குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1

This entry is part of 18 in the series 20010204_Issue

ஜெயமோகன்.


குற்றாலம் ‘பதிவுகள் ‘ பட்டறையின் ஆறாவது அரங்கு சென்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் வழக்கம் போல நடைபெற்றது. பலவகையிலும் ‘வழக்கம் போல ‘ என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல பங்கேற்பாளர்களில் கணிசமான பகுதியினர் முற்றான மெளனம் காத்தனர். வழக்கம் போலப் பேசத் தெரிந்தவர்கள் விரிவாகப் பேசினர். வழக்கம் போல மதுவின் ஊக்கத்துடன் நட்புகள் கரை கடந்தன. வழக்கம் போல இரண்டாம் நாள் அரங்கின் மதியத்தில் கணிசமானோர் தூங்கச் சென்றார்கள் அல்லது தூங்கி வழிந்தார்கள். வழக்கம் போல ‘உவப்பத்தலை கூடி ‘ இலக்கியமும் அக்கப்போரும் பரிமாறி ‘உள்ளம் ‘ பிரிந்தார்கள்.

இவ்வரங்கின் பயன் என்ன என்பது வரையறுத்துக் கூற முடியாததாகவே உள்ளது. ஏற்கனவே நான் பயன்படுத்தியுள்ள உவமைதான். இது பெரிய தெற்கத்தி குலங்களில் நிகழ்வது போன்ற ஒரு ‘கடாவெட்டு ‘. குலதெய்வமிருக்கும் சொந்த ஊரில் ஒரு மாமனோ பாட்டனுக்குத் தம்பியோ இருப்பது போல கலாப்ரியா. கிளைவிட்டு பரவி பல தொழிலில் பல ஊர்களில் பலவித சமூக நிலைகளில் உள்ள குலக்குழுவினர் வந்து சேர்கின்றனர்.வர முடியாதவர்களுக்கும் அதே நினைப்பு தான். முதலில் சந்திப்பின் உற்சாகங்கள், நலம் விசாரிப்புகள். சுரேஷ் குமார இந்தரஜித்துக்கு காது பிரச்சினையால் தொடர்ந்து தலைசுற்றல் வர முடியாது. தேவதச்சனுக்கு ஆஸ்துமா தொந்தரவு. தஞ்சை பிரகாஷின் கடைசி கடிதம் என பரவலான உரையாடல். பிறகு மெல்ல இலக்கியப் பேச்சு வம்புகளுடன் கலந்து சூடு பிடிக்கிறது. ‘பாழி ‘ படித்தாயா என்ற கேள்வி ஜனங்களை பதற அடிக்கிறது. தப்பி ஓடுகிறார்கள். தஞ்சையில் பாழியர் கூட்டிய விமர்சன அரங்கில் இனிமேல் ‘உப பாழி ‘ யை எழுதுவார்கள் என்று பன்னீர் செல்வம் சொன்னது யாரை என்று எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டுவிட தயாரெடுக்கிறார். பிறகு அரங்கு. வழக்கமாக வருகிறவர்களில் சிலர் வரவில்லை. புதியவர்கள் சிலர் வந்திருந்தார்கள். நெல்லையைச் சேர்ந்த புதிய வாசகரான – எனக்கு ஏற்கனவே அறிமுகம் – எழுத்துக்களாவும், படமாகவும் பார்த்த எழுத்தாளர்களை உயிருடன் சந்தித்து ஐதீகத்தையும் நிஜத்தையும் இணைக்க முயற்சி செய்தபடி இருந்தார். ஆறு வருடம் முன்பு கோ.ராஜாராம் விக்ரமாதித்யனை கடுப்பேற்றியதைப் பற்றி ஒருவர் கூற (பதிவுகள் மனப்பதிவுகளாக ஆன பிறகு தான் உற்சாகம் தருவதாக இருக்கிறது போலும்) மதுரையிலிருந்த இளம் வாசகர் தலைகால் புரியாமல் கேட்டு நின்றார். குமார செல்வா வழக்கமாக வரும் குறுக்கு வழியில் வேலி கட்டப்பட்டிருந்ததினால் வேட்டியை தொடைவரை சுருட்டிக்கட்டி தாண்டிக் குதித்து வந்தார். சுதி ஏற ஆரம்பித்திருந்தது. பல இடங்களில் ஏற்கனவே சிற்றிதழ்களில் நடந்த விவாதங்களின் மீது மறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

அரங்கில் வெளியிடுவதாக இருந்த நூல்களுடன் சென்னையிலிருந்து மகாதேவன் வந்தார். பதினொரு மணிக்கு போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் ஜீப்பில் வந்து ‘யாருய்யா கலாப்ரியா ? ‘ என்றார். மகாதேவனைத் தேடிப் போயிருந்த கலாப்ரியா ஸ்கூட்டியில் ரவிசுப்ரமணியம் ஓட்ட வந்து இறங்கினார். ‘அம்மா வந்து காத்திட்டிருக்காங்க. ரெடியாச்சான்னு என்னை பாத்துட்டு வரச் சொன்னாங்க. ‘ என்றார். நூல்களை வெளியிடவிருந்த எழுத்தாளர் (காவல் உயர் அதிகாரியும்) திலகவதி வந்து விட்டதான தகவல். ‘எங்கே ஹால் ‘ என்றார் காவலர். ‘இதான்க ‘ என்றார் கலாப்ரியா. ‘மேடை கீடை இல்லையா ? ‘ என்றார் காவலர் அதிர்ந்து. வழக்கம் போல திவான் பங்களாவின் முகப்பு ஹாலில் ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. இரண்டு நாற்காலிகள் மட்டும். ‘இதாங்க ‘ என்றார் கலாப்ரியா. ‘வேற மாதிரி ஏதாவது செய்யுங்க. ஐ.ஜியம்மா வராங்க ‘. ‘இது இப்படித்தாங்க.. அந்த அம்மாவுக்கும் தெரியும் ‘ என்று கலாப்ரியா சொல்ல காவலர் ஒன்றும் புரியாமல் குழம்பி ஒவ்வொருவரையாக பார்த்த பிறகு கிளம்பிச் சென்றார்.

திலகவதி வந்ததும் நேரடியாக நிகழ்ச்சி தொடங்கியது. தருமபுரி சிவக்குமார் பதிவுகள் அமைப்பு குறித்து அறிமுகம் செய்து அனைவரையும் வரவேற்றார். குற்றாலம் நீண்ட காலமாகவே ஒரு இலக்கிய முக்கியத்துவம் உடையதாக இருந்து வந்துள்ளது. ரசிகமணி டி.கே.சிதம்பரனாத முதலியார் வாழ்ந்த வரை இலக்கியம் ரசிக்க வந்தவர்கள் வந்த படியே இருந்தார்கள். பதிவுகள் ஒரு வகையில் அவரது இடத்தை பூர்த்தி செய்கிறது என்றார். டி.கே.சிக்கு சமகால இலக்கியம் பற்றி பெரிய மதிப்பு இருந்ததில்லை, அந்த இடைவெளியை பதிவுகள் நிரப்புகிறது என்றார். (ஆனால் டி.கே.சி சமகால எழுத்து, கவிதை குறித்து மிக உயர்ந்த கருத்துகளை கூறியுள்ளார் என்பதே உண்மை. கல்கி குறித்தும், கவிமணி குறித்தும் அவர் கூறிய மதிப்பீடுகள் மிக மிக உயர்வு நவிர்ச்சி சார்ந்தவை. உண்மையில் நவீன எழுத்தை அறியத்தான் டி.கே.சியால் முடியவில்லை. இது இந்திய மொழிகளிலெல்லாம் நவீன இலக்கியம் அறிமுகமானபோது நிகழ்ந்தது தான். பண்டைய இலக்கியங்களிலிருந்து உணர்ச்சி மிக்க புத்தெழுச்சி (ரொமாண்டிக்) இலக்கியம் வழியாக படிப்படியாக நவீன இலக்கியம் உருவாகி வந்தது ஐரோப்பாவில். இந்திய மொழிகளில் ஐரோப்பாவிலிருந்து நவீன இலக்கியம் பாய்ந்து வந்தது. அணிநயம், உயர் கருத்து ஆகியவற்றால் படைப்பை மதிப்பிடும் பண்டைஇலக்கிய வாசர்களுக்கு நவீன இலக்கியத்தின் இறுகிய வடிவம், சகஜத்தன்மை, எதிர்ப்பு தன்மை ஆகியவற்றை ரசிக்க முடியவில்லை. அவர்கள் பார்வையில் பண்டை இலக்கியத்தின் முதிரா நாவல்கள் தான் பெரும் சமகாலப் படைப்பாளிகள். இதற்கு வையாபுரிப்பிள்ளை மட்டுமே விதி விலக்கு – புதுமைப்பித்தனை ரசித்த பழந்தமிழ் மரபினர் அவர். இதை பிறகு நான் அவைக்கு வெளியே விவாதித்தேன். தொடர்ந்து யோசித்தால் நமது மரபு நவீன யுகத்தை எதிர்கொண்ட விதத்தைப் பற்றி விரிவாக வெளிப்படுத்தும் பாதை இது.)

தொடர்ந்து திலகவதி நேரடியான உரையாடல் மொழியில் அவர் வெளியிட்ட நூல்களைப் பற்றி பேசினார்கள். அச்சிலிருந்து நூல்களைப் பெற்று படித்துவிட்டு வந்து ஒருவர் பேசுவது தமிழில் அபூர்வம். ( ‘இந் நாவலை நான் படிக்கவில்லை. இதன் அட்டையை மட்டிலும் பார்த்தேன் – வெளியீட்டுரையை துவக்குவது தமிழ் மரபு.) தேவதேவன், கலாப்ரியா ஆகியோரின் சமீபத்திய தொகுதிகளில் அவர்களுடைய கவிதைப்பாணியின் முதிர்ச்சி நிலை தெரிகிறது என்று திலகவதி மதிப்பிட்டார். கலாப்ரியாவின் கவிதை மேலும் சுருக்கமாகவும் உணர்ச்சி கலவாமலும் ஆகிவிட்டிருக்கிறது. மகாதேவனின் கவிதைத்தொகுப்பு எளிமையாக இருப்பதும் நேரடியாக இருப்பதும் தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார். திலகவதி அதன் முன்னுரையில் ஆசிரியர் தன்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தாமல் ஒரு சமூக சேவகனாக அடையாளப்படுத்துவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக கூறினார். இன்றைய மலையாளகவிதைகள் என்ற பெயரில் ஜெயமோகன் தொகுத்து ஜெயமோகனும், நிர்மால்யாவும் சேர்ந்து மொழிபெயர்த்த நூல். ஏற்கனவே ஜெயமோகன் மொழிபெயர்த்த ‘தற்கால மலையாளக் கவிதைகளின் ‘ தொடர்ச்சியாக வாசித்ததாக குறிப்பிட்ட திலகவதி பொதுவாக இந்திய மொழிகளுக்கு இடையே ஆத்மார்த்தமான இலக்கிய உரையாடல்கள் நிகழாது போய்விட்ட நிலையில் இம்முயற்சி பெரிதும் முக்கியத்துவம் உடையது என்றார். மொழிபெயர்ப்பு மூலமே அசலான இலக்கியப் புதுமைகள் நமக்கு வர முடியும் என்று கூறி பாரதி வசன கவிதை எழுதுவதற்கு முன்பே தமிழில் மில்டனின் ‘ paradaise lost ‘ வசன கவிதையாக மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமன்றி அதில் கவிதையானது வசனமாகவே துல்லியமாக முன்வைக்கப்பட முடியும் என்று மொழி பெயர்ப்பாளர் விவாதித்திருந்ததாகவும் கூறினார். அப்பாஸ், ரவி சுப்ரமணியன் கவிதைத் தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

வெளியிடப்பட்ட புத்தகங்கள்:

1. விண்ணளவு பூமி – தேவதேவன்

2. அனிச்சம் – கலாப்ரியா

3. இன்றைய மலையாள கவிதைகள் – ஜெயமோகன்

4. ஆம் நண்பர்களே, அதுதான் நடந்தது – மகாதேவன்

5. வயலட் நிற பூமி – அப்பாஸ்

6. காலாதீத இடைவெளியில் – ரவி சுப்ரமணியன்

தொடர்ந்து கலாப்ரியா கவிதைகளை முன்வைத்து விக்ரமாதித்யன் நீண்ட கட்டுரை ஒன்றை வாசித்தளித்தார். பொதுவாக தமிழில் கவிதை குறித்த எழுத்து மிகவும் குறைவாக இருப்பதாகவும் கவிதை நுட்பங்களோ பேசுந்தோறும் விரிவடையக்கூடியவை என்று குறிப்பிட்டார். கலாப்ரியா தன் கவிதையில் தமிழ் மரபுக்கு மாறாக உவமை முதலிய அணியலங்காரங்களோ, புதிய கவிதைக்குரிய படிமங்களோ இல்லாமல் காட்சி வடிவமாக தன் கவிதைகளை எழுதியிருக்கிறார். இக்க்காட்சிகளின் வழியாக அவர் தமிழ் சமூகம் மீது ஆழமான விமரிசனத்தை முன் வைக்கிறார் என்றார்.

இரண்டு கருத்துகள் விக்ரமாதித்யன் கட்டுரையில் விவாதங்களை ஈர்த்தன. ஒன்று கலாப்ரியா கவிதையில் மரபு, இடம், காலம் ஆகியவை துல்லியமாக உள்ளன என்று கூறி தமிழ் புதுக்கவிதைகள் பொதுவாக இத்தகைய கால, மரபு அடையாளங்கள் இன்றி வானத்தில் நிற்கின்றன என்றார். இத்தகைய தனித்துவம் அடையாளம் மூலமே அவருடைய கவிதை இரண்டாயிரம் வருடத்து கவிமரபுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றன என்றார். இதற்கு திலகவதி, அப்பாஸ், டி.கண்ணன் உட்பட பலர் தீவிரமாக எதிர்வினையாற்றினார்கள். தமிழ் கவிதையில் இட அடையாளம் என்பது தன்னளவில் இருந்தபடித்தான் உள்ளது, பழமலை முதலியோர் வேறு வகை இட, கால, மரபு அடையாளங்களை முன் வைப்பவர்கள். விக்ரமாதித்யன் கலாப்ரியா கவிதைகளில் உள்ள வேளாள அடையாளத்தையே தமிழ் மரபாக சித்தரிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எம்.யுவன் விக்ரமாதித்யன் இங்கு குறிப்பிடும் மரபு, இடம், காலம் முதலியவற்றை எப்படி பொதுவாக வகுத்துக்கொள்ள முடியும் என்று கேட்டார். ‘கவிஞனின் அகம் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் மரபும் இடமும் காலமும் எது என்று எப்படிக் கூற முடியும் ? புற வயமான கால இடத்தை ஒரு கவிஞனுக்கு நிபந்தனையாக ஆக்க முடியுமா ? ‘ என்றார் யுவன். விக்ரமாதித்யன் தன் கட்டுரையில் இத்தகைய கால இட அடையாளத்தை ஒரு நிபந்தனையாக கூறவில்லை, அதை கலாப்ரியாவின் சிறப்பியல்பாகவே கூறினேன் என்றார். பிரேம், ரமேஷ் இருவரும் இங்கு உட்புகுந்து விக்ரமாதித்யன் தன் கருத்திலிருந்து பின் வாங்குகிறார் என்றார்கள். அதற்கு அவசியமே இல்லை. கலாப்ரியா கவிதைகளில் துல்லியமான கால, இட அடையாளம் உள்ளது. அது அவரது சிறப்பம்சம். அதிலிருந்து அவர் தன் அக உலகை உருவக்குவது சிறந்த கவிதைப் பயணம் தான். அதை நிராகரிக்க வேண்டியதில்லை. பிரச்சினை அதனுடன் விக்ரமாதித்யன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் விதம் தான். குறுக்குத்துறை சுப்ரமணிய சாமி கோயில், சென்ரல் தியேட்டர் என்று கலாப்ரியா கூறும் இட அடையாளங்களும், கோமதிம் நெல்லையப்ப பிள்ளை என்று அவர் கூறும் இன அடையாள்ங்களும் விக்ரமாதித்யனுக்கு அவரும் நெல்லைக்காரர் என்பதனால் தரும் அறிமுகம் சார்ந்து எந்த விதத்திலும் முக்கியமல்ல. அவ்வடையாளங்கள் தங்களுக்கு எவ்வகையிலும் அறிமுகமல்ல. அவற்றுக்கும், இலத்தீன் அமெரிக்காவிற்கும் தங்கள் அளவில் வித்தியாசமில்லை. அவை கவிதையில் அமைந்திருக்கும் விதம் குறித்தே விக்ரமாதித்யன் பேசியிருக்கவேண்டும் என்றார் பிரேம்.

விக்ரமாதித்யன் கலாப்ரியா கவிதைகளில் அவரது குடும்பம் தென்படுகிறது என்று கூறி பொதுவாக தமிழ் கவிஞர்கள் குடும்பத்தில் ஒன்றி வாழ்பவர்களாயினும் தங்கள் கவிதையில் குடும்பத்திற்கு இடமே அளிப்பதில்லை. விசித்திரமான ஓர் இருண்ட அறையில் தங்களை வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள் என்றார். இதுவும் வாதங்களைக் கிளப்பியது. கவிஞன் ஏன் குடும்பம் பற்றி எழுத வேண்டும் என்றார் யுவன். குடும்பம் பற்றி எழுத வேண்டுமென்றால் அலுவலகம் பற்றி தெரு பற்றியும் எழுத வேண்டும் கடைசியில் கவிதையில் அவனது அன்றாட வாழ்வு மட்டும் தானே இருக்கும். கவிஞன் எழுதத் தேர்வு செய்யும் கரு எப்படி இருக்க வேண்டும் என்று எப்படி பிறர் கூற முடியும் என்றார் அப்பாஸ். பிரேம், ரமேஷ் இருவருமே இக்கருத்து மிகவும் மேம்போக்கானது என்றார்கள். குடும்பம் என்றால் என்ன ? திருமண உறவா, இனக்குழுக்குடும்பமா, பிறந்து வளர்ந்த வீடா ? கவிஞன் எழுதுவது அவன் பிரச்சினைப்படுத்தும் விஷயங்களைப்பற்றி மட்டுமே என்றார்கள் இருவரும். விவாதம் நீண்டு மதிய உணவு நேரத்தில் முடிந்தது. பொதுவாக விக்ரமாதித்யன் விவாதங்களை எதிர்த்து வாதாடவில்லை, தன் கருத்துகளை வலியுறுத்தி நின்று விட்டார்.

இப்பிரச்சனைகள் சார்ந்து விக்ரமாதித்யனிடம் ஒரு விஷயத்தை அரங்கு முடிந்த பிறகு கூறினேன். தமிழ் மரபில் அணி அலங்காரமோ, படிமமோ அல்லாத காட்சிக் கவிதைகள் இல்லை என்று விக்ரமாதித்யன் கூறியது சரியல்ல. காட்சிகவிதைகள் சங்க மரபின் முக்கியமான பகுதியாகும். இது குறித்து கலாப்ரியாவின் முழுக் கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய நீளமான பின்னுரையில் ( காட்சியும் கலகமும் – கலாப்ரியா கவிதைகள் தமிழினி வெளியீடு) விரிவாக விவாதித்துள்ளேன். கலாப்ரியா அம்மரபின் தொடர்ச்சிதான். படிமங்களினாலன நவீன ( நவீனத்துவ) மரபுக்கு மட்டுமே அவர் அன்னியர் என்பது என் கருத்து. விக்ரமாதித்யன் தன் மனதில் மரபு எனும்போது காவிய, பக்தி மரபே இருந்தது என்றார்.

விக்ரமாதித்யனின் இரு வினாக்கள் குறித்து நண்பர்களிடம் பிறகு விவாதித்தேன். விக்ரமாதித்யன் கிளப்பிய இரு பிரச்சினைகளுமே நவீனத்துவ கவிதை மீது எழுப்பப்பட்ட முக்கியமான வினாக்கள். ஆனால் அவற்றை கவிஞர்களின் பிழை அல்லது தந்திரம் என்ற அளவில் அவர் புரிந்துகொண்டதே பிரச்சினை. நமது நவீனத்துவ கவிஞர்களில் கணிசமானோர் ஆழமான இறை பக்தி உடையவர்கள். ஏன் கலாப்ரியாவே கூட வருடம் தவறாது சபரிமலை செல்பவரே. ஏன் இவர் கவிதையில் மதமோ கடவுளோ பக்தியோ இல்லை ? ஏன் இவர்கள் கவிதை மட்டும் எப்போதும் அகக்கட்டுமானத்தில் துல்லியமான பகுத்தறிவுடன் இருக்கிறது ? பதில்/பிரச்சினை நவீனத்துவத்தில் உள்ளது. அங்கு ஒருங்கிணைவுள்ள, துல்லியமான பார்வையுடைய ‘படைப்பாளி ‘ என்ற ஆளுமை உருவகிக்கப்படுகிறது. அது காம்யூவாக இருப்பினும் சரி, சுந்தர ராமசாமியாகவோ, ஜே.ஜேயாகவோ இருப்பினும் சரி, கலாப்ரியாவாக இருப்பினும் சரி. பிறகு அந்த படைப்பாளியின் ஆளுமையின் வெளிப்பாடாக படைப்பு அமைகிறது. படைப்பிற்குள் படைப்பாளி மேலும் மேலும் வலுப்பெற்றபடியே தான் போகிறான். அவன் தோற்கடிக்கப்படுவதோ, மீறப்படுவதோ, மறுக்கப்படுவதோ இல்லை. இந்த சுய உருவகத்தை நவீனத்துவ படைப்பாளிகள் எந்த தளத்தில் வைத்து உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பதே அதை தீர்மானிக்கும் அம்சம். ‘பொதுவான ‘ ‘உலகளாவிய ‘ ‘பெரிய ‘ உண்மைகளை கூறுபவனாக படைப்பாளி தன்னை உருவகித்துக் கொள்கிறான். அவன் குடும்பம், ஊர் என்று பேசினால் கூட அந்த பீடத்தில் இருந்தபடிதான். தன்னைப் பற்பல தளங்களில் சிதறிப்பரவும் ஒரு தன்னிலையாகப் பார்க்கும் போது தான் புதிய கவிஞன் ‘சிறிய ‘ உன்மைகளை கூறும் திராணி பெறுகிறான்.

மதியத்திற்குப் பிறகு கன்னடக் கவிஞர்களுடன் தமிழ் கவிஞர்கள் கவிதைகளை முன் வைத்து விவாதிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கன்னடக் கவிஞர்களான சிந்தாமணி கொட்லகரே, ரகுநாத் ஆகிய இருவரும் அன்று காலையில் தான் வந்து சேர்ந்திருந்தனர். இவர்களில் மூத்தவரான சிந்தாமணி கர்நாடகத்தில் கார்வார் பகுதியை சேர்ந்தவர். நாற்பது வயதானவர். மூன்று கவிதைதொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டவர். (இவருடைய பேட்டியும், கவிதைகளும் சொல் புதிது இதழில் வந்துள்ளது) ரகுநாத் ஒரு தொகுப்பு மட்டும் பிரசுரித்த இளைஞர். பொதுவாக மதிய அரங்கு கவிதைகளை வாசிப்பதிலேயே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. பாவண்ணன் தேர்வு செய்த தமிழ் கவிதைகள் பாவண்ணனாலும் சிந்தாமணி கொட்லகரெவாலும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தன. பாவண்ணன் தமிழ் கன்னட பரஸ்பர மொழி பெயர்ப்பாளராக அமைந்து அரங்கை நெறிப்படுத்தினார்.

முதலில் விக்ரமாதித்யனின் ‘ பொருள் வயின் பிரிவு ‘ என்ற கவிதை வாசிக்கப்பட்டது. இது ஒரு படிமமற்ற க்விதை ( plain poetry) என்ற வகையில் சிறப்பாக வந்திருப்பதாக சிந்தாமணி சொன்னார். பொருளுக்கு வீடு விட்டு கிளம்பும் தருணத்தை மிகக் குறைவான சொற்களில் முழுச்சித்திரமும் உருவாகும் படி படைத்திருப்பது படிமமற்ற கவிதையின் துல்லியமான இலக்கணப்படி அமைந்துள்ளது என்றார். மேலும் படிமமற்ற நேர் கவிதை சமகால வாழ்வின் அர்த்தமற்ற சாதரணமான இயல்பை அழுத்திக் காட்டவே பொதுவாக பயன்படுகிறது. அந்த இயல்பு இந்த கவிதையில் சிறப்பாக அமைந்துள்ளது. புத்தரின் மகாபிரஸ்தானம் (துறவு பூண்டு வீடு விடுதல்) போல ஒரு பெரிய நிகழ்விக்குப் பதிலாக இந்த எளிய புறப்படுகை முன் வைக்கப்பட்டிருக்கிறது. தேரோட்டி கிருஷ்ணனின் பின்னால் அமர்ந்து கீதை கேட்கும் அர்ச்சுனன் நினைவு வருகிறது. (டிரைவருக்குப் பின் இருக்கை) எத்தனை அற்பமான எளிய வாழ்வு என்ற சித்திரத்தை இக் கவிதை மனதில் எழுப்புகிறது என்றார் சிந்தாமணி. இதிலுள்ள ‘பொருள் வயின் பிரிவு ‘ என்பது ஒரு சங்ககால கரு, அந்த உட்குறிப்பு கன்னடக் கவிதையில் கிடைக்கிறதா என்றார் யுவன். ஆம், அது கன்னட அரங்ககலைகளிலும் உள்ள கருதான் என்றார் சிந்தாமணி.

சிபிச் செல்வனின் கறுப்பு நாய் ஒரு படிமமாக மட்டும் நின்று விட்டது. அதற்கு அப்பால் மேலதிக பயணம் நிகழவில்லை என்றார் சிந்தாமணி. ஆனால் அதை ஒரு உருவகமாகவே குறீயீடாகவோ மாற்ற முற்படாமல் நின்று விட்ட கவனம் சிறப்பாக உள்ளது என்றார்.

சங்கரராம சுப்ரமணியனின் ‘அம்மா நீங்கிய அறையில் ‘ கவிதை கன்னடக் கவிஞர்களால் சிறப்பாக ரசிக்கப்பட்டது. அக்கவிதையின் கச்சிதமும் அப்படிமத்தின் அழகும் தன்னை பெரிதும் கவர்ந்ததாக கூறிய சிந்தாமணி குழந்தை ‘இறுதியாகவும் ‘ அப்போது தான் கடவுளை சந்திக்கிறது எனும் குறிப்பில் இருந்த ஆழமான துக்கம் ஒரு வகையில் காலம் கடந்தது என்றார். கவிதை அதிகமும் புனைவுலகுக்கு உரிய சத்தியங்களை பயன்படுத்தி இயங்குவது என்பதை ஒரு குறையாகவும் சிறப்பம்சமாகவும் சிந்தாமணி குறிப்பிட்டார்.புனைவு என்ற முறையில் கச்சிதமாகவும் துல்லியமாகவும் உள்ள அப்படைப்பு கவிதை என்று பார்க்கையில் தொடர்ந்து விரிவடையும் மனச்சித்திரங்களை அளிக்க்கவில்லை என்றார். கவிதை சார்ந்த விவாதங்களில் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த அம்சம் தமிழின் திறன்மிக்க கவிஞர்களின் அடிப்படைக் கருத்துக்களும் சிந்தாமணியின் விமரிசனக் கருத்துகளும் பெரிதும் ஒத்துப் போனது தான். பண்டைய கவிதை இலக்கணாம் வகுக்கப்பட்டு, எழுதப்பட்டு, கற்பிக்கப்பட்டது. நவீனக் கவிதை தன் இலக்கணத்தை கவிதைப் பரிமாற்றம் மூலமே அடைகிறதா என்ன ?

அரங்குக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தபோது இங்கு வாசித்து பாராட்டப்பட்ட விக்ரமாதித்யனின் கவிதையை பல வருடங்களுக்கு முன்பு இதே பதிவுகள் அரங்கில் கோ.ராஜாராம் வாசித்து ஒரு ஜோடனை என்று விமரிசித்தார் என்று நினைவு கூர்ந்தார் அப்பாஸ். அப்போது கிடைக்கப் பெறாத கவனம் இக் கவிதைக்கு இப்போது கிடைப்பது தமிழ் புதுக்கவிதை மெல்ல மெல்ல படிமங்களில் சலிப்புற ஆரம்பித்திருப்பதனால் தான் என்றார் எம்.யுவன். படிமங்களை தொகுப்பது, படிமங்களே இல்லாது எழுதுவது என்ற அளவில் தமிழில் கவிதையின் சவால் அமைந்துள்ளது என்றார். கூட்டம் கூட்டமாய் பேசியபடி குளிக்கக் கிளம்பினார்கள். நானும் சிந்தாமணியும் தனியாக நின்று பேசினோம். தமிழிலும் கச்சிதமான சிறிய கவிதைகள் எழுதப்படுவது தனக்கு மிகுந்த நெருக்கத்தை அளிக்கிறது என்றார் சிந்தாமணி. கன்னட கவிதை விமர்சர்கள் சிறு கவிதைகளைப் பொருட்படுத்துவதில்ை. பெரிய வடிவமுள்ள கவிதைகளையே விமர்சன ரீதியாகப் பொருட்படுத்துகிறார்கள் என்றார். இந்நிலையே மலையாளத்திலும் உள்ளது என்று நான் கூறினேன். மலையாளத்தில் இன்று முக்கியமாக எழுதி வரும் கவிஞர்கள் நீண்ட கவிதைகளை எழுதுபவர்களல்ல. ஆனால் அதற்கு முன்பு வரை எல்லா கவிஞர்களும் பல பக்கங்களுக்கு நீளும் கவிதைகளையே எழுதி வந்தார்கள். டி.பி.ராஜிவன் எழுதும் (சிறிய) கவிதைகளைப் பற்றிப் பேசும் போது ஒரு மலையாள விமர்சகர் அவற்றை ‘சில்லறைகள் ‘ என்று குறிப்பிட்டார் என்று நான் கூறினேன். இந்நிலை தமிழில் இல்லையா என்று சிந்தாமணி கேட்டார். இல்லை என்று கூறினேன். அதற்குக் காரணங்கள் பல ஒன்று அரங்கில் விக்ரமாதித்யன் கூறியது போல நமது மரபே குறுங் கவிதை மரபு தான். நமது பெரும் காவியங்களில் கூட குறிய செய்யுள் வகைகளினால் ஆனவை. நீளமாக ஆசிரியப்பா முதலிய பா வகைகள் வெகுகாலம் முன்பே கைவிடப்பட்டுவிட்டன. தமிழ் கவிதை வாசகன் இன்றும் சிறு எண்ணிக்கையிலானவன். ஆகவே கவிதையின் உருவ, உணர்வு மாற்றங்கள் தமிழில் எளிதில் நிகழ்ந்து விடுகின்றன என்பது இன்னொரு காரணம். தமிழில் நவீனக் கவிதை வந்ததே குறுங் கவிதை வடிவில் தான். விதிவிலக்கு பிரமிள் எழுதிய சில நீள் கவிதைகள். (கலாப்ரியாவும் தேவதேவனும் எழுதிய குறுங்காவியங்கள் வேறு வகை முயற்சிகள்) நவீனக் கவிதை உலகமெங்கும் குறுகிய வடிவு பெறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று நவீன கவிஞனிடம் நேர் நிலையான ஒரு வாழ்க்கைத் தரிசனம் இல்லை. ‘தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் (பாரதி), ‘அன்பே அகில சாரம் (குமாரன் ஆசான் – மலையாளம்) என்றெல்லாம் அவனால் கூற முடியவில்லை. நேர் நிலையான தரிசனம் உடைய கவிஞன் அதனடிப்படியில் தான் அறியும் அனைத்தையும் தொடுத்து முன் வைக்க முயல்கிறான். அவனுக்கு நீள் கவிதை தேவையாகிறது. நவீனத்துவ கவிஞனின் வேலை முரண்படுவது தான். வியாசன் முதல் பாரதி வரை கபிலன் முதல் கண்ணதாசன் வரையிலான மரபை அவன் விமர்சிக்கிறான், மறுதலிக்கிறான். சொற்பொழிவின் நடுவில் எழுந்து கேள்வி கேட்பவன் அவன். ஆகவே அவன் கச்சிதமாக கூர்மையாக இருக்க வேண்டியுள்ளது. நவீன்/ நவீனத்துவக் கவிதையில் எப்பொதுமுள்ள எதிர்மறை மனோபாவத்திற்கும் அதன் குறுகிய தீவிரமான வடிவத்திற்கும் நேரடியான உறவு உள்ளது என்று நான் கூறினேன். தன் எதிர்ப்பை, மீறலை தொகுத்து ஒரு தரிசனமாக மாற்ற அக்கவிஞன் முயலும் போது அவனும் நீண்ட கவிதைக்கு போகலாம். விமரிசகர்கள் என்ற தனி ஜாதி தமிழில் இல்லை. கன்னடத்திலும். மலையாளத்திலும் உள்ள விமரிசகர்கள் பொதுவாக கல்லூரி இலக்கிய ஆசிரியர்கள். அவர்களுக்கு கற்பனைத்திறம் இல்லை. அவர்கள் தங்கள் ஆய்வறிவால் ஆராய்வதற்கு இலக்கியப் படைப்பின் ‘கருத்துசார்ந்த எலும்புக்கூடு ‘ களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். நீள் கவிதையில் அதன் தொகுப்புக்கூறாக அறிவார்ந்த தளம், கருத்துச் சட்டகம் ஒன்று இருக்கும். விமரிசகர் அதையே அதிகமும் பொருட்படுத்தி பேசுகிறார்கள். சிறிய கவிதை குறித்து பேச நிறைய கற்பனை தேவை. அது தான் அவர்களுடைய பிரச்சினை என்றேன். எம்.யுவன் புது விமர்சகர்கள் கூட இலக்கியத்தின் ‘அறிவுறுத்தும் பொறுப்பு ‘ மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவிதையின் அனுபவ தளத்தை பயன்படுத்துவதில்லை. இதுவே பிரச்சினை என்று தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். எப்போதும் விமரிசகர்கள் சற்று பிந்தித்தான் வந்து சேர்கிறார்கள் என்றார்.

(தொடரும்…)

Series Navigation