மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)

This entry is part of 24 in the series 20070215_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


தரணி எங்கும் தொழிற் துறைகள்
சூழ்வெளியில்
கரும் புகை ஊட்டுமடா!
கயவர் கூட்டம்
காட்டு மரங்களில் தீ மூட்டுமடா!
போரிலும் புகைதான்!
ஈராக் எண்ணைக் கேணிகளும்
எழுப்புதடா தீப்புகை!
தவறு செய்யும் மனிதர் கூட்டம்
தப்பிக் கொண்டு போகுமடா!
துப்புரவு செய்தி டாமல்
தொழிற் சாலைகளின்
கரிவாயு மூட்டம்
விரிவானில் நாள் தவறாது
அடுக்க டுக்காய்ச் சேருதடா!
நிலவளம், நீர்வளம், கடல்வளம்,
மனித நலம், உயிர் நலம், பயிர்வளம்
புனிதம் யாவும்
இனி யுகத்தில்
சிதைந்து போகுதடா!
வெப்ப யுகப் பிரளயம்,
வீதிமுன் வந்து நிற்குதடா!

**************

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை! மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

“1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது!”

“2001 ஆண்டில் பூகோள உஷ்ணம் (1880-2000) ஆண்டுகளின் சராசரி உஷ்ணத்தை விட 0.52 C ஏறுமென்று எதிர்பார்க்கப் பட்டது! எல்னினோ [El Nino] விளைவால் 1998 ஆண்டு சூடான வருட மானத்திற்குப் பிறகு, 2001 ஆண்டு அடுத்த சூடான ஆண்டாகக் கருதப் பட்டது. நிலப்பகுதியின் உஷ்ணம் அதே 120 ஆண்டுகளில் கடல் சராசரி உஷ்ணம் 0.41 C யிலிருந்து 0.77 C ஆக ஏறி யிருக்கிறது.

தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகம் [(NOAA) US National Oceanic & Admospheric Administration]

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது! சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்! அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும். அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வரலாம் என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

காலநிலை மாறுதல் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு

“2007 பிப்ரவரி 2 ஆம் தேதி பாரிஸில் ஐக்கிய நாடுகளின் பேரவைச் சார்பில் நடந்த அகில அரசுகளின் காலநிலை மாற்ற ஆய்வு அரங்கத்தில் நாற்பது நாடுகளின் 600 காலநிலை வல்லுநர்கள் ஆராய்ந்து தயாரித்து, 113 நாடுகளின் 300 பிரதிநிதிகள் உளவிப் பிறகு 2000 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து வெளியிட்ட முதல் அறிக்கை இது. அது ஓர் உன்னதத் தனித்துவச் சமூக விஞ்ஞானச் சாதனை அறிக்கை. காலநிலை வல்லுநர் ஆய்ந்து கூறியவற்றை மற்ற அறிஞர்கள் உளவி ஒப்புக் கொண்டதால் அந்த முடிவுகளுக்கு அடிப்படையும், பிடிப்பும், உறுதிப்பாடும் உள்ளன,” என்று IPCC [UN’s Intergovernmental Panel on Climate Change] தலைவர் இந்தியாவின் டாக்டர் பி.கே. பச்சௌரி கூறினார். முதன்முதலாக அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனித்தட்டுகள் பேரளவில் உருகி வருவதால், கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்று தெளிவாகக் கூறப்பட்டது. வெளியிட்ட முதல் கருத்துரை, பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதப் பங்கீடுகளும் ஒரு காரணம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. முதன்முதல் எவ்விதக் குழப்பமு மின்றித் தெளிவாக ஒரு மெய்ப்பாட்டு அறிக்கையை [Unequivocal Truth] உறுதியாகக் கூறியது: ” பூகோளம் சூடேறுவதாக எச்சரிப்பது ஓர் உறுதியான நிகழ்ச்சி! அதில், குறிப்பாகச் செயற்கைக் கார்பன் டையாக்ஸைடு வாயு வெளியேற்றத்தில் மனிதரின் கை முத்திரைகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் படிந்துள்ளன.”

பாரிஸ் கருத்தரங்கின் முதற்குழு வெளியிட்ட முடிவுகள்

1. சூழ்மண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் திணிவு [Concentrations] தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைப் போல் இரட்டித்தால், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் 3 டிகிரி C ஏறும், அதாவது உஷ்ண ஏற்ற நீட்சி [Temperature Range] 2 C முதல் 4.5 C வரை ஆகலாம் என்று கணிக்கப் பட்டது.

முதல் முறையாக விளக்கமான, துல்லிய காலநிலை மாற்றக் கணனி மாடல்களைத் தாயரித்து 21 ஆம் நூற்றாண்டில் நிகழ விருக்கும் உஷ்ண நீட்சி அளவுகள் கூறப்பட்டிருக்கின்றன.

2. கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு நிலை 650 ppm. [parts per million (ppm)] ஆக இருந்தால், உஷ்ண ஏற்றம் சுமார் 3.6 C. இருக்கலாம். வாயுக்களின் அளவு 750 ppm ஆகக் கூடினால் உஷ்ண ஏற்றம் 4.3 C. அதற்கும் மேலாக 1000 ppm ஆக உயர்ந்தால் 5.5 C, முதல் அளவைப் போல் இரட்டிப்பானால் [1200 ppm] உஷ்ண வீக்கம் 6.3 C என்று கணிப்பானது.

எதிர்கால கிரீன்ஹவுஸ் வாயுக்களின் திணிவுகளை ஊகிப்பது கடினம். ஏனெனில் அவை எதிர்காலத்தில் தோன்றப் போகும் புதிய தொழிற்சாலைகளைப் பொருத்தும், நிறுத்தப்படும் பழைய தொழிற்துறைகளைப் பொருத்தும், அமைக்கப் போகும் புதுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் மாறுபடுவவை.

3. கடந்த 100 ஆண்டுகளாக (1906-2005) பூதள உஷ்ணம் 0.74 டிகிரி C ஏறி யுள்ளது. 2007 இல் வெளியிட்ட அந்த அளவு 2001 ஆம் ஆண்டில் IPCC வெளியிட்ட நூறாண்டு ஏற்ற அளவை விட [0.6 டிகிரி C] அதிகமாகக் கணிக்கப் பட்டுள்ளது. 1850 ஆம் ஆண்டு நவீனப் பதிவுகளின் துவக்கத்துக்குப் பிறகு இதுவரை 12 உச்ச உஷ்ண ஆண்டுகள் பதிவாகி யுள்ளன. மேலும் கடந்த 12 ஆண்டுகளில் 11 தடவை மித மிஞ்சிய வெப்ப வேனிற் காலத்தை அனுபவித்த விபரங்களும் புதிய கணிப்புக்கு எடுத்தாளப் பட்டன.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு பூதளச் சூடேற்றக் கணிப்பு 0.2 டிகிரி C ஆகலாம் என்று தேர்வு செய்யப் பட்டிருக்கிறது.

4. 2007 பாரிஸ் அறிக்கையில் பனிக்களஞ்சியம், கீரின்லாந்து பனிப்பாறைகள், ஆர்க்டிக் வட்டாரப் பனித் தளங்கள் ஆகியவை உருகுவதால் 1999 ஆண்டு வரை உயரும் கடல் மட்ட ஏற்றம் (28-58 செ.மீ) (1-2 அடி) என்பதாகக் காணப்படுகிறது. ஆனால் 2001 அறிக்கையில் கடல் மட்ட ஏற்றம் (9-88 செ.மீ) (0.25-3.0 அடி) என்றுதான் கணிக்கப் பட்டது. காரணம் 2007 கணிப்பில் கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த புதிய விபரங்கள் பயன்படுத்தப் பட்டன.

ஆனால் பூதளப் பனிக் கிடங்குகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருந்தால் 2100 ஆம் ஆண்டில் 1 மீடர் [3.3 அடி] உயரத்துக்கும் எழலாம் என்னும் கடல் மட்ட ஏற்றக் கணிப்புகளை ஒதுக்க முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறது 2007 பாரிஸ் அறிக்கை. 125,000 ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பனிக் களஞ்சியங்கள் மிதமிஞ்சிச் சூடேறிய போது அவ்விதம் பேரளவில் உருகி கடல் மட்டம் (4-6 மீடர்) (12-20 அடி) உயர்ந்திருக்கிறது.

5. ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவங்களில் சேமிப்பான பனித் தளங்கள் எந்த வீதத்தில் சுருங்கலாம் என்பதும் கணிக்கப் பட்டிருக்கிறது. மனிதர் அமைத்த தொழிற்சாலைகளின் வாயுக்கள் சூழ்வெளியில் சேர்வதால் பெரும் பகுதிப் பனிப் பரப்புகள் 21 ஆம் நூற்றாண்டு முடிவில் உருகிப் போகலாம்.

ஆர்க்டிக் பனிக்கடல் ஏற்கனவே 1978 ஆண்டு முதல் பத்தாண்டுக்கு 2.7% வீதமாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது.

6. ஆண்டு தோறும் குளிர்காலப் பனித்தளப் படைப்பு வசந்த காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சற்று சுருங்கியதாகவே தெரிகிறது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிப் பாதிக் காலத்தில் வட கோளக் பனிக்களப் படைப்பு உச்சப் பரப்பில் 7% அளவு சிறுத்து விட்டதாக அறியப்படுகிறது.

கடந்த 150 ஆண்டுகளாக வட கோளத்தில் உள்ள ஏரிகள், ஆறுகளின் நீர் வெள்ளம் குளிர்ந்து பனியாகும் நாட்கள் ஒரு நூறாண்டுக்குச் சுமார் 6 நாட்கள் குன்றிவிட்டன. அதே சமயம் பனித்திட்டுகள் உடைந்து உருகும் நாட்கள் ஒரு நூறாண்டுக்கு 6.5 நாட்கள் முன்னதாக ஆரம்பித்து விட்டது.

7. 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது போலவே, 21 ஆம் நூற்றாண்டிலும் மலைச் சிகரங்களில் நீர்மைப் பொழிவு [Precipitation (Moisture)] மிகையாகும். ஆனால் வேனிற் தளங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் நீர்மைப் பொழிவு குறையும்.

8. வெப்பச் சூடேற்றம், வெப்ப அலை வீச்சுகள் [Global Warming & Heat Waves] 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து தாக்கும். அவ்விதத் தாக்கல்களின் தருணம், வரட்சி உக்கிரம் முன்னைவிட மிகையாகும். 20 ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆ·பிரிக்கா, தென்னாசியா, மத்தியதரைக் கடற் பகுதிகள் வரட்சி மிக்க பரப்புகளாக மாறி வருகின்றன.

9. சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு [CO2] மீதேன் [CH4] வாயுக்களின் கொள்ளளவுகள் தொழிற்புரட்சிக் காலத்தை விட அதிகமாகி யுள்ளன. தொழிற்புரட்சிக் காலத்தில் CO2 வாயுவின் திணிவு [280 ppm] அறியப்பட்டு, 2005 ஆம் ஆண்டில் அதன் அளவு 379 ppm ஆக மிகையானது. மீதேன் திணிவு 715 ppm அளவிலிருந்து 2005 ஆண்டில் 1774 ppm ஆனது.

10. உறுதியாக்கப் படாத குழப்பப் பிரச்சனைகள் முடிவில் தெளிவாக்கப்பட்டு அழுத்தம் அடைந்தன. துணைக் கோள்கள் பூகோளத்தைக் கண்காணித்துப் பதிவான உஷ்ண எண்ணிக்கை, பூதளத்தில் அமைக்கப்பட்ட கருவிகள் பதிவு செய்த எண்ணைக்கையுடன் ஒத்துப் பார்க்கப்பட்டுச் சீராக்கப் பட்டன. குறிப்பாக உறுதிப்பாடு ஆகாதவைகட்கு முகில், பனிக் களஞ்சியம், சிகரப் பனிக்கிரீடம் [Ice Cap], கடல், வன அழிப்பு மற்றும் காலநிலை ஏற்றத் தணிவு, உயிரியல், பூதள ரசாயனம் [Climate & Biogeochemical Cycles] போன்ற காரணிகள் மூலமாயின.

மேற்கூறிய IPCC முதற்குழு அறிக்கை பாரிஸில் பிப்ரவரி 2, 2007 இல் வெளியானது. இரண்டாம் குழு அறிக்கை பிரசெல்ஸில் ஏப்ரல் 6 தேதி வெளியாகும். முன்றாம் குழு அறிக்கை பாங்காக் நகரில் மே மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும். 2007 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் IPCC பூகோளச் சூடேற்ற நூல் நான்காவது
வெளியீடு. ஏற்கனவே 1990, 1995, 2001 ஆண்டுகளில் IPCC யின் முதல் மூன்று அறிக்கை நூல்கள் வெளியாகியுள்ளன.

(தொடரும்)
************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website, Canadian Geographic Magazine

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)
13 Earth Science And The Environment By: Graham Thompson Ph.D. & Jonathan Turk Ph.D [1993]
14 Canadian Geographic – Annual Environment Issue [May-June 2006]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 15, 2007)]

Series Navigation