இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்

This entry is part of 37 in the series 20070208_Issue

பாரதி மகேந்திரன்1 கத்தரிக்காய்க் கறி (சாதாரண வகை)

தேவையானவை

கத்தரிக்காய் – பிஞ்சானவை – அரை கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – ஒன்றேகால் மே.க.
மஞ்சள் பொடி – கால் தே. க.
கடுகு – 1 தே.க.
உளுத்தம் பருப்பு – 1 மே. க.
பெருங்காயப்பொடி – 1 தே.க.
மிளகாய் வற்றல் – 4

கத்தரிக்காய்களை குறுக்கும் நெடுக்குமாகவோ அல்லது நெடுக்கு வாக்கிலோ ஒவ்வொன்றையும் நான்காக அரிந்துகொள்ளவும். பிறகு அத் துண்டங்களைத் தண்ணீரில் கழுவி வடிகட்டவும். கடா¡யில் புளியைக் கரைத்து ஏனத்தில் ஊற்றி, அதில் கொதி வரத் தொடங்கிய பிறகு கத்தரிக்காய்த் துண்டங்கள், உப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைப் போடவும். காய்கள் வெந்ததும் அவற்றை சல்லடக்கண் தட்டு ஒன்றில் வடிகட்டவும். (வடிகட்டிய நீரை வீணாக்காமல், அதை ரசத்திலோ, சாம்பாரிலோ சேர்க்கலாம்) பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அது காயும்போது கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, வடிகட்டிய கத்தரிக்காய்த் துண்டங்களை அதில் போட்டு, சல்லடைத்தட்டால் மூடி வைக்கவும். (கண்கள் இல்லாத தட்டை மூடினால், நீர் சொட்டிக் கத்தரிக்காய்க் கூட்டுப் போல் ஆகிவிடும். கண்கள் உள்ள தட்டாக இருந்தால் ஆவி வெளியே போய்விடும்.) சிறிது நேரத்துக்கு ஒரு முறை கிளறி விட்டுப் பெருங்காயப் பொடியை அதில் போடவும். கண்தட்டால் மூடிய பிறகும் காயில் நீர் சொட்டி யிருப்பின், அதில் சிறிதளவு அரிசிமாவு, கடலை மாவு ஆகியவற்றைத் தூவிக் கலந்து ஒரிரு நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

2. கத்தரிக்காய் எண்ணெய்க் கறி

சாதாரணக் கத்தரிக்காய்க் கறிக்குச் சொன்ன அதே பொருள்கள்தான். ஆனால் மிளகாய் வற்றலுக்குப் பதில் மிளகாய்ப் பொடி போட்டால் நன்றாக இருக்கும். எண்ணெய்யும் கூடுதலாக விட வேண்டும். (சுமார் இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்.)

இந்தக் கறி செய்வதற்குக் கடாயில் முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தாளித்து அதில் கத்தரிக்காயப் போட்டு அடிக்கடி திருப்பி வதக்க வேண்டும். கத்தரிக்காயைப் போட்ட உடனேயே கூழான புளிக்கரைசலையும் அதில் ஊற்றவும். முக்கால் வாசி வதங்கியதன் பிறகு பெருங்காயப்பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள்பொடி ஆகியவற்றை அதில் கொட்டிக் கலந்து முழுவதுமாக வதங்குகிறவரையில் கிளறவும். பிறகு சாப்பிடவும். (மிகவும் துவர்க்கும் காயாக இருந்தால், அரைத் தேக்கரண்டி போல் சர்க்கரையோ, வெல்லமோ சேர்க்கலாம். வேகும் போது போட்டுவிட வேண்டும்.)


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation