தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 35 in the series 20110213_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..

ஈழத்துக்கு.,
மீனவர்க்கு்.,
சாய(ந்த) மண்ணுக்கு.,
உரிமை மீறலுக்கு என
கவிதை எழுதித் தொலைக்கிறேன்..

ஒன்றையும் குணமாக்கும்
வழி தெரியாமல் விழிக்கிறேன்..
கையில் அடுத்த கோர்ஸை
தொடரச் சொல்லும்
மருத்துவக் குறிப்போடு..

———————
கலம்பகம் விரும்பி..
******************************

மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..

இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..

கோட்டை கொத்தளங்களும்
குலவிய அந்தப்புரங்களும்
கொடிகள் வேரோடி
மண்பாயக் கூடுமோ..

உப்பரிகையில்
தலை உலர்த்தி நான்.
சோகம் பாய்ந்த விழியோடு
உன் மேல் வெறுப்புற்று..

கலம்பகம் விரும்பி
காதலோடு விழுங்கி
கூர்ச்சூலம் பாய
புறமுதுகிடாத வீரனாய்

அருஞ்சொற்பொருள்
எப்படி அறிந்தாயோ..
என் அன்பழிந்த அக்கணம்
நீ மரித்திருந்தாய்..

————-

Series Navigation