அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்

This entry is part of 51 in the series 20041118_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


[மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை அடைய, முதலில் என் பிரார்த்தனைகள்.]

சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்

பீரங்கி கொண்டு பிளப்பதுவும் எக்காலம் ?

இப்படி ஒருகாலத்தில் தி.மு.க. கவிராயர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் சங்கநாதம் செய்ததுண்டு! இப்போது அசுரன், ஞாநி போன்ற அணுசக்தி எதிர்ப்பாளிகள் பலர் அணுமின் நிலையங்கள் முன் நின்று பீரங்கியால் தாக்கி, இந்தியாவை இருட்டடிப்பில் தள்ள முற்பட்டு வருகிறார்கள். ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை விடுதலை இந்தியாவில் தமிழகம் புறக்கணிக்கப் படுவதைப் பல்லாண்டுகளாய்ப் பறைசாற்றி வந்தார். இப்போது இந்தியாவிலே இரண்டாவது பெரிய ஆராய்ச்சித் தளமான கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக்கூடம், மற்றும் சென்னை அணு மின்சக்தி நிலையம் ஆகியவைத் தமிழ்நாட்டில் நிறுவகமாகி இயங்கி வருகின்றன. தென்னாசியாவில் 2000 மெகாவாட் மின்சாரம் பரிமாறப் போகும் மிகப் பெரிய அணுமின்சக்தி நிலையம் இப்போது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கூடங்குளத்தில் கட்டுமானமாகி வருகின்றது. பாரதத்தின் பச்சை மயவாதிகள் ‘தெற்கும் தேயட்டும்! வடக்கும் வாடட்டும்! ‘ என்று அணுமின்சக்தி உற்பத்தியில் முன்னேறும் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை இட்டு வருகிறார்கள்!

21 ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கு முதல் தேவை நீர்வளம். இரண்டாம் தேவை மின்சக்தி. இந்தியாவின் இவ்விரு முக்கியத் தேவைகளுக்கும் இடையூறு செய்துவரும் எதிர்ப்பாளிகள் யாவரும் தேசப் பற்றில்லாத பிற்போக்குவாதிகளே! மக்கள் தொகை பெருகி வரும் இந்த யந்திர யுகத்தில் வாழும் நம்மை 15 ஆம் நூற்றாண்டுப் பச்சை யுகத்துக்குத் திருப்பி அழத்துச் செல்ல சூழ்மண்டலக் காப்பாளிகள், தயாராக மாட்டு வண்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூழ்மண்டலக் காப்பாளிகள் ஒரு நாட்டுக்குத் தேவையே. ஆனால் இந்தியா முழுவதிலும் அவர்கள் இனம் மட்டும் பெருத்துக் கொண்டே போனால், யந்திர யுகச் சாதனங்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டுக் கண்மூடி விடும். பலவித வர்ணங்களால் வரையப் பட்ட, பொலிவுள்ள பாரத தேசத்தைத் தூரிகை கொண்டு, ஒரே பச்சை நிறமாக்கினால் எப்படி கோரமாய்க் காட்சி தரும் என்று சிறிது நாம் கற்பனை செய்து பார்ப்போமா ? இப்படித்தான் இறைவனிடன் வரம் பெற்ற ஓர் அசுரன், உலகு அனைதையும் பச்சை நிறமாக்க முயன்றான் என்னும் பழைய கதை ஒன்று வழக்கத்தில் பரவி உள்ளது!

இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரண கர்த்தாவும் ஓர் அசுரன்தான். நண்பர் அசுரனைத் தாக்க இக்கட்டுரை எழுதப்பட வில்லை. அவரது தவறான கருத்துக்களை அணுசக்தி அம்மன் மீது அம்புகளாக தொடுத்திருப்பதைத் தெளிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அசுரன் கடந்த வாரத் திண்ணையில் (நவம்பர் 11, 2004) எழுதிய நாடகம், ‘கற்பனை ‘ என்று சொல்லித் தப்பிக் கொள்ளப் முயன்றாலும், அணுசக்தியைப் பற்றி நாட்டில் பரவி வந்துள்ள ‘மெய்யான பொய்களைத்தான் ‘, அவர் மீண்டும் தோண்டி அள்ளி அம்மன் மீது அப்பி யிருக்கிறார். என் கட்டுரைப் பதிலைப் படிப்பதற்கு முன்பு, ‘அணுசக்தி அம்மன்: உலகை அழிக்கத் துடிக்கும் ஒரு பிசாசின் கதை ‘ [http://www.thinnai.com/st1111041.html] என்னும் அவர் எழுதிய நிஜ நாடகத்தை முதலில் வாசகர் படித்து நகைத்திட வேண்டுகிறேன். நிஜப் பொய்களின் இந்த நிழல் ஆட்டங்கள், எதிர்ப்பாளிகளின் நெஞ்சில் ஊறிய வெறுப்பு உணர்ச்சியால் ஏற்பட்ட அச்சங்களே தவிர, விஞ்ஞான முறையில் நிரூபணப் படுத்தி எடுத்துக் காட்டிய சான்றுகள் அல்ல!

அசுரனைப் போல் அணுசக்தி அம்மன் மீது அடிக்கடி கணைகளை வீசித் தாக்கி யிருப்பவர் மதிப்புக்குரிய மற்றொரு நண்பர்: ஞாநி! பார்க்கப் போனால் ஞாநி அசுரன் அல்லர்! அசுரன் ஞாநி அல்லர்! அசுரன் ஓர் சூழ்மண்டலவாதி! ஞாநி ஓர் சமூகவாதி! ஆனால் இருவரும் அணுசக்தி அம்மன் மீது தவறான ஒரே மாதிரியான எதிர்ப்புக் கணைகளை ஏவி யிருப்பதால் இருவருக்கும் பதில் அளிப்பது எனக்கு எளிதாகிறது! சென்ற வாரக் கட்டுரை ஒன்றில் [எங்கே செல்கிறோம் ?] ந. இரா. குழலினி அவர்களும் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளைப் பற்றி இதே பாணியில் எழுதியிருக்கிறார். கல்பாக்கத்தின் அணுமின் ஆய்வுக் கூடத்தைச் சுற்றி வாழும் மக்கள், அதன் கதிரியக்கம் தாக்கிப் புற்று நோயால் இன்னல் படுவதாகவும், குழந்தைகள் ஆறு விரலோடு பிறப்பதாகவும் ஞாநியும் புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்! அவருக்குத் திண்ணையில் நான் எழுதிய பதில், அணுமின்சக்தி பற்றி அசுரன், குழலினி ஆகியோரது தவறான கருத்துகளுக்கும் பொருந்தும். அணுமின் நிலையங்களை உட்புறம் நேராக நோக்காதவர்கள், அணுமின்சக்தி விஞ்ஞானத்தை ஆழ்ந்து அறியாதவர்கள், அரைகுறை அணுவியல் அறிவு பெற்றவர்கள், சூழ்மண்டலக் காப்பாளிகள் ஆகியோரே, அணுசக்தி அம்மன் மீது கற்களை விட்டெறிந்து வருவது புரிந்து கொள்ளக் கூடிய எதிர்ப்புகளே!

இந்தக் கட்டுரை இந்தியா இரகசியமாகச் செய்துவரும் அணு ஆயுதப் பெருக்கத்தைப் பற்றிய தில்லை. அணுமின்சக்தி வளர்ச்சியைப் பற்றியது. கதிரியக்கமற்ற அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] வரும்வரை, இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு நமது மின்சார விளக்குகளைக் கதிரியக்கம் உள்ள அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power] மட்டுமே, ஒளியேற்றப் போகின்றன! பாதுகாப்புடனும், கவனமுடனும் அணுமின் சக்தியைப் பாரதத்தில் பயன்படுத்துவதற்கு உரிய ஆக்கவழிகளை, பச்சைமய வாதிகள் எடுத்துக் காட்டினால் நாட்டில் ஒளி உண்டாகும். அல்லது வேறுவித விஞ்ஞானப் பொறியியல் முறைகளில் பேரளவு மின்சக்தி உற்பத்தியை எவ்விதம் சிக்கனமாக, சீக்கிரமாக உண்டாக்கலாம் என்று எடுத்துக் காட்டினால் நாடு நலம் பெறும்.

20 நூற்றாண்டு இடைக் காலத்திலிருந்தே அணுசக்தி யுகமும், அண்டவெளி யுகமும் ஒரே சமயத்தில் விருத்தியாகி இரண்டாம் தொழிற் புரட்சி தோன்றி விட்டது! 1980 ஆண்டுகளில் மின்கணனி யுகமும் தொடர்ந்து, உலகெங்கும் அகிலவலை இணைப்புகள் பெருகி, பல நாடுகளில் மின்சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டு இருட்டடிப்பும், பழுப்படிப்பும் மக்களைப் பாதித்து வருகின்றன! 1945 இல் ஹிரோஷிமா, நாகசாக்கியில் அணுகுண்டுகள் போடப்பட்டு கதிரியக்கத்தால் 59 ஆண்டுகளாகப் பாதிக்கப் பட்டும், பூகம்பத்தாலும், சூறாவளி சுனாமிகளாலும் அடிக்கடி தாக்கப்பட்டு இடர்ப்படும் ஜப்பானில் 54 அணுமின் நிலையங்கள் 28% ஆற்றலை அளித்து வருகின்றன! இலங்கையில் பாதியளவு இருக்கும் தென் கொரியா இந்தியாவை விட ஐந்து மடங்கு அணுமின்சக்தி உற்பத்தி செய்து 40% பங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகிலே பிரான்ஸ் நாடு ஒன்றுதான் 59 அணுமின் நிலையங்களை இயக்கி, 63,000 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்து, மிக்க அளவு (76%) பங்கைப் பரிமாறு வருகிறது. அமெரிக்காவில் 103 நிலையங்கள் 97000 மெகாவாட் அணுமின் சக்தி உற்பத்தி செய்தாலும், அவை அனைத்தும் 20% பங்களவே பரிமாறி வந்தன. 2004 ஆண்டில் உலக நாடுகளில் 437 அணுமின் நிலையங்களை 30 நாடுகள் இயக்கி, மொத்த ஆற்றலில் 16% பங்கை ஏற்றுப் பரிமாறி வருகின்றன.

அசுரனது தவறான தகவல்களுக்கு எனது எதிர்முகக் கருத்துக்கள் பின்வருமாறு:

1. அணுமின் நிலையங்கள் உலகத்தை அழிக்கா! அணுமின் நிலையங்கள் அணு ஆயுதங்கள் போன்று வெடிக்கா! ஏராளமான அணு ஆயுதங்கள் பல இடங்களில் வெடித்தால் மட்டுமே உலகை அழிக்கலாம்! அணு குண்டுகள் வேக நியூட்ரான் (Fast Neutron) இயக்கத்தால் வெடிப்பவை! தற்போது இயங்கும் 437 அணுமின் நிலையங்கள் [ஒன்று அல்லது இரண்டு வேகப் பெருக்கிகளை (Fast Breeder) தவிர] யாவும் மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்களால் (Thermal Neutrons) இயங்குபவை.

2. தமிழ்நாடு கூடங்குளத்தில் உள்ள ரஷ்யன் VVER அணு உலைகளில் இந்தியா அணுகுண்டு ஆக்க முடியாது! மின்சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். ரஷ்யாவின் அனுமதியும், அகில அணுவியல் பேரவையின் (IAEA) ஆசியுமின்றி ரஷ்யன் அணு உலைகளின் புளுடோனியத்தை எடுத்து இந்தியா அணுகுண்டு செய்ய முடியாது.

கூடங்குளம் VVER அணு உலை செர்நோபிள் மாடல் அணு உலைபோல் வெடிக்காது. [கீழ்க் காணும் 5 ஆம் குறிப்பீடுத் திண்ணைக் கட்டுரையைப் படிக்கவும்]

3. அணுமின் நிலையப் புகை போக்கிகள் இரண்டு விதமானவை. 1. கொதியுலை வெப்பமாற்றியில் கசியும் நீராவியை வெளியாக்கும் புகை போக்கிகள். அவற்றில் வேறு எரியும் புகை எதுவும் வராது! 2. அணுஉலை மூடிய காங்கிரீட் கோட்டை அரணுக்குள் சுற்றிலும் உண்டாகி, முடிவில் கதிரியக்கம் வடிகட்டி வெளியாக்கப்படும் வாயுவின் புகை போக்கி. அதிலும் வேறு எரியும் புகை எதுவும் வராது!

4. அணுஉலைத் தணிப்புச் சாதனங்கள், டர்பைன் நீராவிக் குளிர்கலம் [Steam Turbine Condeser] ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் கடல்நீரில், கதிரியக்கம் வடிகட்டப் பட்ட சாதா நீர் சோதிப்புக்குப் பிறகு கலக்கிறது. கடலுக்கு மீளும் அந்தக் கடல்நீர் வெள்ளத்தில் அதிக அளவு கதிரியக்கம் உள்ளது என்பது தவறு. குறைந்த அளவு கதிரியக்கம் மட்டுமே சோதிக்கப்பட்டு கடல்நீரில் அனுமதிக்கப் படுகிறது.

5. கடந்த 45 ஆண்டுகளாக அணு உலை, அணுமின் நிலையங்கள் பலவற்றிலும் முன்னின்று இயக்கப் பராமரிப்பு, சோதிப்புத் துறைகளில் பணியாற்றி வந்திருக்கிறேன் நான். எனக்கோ, அணுமின் நிலையங்களின் அண்டைக் காலனியில் வாழ்ந்த என் மனைவிக்கோ அல்லது இரு புதல்விகளுக்கோ கதிரியக்கத்தால் எவ்வித உடற்கேடுகளும் இதுவரை வரவில்லை! கல்பாக்கத்தில் நான்கு ஆண்டுகள் பணி செய்த போது, புற்று நோயில் என் அன்னை இறந்தார். அந்தப் புற்று நோய் அணு உலைக் கதிரியக்கத் தாக்குதலால் ஏற்பட்ட தில்லை! எனது இரண்டு புதல்விகளும், ஒரு மருமகனும் அணு உலை அனுபவம் பெற்றவர்கள். இப்போது கனடா அணுமின் நிலையத்தில் பணிபுரியும் எனது புதல்விக்கோ அல்லது அவளது இளமையான இரண்டு குழந்தைகளுக்கோ அசுரன், ஞாநி அச்சமூட்டி வருவதுபோல், கைகளில் ஆறு விரல்கள் முளைக்கவும் வில்லை! காலில் ஏழு விரல்கள் தோன்றவு மில்லை! வயிறு வீக்கம், ஊதிய வயிறு எதுவும் இல்லை! கழுத்து வீக்கம், காய்ச்சல், வழுக்கத் தலை, வயிற்றுப் போக்கு, ஊனிலிருந்து இரத்தம், குருதிச் சீர்கேடு எதுவும் யாருக்கும் கிடையா! பெண்டிர் யாரும் மார்புப் புற்று நோய் வாய்ப்பட்டு, மதலைக்குப் பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட தில்லை! புதல்வியின் குழந்தைகளுக்கோ அல்லது காலனியில் வாழும் மதலைகளுக்கோ வெட்டி வெட்டி இழுக்கும் இழுப்பு நோய் வரவில்லை.

அசுரன், ஞாநி ஆகியோர் காட்டிய அத்தனை நோய்களும், கதிரியக்கம் தாக்காமலே மாந்தருக்கு வரலாம். கதிரியக்கத்தால் வந்த நோய்கள் அவை என்பதற்கு எந்த ஆதாரங்களும், விஞ்ஞான நிரூபணங்களும் இல்லை! அசுரன் போன்ற சூழ்மண்டல வாதிகள் (http://www.iaea.or.at/), வியன்னாவில் இருக்கும் அகில அணுவியல் பேரவை (IAEA), உலக அரங்குகளின் அணு உலைகளைக் கண்காணித்து வருவதை அறிய வேண்டும். பாரதம் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடா விட்டாலும், அகில அணுவியல் பேரவையின் நியதிகளையே, அணுமின்சக்தி இயக்கங்களுக்குப் பின்பற்றி வருகிறது!

வட அமெரிக்காவிலே கனடாவில் உள்ள மிகப் பெரிய பிக்கரிங் அணுமின்சக்தி நிலையத்தின் 8 உலைகள், 5 மில்லியன் மக்கள் தொகை மிஞ்சிய டொராண்டோ நகரத்தின் அருகிலே உள்ளது! அங்குதான் என் புதல்வி எஞ்சினியராகப் பணியாற்றி வருகிறாள். கனடாவிலோ, அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ அணுசக்திக் காலனியில் வாழும் அதிகாரிகள், பணிப்பாளிகள் அனைவரும் பொதுவாக உடல்நலமோடு வாழ்கிறார்கள். அணுமின் நிலையங்களின் அண்டை நீர்வளத்தில் பிடித்த மீன்களைச் சமைத்து உண்டு வருகிறார்கள். யாரும் அதனால் நோய்வாய்ப்பட வில்லை! ஏரியிலோ, கடலிலோ கதிரியக்கத்தால் மீன்கள் செத்து மடியவில்லை. அசுரன் கூறிய நோய்களில் ஒன்றேனும் கதிரியக்கத்தால் வந்திருந்தால், காலனியில் வாழும் யூனியன் ஊழியர்கள் அணுமின் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுவார்களா ? கல்பாக்கம், ராஜஸ்தான், நரோரா, கக்கரப்பார், கைகா, தாராப்பூர், பாம்பே ஆகிய அணு உலைத் தளங்களின் காலனியில் வாழும் பல ஆயிரக் கணக்கான அதிகாரிகள், பணியாளிகள் எவருமே கதிரியக்கம் தாக்கப்பட்டு, அசுரன் காட்டிய நோய்ப் பட்டியலில் பாதிக்கப் படவில்லை! ராஜஸ்தான், டெல்லி அருகே நரோரா அணுமின் நிலையங்களின் ஊழியர்கள், எத்தகைய பேராற்றல் படைத்த யூனியன் பாதுகாப்பு உடையர் என்பதைத் தமிழர் பலர் அறிய மாட்டார்கள்!

6. அணுசக்திக் கமிஷன் அதிபதி ஒரே அழுத்தலில் தெற்காசியாவையே அழிக்கக் கூடிய அணுகுண்டின் விசை அவர் கைவசம் உள்ளதாம்! என்ன அபத்தமான கற்பனை எழுத்து இது ? அணுகுண்டை ஏவும் கணைகள் அனைத்தும் இந்திய இராணுவத் தளபதியின் கையாட்சியில் உள்ளன! அவற்றை ஏவிடப் பச்சை கொடி காட்டுபவர், இந்திய அரசாங்கத்தின் தலைவராக ஆட்சி செய்யும் பிரதம மந்திரி!

7. பாரத நாடு அணுவியல் துறைகளில் அமெரிக்காவைப் பின்பற்றுவதாகச் சொல்வது கோமாளித் தனமாகும்! விஞ்ஞானத் துறைகளில் முன்னேறும் இந்தியா, அணுவியல் முயற்சிகளில் தனக்கென்று ஒரு தனித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது! எதிர்காலப் பேரளவு மின்சக்தி உற்பத்திக்கு வேகப்பெருக்கி அணுமின் நிலையங்களை [Fast Breeder Power Stations] இந்தியா விருத்தி செய்வதுபோல் பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளன. ஆனால் அமெரிக்க என்றைக்கோ அவ்வழியைப் புறக்கணித்து விட்டது!

8. இந்தியாவில் அரசாங்க உதவி இருப்பினும் அணுமின்சக்தித் துறையகம் [Nuclear Power Corp of India Ltd (NPCIL)] ஓரளவு தனித்துப் பொதுநபர் பங்கீட்டு நிறுவனமாய் இயங்கி வருகிறது. அந்த துறையகம் தனது வரவு செலவு கணக்குகளை பொது நபருக்கு அறிவிப்ப தில்லை என்று அசுரன் புளுகு விடுகிறார். ஆண்டறிக்கைகள், நிதிப்போக்கு விவரங்கள் அனைத்தும், துறையகத்தின் [www.npcil.org] என்னும் அகிலவலை முகப்பில் காணலாம். அத்துடன் இந்திய அணுமின் துறையகத்தின் பணிகள், தகவல், அணுமின் நிலைய இயக்கங்கள், கட்டுமான வேலைகள், பாதுகாப்புகள் அனைத்தையும், அசுரன் போன்றோர் கற்பனைப் புரளி நாடகங்களை எழுதுவதற்கு முன்பு சற்று படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்!

9. கன்னியா குமரி, கேரளாக் கடற்கரைகளில் கதிரியக்கம் கொண்ட தோரியம் என்னும் மூலகம் கலந்த ‘மானஸைட் மணல் ‘ [Thorium Monazite Sand] பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்தக் கடற்கரைகளின் மீது 10,000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து, புரண்டு வாழ்ந்த தமிழர்களும், மலையாளிகளும், அவரது ஆயிரம், ஆயிரம் சந்ததிகளும் கதிர்வீச்சால் எந்த வித நோய்களும் தாக்கப் பட்டதாக இதுவரை நிரூபிக்கப் படவில்லை!

10. அணுசக்திக் கெட்டுப்பாடு, நீதிபாதி, பூட் லிக்கர், பிக் லையர், டி.ஏ.இ. தாஸ் [Dept of Atomic Energy (D.A.E)] போன்ற பெயர்கள், கதிரியக்க காற்றை வெளியிடுவது, சட்டைக்குள் புது ரூபாய்களைத் திணிப்பது என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, மட்டரக எழுத்தாகத் [Cheap Shots] தெரிகின்றது. கற்பனை நாடகம் என்று வேடம் போட்டுக் கொண்டு, வேண்டு மென்றே குறிப்பிட்ட பெயர்களைச் சொல்லித் திட்டமிட்டு அணுசக்தி அதிகாரிகளைத் திட்டி யிருப்பது கண்ணியமான எழுத்தாகத் தோன்றவில்லை!

11. சூழ்மண்ட காப்பாளி அசுரன் பாரதத்தின் கல்பாக்கம், நரோரா, ராஜஸ்தான், கைகா, கக்கிரபார், தாராப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் சிலவற்றுக்கு விஜயம் செய்து, அவற்றின் காலனியில் வாழும் ஊழியர், அதிகாரிகளுடன் நேராக உரையாடி, அங்குள்ள நீர்வளம், நிலவளம், வாயு மண்டலம், சாப்பாடு, பயிரினம், புல் தின்னும் பசுக்கள் ஆகியவை மாசுபட்டு நாசம் அடைந்துள்ளனவா என்று கண்டு வந்து எழுதினால், திண்ணை வாசகர்களுக்கு மெய்யான அறிவு விருந்தாக இருக்கும்!

தமிழகத்தின் கிணற்றுக்குள்ளே கிடந்தவர் பலருக்கு வடநாட்டு மாந்தரைப் போல போரின் அனுபவங்களும், இன்னல்களும் நேரில் அறிவதற்கு வாய்ப்புக்கள் எவையும் இல்லை. தேசப்பற்று, தேசப் பாதுகாப்புச் சிந்தனை இல்லாத மனிதர்தான் இரகசியப் பாதுகாப்புத் திட்டங்களை எள்ளி நகையாடுவார்! பாதுகாப்பு இல்லாத நாடுகளும், போர் ஆயுதங்கள் இல்லாத படைகளும் உலக வரலாறுகளில் என்ன பாடுகள் பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 2500 ஆண்டுகளாக பாரத நாடு அலெக்சாண்டர் முதல், கஜினி, பாபர் போன்ற முகமதியர், பிறகு பிரான்ஸ், பிரிட்டன், பாரத விடுதலைக்குப் பின்பு சைனா, பாகிஸ்தான் ஆகிய படையெடுப்புகளால் இந்தியர் பட்ட இன்னல்களையும், சிதைக்கப் பட்ட இந்திய காலாச்சாரங்களையும், கோரம் செய்யப்பட்ட நமது கோயில்களையும் இந்தியன் ஒருவன் மறக்க முடியுமா ?

தமிழ்நாடு இந்தியாவில் தனியாகத் தொங்குவதாகக் கனவு கண்டு, அதை மட்டும் தலையில் வைத்துக் கொண்டு கரகமாடி வரும் தமிழர் பலர், தாம் பாரத மாதாவின் புதல்வர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கப் படுவது மெய்யானது! அணுசக்தி அம்மன் நாடகத்தில் பாரத அன்னையின் படம் போட்டு அசுரன் அவமதித்துள்ளது அதற்கு ஓர் உதாரணம்! தேசப் பற்றில்லாத தனித் தமிழர்கள் பலர் பாரத நாட்டின் பாதுகாப்பில் முழுப் பலாபலன்களை அனுபவித்து வந்தாலும், அவற்றை காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்! இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அணு மின்சக்தி ஆக்குவதற்கு மகத்தான சாதனைகளை நுணுக்கமாகச் செய்துவரும் விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்களைக் கேலி செய்து, அணுசக்தி அம்மன் கோரஸ் பாட்டைப் பாடுவதாய் நாடகத்தில் காட்டுவது, அற்பப் புத்தியைக் காட்டுகிறது. இந்திய அணுசக்திக் கமிஷன் அதிபதி, அணுசக்தித் துறை ஆளுநர் மற்றும் அணுசக்தித் துறைக் கட்டுப்பாடு அதிபர்களை நாடகத்தில் எள்ளி நகையாடுவது சிறுமைப் புத்தியைக் காட்டுகிறது! ஆக்கத் துறைகளில் எதையும் வாழ்க்கையில் சாதித்தவர் எவரும், இந்திய வல்லுநர்களை இவ்விதம் இழிவாகக் கேலி செய்து ஆனந்திக்க மாட்டார்!

இவைசார்ந்த தலைப்புகளில் திண்ணையில் மேலும் வெளியானவை:

1. http://www.thinnai.com/science/sc0504032.html [Cancer Kalpakkam]

2. http://www.thinnai.com/sc0909044.html [21 Century Nuclear Power]

3. http://www.thinnai.com/pl0925032.html [Again Kalpakkam]

4. http://www.thinnai.com/science/sc0525034.html [Nuclear Power Risks]

5. http://www.thinnai.com/science/sc0323033.html [Kudaunkulam Risk Assessments]

6. http://www.thinnai.com/pl04190312.html [Kalpakkam By: Jnani (II)]

7. http://www.thinnai.com/pl0918034.html [Kalpakkam By: Jnani (I)]

8. http://www.thinnai.com/ar1111047.html [Article By: N.R. Kulzalini]

****

[jayabarat@tnt21.com (S. Jayabarathan)] [Nov. 15, 2004]

Series Navigation