மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)

This entry is part of 37 in the series 20070208_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


சூடு காலம் வருகுது! பூமிக்கு
கேடு காலம் வருகுது!
நாடு, நகரம், வீடு, மக்கள்
நாச மாக்கப் போகுது!
புயல் அடிக்க வருகுது!
புரட்டி மழை கொட்டப் போகுது!
நீரை, நிலத்தை, குளத்தைச் சிதைத்து
ஊரை அழிக்க வருகுது!
பயிரை, விலங்கை, வயிறை நசுக்கி
உயிரை நோக வைப்பது!
கடல் சூடு, மட்டம் ஏறி
கரைகள் மூழ்கப் போகுது!
மெல்ல மெல்ல ஏறி வெப்பம்,
மேலே மீறிப் போகுது!
சூட்டு யுகப் பிரளயம், நமது
வீட்டு முன்னே நிற்குது!
உன்னை, என்னை, அவனை உலுக்கி
உலகின் தோலை
உரித்து விடப் போகுது!

**************

“நாற்பது உலக நாடுகளைச் சேர்ந்த 600 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து தயாரித்த பாரிஸ் கருத்தறிக்கை (பிப்ரவரி 2007) சமூகத்துக்குச் செய்யும் ஓர் உன்னத, தனித்துவ உதாரண விஞ்ஞானப் பணியாகும்.”

டாக்டர். பி.கே. பச்சௌரி பாரிஸ் கருத்தரங்கத் தலைவர் [IPCC Chairman, Dr.P.K. Pachauri of India]

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

“பூகோளக் காலநிலைச் சீர்கேடுகள் பூதளத் துறைகளின் செம்மைப்பாடு நோக்கிச் செல்கின்றன! அதைப் பறைசாற்றும் எச்சரிக்கைச் சங்குகள் உலக நாடுகளின் தலைநகர் எங்கணும் ஒலிக்க வேண்டும்.”

ஜான் கம்மர் [John Gummer, British Environment Society (July 21, 1996)]

“பல்வேறு பணித்துறைக் காலநிலை கண்காணிப்பாளர் உலக நாடுகளில் ஒன்றுகூடித் தமது நிதிவளம், நேரம், ஆக்க உணர்வு அனைத்தையும் திரட்டி, எவ்விதத் தடையின்றி நீண்டகாலப் போராட்டத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் காலநிலைக் கோளாறு நரகத்தின் வாயிலை வெகு சீக்கிரத்தில் தொட நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

ராஸ் கெல்பிஸ்பான் [Ross Gelbspan (July 31, 2002)]

“20 நூற்றாண்டின் கடைசிக் கால வேளைகளில் விரைவாக ஏறிய வெப்பச் சூடேற்றத்துக்கு வேறெந்தக் காரணத்தைக் காட்டுவது? பூகோளச் சூழ்வெளியில் கண்ணாடி மாளிகை முறையால் [கிரீன்ஹௌஸ் வாயு விளைவு] வாயுச் சூடேற்றச் சேமிப்பால் உண்டான விளைவு என்றுதான் கூற வேண்டும்.”

பேராசிரியர் ·பிளிப்ஸ் ஜோன்ஸ் [Philip Jones Director, Climatic Research, University of East Anglia]

காலநிலை மாறுதல் பற்றிய பாரிஸ் கருத்தரங்கம் என்ன சொல்கிறது?

2007 பிப்ரவரி 2 ஆம் தேதி பாரிஸில் ஐக்கிய நாடுகளின் பேரவைச் சார்பில் நடந்த அகில அரசுகளின் காலநிலை மாற்ற ஆய்வு அரங்கத்தில் [UN’s Intergovernmental Panel on Climate Change (IPCC)] 113 நாடுகளின் 2000 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து வெளியிட்ட முதல் கருத்துரை, பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதப் பங்கீடுகளும் ஒரு காரணம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக 11 தடவை பூகோளத்தில் உச்ச உஷ்ண எண்ணிக்கைகள் பதிவாகி யுள்ளன! IPCC அறிக்கை கூறுவது: கடல் மட்ட உயர்வுக்கும், கடல் நீர் உஷ்ண ஏற்றத்துக்கும், மனிதர் அமைத்த நிலக்கரி எருவாக எரிக்கப்படும் தொழிற்சாலைகள் போன்றவை பெரும்பான்மைக் [90%] காரணியாகின்றன. கருத்துரையின் சுருக்கம் ஓர் எளிய முடிவில் அறிவிக்கப் பட்டது. முதன்முதல் எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவாக ஒரு மெய்ப்பாடை [Unequivocal Truth] அறிக்கை உறுதியாகக் கூறியது: “பூகோளம் சூடேறுவது ஓர் உறுதியான நிகழ்ச்சி! அதில், குறிப்பாகச் செயற்கைக் கார்பன் டையாக்ஸைடு வாயு வெளியேற்றத்தில் மனிதரின் கை முத்திரைகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் படிந்துள்ளன.”

சூழ்மண்டலம், கடல், துருவப் பனிமண்டலம், உச்சிப் பனிக்கூரைகள் ஆக்கியவற்றின் மாறுபாடுகளுக்கு நிச்சயமாக பூகோளச் சூடேற்றமே காரணம் என்பது கடந்த ஆறு வருடங்களின் ஆய்வு முடிவாகக் கூறப் பட்டிருக்கிறது. 1750 ஆண்டுக்குப் பிறகு துவங்கிய தொழிற் புரட்சியின் விளைவுகளால் மனிதர் படைத்த தொழிற் துறைகள் வெளியாக்கிய கிரீன்ஹௌஸ் வாயுக்களின் [கார்பன் டையாக்ஸைடு, மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு] கொள்ளளவுகள் சூழ்வெளியில் மிகுதியாகிக் கொண்டே வருகின்றன. அண்டார்க்டிக் ஓஸோன் துளை எவ்விதம் ஏற்பட்டதென விளக்கம் முதலில் அளித்த டாக்டர். சூஸன் சாலமன் [Dr.Susan Solomon] கூறுவது: பூகோளச் சூடேற்றத்துக்கு 90% பங்குக் காரணம், கிரீன்ஹௌஸ் வாயுக்களின் பெருக்கமே. 2001 ஆண்டில் மட்டும் காரணம் 66% பங்கெனக் குறிப்பிட முடிகிறது. சூஸன் சாலமன் கொலராடோ பல்கலைக் கழகத்தின் தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகத்தில் [National Oceanic Atmospheric Administration (NOAA)] ரசாயனத் துறையில் பணி புரிபவர்.

பூகோள சூடேற்றம் பற்றி வல்லுநர்களின் முடிவு

IPCC தலைவர் இந்தியாவின் டாக்டர் பி.கே. பச்சௌரி கூறுவது: “நாற்பது நாடுகளின் 600 காலநிலை வல்லுநர்கள் ஆராய்ந்து தயாரித்து, 113 நாடுகளின் 300 பிரதிநிதிகள் உளவி வெளியிட்ட முதல் அறிக்கை இது. அது ஓர் உன்னதத் தனித்துவச் சமூக விஞ்ஞானச் சாதனை அறிக்கை. காலநிலை வல்லுநர் ஆய்ந்து கூறியவற்றை மற்ற அறிஞர்கள் உளவி ஒப்புக் கொண்டதால் அந்த முடிவுகளுக்கு அடிப்படையும், பிடிப்பும், உறுதிப்பாடும் உள்ளன.” முதன்முதலாக அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனித்தட்டுகள் பேரளவில் உருகி வருவதால், கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்று தெளிவாகக் கூறப்பட்டது.

மைக்கேல் ஜெரார்டு [Secretary General World Meteorological Organization (WMO)] எடுத்துக் கூறுவது: “கடல் மட்டம் உயரும் வீதம் [Speed: Rate of Raise] இன்னும் உறுதியாக அறியப்பட வில்லை. IPCC கருத்துரை காட்டுவது, எதிர்வரும் நூற்றாண்டுகளில் கடல் மட்டம் நிச்சயம் உயரப் போகிறது என்பதுதான்.” ஐக்கிய நாடுகளின் சூழ்மண்டலத் திட்டத்துறை UNEP [UN Environmental Program], WMO ஆகிய இரண்டு துறைகளும் சேர்ந்துதான் IPCC கருத்தரங்கைப் பாரிஸில் ஏற்படுத்தி யுள்ளன. அசிம் ஸ்டைனர் [Achim Steiner, UNEP Executive Director] சொல்வது: “2007 பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு முக்கிய தினம். அன்றுதான் பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதர் பங்கீடு பெருமளவில் [66%-90%] உள்ள தென்னும் முடிவு உறுதிப்பாடு பெற்றது.”

அடுத்த வாரம் IPCC கருத்தறிக்கையின் உறுதியான முடிவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)
************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 8, 2007)]

Series Navigation