குழந்தை

This entry is part of 29 in the series 20101121_Issue

க.ஆனந்த்


ஒரு
இரகசியத்தை
இரகசியமாய்
எல்லோரிடமும்
சொல்லிக்கொண்டிருக்கும்
குழந்தையிடம்
இரகசியமாய் ஒரு
நம்பிக்கை
ஒவ்வொருவரிடமும்
அது
இரகசியமாகவே
இருக்குமென்று

மெல்ல அடியெடுத்து
பறக்கும் திசையெல்லாம்
சலிக்காமல்
பின் தொடர்ந்து
பிடித்த
வண்ணத்துப்பூச்சியை,

உடனே விட்டது
ஏனென்றதற்கு
‘ விடறதுக்குத் தானே
பிடித்தேன் ! ‘

சொன்ன குழந்தை
பிடிக்கத் தொடங்கியது
மீண்டும்

தேடத்துவங்கும் போதே
ஓடி வந்து தன்னை
வெளிக்காட்டிக் கொள்ளும்
குழந்தை முன்
வெட்கி நிற்க
வேண்டியிருக்கிறது

சற்று முன்
அது தேடிக்
கண்டுபிடிக்கும் வரை
ஒளிந்திருந்ததற்காக
பெயர் தொலைந்தவர்கள்;…

ஏக காலத்தில்
எல்லோரிடமிருந்தும்
தொலைந்து விட்டன
பெயர்கள்

பெயர்களோடு சேர்ந்து
பெயர்ந்திருந்தன
அடையாளங்கள்

ஒன்றைப் போலவே
இருக்கத் துவங்கின
ஒவ்வொன்றும்

ஆதித்தன்மையை
அடைந்து விட்டதைப்
போன்றொரு அச்சம்
தொடக்கி வைத்தது

வேறுபடுத்தும்
காரணி ஒன்றிற்கான
விரைவுத் தேடலை

அங்கிருந்து துவங்கியது
அவரவர்க்கான பெயர்சூட்டல்
மீண்டும்

– க.ஆனந்த்

Series Navigation