ரிஷி கவிதைகள்

This entry is part of 23 in the series 20100606_Issue

ரிஷி


1) காற்றாடித் திருவிழாக்கள்

காலங்காலமாய் நடந்தேறிவருகின்றன காற்றாடித் திருவிழாக்கள்.
கில்லாடிகள் தான் போட்டியாளர்களும், புரவலர்களும், ஏன்,
பார்வையாளர்களாகிய நாமும்கூட.

கையிலுள்ள நூலின் அளவும், வலுவும்
தெரியாமலிருக்க வழியில்லை.

இக்கரையில் கணுக்காலளவு நீரில் நின்றுகொண்டு
’காப்பாற்றுவோம்’ என்று
மின்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பட்டங்கள்
மும்முரமாய் பறக்கவிடப்பட்டவண்ணம்…

அதைப் பார்த்துப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவாறே,
கோரதாண்டவமாடிக்கொண்டிருந்த நரமாமிசபட்சியொன்று
எரிசிறகு விரித்துயரே பறந்துபோய்
நூல்களையெல்லாம்
ரத்தம் வழியும் தனது கூர்நகங்களாலும், பற்களாலும்
அறுத்துப்போட்டது.

நூறாயிரக்கணக்கான சிரசுகளையும்.

சிதறித் தெறித்துப் பெருகியோடிய கதறல்களை சிலர்
எடைநிறுத்துப்பார்க்க சிலர்
கடைவிரித்துப் பொருள்சேர்க்க சிலர்
தாம் மட்டுமே பொருள்பெயர்க்கத் தகும்
என உரிமைகொண்டாட சிலர்
பதிவுநாடாக்களில் சேகரித்துக்கொண்டு காலத்திற்குமான
கலைப்பொருளாக்க சிலர்
வேகவேகமாகக் குழியாழம்பறித்து அவற்றைப்
புதைத்துவிட்டு எதுவும் கேட்கவில்லையே
என்று கதைத்திருக்க……

தொடரும் காற்றாடித் திருவிழாக்கள்.

2) இம்மை

ஆரம்பமும் முடிவுமற்ற ஒரு பயணத்தில் நான்; பொடிநடையாக.
சில சமயங்களில் காலணிகளோடு; பல நேரங்களில் வெறுங்காலோடு.
திடுமென முளைக்கும் சிறகுகள் வரமாய்; சாபமாயும்கூட.
வழிச்செலவில் காற்றின் தீண்டல் வருவாயாகவும், பெருலாபமாகவும்
உயிர்நிறைக்க, ஒரு நெகிழ்வில் கண் தளும்ப அண்ணாந்து
”ஐ லவ் யூ “ என்கிறேன்.
அதி ஆனந்தத்தில் ஆங்கிலமும் தமிழாகிவிடும் தானே!
நடக்கும் நேரம் என்னை மீறி பாதங்களடியில் நசுங்கலாகும்
நுண்ணுயிர்களின் நினைப்பு குற்றவாளியாக உணரச்செய்யும்.
நல்லவேளையாக, எல்லா நேரங்களிலும் இல்லை.
எனக்கான நச்சுமுட்களும், கூர்கற்களும் சுட்டெரிக்கும் கதிரோனும்,
அமிலத்துளிகளும், வலியும் ரணமும், வேதனையும், வாழ்வீர்ப்புமாய்,
காலடித்தடயங்களை கவனமாகத் துடைத்து சுவடழித்து
என்னை வரலாற்றில் இடம்பெறச் செய்யும் போட்டியிலிருந்து
முற்றுமாக விலக்கிக்கொண்டு வெறுங்கையோடு போய்க்கொண்டிருக்கிறேன்.
வாட்களோடு எதிரே வ்ரும் சிலர் உலகில் இதுகாறும் நடந்த, நடக்கின்ற, நடக்கவுள்ள படுகொலைகளையெல்லாம் நான் செய்த்தாகச் சொல்லி
கண்களையும் கைகளையும் திருகி முறிக்கத் தயாராய் சூழ்ந்துகொள்கிறார்கள்.
வாதப்பிரதிவாதங்கள் ஏதுமின்றி நாலாயிரம் ஆண்டுகள் கடுஞ்சிறைவாசமும், கழுவேற்றங்களும் என்று தீர்ப்பெழுதப்படுகிறது.

”பழிபாவம் புரியவில்லை, பணங்காசு கையிலில்லை. பின் ஏன் என்னை..?.”

”கேள்வி கேட்டால் கூடுதல் தண்டனை கிடைக்கும். பேசாமல் வா”

”உறக்கம்போக என் மொத்த வாழ்க்கையுமே நாற்பதாண்டுகள் கூட நீளாதே
இனியான என் வாழ்க்கை இருபது வருடங்களுக்கும் குறைவாக இருக்கையில்
எனக்கு இடப்பட்டுள்ள தண்டனையை எப்படி நிறைவேற்ற இயலும்?” _

”அதற்குத் தானே இருக்கின்றன உன்னுடைய அடுத்தபிறவிகள்”.

Series Navigation