ப.மதியழகன் கவிதைகள்

This entry is part of 54 in the series 20090915_Issue

ப.மதியழகன்,


புன்னகைப் புதையல்

மெல்லிய சோகம்
கண்களில் கசிய
இதழ் மட்டும்
சிறுபுன்னகை புரிய
பெண்மையின் நளினம்
தோற்றத்தில் தெரிய
தாய்மையின் நீரூற்று
அன்பினால் வழிய
மணவாளனின் ஸ்பரிசத்தை
தேகம் தான் தேடிட
வாழ்வில் கடந்து வந்த பாதையை
எண்ணி எண்ணி
உள்ளம் தான் வாடிட
என்று விடியுமோ?
எனது ஏக்கம்
என்று தணியுமோ?
எனது காரிருள் வாழ்க்கையில்
ஆதவன் தோன்றிடக் கூடுமோ? –
என்று ஆயிரம் கேள்விக்கணைகளை
அந்தப் புகைப்படம் தொடுக்க
கண்காட்சியிலிருந்து
அவன் வெளியேறினான்
கேள்விக்குறியாக வளைந்து நெளிந்த
தனது உடலோடும்,
எண்ணிலடங்கா
பதில்களற்ற வினாக்களோடும்….

சொர்க்கத்தில் சிறைவாசம்

தென்றல் தீண்டிடினும்;
கடலலை வந்து காலடியில் மோதிடினும்;
அருவிநீர் ஹோவென ஸ்படிகமாய்
கொட்டிடினும்;
பூக்களெல்லாம் வைகறைப் பொழுதில்
மலர்ந்து மணம் வீசிடினும்;
இயற்கை தன் வனப்பையெல்லாம் காட்டி
என்னை மயக்க நினைத்திடினும்;
அவ்விடத்தில்
உன் அருகாமை இல்லையெனில்
சொர்க்கம் கூட சிறைவாசம் தான் எனக்கு!

mathi2k9@gmail.com

Series Navigation