தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 48 in the series 20101227_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


பிழைத்த சிலிர்ப்பு..:-
*********************************

வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின்
நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்..

ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு
படுக்கை விரிப்புகள் தினம்..

அறை மணத்திகள் தொடர்ந்து
ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள்

லிக்விட் சோப்புகளால் உடல் துடைத்து
பீட்டாடையீன் வாசத்தோடு

ஆபரேஷன் தழும்புகள்
பூரான் தடிப்பாய்..

ஆண்டிபயாட்டிக்குகள் சுமந்து
கை துளைத்த ஊசி ஓட்டையை

கடைசியாய்த் திறக்கும் போது
பஞ்சிட்டும் குளிர்கிறது..

பிழைத்த சிலிர்ப்பிலும்..
பில்லின் அதிர்விலும்..

—————————
வெளியுலக உயிர்மூச்சு..:-
*****************************************

சிகிச்சைக்கு உட்பட்டவர்களின்
நோவுகள் எல்லாம்..
காத்திருப்பவர் முகத்தில்
ரேகைகளாய் படிந்து..

நந்தவன கூட்டமாய்..
பிக்னிக் ஸ்பாட்டாய்.,
கேட்டது கிடைக்கும் ஷாப்பிங் மாலாய்..
ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்ரிகளும்..

உடல் துடைக்கும் ட்ராலி
உருட்டுபவளின் கரத்தில்
ஓராயிரம் உடல்களின்
நோவுத் துகள்கள்..

கழுவிக் கரைத்தும் போகாமல்
துப்புரவுப் பெண் வீட்டிலும்
அவளின் மருந்து வாடை
கைக்கவசம் அணிந்தும்..

சோர்வுறுவார்களா..
தூங்குவார்களா எனத் தெரியாத
ஷோகேஸ் பொம்மை
சிரிப்பில் மருத்துவர்கள்..

இருபத்துநாலு மணிநேரமும்
எரிகிற விளக்குகளில்
எல்லா கிருமிகளும்., அழுகைகளும்
துக்கங்களும் படிந்து..

மனைவிக்காய்க் காத்து
மாதக்கணக்கில் தாத்தா எழுதும்
குறுக்கெழுத்துப் புதிர்..
கோமாவாய் முடிவுறாமல்..

எப்போதோ நிமிர்ந்து
பார்க்கும்போது வந்து சென்ற
எல்லாரும்., எப்போதும்
பார்ப்பவராய் முறுவலித்து..

எங்கோ வெளியேறும்
திணறல் மூச்சு..
ஏதோ ஒரு கர்ப்பத்தின்
வெளியுலக உயிர்மூச்சாய்..
—————
ஓவியங்கள்..:-
*********************

அவசியமா..அலங்காரமா..
விலையையுயர் சட்டங்களில்
விநோத ஓவியங்கள்..
உயிர்த் திரவ
பாண்ட்டேஜுகளுடன் உலவும்
என்னை நிகர்த்து..

விரிந்த கிளைகளூடே
கூர் மூக்கு இறக்கை பறவை..
இரட்டைக் குணாதிசயமான
முன் பின்னாக
உருவேறிய நானாய்..

நீர்ச்சொட்டு இல்லா
பிரபஞ்சப் பசுமை பருகி.,
ஊசிகளும் தையல்களும்
குறுக்குநெடுக்காக்கிக் கிழித்த
கோட்டோவியமாய் நான்..

இனம் தெரியா
நிறப் பூவிலிருந்து விழுந்த
தேன் சொட்டொன்று..
என் கைப்பக்க ஐவி ட்யூபில் சிதறி..
கண் திறக்கும் போதெல்லாம்
இதய பலூனை இயக்கி..
உயிர்ப்பிக்கச் செய்து..
—–

நீர்க்குமிழ்கள்..
***********************

அப்பாவுக்கு நான்கு..
அம்மாவுக்கு மூன்று…..
அரசில் முப்பத்து மூன்று..

எல்லாம் சமரசம்..
உரத்துப் பேசவும்..
உள்ள(த்)தை எழுதவும்..

குமிழ்களின் வாழ்நாள்
ஒன்றோடொன்று
மோதும்வரை..

காற்று அனுமதிக்கும் வரை..
வெளிப்பொருள் உறுத்தும் வரை..

ஒப்பீட்டுச் சுதந்திரம்..
ஒவ்வாத கருத்துக்களோடு..

வரையப்பட்ட விட்டம்
கட்டிய மாடாய்..
கயிற்றோடு சுற்றி..
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு..
—–
இதய பலூன்..
************************

என் இதய பலூனைப்
பிடித்தலைகிறாய்..

உயரப் பறக்க விழையுமதைக்
கைப்பிடிக்குள் அடக்கி.,

பட்டத்தைப் போல்
பிடித்திழுத்துக் கொண்டு..

கேளிக்கைகள்., போட்டிகள்.,
கூச்சல்கள் முடித்து.,

ஓரமாய்ப் போட்டுவிட்டு
ஓய்ந்து உறங்குகிறாய்..

உன்னைத் தாலாட்டும்
விசிறிக் காற்றில்
தடுமாறி விழுந்து..

உன் கேசக் குழலாய்
தத்தித் தத்திச் சுருங்கியவாறே..
ஒரு மூலையில் நான்..

உன் ரேகை படர்ந்த
லாலிபாப்பின்
முத்தப் பிசுக்கோடு..

Series Navigation