தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 41 in the series 20110102_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


1. ஒளிதல்..
**************

எதிர் வீட்டு புஜ்ஜி
முந்தானை மூடி முட்டாச்சு..

பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..

ரெண்டும் சென்றபின்
முந்தானையும் திரையும்
ஒளிய இடமில்லாமல்..

2.. பழசு..
***********

காலம் துவைக்கும்
கிழமைத் துணிகள்..

உரிந்து விழுந்தும்.,
சாயம் போகாமல்..

அதே முகப்பு.,
அதே பட்டாலை..
அதே ஆல்வீடு..
அதே சுவற்றலமாரி..
அதே கண்ணாடி..

ஆற்றிலொரு கால்..
சேற்றிலொரு கால்..
விளையாட்டாய் நரை..

ஐஸ்பால்., டப்பா வாய்
முதுகிலடிக்காமல்
முகத்தில் அடித்தது
சுருக்கங்களுடன்
அவுட்டான நானாய்..

3. மாமிசக் கடை.
*********************

முதிர் ஆடுகள் சில
இளங்கோழிகள் பல..
அபூர்வமாய்
புறாவும் ., முயலும்..

எலியும் ., பூனையும்.,
காகமும் உடும்பும் கூட
உணவாகும் நரர்க்கு..

ரத்தம் தெறிக்க
வெட்டுப் படவே
சுயமற்றுப் பிறந்த
அப்பிராணிகள்..

சகதித் துணுக்காய்
தேய்த்தும் சத்தம்
அடங்காத
பூட்ஸும் துப்பாக்கியும்..

வெட்டப் படுவதும்
விற்கப்படுவதும்..
சந்தைப் பொருளாவதும் குறித்து
ஏதும் செய்ய இயலாமல்..

Series Navigation