ராஜா கவிதைகள்

This entry is part of 44 in the series 20110109_Issue

ராஜா


1.யாமத்திரி எரிகிறது

திவலையென
சுருங்கிவிட்டது வெளிச்சம்
இருட்பெருங் கடலில் இட்ட சுடராய்
யாமத்திரி எரிகிறது.

இனி-
நிகழ்த்த ஏதுமில்லை
நினைவுகளென படிந்துவிட்டவை
விசிறியின் சுழற்சியில் மேலெழும் யாமத்திரி எரிகிறது
ஒற்றை நிகழ்வாய்

சிறு ஒத்திகையென
செத்துப் போகலாம்
உயிர்த்து மெழலாம்
யாமத்திரி எரிகிறது ஒற்றை கடவுளாய்.

நீர்தொட்டு
மனங்கிறுக்கும் கனவுகள்
வாசிப்பதற்குள் உலர்ந்துவிடும் யாமத்திரி எரிகிறது
ஒற்றை சாட்சியாய்

மற்றுமொரு விடியல் வரும்
இயக்கங்கள் தொடரும்
ஒற்றை நம்பிக்கையாய் யாமத்திரி எரிகிறது.

_______
2.தூதொடு வந்த மழை

மூச்சு முட்ட
நான் இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;

கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.

கப்பல்
கலைந்து போனாலும்
கவலை இல்லை;

மிதந்து சேரும் தாள்
சுமந்து வரும் என்காதல்.

கரை சேராது-
தாள் கரைந்தாலும்
துன்பம் இல்லை;

வழிந்தோடும் நீரில்
எழுந்தாடும் குமிழில்
என் சுவாசம் இருக்கும்.

நீர்
வடிந்து போனாலும்
விசனம் இல்லை;

காற்றசைக்க-
கிளை பெய்யும் மழையில்
துளியாய் உன்மேல் விழுவேன்.

______
3.புலவர் புலாசுளாகீ

எடைவாரியா புஸ்தகங்கள்
அலமாரியில் குந்தியிருக்கு
வரிவரியா படிச்சிடத்தான்
இழுபறியா இருந்திருக்கு.

கையளவு கற்றது
கைகழுவையில் நழுவியது
உலகளவு உருப்போட்டா
உருவந்தான் என்னாவது?

துக்கம் தொண்டை அடைக்க
புக்கொன்று எடுத்து வச்சேன்
தூக்கம் வந்து என்னை
தூக்கிட்டு போயிடுச்சே!

விளக்கில் நெய்யூத்தி
விழுந்தேன் கோவிலிலே
விசாழக்கிழமை எல்லாம்
விசனத்தில் கழிந்ததுவே.

ஆதியும் விளங்காமல்
அந்தமும் துலங்காமல்
சந்ததிகள் விழுந்தது
எங்கதியும் நொந்தது.

முடிதான் குறைஞ்சது
முடிவு யாருக்கு தெரிஞ்சுது?
முடிவா நான் எடுத்தது
முப்பாட்டன் சொன்னது.

எண்ணெய் தடவிக் கொண்டு
மண்மேலே உருள்வது;
ஓட்டும் மண் எனக்கானது
ஒட்டாதது எனக்கு ஒத்து வராது.

__________
4.புதியதாய் ஏதேனும் பற்ற…

இயற்றியவற்றில்
இறைந்து கிடக்கின்றன
இலக்கணப் பிழைகள்.

பிழை களைய
சில மாதங்கள் ஆகும்.

ஆக்கத்திற்கும்
ஊக்கத்திற்கும்
நன்றி நவில வேண்டும்.

வாங்கிய கடனை
வட்டியோடு செலுத்தவே
வருடங்கள் ஆகும்.

ஆயுளில் மிச்சமிருந்தால்
மீண்டு வருகிறேன்,
புதியதாய் ஏதேனும் எழுத.

5.காற்றொடு கலப்பேன்
இருட்புதர்
விரவிக் கிடக்கும்
வனம்.

தொங்கும் நாவும்
வளைந்த வாலுமாய்
வெறியோடு உலவுமொரு
விலங்கு.

மெல்லப் பதுங்கி
அங்கிங்கு நோட்டம் விட்டபடி
திருட்டு சுவை ருசிக்கும்
ஒரு பிராணி.

முன்னால் குட்டினால்
பின்னால் கொட்டும்
வன்மத்தோடு திரியும்
ஒரு பூச்சி.

ஏதோவொரு கணத்தில்
முடி உதிர்ந்து
இறகு முளைக்கும்.

சிறகு விரித்து
உயரப் பறப்பேன்.

என்
வனாந்தரத்தின்
ஆதி அந்தரங்களில்
வெளிச்சம் பரப்பி

வான அந்தரத்தில்
மிதந்தபடி
காற்றொடு கலப்பேன்.

____
manisson@gmail.com

Series Navigation