கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி

This entry is part of 17 in the series 20010219_Issue

அ.ராமசாமி


மொழிபெயர்ப்புகள் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவலான அறிமுகம் பெற்றுள்ள இந்திய நாடகாசிரியர்களில் பாதல்சர்க்காரும் கிரிஷ் கர்னாடும் முக்கியமானவர்கள். மேடையேற்றப்படுவதற்காகவே பாதல்சர்க்கார் மொழிபெயர்க்கப்பட்டார். மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் கர்னாடின் நாடகங்கள் மேடையேற்றம் பெற்றதில்லை. துக்ளக், கிரியாவின் வெளியீடாக வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவரது சமீபத்திய நாடகங்களான நாகமண்டலமும் தலதண்டாவும் (பலிபீடம்) பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் ‘வெளி ‘யின் வெளியீடாக வெளிவந்தும் மேடையேற்றத்திற்கு காத்து நிற்கின்றன.

ஐரோப்பிய நவீனத்துவத்தையும் பிந்திய நவீனத்துவத்தையும் அறிந்தவரே என்ற போதிலும், கர்னாட் அவற்றிலிருந்து விடுபட்டவராய் இந்திய நாடகவடிவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவராய் வெளிப்பட்டவர். தனது நாடகங்களுக்கு தொன்மக்கதைக் கூறுகளையோ வரலாற்று நிகழ்வின் இழைகளையோ, பின்னல்களாய் அமைத்துக்கொள்ளும் கர்னாட், தனது மையப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களின் விளிம்பு நிலைகளிலேயே நிறுத்திக்காட்டுகிறார் எனச் சொல்லத்தோன்றுகிறது. அது ஒரு விதத்தில் சுயத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டமாகவே இருக்கிறது. தான் ஒரு ராஜதந்திரி என நினைப்பவனைச் சமூகம், ‘கோமாளி ‘ என விளிம்புக்குத் தள்ளி வேடிக்கைப் பார்க்கிறது. (துக்ளக்). இந்திய சமூகத்தில் பெண் அடிமைப்பட்ட மனைவியாக இருக்கலாம் அல்லது வணங்கப்படும் தெய்வமாக இருக்கலாம். இது (நாகமண்டலம்) ராணியின் விளிம்பு நிலைகள். பசவண்ணனின் விளிம்பு நிலைகள் சாதியை ஒழிப்பவனாக/ சாதிக்காக வாழ்பவனாக இருக்கிறது (பலிபீடம்). யயாதியின் புருஷம், ஹயவதனாவின் கதாநாயகியும் விளிம்பில் நிற்கும் இரட்டைக்குணங்களுக்குள் அலைபவர்கள்தான்.

கர்னாட் – இந்த வருடத்தின் (1994) சாகித்ய அகாதமி விருதைத் தன் தலதண்டா(பலிபீடம்) நாடகத்துக்காக பெற்றுள்ளார். தலதண்டாவை எழுதுவதற்கு முன்பாக நடந்த உரையாடலை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன். கர்னாடுடன் உரையாடுபவர் கீர்த்திநார்த் குர்த்கோடி, கர்னாடின் எழுத்துக்களை விமரிசித்துக் கட்டுரைகள் எழுதியுள்ள குர்த்கோடி, கர்னாடின் நண்பரும், அவருடைய செயல்பாடுகளுக்குத் துணையாக நிற்பவரும் ஆவார்.

இந்த உரையாடல், சங்கீத நாடக அகாதமி வெளியிட்டுள்ள Contemporary Indian Theatre என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

கேள்வி – குர்த்கோடி: பழைய கன்னடத்தில் நாடகங்களே இல்லை; எனவே நாடக இலக்கியத்திற்கென கன்னடத்தில் வரலாறும் இல்லை, இப்படி வரலாறு இல்லை என்கிற ஏக்கத்தில், வணிகத்தனமான நாடகங்களிலிருந்து வெகுவாக விலகி, அதீதமான இலக்கியத்தனத்தை கன்னட நாடகம் நெருங்கியிருந்தது, இப்ஸன் பெர்னார்ட் ஷா போன்றவர்களின் தாக்கத்தினால் நமது சமூகத்தின் பிரச்னைகளைப் பேசத்தொடங்கிய நமதுநாடக ஆசிரியர்கள், சமூகக் குற்றங்களைக் களைவதற்கு மிகச் சரியான கருவியாக நாடகம் இருக்குமென நம்பினார்கள். இதிலிருந்து சுத்தமான விலகலுடன் உங்கள் நாடகம் யயாதி புது நவீன நாடகமாக வந்தது. அந்த நாடகத்தின் நவீனத் தன்மையைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?

பதில் : கிரீஷ் கர்னாட்: இந்தக் கருத்துக்கு முழுப்பொறுப்பும் நீங்கள்தான் என்பதைச் சொல்ல வேண்டும். ‘புதிய வெளிப்பாடுகள் கொண்ட நாடகம் ‘ என நீங்கள் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டார்கள். நீங்கள் எழுதிய அந்தக் குறிப்பு எனக்கு முன்பு நாடக ஆசிரியர்களாக அறியப்பட்டிருந்த ரங்காச்சார்யா போன்றவர்களைக் கோபமூட்டியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதனை நவீனத்துவ நாடகமாகக் கருதவில்லை. ஏனெனில், கோபாலகிருஷ்ண அடிகாவும் அவரது சீடர்களான அனந்தமூர்த்தி போன்றவர்கள் முன்னிறுத்திய நவீனத்துவத்தின் மீது கரிசனம் எதுவும் எனக்கில்லை. அவர்களது கொள்கை விளக்கங்கள் மீது எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை. என்னைப்பாதித்த எழுத்தாளர்கள் உண்டு என்றால் இரண்டுபேர்தான். ஒருவர் தார்வாரைச் சேர்ந்த டாக்டர் பிந்த்ரே, இன்னொரு எழுத்தாளர் நீங்கள்தான் (கீர்த்திநாத் குர்த்கோடி). யயாதியில் நவீனத்துவம் எந்த அளவுக்கு இருந்தாலும், அதற்குக் காரணம் நான் இளமைப்பருவத்தில் படித்த நவீனத்துவம் சார்ந்த ஐரோப்பிய எழுத்தாளர்களே எனலாம்.

கேள்வி: ஆனால் புருதான் (யயாதியின் மையக்கதாபாத்திரம்) கன்னட இலக்கியத்திலேயே முதன்முதலான எதிர்நிலைப்பாத்திரம். மனிதன் குறித்த புதிய பிம்பத்தைத்தந்தது அதுதான். ஆத்ய ரங்காச்சார்ய உருவாக்கிய அறிவார்ந்த கதாநாயகர்களைவிடவும் உள்முகமாகத் தன்னை உணர முயல்பவனாகவும், நன்மையில் நம்பிக்கையில்லாதவனாக இருக்கிறானே…

பதில்: என்னுடைய விருப்பத்தின்படி எழுதியிருந்தால், புருவின் மனம், அவனைப் பற்றிய சொந்தக்கருத்தாக எதைக் கொண்டிருந்தது என எழுதியிருப்பேன். அதற்குப் பல தடைகள், எனக்கு ரோட் ஸ்காலர்ஷிப் கிடைத்து, உயர் படிப்புக்காக லண்டன் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். எனது பெற்றோர்களுக்கு ஒரு புறம் சந்தோஷம்; மறுபுறம் என்னுடைய படிப்பு முடிந்தவுடனே இந்தியா திரும்பி, எங்கள் சாதியிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள். என்னுடைய சொந்த விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை. என்னுடைய செயல்பாடுகளுக்கு நானே பொறுப்பேற்க வேண்டும் என்பது அப்போதைய மனநிலை. இது குறித்து எனக்கிருந்த கோபத்தின் சாயலை புருவின் பேச்சில் நுழைத்தேன். சரஸ்வத் மக்களின் உணர்வாகவும் அதை மாற்றினேன். அவர்களது முயற்சிகளின் பின்னணி அப்படிப்பட்டது. அவர்கள் ஒரு குலத்துக்குள் முடங்கிப்போவதை விரும்புவதில்லை. புருவின் பாதுகாப்பின்மை உணர்விலும் அது தாக்கத்தை உண்டுபண்ணுவதாக எழுதினேன்

– மீதி அடுத்த வாரம்

Series Navigation