைநிகழ்ச்சி மேடைகளில் பறையாட்டம் நடத்தி வருகின்றனர். பறையடித்துக் கொண்டே விதவிதமான ஆட்ட அடவு முறைகளைச் செய்யும் கலை நுட்பத்தைக் காணும் மைய நீரோட்டக்காரர்கள் இதனையும் தம் வயப்படுத்த முன்வருகின்றனர்.

ஏ.ஆர். ரகுமான் ‘சங்கமம் ‘ எனும் திரைப்படத்தில் ‘மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் ‘ எனும் பாடலுக்கு நமது போர்ப்பறையை நமது பறையாட்டக் கலைஞர்களைக் கொண்டே ஆட வைத்தது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இசை அமைப்பதற்கான அடித்தள தாள நடை நமது பறையாட்டக் கலைஞர்கள் கொடுத்த இரவலாகும். வெகுசன ஊடகங்கள் பறையாட்டத்தைப் பதிவு செய்து ஒளிபரப்பி வருகின்றன. தலித் இயக்க மேடைகளிலும், தலித் கலை நிகழ்ச்சிகளிலும் வாசித்து ஆடக்கூடிய பறையாட்டம் என்பது இன்று மைய நீரோட்டத்திற்குள் அபகரித்துக்கொள்ளும் செயற்பாட்டைப் பரவலாகக் காணமுடிகிறது.

இன்று ஆங்கிலப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பறையாட்டத்தைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளைச் சார்ந்தோரின் ஊர்வலங்களில் பறையாட்டம் இடம்பெறக் காணமுடிகிறது. பறையாட்டம் மட்டுமின்றி கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், நையாண்டி மேள நிகழ்ச்சி போன்ற கலைநிகழ்ச்சிகள் யாவும் நடத்தப்படுகின்றன. இவை யாவும் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டுள்ள கலை வடிவங்கள் என்பதை இங்கு நினைவு கொள்ளத் தக்கது.

பறை–பறையர்கள் மட்டுமே நிகழ்த்தும் கலைவடிவம் என்பது இன்று யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் எனும் கருத்தை நிலைகொள்ளச் செய்கிறது. மைய நீரோட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான கலை நிகழ்ச்சிகளை தாழ்த்தப்பட்ட மக்களே நிகழ்த்துவது எனும் கருத்தை மைய நீரோட்டத்துக்குச் சொந்தமான வெகுசன ஊடகங்கள் யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் எனும் கருத்தை முன்வைக்கிறது. இவை தொழில் நுட்பம் வாய்ந்தவை முறையான பயிற்சி கொண்ட யாரும் நிகழ்த்தலாம் என்கிறது. விளிம்புநிலை மக்களின் அடையாளச் சின்னம், பண்பாட்டுச் சின்னம் எனும் கலைவடிவங்களை அடையாளம் இழக்கச் செய்வதோடு நாம் ஏலவே சொன்னது போல விநியோகப் பொருள், சந்தைப் பொருள் எனக் கவர்ச்சிக்குள்ளாக்குகிறது. வளர்ந்துவரும் நாகரீகத்தின் ஒரு பகுதியாகவும், மாறிவரும் நவீன உலகுக்குத் தீனி போடக்கூடியதாகவும் மைய நீரோட்டம் புதுவிதக் கலாசாரத்தை நமது கலை மற்றும் கலாச்சார வடிவங்களைக் கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது.

வெகுசன ஊடகங்களால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுவரும், மைய நீரோட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவருமான இசைஞாநி இளையராஜா அவர்களை எடுத்துக் காட்டி சந்தைப் பொருள் எவ்வாறு பின்புலங்களால் கட்டமைக்கப்படுகின்றன எனக் காணலாம்.

இளையராஜா திரையுலகிற்குள் நுழைய கிராமியப் பின்புலம் என்பது எழுபதுகள் வாக்கில் வழி அமைத்துக் கொடுக்கிறது. அவரும்

‘பாளையம் சின்னத்தாயி பெத்தமகன் ‘

என்றெல்லாம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள கிராமியப் பின்புலத்தையே அடித்தளமாகக் கொண்டதையும் காண்கிறோம்.

அடுத்தகட்டமாக மைய நீரோட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய பொதுவுடைமை இயக்கத்துக்குச் சொந்தக்காரராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முற்படும் பின்புலமாகும்.

‘பாவலர் வரதராசன் ‘

என தன் சகோதரரை நினைவுபடுத்தித் திரைப்பாடல்களில் பதிவு செய்ததை இங்கு நினைவு கொள்ளத் தக்கது. பின்னர் இளையராஜா தன்னை ஒரு ஆன்மீகவாதியாகக் காட்ட முற்படும் பின்புலம் ஆகும்.

‘ஜனனீ ஜனனீ

ஜகம் நீ ‘

என உணர்ந்து பாடுவதும் திருவரங்கர் கோயில் நன்கொடை அளித்ததும் காஞ்சி பெரியவாளுடன் ஐக்கியமாயிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. சந்தையில் தன்னை விற்பனைக்கு உரிய பொருளாக கட்டமைப்பதற்கு இம்மூன்று படிநிலைகளை அவர் கொள்ள வேண்டியிருந்தது. மைய நீரோட்டம் தனக்கு வேண்டியவாறு இளையராஜாவை தகவமைத்துக்கொண்டது இங்கு உணரத்தக்கது. எனினும் இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா தலித் எனும் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக்கொள்ளவோ மறுதலித்துக்கொள்ளவோ தயாராக இல்லை. மேற்சொன்ன பின்புலங்கள் கவர்ச்சியான சந்தைப் பொருளை விற்பனைக்கு உகந்ததாக ஆக்குவதில் மைய மிகுந்த கவனம் கொண்டுள்ளமையை நாம் அவதானிக் தக்கது.

கலாச்சார தளத்தில் மைய நீரோட்டம் செயற்படுவதை பெண்ணியம் வழிநின்று கவனிக்கலாம். பெண்கள் தனித்துவம் மிக்கவர்கள் எனக் காட்டவேண்டி மோட்டார் சைக்கிளில் ஜீன்ஸ் பேண்ட், சட்டை அணிந்து செல்வது, நீண்டு தொங்கும் தலைமுடியை வெட்டிக்கொள்வதுபோல அலங்காரம் செய்துகொள்வது இவை போன்றவைகளை நாம் கவனிக்க முடியும்.

பண்டத்தின் விற்பனைக்கான பின்புலத்தைக் கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.

‘இது பொம்பளைங்க சமாச்சாரம் ‘ எனும் செய்தியை

முன்வைப்பதும்

எங்க வீட்டுக்காரரு எனக்குத் தங்க நகை வாங்கித்தந்தாரோ இல்லியோ, மறக்காம தங்கம் நல்லெண்ணெய் வாங்கிக் குடுத்துருவாரு. புத்திசாலிப் புருசன். அப்ப ஒங்க வீட்டுக்காரரு ?

என்பன போன்ற விளம்பரங்கள் வழியே விற்பனைக்கான பின்புலங்களைக் கட்டமைப்பதைக் கவனிக்க முடிகிறது.

பெண்ணிய விடுதலை என்பது வெகுசன ஊடகங்கள் வழியே விற்பனைக்கான உத்தியாகப் பயன்படுத்தப்படும் தவறான கருத்தியல் பரப்பப்படுகின்றன. விடுதலை பெற்ற பெண் என்பவள் குறிப்பிட்ட பவுடர் பயன்படுத்துவாள், குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் போவாள், குறிப்பிட்ட எண்ணெயைப் பயன்படுத்துவாள் என்பன போன்ற கருத்தியல் பின்புலங்களைக் கட்டமைப்பதன் வழியாக பெண்ணிய விடுதலையின் கருத்தியல் என்பது சிதைந்துபோக வைக்கிறது. மைய நீரோட்டம் என்பது தன்வயப்படுத்தும் தன்மையில் இவைபோன்ற தவறான கருத்தியல்களையும் சேர்த்து விதைக்கக் காரணமாகவும் அமைகின்றன. பெண்ணியம் எனும் கருத்தியலை பண்டத்தின் விற்பனைக்கான பின்புலம் அமைத்து வேறுவிதமான கருத்தியலைப் பரப்பிச் சந்தைக்கான பொருள் என்பதாகவே மாற்றி வைத்துக்கொள்ள விரும்புகிறது.

தலித் இலக்கியவாதிகள் படைக்கும் படைப்புகளில் வெளிப்படும் வாழ்க்கை இதுகாறும் வெளிவந்துள்ள படைப்புகளில் இருந்து வேறுபட்டவையாக அமைவது இயல்பு. மைய நீரோட்டத்தில் விளிம்புநிலை மக்களது கலை இலக்கியங்களை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. விளிம்புநிலை மக்களிடம் செல்வாக்குப் பெற்று அதன் தாக்கம் மைய நீரோட்டத்தைத் தாக்கும்போது வேறு வழியின்றி தன்வயப்படுத்திக் கொள்ள முன்வருவது இயல்பு.

ஆதிக்கக் கலாச்சார ஊடகங்கள் இருதன்மை கொண்டவையாகச் செயல்படுகின்றன.

1. மைய நீரோட்டத்திற்குள் வரத் தடை.

2. மைய நீரோட்டத்திற்குள் வயப்படுத்திக் கொள்ளல்.

ஏற்காத தன்மையும், தன்வயப்படுத்திக் கொள்ளும் தன்மையான இருநிலைத் (Double status) தன்மைகளைக் கொண்டுள்ளது.

சிறப்புநிலைத் தன்மை கொண்ட படைப்புக்களையும் படைப்பாளர்களையும் விழுங்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்ட மைய நீரோட்டம் என்பது தனது சந்தைக்கான விதிகளையும், உத்தரவுகளையும் சுமத்துவதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கும். மைய நீரோட்டத்தில் இணைய வாய்ப்புப் பெற்ற விளிம்பு நிலைக்கலை இலக்கியவாதிகள் மைய நீரோட்டம் சுமத்தும் நுகர்வுக் கலாச்சார (Consumer Culture) உத்தரவுகள் அல்லது விதிகளிலிருந்து தப்பிக்க வேண்டியுள்ளது. சந்தை விதிகளின் உத்தரவுகளை மீற வேண்டியுள்ளது. சந்தை விதிகளுக்குள் ஆட்படாமல் விலகியிருக்க வேண்டிய போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மைய நீரோட்டம் படைத்துள்ள நுகர்வு கலாச்சார உத்தரவுகளை எதிர்ப்பதோடு மட்டுமன்றி மாற்று விதிகளைப் படைக்க வேண்டியுள்ளது.

நாம் இங்கு கூறிய செய்திகளைக் கொண்டு பார்க்கும்போது கீழ்க்கண்ட கேள்விகள் நம்முன் எழுகின்றன.

* விளிம்பு நிலைக் கலை இலக்கியவாதிகள் மைய நீரோட்டத்தில் நுழைவது தேவை தானா ?

*மைய நீரோட்டத்தில் விளிம்பு நிலை கலை இலக்கியவாதிகள் தங்கள் அடையாளத்தை இழக்காமல் இருக்கச் செய்யப் போரிடும் போராட்டம் எத்தன்மை வாய்ந்தவையாக இருக்க வேண்டும் ?

விளிம்பு நிலைக் கலை இலக்கியவாதிகள் மைய நீரோட்டத்தில் இணைய வேண்டியதில்லை எனும் கருத்தை நாம் முன் வைப்போமெனில் மைய நீரோட்டம் உருவாக்கும் கருத்தியலை வலுவிழக்கச் செய்ய என்ன நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது விரிந்த விவாதத்துக்கு உரியதாகும். மரபுவழி மார்க்சீய வாதிகள் மைய நீரோட்டத்தை நிராகரிக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைக்கலாம். உலக வர்த்தகத்திலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்ளவேண்டும் எனும் கருத்தில் செயற்பட்ட சோவியத் ஒன்றியம் இன்று இல்லாமல் போனதை இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

மைய நீரோட்டத்தை வலுவிழக்கச் செய்ய நாம் எவ்விதம் செயற்படுவது சமூக மேலாண்மை தமக்கே உரிய சந்தைக் கலாச்சாரத்தையும் மனோபாவத்தையும் மாற்றிக் கொள்ள மாற்றாக நாம் முன் வைக்கும் கருத்துக்கள் யாவை.

விளிம்பு நிலை மக்கள் மேல்தட்டுமக்களால் கட்டமைக்கப்பட்டுள்ள மைய நீரோட்டத்தில் சிக்காமல் இருக்கவும், தமக்கான இடம் கிடைக்கப்பெற்றதும் நமது அடையாளட்த்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ளவும் மைய நீரோட்ட காலாச்சார உத்தரவுகளுக்கு அடிபணியாமல் இருக்கவும் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் யாவை.

இந்த பிரச்சனைகளை நாம் விவாதங்களுக்கு முன்வைப்பதும் சரியான திசைகளை இலக்குகளைப் பரிந்துரைப்பதும் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவையாக உள்ளன. இன்றைய தலித் கலை இலக்கியவாதிகளுக்கும் இந்த விவாதங்களில் கிடைக்கப்பெறும் கருத்துக்கள் தேவையானவையாகும்.

Series Navigation