பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்

This entry is part of 28 in the series 20090702_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


குன்றுகளின் ஊடே
நீயொரு
தென்றல் போல் உலவுகிறாய் !
நீயொரு திடீர்
நீரோடை போல் வீழ்கிறாய்
பனிக் கடியில் !
பரிதியின்
ஒளிச் சுடர்கள் போல்
நளினம் காட்டும்
உன் கூந்தல் திரட்சி
என் மீது !

காகசுஸ் மலையின்
ஒளிமயம்
பாய்ந்து வீழும்
உந்தன் உடம்பு மேல் !
முடிவின்றி
பட்டை ஒளி வீசும்
பளிங்குச் சிமிழ் போல் !
நீரானது
அடுத்தடுத்து மலைமேல்
ஆடை மாற்றி
அப்பால் ஓடும்
ஆற்றோடு
பண்ணிசைக்கும்
ஒவ்வோர் அசைவிலும் !

படைகள் நடந்த குன்றின் ஊடே
பழைய பாதை
வளைந்து போகும் !
அதன் கீழிருக்கும்
பழைய ராணுவத்தின்
பலமான கோட்டைத் தளங்கள் !
குன்றுகள் சேமித்த
கனிமங்களின்*
குளத்து நீர்த் தேக்கத்தில்
ஒளி வெட்டும்
உடை வாள் போல் !

உனை நோக்கி வீசி
அனுப்பும்
திடீரெனக் கானகம்
இடி என்னும்
தலை யில்லா ஆணியை,
புதிய நீல வண்ணப்
பூக்களை !
புதிரான
கடும் அம்பு போல்
தாக்கும்
காட்டு நறுமணம் !

*கனிமங்கள் (Minerals)

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 29, 2009)]

Series Navigation