தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 45 in the series 20110227_Issue

தேனம்மை லஷ்மணன்


9. பங்கேற்பு.:-
*******************

பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.

மேடையில் ஒலிக்கும்
சங்கீதங்கள் சில
சோக ராகத்தோடு..
கரைந்து போகிறது
குளிர்பான பனிக்கட்டியாய்
இயலாமையோடு

துப்பு இருக்கிறது
உரித்தெரிந்து விட்டு
மேடையேறி
எல்லாவற்றையும்
கைப்பிடிக்குள் சுழற்ற..
காலடியில் அடக்க..

பின் தொடரப் போகிறதா
ஊத்தி மூடப் போகிறோமா
பித்தம் தெளியாமல்
என முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்..

*****************************************************

குறுங்கவிதைகள்..
******************************

1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..

**************************************************

2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..

*****************************************************

3. மதர்போர்டு
————————

ஆயுள்வரை உழைத்து பழுதாகி
கழற்றிக் கோர்க்கப்பட்டு, தொடர்ந்தும்
புனர்ஜென்மப் பணியில் அம்மாவாய்..

*************************************************************

4. குளப்படிகளிலும் பூத்து
ஈரத்தாமரை…
உன் பாதச் சுவடு..

******************************************************

5. வாய் முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்
வார்த்தை நிறங்களை அப்பிச் செல்கிறது
பேசக் கற்ற குழந்தை..

Series Navigation