தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 35 in the series 20101219_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தேனீர் தாகம்
************************

சுப்ரபாதத்தோடு
கணவரோடு ஆறு மணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு..

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு..
மாலை நாலுக்கும்..
பின் ஆறுக்கும் கூட ..

எப்போது ஆரம்பிதது
என்று தெரியாமல்
நேரமற்றுத் தொடர்ந்து..

நீர்ச்சத்தோ., சர்க்கரையோ
குறையும் போதெல்லாம்..
கிடைக்கும் போதெல்லாம்..
மாற்றம் வேண்டும் போதெல்லாம்..

எழுதத்துவங்குமுன்
எழுதி முடித்தபின்
எல்லாரோடும்
தனியாயும்..

சிந்தனையின் போது
கவலையின் போது..
மகிழ்ச்சியின் போது..
காரணமற்றும்

குடிகாரர்களை திட்டும்
போதெல்லாம் உள்கேலி,
”நீ யாராம்..போடீ
தேனீர் குடிகாரி..”என்று..

—————-
நானென்ற கம்பீரம்..
*****************************

புதைக்கப்பட்டதற்காய்
புதையாமல்
வெடித்து வேர்விட்டுத் தேடு..

முளை விரல் நீட்டி
சூரியக் கரம் பிடித்து
மேலேறு..

புல்லாகவோ.,
பெருமரமாகவோ
நானென்ற கம்பீரத்துடன்..
——-
டெஃப்லான் தோசைகள்..:-
**************************************

தாமரைத் தண்ணீர்
நீர்மேல் எண்ணெய்
உறவுற்று., உறாமல்..

நிலவொட்டிய வானம்
ஒட்டில்லை
உறவு உண்டு..

பேனாக் கத்திகளாய்
பேனாக் கடத்திகள்..
ஆளற்ற அனைத்தும் தூக்கி..

விக்கிலீக்ஸ் காட்சி
சுவிஸ் வங்கி ஆட்சி..
அசாங்கே சாட்சி..

தொலையும் தொடர்பில்
ஆளுமைகள் மாற..
ஆசையர்கள் மாற..

இரும்பு., இண்டாலியம்.,
டெஃப்லானாய் தேய

ப்ளாஸ்டிக் வீச்சத்துடன்
டெஃப்லான் தோசைகள்..
எல்லார் தட்டிலும்..
—–
நிசிப் பறவைகள்…….
****************************

நிசியில் பறவைகள் சடசடக்க
நெஞ்சக் காடு தேடி
ரோமக்கூட்டுக்குள்
முகம் தத்தி அமர்ந்து
முத்த முட்டைகள் பொரித்து..
விடிந்ததும் தெரிகிறது
பறவைகள் அமர்ந்த இடம்
விலகிய ரோமச் சுள்ளிகளில்
கால்களின் நகக்கீறலோடு.

==================================

ஈரப் பூக்கள்..
***********************

ஈரம் கசியும் கன்னங்களை
திரும்ப துடைக்கிறேன்..
கனவில் முத்தமிட்டாயோ..
முகமருகே குனிந்து
கண்ணீர் சிந்தினாயோ
உன்னை நினைத்துக்
கிடந்த என் கண்ணீரோ..
மழை பெய்த சுவர்த்தடமாய்
ஈரப்பூக்கள் கன்னமெங்கும்

====================================

குழந்தைப்பூ..
******************

நானும் கறுப்பு..
மனைவியும் கறுப்பு..
குழந்தைக்கு ஏன் குங்குமப்பூ..

======================================

மழைக்கேள்விகள்:-
*******************************

குழந்தையின் கேள்விகளாய்
தொறுதொறுத்துக்கொண்டே மழை..
விடை தெரியாது ஓடுபவளாய் நான்..

சுவற்றில் ஆக்டோபஸ்களாகவும்
அமீபாக்களாகவும் ஈரக் கால் பரப்பி..
சிலந்தியில்லா தண்ணீர் வலைகள்..

பயிர்களைப் போல
சுவர்களும் அழுகி பூசணங்கள்..
மாவுகளில் குளமற்ற ஆம்பல் பூத்து..

வகுப்பறை மேசைகள் ஈரம் கசிந்து..
புழுக்கமாய் வியர்வையா..
கருணையாய் ஊற்றா..

சில்வண்டுகளாய் ரீங்கரித்த மழை
தவளையாய் தவ்விச் சென்றபின்
கேட்பது அற்ற காதுகளுடன் நான்
———————–
பரமபதப் பாம்புகள்:-
******************************

மோட்டுவளையைப்
பார்த்துக் கொண்டே
கவலையற்றுப்
படுத்திருக்க.,

தொட்டில் குழந்தையாய்
இன்னுமொரு
பிறப்பு வேண்டி..

விடியலில் எழுந்து
காலைக் கடன்
கழித்தும்., கழிக்காமலும்

டப்பி சோறும்.
ஓட்டமும் நடையும்
மின் வண்டித்தடமும்
பேருந்துப் புகையும்

வருடக்கணக்காய்
பல கை மாறி
சரிப்படுத்தப்படாத
தணிக்கை கணக்கும்

நாளைக்கு வந்து
நச்செறியப் போகும்
தணிக்கை அதிகாரியும்

கிடைக்கப் போகும்
குறைந்த நட்சத்திரங்களும்
குடும்பக் கவலையும்
கண்ணுக்குள் குழம்ப

பள்ளிப் பருவக்
குழந்தையாய்
குறைந்த மதிப்பெண் கனவில்
விழுந்ததாய் விதிர்த்து எழுந்து

பரமபதப் பாம்புகளால்
சொர்க்க வாசல் அடைந்த நான்
மீண்டும் முதலில் இருந்து
அதன் வால் பிடித்து..

Series Navigation