இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)

This entry is part of 51 in the series 20041007_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


முப்பது கோடி முகமுடையாள், உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள், இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தை ஒன்றுடையாள்! …. (எங்கள் தாய்)

இனியநீர் பெருக்கினை! இன்கனி வளத்தினை! ….

முப்பது கோடிவாய் இன்னிசை முழங்கவும்

அறுபது கோடித் தோளுயர்ந்து உனக்கு ஆற்றவும்

‘திறனிலாள் ‘ என்றுனை யாவனே செப்புவன் ?

அருந்திறல் உடையாய்! … தாயே போற்றி! …. (வந்தே மாதர கீதம்)

மகாகவி பாரதியார்

மகாபாரதம், பகவத் கீதைப் பாராயணமும், இராமாயணம், இராம நாமப் பக்தியும் வெள்ளமாய்க் கரைபுரண்டோடும் பாரத மண்ணில், பண்பட்ட முறையில் இதுவரை பொதுப்பணித் திட்டங்கள் எவையும் கால எல்லைக்குள் சீராகச் செம்மையாக, நிதிச் சுருக்கத்தில் முடிந்திருப்பதாக இந்தியச் சரித்திரத்தில் உள்ளனவா ? இல்லை! இல்லை!! இல்லை!!! இந்தியாவின் சீர்கேடான, பண்பற்ற, ஊழல் நிரம்பிய இந்த இழிவான நிலைகளுக்குக் காரணக் கர்த்தாக்கள் யார் யார் ? பகவத் கீதைப் பக்கங்களைப் படித்து கரைத்துக் குடித்த அறிவாளிகள்! இராமாயணக் காவியத்தை அடிவேரோடு பிடுங்கித் தலையில் வைத்துக் கரகமாடும் அரசியல் கலகவாதிகள்! சுதந்திர இந்தியாவில் தில்லு முல்லுகள் புரிந்து பொதுப்பணித் திட்டங்களில் காலம் கடத்தி நிதிசுருட்டும் அத்தனை பேரும் பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த அருந்தவப் புதல்வர்களே!

சென்னையின் சில பகுதிகளுக்கு நீரனுப்புத் தடைப்பட்டாலும் தினமும் 13,000 வாகன நடைகள் நீர்ப்பரிமாற்றம் செய்து வருவது பிரமிக்கத் தக்க சாதனையாகத் தோன்றுகிறது! நீர்ப்பஞ்சத்தில் சென்னை நகரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருவதுபோல், பாரதத்தின் பெரிய நகரங்கள் பல இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் நீர்ப் பற்றாக்குறையில் மூழ்கித் தத்தளிக்கப் போவதை நதியிணைப்பு எதிர்ப்புவாதிகள் காணப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! தமிழ்நாட்டின் மாண்புமிகு ஸ்ரீ சங்கராசாரியார் வாளாவிருக்க, ஆந்திராவின் ஸ்ரீ சத்திய சாய்பாபா தெலுங்கு-கங்கா கால்வாயை முடிக்க 150-200 கோடி ரூபாய் நிதி உதவ முன்வந்தது பாராட்ட வேண்டிய மக்கள் பணியே!

கட்டுரை ஆசிரியர்

‘இந்திய அரசு பெருநதிப் படுகைகளின் மிஞ்சிய நீரைப் பகிர்ந்து, பிற நதிகளுக்குத் திருப்பும் நதியிணைப்புத் திட்டங்களைப் பறைசாற்றியது எங்கள் கவனத்தைப் பற்றியுள்ளது! உள்நாட்டு மாநிலங்களின் உடன்பாடைப் பெறாமலும், வெளிநாடுகளுடன் உரையாடி ஒப்பந்தம் கிடைக்காமலும் அந்தப் பூதத் திட்டங்களில் முற்படுவது நான்கு தேசங்களின் (நேபாளம், பூதான், பங்களா தேசம், பாரதம்) சூழ்மண்டலத்தைப் பாதிப்பதுடன், பல மில்லியன் மாந்தரின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது ‘

முஸ்தபா கமால் மஜும்தார். (Water & Energy Users Federation of Nepal)

‘நதியிணைப்புத் திட்டங்களால் பங்களா தேச, மேற்கு வங்காள, அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் கோடிக் கணக்கான மாந்தர் இன்னலுற வாய்ப்புகள் ஏற்படுவதுடன், மென்மையான நீர்வளச் சூழ்தள உயிரினங்களும் [Ecology] அந்தப் பிரதேசங்களின் நிதிநிலையும் பாதகம் அடையப் போகின்றன! கங்கா, பிரமபுத்திரா நதிகளின் படுகை வெள்ளத்தைத் திருப்பிப் பிற நதிகளில் பங்கீடு செய்தால், நீர் வறட்சிக் காலங்களில் அந்தப் பகுதிகளில் வேளாண்மை நிச்சயம் பாதிக்கப்படும்! மேலும் நதிப்படுகை நீரளவு குன்றுவதால், கடலின் உப்புத்தன்மை [Salinity] கரைநிலப் பகுதிகளில் ஊர்ந்து நுழைய வாய்ப்புள்ளது! அதனால் தென்பகுதிப் பங்களா தேசத்தின் வேளாண்மைச் சீர்கேடாகும்! ‘

‘முக்தோ-மோனா ‘ (Mukto-Mona) மனிதநேய வங்காளிச் சிந்தனையாளர்கள்.

21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சென்னையில் நீர்ப்பஞ்சம்!

21 ஆம் நூற்றாண்டில் சென்னை மாநகரில் எண்ணற்ற மக்கள் குடிக்கத் தண்ணீரின்றித் தவிக்கும் போது, இந்திய அரசாங்கத்தின் தற்போதைய தலையாய கடமை என்ன ? மக்களின் தண்ணீர்ப் பஞ்ச நிரந்தரத் தவிர்ப்பா ? அல்லது வங்காளத்தின் 120 மைல் நீளத் தென்பகுதி நதிப்படுகை ஓர நிலத்தில் மெதுவாக உப்புத்தன்மை ஊர்ந்து பல்லாண்டு களுக்குப் பிறகு பயிர்வளர்ச்சி பாதிக்கப் போவதைத் தவிர்ப்பதா ? சென்னையின் கடந்த கால 54 வருட வரலாற்றிலே முதன்முதலாக இப்போதுதான் [டிசம்பர் 2003] மூன்று நீர்த்தேக்கங்களும் வற்றி வறண்டு போயிருக்கின்றன! அந்த ஆண்டுதான் பைப்குழாய் மூலம் நீரனுப்பும் ஏற்பாடு சென்னையில் நிறுத்தம் ஆனது! 180 மைல் தூரம் சென்று மோட்டர்ப்பளு வாகனங்களில் நீர்வெள்ளம் சுமக்கப்பட்டுச் சென்னைக்குக் கொண்டுவரப் படுகிறது! சென்னையில் பெய்யும் வழக்கமான 580 மில்லிமீடர் மழையளவு 54% குன்றி 280 மில்லிமீடர் அளவுதான் பெய்து நகரத்தின் செம்மலை, பூண்டி, சோளாவரம் மூன்று நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் மிகவும் தணிந்து விட்டது! சென்னை நகரில் 2002, 2003 ஆண்டுகளில் காலமழைப் பொழிவுகள் தவறியதால் அரைக்கோடி மக்கள் நீர்ப் பஞ்சத்தால் தவித்தது எதிர்ப்பாராத பாதிப்பா அல்லது எதிர்பார்த்த பாதிப்பா என்னும் வினாவுக்கு இரு பதில்களும் பொருந்தும்!

2004 மார்ச் முதல் தேதிக் கணக்குப்படி அம்மூன்று நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு இருப்பு 2% ஆக முடக்குத் தேக்க மட்டத்தில் [Dead Storage Level] மிகத் தணிந்து போனது. அதாவது 160.5 mcft (மில்லியன் கியூபிக் அடி)! ஆனால் அவை மூன்றின் கொள்ளளவு முழுத் தகுதி: 7412 mcft. நாளொன்றுக்குத் தற்போதைய நீர்ப் பரிமாற்றம் சென்னைக்கு: 103 மில்லியன் லிட்டர்! பக்கத்துக் கிராம நகரக் கிணறுகளிலிருந்து நீர் வாங்கப்படுகிறது. தனிப்பட்டோரின் 110 வேளாண்மை வயல்களிலிருந்து, நாளொன்றுக்கு 32 மில்லியன் லிட்டர் நீர் மோட்டர்ப்பளு வாகனங்கள் மூலம் சென்னைக்குச் சுமக்கப் படுகிறது! அத்துடன் 28.5 கோடி ரூபாய்ச் செலவில் 1000 ஆழக்குழல் கிணறுகள் சென்னை நகரங்களின் பல பகுதிகளில் தோண்டப் படுவதாக அறியப் படுகிறது! சென்னை நகரில் ஏற்கனவே 6530 ஆழக்குழல் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலும் பூண்டியைச் சுற்றியுள்ள 125 வயற் கிணறுகளின் நீரை ஒப்பந்த வாடிக்கையில் வாங்கி, பம்புகள் மூலமாகச் செம்மலை நீர்ப்பக்குவப் படுத்தும் சாலைக்குத் [Red Hills Water Treatment Plant] தினமும் 30 மில்லியன் லிட்டர் அனுப்பத் திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காகப் பூண்டியிலிருந்து செம்மலைக்குப் பூதளம் தோண்டப்பட்டு நீர்ப்பைப்புகள் பதிக்கப்படும். அடுத்துச் செப்டம்பர் வடகிழக்குக் காலமழை வரும்வரை, மோட்டர் வாகனங்களில் நீர் சுமந்து செல்லப்படும். அந்த நீர்ப்பரிமாற்றப் பணிக்களுக்குச் சென்னையில் ஆகும் செலவு: 306 கோடி ரூபாய்!

2003 ஆண்டில் சென்னை மாண்புமிகு முதல் மந்திரி ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பையிக்குச் சென்னை நீர்ப் பிரச்சனையைப் போராட, தேசீயப் பேரின்னல் பரிகார நிதியில் [National Calamity Contingency Fund] 700 கோடி ரூபாய் அனுப்பும்படிக் கெஞ்சியதாகத் தெரிகிறது! உடனே சென்னைக்கு மத்திய அரசு முன்னோடியாக உதவு நிதி 50 கோடி ரூபாய் அளித்ததாகத் தெரிகிறது! 2004 ஆகஸ்டில் 720 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்ட [நெய்வேலி] கடலூர் மாவட்ட ‘வீராணம் திட்டத்தினால் ‘ [Chennai Water Supply Augumentation Project-I] தினமும் 75 மில்லியன் லிட்டர் நீர்வெள்ளம் அதிகமாகச் சென்னைக்குக் கிடைத்தாகத் தெரிகிறது. சென்னையின் சில பகுதிகளுக்கு நீரனுப்புத் தடைப்பட்டாலும் தினமும் அண்ணா நகருக்கு 440 நடைகள், கே.கே. நகருக்கு 330 நடைகள், பெஸண்ட் நகருக்கு 155 நடைகள் வாகனக் போக்குகள் நிகழ்ந்து மொத்தம் 13,000 நடைகள் நீர்ப்பரிமாற்றம் செய்துள்ளது பிரமிக்கத் தக்க சாதனையாகத் தோன்றுகிறது! நீர்ப்பஞ்சத்தில் சென்னை நகரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருவதுபோல், பாரதத்தின் பெரிய நகரங்கள் பல இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் நீர்ப்பற்றாக்குறையில் மூழ்கித் தத்தளிக்கப் போவதை நதியிணைப்பு எதிர்ப்புவாதிகள் காணப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தெலுங்கு-கங்கா நீர்ப் பரிமாற்றம்

கர்நாடகா மாநிலம் தமிழகத்தின் காவேரி நதிக்கு நீர்வெள்ளம் அனுப்பாது கைவிரிக்கும் போது, அண்டையில் உள்ள அனுதாப ஆந்திரா முதன் முதலாக 2004 அக்டோபர் 2 ஆம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, 5 tmc (Thousand Million cuft) நீர்வெள்ளம், 10,000 Cusecs (cuft/sec) வீதத்தில் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அனுப்பியுள்ள பெருந்தன்மை பாராட்டுக்குரியது! ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுமார் 10,000 கியூசெக்ஸ் நீரோட்டம் அனுமதிக்கப் பட்டால், அந்த நீர்வெள்ளம் 240 மைல் தூரம் கால்வாய்களில் ஓடும் போது வேகம் குன்றி, சென்னையை அண்டும் போது 1000 கியூசெக்ஸ் வீதத்தில்தான் பூண்டியை நிரப்புகிறது! இப்போது பெண்ணாறில் உள்ள ஸோமசிலா

நீர்த் தேக்கத்தில் நீருயரம் மிகுந்து, காந்தலேரு நீர்த்தேக்கத்தில் நீரளவு 14 tmc கொள்ளளவிலிருந்து 24 tmc கொள்ளளவாக ஏற்றம் அடைந்ததால் அதிலிருந்து சென்னை பூண்டி நீர்தேக்கத்திற்கு நீரோட்டம் நிகழ்கிறது என்று ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி கூறினார். பெண்ணாறு, கிருஷ்ணா பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் மழை பெய்யுமானால், சென்னைக்கு அனுப்பப்படும் நீரோட்டம் மிகையாகி, பூண்டி நீர்த்தேக்கம் விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளது!

1983 ஆம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் முன்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களும் முறையே 5 tmc நீர்வெள்ளத்தைக் தெலுங்கு-கங்கா கால்வாய் மூலம் அனுமதித்து மொத்தம் 15 tmc பூண்டி நீர்த் தேக்கத்திற்கு அனுப்புவதாக ஒப்பந்தம் செய்திருந்தன. அந்த உடன்பாட்டின்படி ஆந்திர நாடு முதலில் தனது பங்கை அக்டோபர் 2 ஆம் தேதி அனுப்பி வைத்தது. மேலும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் நெல்லூர் மாவட்டத்தின் காந்தலேரு நீர்த்தேக்கத்தில் 1.5 tmc நீர்வெள்ளத்தை மோட்டர் பம்பு செட்டுகள் மூலமாகவும் எடுத்துக் கால்வாயில் அனுப்பிக் கொள்ளலாம் என்றும் தமிழ் நாட்டிற்கு அனுமதி அளித்தது.

இருபது ஆண்டுகள் மெதுவாக வளர்ந்த தெலுங்கு-கங்கா திட்டம்!

இந்திரா காந்தி 1976 இல் சென்னை நகரத்தில் ஆற்றிய வரலாற்றுச் சொற்பொழிவில் முரசடித்த மகத்தான திட்டமிது! இரண்டாம் முறை சென்னைக்கு வருகை தந்தபோது, இந்திரா காந்தி 1983 இல் 637 கோடி ரூபாய் நாணய மதிப்பில் ஆரம்பித்து வைத்த ஆந்திரா-சென்னைக் கால்வாய்த் திட்டமிது! கிருஷ்ணா பெண்ணாறு நதிகளின் மழை வெள்ள உபரிநீரை 240 மைல் நீண்ட கால்வாய் மூலம் கர்நூல், கடப்பை, நெல்லூர், சித்தூர் வறட்சிப் பகுதிகளின் 5.75 லட்ச ஏக்கர் வயல்களுக்கு உயிரளிக்கவும், அத்துடன் 15 tmc [Thousand million cuft] நீர்க் கொள்ளளவைச் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரப்பவும் திட்டம் தயாரிக்கப் பட்டது. பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு 1996 இல் கால்வாய் பாதி முடிந்து, முதன்முதல் கர்நூல் மாவட்டத்தின் 25,000 ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசான வசதி அளிக்கப்பட்டது! அரசியல் குழப்பவாதிகளின் இடையூறுகளால் கால்வாய் கால தாமதம் செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளில் முடிய வேண்டிய திட்டம் இருபதாண்டுகள் ஊர்ந்து சென்று, 1997 ஆண்டு புதுப்பித்து நிரப்பிய நிதிமதிப்பு நான்கு மடங்கு ஏறிப் (2470 கோடி ரூபாய்) அசுர ரூபம் எடுத்தது! அந்தத் தொகையில் சென்னையின் பங்கு மட்டும்: 639 கோடி ரூபாய்! அதாவது 1983 இல் தெலுங்கு-கங்கா திட்டம் முழுவதற்கும் போட்ட நிதிமதிப்பீடைத் தமிழ்நாடு மட்டும் 1997 இல் தனது பங்கிற்குத் தந்துள்ளது!

ஆனால் தெலுங்கு-கங்கா திட்டம் நீர்ப்பாசானத்துக்கும், குடிநீர் வசதிக்கும் மக்களுக்கு நீடித்த காலம் பயனளிக்கும் வழிகளில் சிறந்த குறிக்கோளுடன் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஓர் நதியிணைப்பு என்பது எடுத்துக் காட்டப்பட வேண்டியது! அந்த திட்டத்தில் பாதிக்கப்படும் மாநிலம் ஒன்று, பயனடையும் மாநிலம் வேறொன்று என்னும் பாகுபாடு எதுவும் இன்றி, இரு மாநிலங்களும் பலாபலன்களைப் பெறும்படித் திறம்படத் தயாரிக்கப் பட்டுள்ளது! 5.75 லட்ச ஏக்கர் ஆந்திர வயல்களுக்கு நீர்ப்பாசான வசதிகள்! கால்வாய் மூலம் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 15 tmc குடிநீர் வெள்ளம்! மூன்று மாநிலங்கள் [ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா] முறையே 5 tmc நீர்வெள்ளம் அனுமதித்து 15 tmc மொத்த அளவு சென்னைக்கு அனுப்ப வேண்டும். ஆந்திராவில் நான்கு நீர்த்தேக்கங்கள் (வேலுகோடு, எஸ்.பி.வி, சோமஸிலா, காந்தலேரு) கட்டப்பட்டு கால்வாய்கள் மூலம் அவை இணைக்கப்படும். காந்தலேரு ஏரியிலிருந்து, சென்னை பூண்டிக்கு 110 மைல் நீளக் கால்வாய் நீர் கொண்டுவரும். ஆந்திரா வேலுகோடுவில் 9 மெகா வாட் நீர்மின்சார நிலையம், சென்னமுக்கப்பள்ளியில் 15 மெகா வாட் நீர்மின்சார நிலையம், காந்தலேருவில் 9 மெகா வாட் நீர்மின்சார நிலையம் ஆகியவை நிறுவகமாகி, மொத்தம் 33 மெகா வாட் மின்சக்தி பரிமாற்றம்! ஐயமின்றி 1983 நாணய மதிப்பில் 637 கோடி ரூபாயிக்கு இரு மாநிலங்களில் இத்தனை நீர்வள, நீர்ப்பாசான வசதிகளா என்று வியப்புறாத மாந்தர் யாரும் இருக்க முடியாது!

தெலுங்கு-கங்கா திட்டத்தில் ஏற்பட்ட தில்லு முள்ளுகள்!

மகாபாரதம், பகவத் கீதைப் பாராயணமும், இராமாயணம், இராம நாமப் பக்தியும் வெள்ளமாய்க் கரைபுரண்டோடும் பாரத மண்ணில், பண்பட்ட முறையில் இதுவரை பொதுப்பணித் திட்டங்கள் எவையும் கால எல்லைக்குள் சீராகச் செம்மையாக, நிதிச் சுருக்கத்தில் முடிந்திருப்பதாக இந்தியச் சரித்திரத்தில் உள்ளனவா ? இல்லை! இல்லை!! இல்லை!!! இந்தியாவின் சீர்கேடான, பண்பற்ற, ஊழல் நிரம்பிய இந்த இழிவான நிலைகளுக்குக் காரணக் கர்த்தாக்கள் யார் யார் ? பகவத் கீதைப் பக்கங்களைப் படித்து கரைத்துக் குடித்த அறிவாளிகள்! இராமாயணக் காவியத்தை அடிவேரோடு பிடுங்கித் தலையில் வைத்துக் கரகமாடும் அரசியல் கலகவாதிகள்! சுதந்திர இந்தியாவில் தில்லு முல்லுகள் புரிந்து பொதுப்பணித் திட்டங்களில் காலம் கடத்தி நிதிசுருட்டும் அத்தனை பேரும் பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த அருந்தவப் புதல்வர்களே!

முதலில் அளிக்கப்பட்ட நிதிவளம் கரைந்து போனதும் தெலுங்கு-கங்கா கால்வாய் பாதியில் நின்று முடங்கிப் போனது. கால்வாயின் முற்றுப் பெறாத வெளிப்பரப்புகள் செமெண்டில் மேல்பூச்சு வேலைகள் நடைபெறாமல், நீரனுப்பத் தகுதி வாய்ந்த பகுதிகளுக்கும் நீர் பரிமாற முடியவில்லை! 2002 ஆம் ஆண்டு ஜூலையில் ஆந்திர பிரதேசத்தின் புட்டப்பர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா சென்னைமீது அருள்மிகுந்து, ஆந்திரா-சென்னையின் 95 மைல் நீண்ட கால்வாயிக்கு மேல்பூச்சுப் பணிக்குரிய நிதித்தொகை முழுவதையும் அளிக்க முன்வந்தது, பாராட்டப்பட வேண்டியது! அதற்கு ஆகும் செலவு 2002 ஆண்டு நாணயத்தில் நிதிமதிப்பீடு: 150-200 கோடி ரூபாய்! 2003 ஜூன் 25 ஆம் தேதி வந்த இந்து தினவிதழ் வெளியீட்டுத் தகவல்படித் தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டத்தில் 80% முடிய ஸ்ரீ சத்திய சாய்பாபா அருட்கொடை நிதி உதவி செய்ததாக அறியப் படுகிறது! முந்தி முடிந்த கால்வாயிலும் மேல்பூச்சின்றி நீரனுப்பப் பட்டதால், பூமிக்கசிவில் நீரிழப்பு நேர்ந்ததாக விவசாயிகள் புகாரிட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் நிதி உதவியால் மேல்பூச்சு வேலைகள் முழுவதும் முடிந்து, கால்வாயின் நீர்க்கசிவு நின்று அதிக தூரத்திற்கு நீர்வெள்ளம் விரைவாக ஓட வசதி பிறந்தது! ஆந்திர அரசு கால்வாய்க் கட்டுமானத்தில் கால தாமதப் படுத்தியதால், கால்வாய் நெடுவே வரிசையாக விவசாயிகள் டாசல் பம்புகளை அமைத்து நீரெடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று! தமிழ்நாட்டின் மாண்புமிகு ஸ்ரீ சங்கராசாரியார் வாளாவிருக்க, ஆந்திராவின் ஸ்ரீ சத்திய சாய்பாபா தெலுங்கு-கங்கா கால்வாயை முடிக்க 150-200 கோடி ரூபாய் நிதி உதவ முன்வந்தது பாராட்டப்பட வேண்டிய மனிதப்பணியே!

சென்னை நகருக்கு நீரனுப்பும் குறிப்பணியில் நிதிவழங்கப்பட்ட தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டத்தில் ஏற்பட்ட தில்லுமுள்ளுகளில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் இருக்கின்றன!

1. பொதுப்பணி நீர்ப்பாசான நதியிணைப்புத் திட்டங்கள் சிக்கலானவை! அவையாவும் அரசியல் வாதிகளின் கட்டுப்பாடில் இயங்குபவை! அவர்களது கைக்கடிகார வேகத்தில் ஆமைபோல் நகர்ந்து செல்பவை!

2. தெலுங்கு-கங்கா திட்டத்தின் டிசைன், கட்டுமானப் பணிகளில் பங்குகொள்ளும் மாநிலங்கள் செய்யும், உடன்பாட்டு ஒப்பந்தங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக் கூட்டியக்கங்களைத் துவங்க நீண்ட காலம் ஆகிறது.

3. மாநில நதியிணைப்பு திட்டங்களில் அரசியல், பொறியியல், நிதி ஆதாரப் பிரச்சனைகளே முக்கியமாக தலைதூக்கிக் கட்டுப்பாடு, முட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

4. ஆந்திர அரசு முடிவு பெறாதப் பல்வேறு நீர்ப்பாசானத் திட்டங்களுக்காக ஓரளவு நலிந்த நிதிக்கொடையைத்தான் அளித்து வருகிறது. தெலுங்கு-கங்கா திட்டத்துக்கு ஓராண்டு தந்த 80 கோடி ரூபாயில், 50 கோடி ரூபாய் (60%) நடைமுறை நிர்வாகச் செலவுகளுக்கே தீர்ந்து போனது!

5. 20 ஆண்டுகள் திட்ட நிறுவகம் நீண்டதால் கால தாமதம் நிதிச் செலவைப் பல மடங்கு மிகையாக்கி, நீர்ப்பாசான வளர்ச்சிகளைக் குன்றச் செய்தது.

6. கட்டுமானம் செய்யப்பட்ட நான்கு நீர்த்தேக்கங்களும் பொறிநுணுக்கம், நிதிபோதாமை, மனிதர் குறுக்கீடு போன்ற பிரச்சனைகளால் முழுவதும் முடிவு பெறாமல், முழுமட்ட நீரளவை ஏற்றுக்கொள்ள இயலாத தகுதியில் இருந்தன.

7. தெலுங்கு-கங்கா கால்வாய் திட்ட அமைப்பில் பல்வேறு படைப்பு வழிகள் இருப்பினும் அரசியல் அதிகார வர்க்கம் தகுதியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்கு வகித்தது! அரசியல்வாதிகள் கைகாட்டும் திட்டங்கள் அவரது எதிர்கால அதிகாரப் பீடத்துக்குக் கட்டாயமாகவும், ஏணிப் படிகளாகவும் அமைகின்றன!

8. அதிகார வர்க்கத்தை ஆதரித்து ஏணிப்படி அமைக்கும் ‘அரசியல் முகத்துதி வாதிகளின் ‘ [Political Lobbyists] தூண்டுதல்கள் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், கையாளப்படுவதிலும் அல்லது முடக்கப் படுவதிலும் குறுக்கிடுகின்றன! திட்டங்கள் இவரது கைப்பிடிகளில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணர, நிரம்ப அரசியல், சமூக வாய்ப்புகள் கிடைக்கின்றன!

9. சென்னை நகர மாந்தர் குடிநீர்ப் பஞ்சத்தைக் குறைக்க, தெலுங்கு-கங்கா நதியிணைப்புத் திட்டம் நிதிக்கொடை பெற்று உயிர்ப்பிக்கப் பட்டது! இறுதியில் கிருஷ்ணா நதியின் நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் மெதுவாக நிரம்பி, ஆந்திர விவசாயிகளின் கட்டுப்பாடில் நீர்ப்பாசானம் நடந்து கொண்டு, சென்னை மாந்தரின் குடிநீர் அனுப்பு வேண்டுகோள் பல்லாண்டுகள் புறக்கணிக்கப் பட்டது!

10 தேசீயக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் இடையே நிகழும் கூட்டிணைப்பு அல்லது பகைமைப்பாடு நதியிணைப்புத் திட்டங்களை ஏற்று நடத்தவோ, தொடரவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யக் கூடியது! 2004 மே 14 ஆம் தேதி ஆந்திராவில் தெலுகுதேசக் கட்சி விழுந்து, காங்கிரஸ் கட்சி பதவியைக் கைப்பற்றியது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆதரித்த டியெம்கே கட்சி டெல்லிக்குச் சென்றது. முடிவு! சென்னை பூண்டி நீர்தேக்கத்திற்கு தெலுங்கு-கங்கா முதல்முறையாக நீரைத் திறந்து விட்டது! இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆந்திரா மழை வெள்ள உபரிநீரைச் சென்னைக்கு அளிக்கும். அரசியல் கட்சிகள் மாறும் போது சென்னையின் வரலாறு மாறுவதுபோல், பூண்டியின் நீர்மட்டமும் ஏறி இறங்கும்!

இமயமலை நீர்வளத்தைப் பங்கிடும் முதல் கால்வாய்த் திட்டம்

இந்தியா விடுதலை அடைந்ததும், இமயத்தின் எல்லையற்ற நீர்வளத்தை அணைத் தேக்கங்கள் கட்டி, கால்வாய் வெட்டிப் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் பகிர்ந்து கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அணைக் கால்வாய்த் திட்டங்கள் வெற்றிகரமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1948 இல் ஸட்லெஜ் நதியில் கட்டத் துவங்கி, 1960 இல் முடிந்த உலகிலே பெரிய 740 அடி உயரத்தில் அமைந்த பாக்ரா அணை, 63 சதுர மைல் நீர்த்தேக்கம் சுமார் 6 மில்லியன் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசான வசதி அளித்து வருகிறது. அத்துடன் நிறுவப்பட்ட இரண்டு நீழுத்த மின்சார நிலையங்கள் 1275 மெகாவாட் மின்சக்தி ஆற்றல் பரிமாறி வருகின்றன. பிறகு பாக்ரா வடிகாலில் [Downstream Flow] 8 மைல் கீழே இரண்டாவது அணை நங்கல் 95 அடி உயரத்தில் கட்டப்பட்டு, நங்கல் கால்வாய் நீர்ப்பாசானத்துக்குப் பிரிக்கப்படுகிறது. மேலும் நங்கல் நீர்த்தேக்கத்தில் மின்சார நிலையம் நிறுவப்பட்டு 80 மெகாவாட் ஆற்றல் உற்பத்தியாகிறது.

அடுத்து பியாஸ் நதியில் பாந்தோ 250 அடி உயரத்தில் திருப்பு அணை [Diversion Dam] கட்டப்பட்டு, 351,000 கியூசெக்ஸ் நீரோட்டம் திருப்பப்பட்டு பாந்தோ நீர்த்தேக்கத்தில் சேர்கிறது. அதில் 9500 கியூசெக்ஸ் நீரோட்டம் 25 அடி விட்டம், 8 மைல் நீளத்தில் குடையப்பட்ட மலைக் குகை வழியாக அனுப்பப் பட்டு ஸட்லெஜ் நதியுடன் இணைக்கப் படுகிறது. பாரதப் பொறியியல் வல்லுநர்கள் அணைகள் கட்டி ஜீவநதிகளைத் திருப்பி நீர்த் தேக்கங்களில் அடைத்துத் தேவையான பிரதேசங்களுக்குக் கால்வாய்கள் மூலம் நீரனுப்புதில் கைதேர்ந்த நிபுணராகப் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்கள்.

1960 ஆம் ஆண்டு சிந்துநதி நீர்வள ஒப்பந்தம் [Indus Water Treaty] இந்தியாவுக்கு ரவி, பீயாஸ், ஸட்லெஜ் நதிகளின் நீர் வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை அளித்தது. அதற்கு முன்பே, ரவி, பியாஸ் நதிகளின் வெள்ளத்தைப் பஞ்சாப், பெப்சு, ராஜஸ்தான் மாநிலங்கள் 1955 இல் உடன்பட்ட ஓர் ஒப்பந்த மூலம் கால்வாய் வெட்டிப் பகிர்ந்து கொண்டன. 1959 ஆம் ஆண்டு பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உடன்பட்டுச் செய்த பக்ரா நங்கல் ஒப்பந்தம் [Bhakra Nangal Agreement] மூலம், ஸட்லெஜ் நதியின் நீர்வெள்ளம் கால்வாய் பஞ்சாப் வழியாக பஞ்சாப்புக்கும் [85%] ராஜஸ்தானுக்கும் [15%] தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

பாரதம் விடுதலை பெற்றதும் 1948 இல் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் அமைப்பு உளவு ஆய்வுகள் செய்யப்பட்டு 1956 இல் ஒப்புக் கொள்ளப்பட்டு மத்திய அரசாங்கம் 1200 மைல் தூரம் ஓடும் ராஜஸ்தான் கால்வாயை [புதுப் பெயர்: இந்திரா காந்தி கால்வாய்] முதன்முதலில் அமைத்து ஸட்லெஜ், பீயா நதிகளின் இமாலய நீர்வளத்தைப் பஞ்சாப் ஹையர்க் நீர்த்தேக்கத்தில் [Hairke Barrage] பங்கிட்டுத் தெற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மர் வரை செல்கிறது. அதில் முதல் 110 மைல் ஓடும் கால்வாய்ப் பகுதி பஞ்சாப் மாநிலத்தில் இருந்ததால், அம்மாநிலமே அப்பகுதியைக் கட்டியது.

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி ராஜஸ்தான் வழியாகச் செல்லும் சாம்பல் நதி யமுனா நதியுடன் இணைவதற்கு முன்பு நான்கு இடங்களில் அணைகளால் தடுக்கப் பட்டு, நீர்த்தேக்கங்களில் நீர் சேர்க்கப்பட்டு மின்சார நிலையங்களை இயக்கியும், 1400 மைல் தூரம் நீர்ப்பாசான வசதிகளை அளித்தும் வருகிறது. சாம்பல் நதி சிகரத்தில் 1960 இல் காந்தி ஸாகர் அணை, 1970 இல் ரானா பிரதாப் ஸாகர் அணை, 1972 இல் ஜவாஹர் ஸாகர் அணை, இறுதியாக 1960 இல் கோட்டா நீர்த்தடுப்பும் [Kota Barrage] அமைக்கப்பட்டன. காந்தி ஸாகர் அணையில் 119 மெகாவாட், ரானா பிரதாப் ஸாகரில் 172 மெகாவாட் நீரழுத்த மின்சாரமும், 740 மெகாவாட் அணுமின்சாரமும் தயாராக்கப்பட்டு அணு உலைகளுக்குத் தேவையான கனநீரை [Heavy Water] உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும் உள்ளது. ஜவாஹர் ஸாகர் அணையில் 99 மெகாவாட் மின்சார ஆற்றல் நிலையம் இயங்கி வருகிறது. கோட்டா நீர்த்தடுப்பு 27,000 கி.மீடர் சதுர அளவைக் கொண்டது.

அமெரிக்க மாநிலங்களுக்கு நீர்ப்பங்கீடு செய்யும் கொலராடோ பூதநதி!

தென்மேற்கு பகுதியில் வல்லமை படைத்தோடும் ஜீவநதியான கொலராடோ நதி அமெரிக்காவின் ‘தாய்நதி ‘ என்று போற்றப்படுகிறது! ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகும் அந்த நதி மலைச் சிகரப்பனி உருக்காலும், என்றாவது பெய்யும் மழைநீராலும் வெள்ளம் பெருகி, அரிசோனா, காலிஃபோர்னியா மாநிலங்கள் வழியாக ஓடி, காலிஃபோர்னியா வளைகுடாவில் சங்கமம் ஆகிறது. அதன் நீர்வெள்ளம் 80% பனி உருக்காலும், மீதம் நலிந்த மழை நீராலும் பெருகி ஓடுகிறது. அதன் நீரோட்டம் ஏறி இறங்கி 1956 இல் 960 cfs (cuft/sec) ஆகவும், 1984 இல் 69,800 cfs ஆகவும் கருவிகள் மூலம் அறியப்பட்டது. ஆதலால் நதிப் போக்கில் பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு அதன் நீர் வெள்ள அடிப்புக் காலங்களில் சேர்த்து வைக்கப்பட்டது!

சுமார் 80 மில்லியன் ஏக்கர்-அடி நீர்வெள்ளப் பொழிவு ஆண்டுக்குக் கொலராடோ நதியில் நிகழ்கிறது. ஆனால் அந்த நீரை விரையம் செய்யும் முதல் பகையாளி, பூமண்டலச் சூழ்வெளியின் இயற்கைச் சூடு! சுமார் 85% நீர்ப்பொழிவு வெப்பத்தால் ஆவியாகி மறைகிறது! கொலராடோ நதியின் நீர்வெள்ளம் ஒன்பது இடங்களில் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு நீர்ப்பாசன வசதிகளுக்கும், மின்சக்தி உற்பத்திக்கும், குடிநீருக்கும் பல மாநிலங்களில் பயன்பட்டு வருகிறது.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 30, 2004] (Part III)

Series Navigation