தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 39 in the series 20110123_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


உடைகள்..
****************

எத்தனையோ நிறங்கள்
கொண்ட உடைகளும்
அவ்வப்போது அணிகின்றன..
அழுக்கின் நிறத்தை..

ஒரு முறைதான்
உடுத்தப்பட்ட அவை
என்றும் இழப்பதில்லை
தான் ஊடுருவியிருந்த
உடலின் மணத்தை..

யார்யாருக்கோ
தானமளிக்கப்பட்டபின்
அவர்கள் அழுக்குகளும் சுமந்து..

எத்தனை வெள்ளாவிகள்.,
உலர்சலவைகள்
கண்டாலும்..

ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை
உற்பத்தியின் புனிதத்துக்கு..

புண்கள் தேவை..
*********************************

எரிச்சலும் ரத்தமும்
வரும் வரை..
ஏதுமற்ற போதில்
சொறிந்து கொள்ள…

மூக்குமுட்ட குடித்து
மூத்திரச் சந்தில் நின்று
விரட்டும் மேலதிகாரியையோ
மடியாத பெண்ணையோ

குரங்கு சேஷ்டையாய்
காற்றை திட்டி..
குட்டிச் சுவரை
எட்டி உதைந்து.

சீழ் பிடித்து
ஈக்கள் அமரும் வரை..
அல்லது தடுமாறி விழுந்து
வாந்தி எடுக்கும் வரை..
==
முதல்மரியாதை..
***************************

கருப்பர்.,
முனியையா..
பாண்டி முனி
எனக்கு மட்டும் ஏன்
பழம் பெயர்..

கருக்கருவாள்சுமந்து
கண்கள் உருட்டி
நாக்கை நீட்டி
வெய்யிலில் காய்ந்து
இருத்தப் பட்டிருகிறேன்.

வருடம் ஒரு முறை
கண்காட்சி.,
பொருட்காட்சி.,
புத்தகத் திருவிழா போல்
எனைக் காண வருகிறாய்..

சிறிது நேரம் அமர்ந்து பார்
என் அமர்விடத்தில்..
சாராயம்., சுருட்டு.,
மிருக ரத்தம் தெளித்து
கோராமையாக்கிவிட்டு
உன் பேர் சொல்லி
பலர் உண்பது அறிவாய்..

விட்டுவிடு என
ஓடிவிடக் கூடும் நீ
யாருக்கு முதல் மரியாதை
என்ற கோபத்தில்
உன் கை அரிவாள்
பிடுங்கி வெட்டப்படும் போது.

Series Navigation