கோநா கவிதைகள்

This entry is part of 41 in the series 20110102_Issue

கோநா


.

கவிதை 1; மந்திர மல்லி

வேலைக்குச் செல்லும் வேளையில்
மின்சார ரயில்நிலையத்தின் வெளியே
“ரெண்டு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்
ஒரு சிறுமி.

வேலை முடிந்த மாலையில்
அதே இடத்தில் அச்சிறுமி
“நாலு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்.

அது
அரைநாளில்
இருமடங்காகும்
மந்திர மல்லி
அச்சிறுமி
ஒரு தேவதையாக
அந்நிலமை
ஏதேனும் சாபமாகவும்
இருக்கக் கூடுமென்றேன்
ஒருவரும் நம்பவில்லை
சிரித்துச் செல்கிறார்கள்.

கவிதை 2; மழை விதைத்தவை

இரவு பெய்த மழை
சாலையில் குழிகளை
துளி ஏருகளால்
உழுது சேறாக்கி
ஒவ்வொன்றிலும்
விதைத்துச்
சென்றிருக்கிறது
ஒரு நிலவையும்
சில நட்சத்திரங்களையும்.

கவிதை 3; கதை தெரியாத காட்டின் கதை

ஒரு பெரிய காடு இருந்துச்சாம்
காட்ல ஒரு சிங்கமிருந்துச்சாம்
அப்றம் ஒரு புலி இருந்துச்சாம்
குரங்கு இருந்துச்சாம்
நரி இருந்துச்சாம்
மான் இருந்துச்சாம்
முயல் இருந்துச்சாம்
யானை இருந்துச்சாம் “ப்பா…ம்”
பூனை இருந்துச்சாம் “ம்மியாயாவ்”
எல்லாம் என்ன செய்தன,
என்ன கதை
என்பதெல்லாம் தெரியாததால்
எதுவும் சொல்லவில்லை
எதையும்
அவளும் கேட்கவில்லை
உறங்கிவிட்டிருந்தாள்.

அப்றம் எல்லாம்
நைட்டு சாப்ட்டு
சமத்தா தூங்கிடுச்சாம்
என கதையை முடித்து
கன்னத்தில் முத்தமிட
உறக்கத்தில் சிரிக்கிறாள் ஓவியா.

கவிதை 4; கைவிடப்பட்ட குழந்தைகள்

உருவானதும்
கருப்பையிலேயே சுமக்கிறார்கள்…

பிறந்ததும் மார்போடே
அணைத்து வைத்துக் கொள்கிறார்கள்…

சற்றே இறக்கி
இடையில் வைத்துக் கொள்கிறார்கள்
சிலகாலம்…

பின்
தரையில் விட்டு
விரல்களை மட்டும்
பிடித்துடன் வருகிறார்கள்…

மெ…ல்…ல… மெ…ல்…ல…
விரல்களையும் விட்டுவிடுகிறார்கள்…

பெரியவர்களால்
கைவிடப்பட்ட குழந்தைகளே
பெரியவர்களாகிறார்கள்…

இல்லையெனில்
குழந்தைகளாகவே இருக்கக் கூடும்
வளர்ந்தும்.

கவிதை 5; ஆடை துறந்த ஞானி

அஞ்சு வயசாகுது
ட்ரஸ்சே போட்டுக்க மாட்டேங்கறா…
எம் மாமிய என்னத் திட்றா,
என்ன புள்ள வளத்துருக்கேன்னு…

பக்கத்து வீட்டக்கா
பிராது கொடுத்தாள்
கண்ணாமூச்சி ஆட்டத்தோழியை
கண்டித்தேன் அழைத்து

வெட்கமாயில்லையா உனக்கு

அழகாய் சிரித்துக் கொண்டே
ஆடை துறந்த ஞானியென
அமைதியாய் திருப்பிக் கேட்டாள்

வெட்கமாயில்லையா உனக்கு

ச்சே…
ரொம்ப வெட்கமாய் போய்விட்டது.

Series Navigation