கவிதைகள்

This entry is part of 32 in the series 20100220_Issue

ப.மதியழகன்


போதி

பாலகனாய்
மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்
அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது
‘பச்சை பசேலென
எத்தனை இலைகள்
விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல
மணம் வீசும் மலர்கள்
பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்
உனக்கு மகிழ்ச்சி தானே’ என்றது
சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்
அவ்விடம் அலுத்துப் போகவே
மற்ற சிறுவர்களோடு விளையாட
மைதானம் நோக்கிச் சென்றான்
ஒவ்வொரு நாளும் அவன் வருவானென
எதிர்ப்பார்த்துக் காத்திருந்து
ஏமாற்றமடைந்தது அம்மரம்
விடலைப் பருவத்தில்
நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என
சுற்றுவதற்கே
நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு
மரத்தை மறந்தே போனான்

காதல் அவன்
வாலிபக் கோட்டையை
முற்றுகையிட்டது
அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்
‘காதலுக்கு மனம் தேவை
கல்யாணம் முடிந்து
குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த
பணம் தேவை – இதை உணர்ந்து
முதல் போட்டு தொழில் துவங்கி
சமூகத்தில் இன்னாரென முகவரியோடு
எனை அணுகுங்கள்
தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை
பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்’-என
அவள் கூற
வியாபாரம் தொடங்க
பணம் தேவையே
எப்படிப் புரட்டுவது – என
அவன் மரத்தடியில அமர்ந்து
சிந்திக்கும் வேளையிலே
மரம் அவனிடம் பகன்றது
‘உன் நிலை எண்ணிக் கலங்கினேன்
இவ்வளவு காலம் எனை மறந்து
வாலிபக் குதிரையில
தன்னிலை மறந்து பயணம் செய்தாய்
காதல் கைகூட
செல்வம் வேண்டுமென
அவள் நிஜத்தை உணர்த்தியபோது
தாமாகவே உனது கால்கள்
நான் இருக்கும் திசையில் திரும்பி
என் நிழலை நோக்கி
வந்தமர்ந்து கொண்டன
துயரப்படாதே
உன் துன்பத்தைப் போக்க
வழியொன்று சொல்கிறேன்
என்னை வேரோடு வெட்டியெடுத்து
மரச்சாமான்கள் செய்யும்
தச்சனிடம் விற்றுவிடு
உனக்குப் பொருள் கிடைக்கும்
அகல்யாவின் அருகாமை
உன் இளமைக்கு
புத்துயிர் கொடுக்கும்’
எனக் கூறி முடித்ததும்
அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்
ஞானத்தினால் அல்ல
அவளை அடைய வழி தெரிந்ததினால்
அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்
கருணையினால் அல்ல
எவ்வளவிற்கு விலைபோகுமென்று
கண்காளாலே அளப்பதற்கு
விரைந்தோடினான்
அகல்யாவை அணைப்பதுபோன்ற
அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட
முதல் படியாக
மரத்தை வேரோடு சாய்த்திட
கோடாரியை எடுப்பதற்கு!

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞ்சலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் – என்று
யோசனை செய்தபடி…

பூமராங் வாழ்க்கை

மண்ணும், காற்றும், நீரும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
எனதுடலை
அதனை அலட்சியப்படுத்தி
செலுத்தப்பட்ட அம்புபோல
சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
விரைந்து கொண்டிருக்கிறேன்….
எந்த வில்லினுடைய நாணின்
இழுவிசையிலிருந்து
எந்த இலக்கை நோக்கி
விடப்பட்டு இருக்கிறேன்
என்ற கேள்வி தோன்றி
வேதாளம் போல்
எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
நான் இலக்கை சென்றடைவேனென
நம்பிக்கை வைத்து
என்னையவன் எய்து இருக்கின்றானா?
வழியில் எனது லயம் தவறிய
தப்புத்தாளங்களை
கண்ணிமைக்காமல் கவனித்துக்
கொண்டிருந்தானா?
மீண்டும் அவன் கைகளில்
தவழ நேருமோ
நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
கைகட்டி நின்று
சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
அச்சூழ்நிலையில்
‘உனது படைப்பு பூரணமடையாத போது
எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
வாழ்க்கை பூரணமாக
இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
என்ற கேள்வியை பதிலாக்கி
அச்சமற்று நின்றிடுவேன்
அச்சபையில்
மானுடத்தின் கேள்வியினை
நானொருவன் கேட்டிடுவேன்.

வசீகரமிழந்த வாழ்வு

வசீகரமிழந்தது வாழ்வு
தொலைவிலிருந்து காண்கையில் பொலிவாகவும்
அருகாமையில் செல்லச் செல்ல விகாரமும் கொண்டது
வாழ்வுவெளியெங்கும்
வசந்தத்தைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள்
உணர்வின்றி ஜொலிக்கும்
வறட்சியால் பிளவுகண்ட நிலங்கள்
தனது களங்கத்தை திரையிட்டு மறைக்க
விழையும் நிலா
தென்றலின் மீது பகைமை கொள்ளும் மரங்கள்
தன்னுடைய மாமிசத்தையே வேட்டையாடி
உண்ண நினைக்கும் விலங்கினங்கள்
தனது சிறகுகளையே முடமாக்கி,
அங்கஹீனமாக்கும் பறவையினங்கள்
பலிகொடுப்பதற்கே குழந்தைகளை பெற்றெடுக்கும்
தாய்,தந்தையர்கள்
அன்பை தூரஎறிந்துவிட்டு ஆயுதத்தை கையிலெடுக்கும் மனிதர்கள்
பூமி நரகமாகியதால்
காடுகளே இனி மனிதன் வாழ்வதற்குச் சிறந்தது
நாட்டில் எவ்வுருத்தில்
எந்த மிருகம் ஒளிந்திருக்கும்
என்றறியாது எவ்வாறு வீட்டினில்
பயமின்றி உறங்குவது?

Series Navigation