பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>

This entry is part of 33 in the series 20090212_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் வாய், உன் குரல்,
உன் கூந்தல்
அனைத் துக்கும் ஏங்குவேன்
மௌனப் பசியில் வாடி !
இரை தேடிச் செல்கிறேன்
தெருவிலே !
ஊட்டம் அளிப்பதில்லை
உணவு வகைகள் !
காலை விடிவு
என்னைக் கொந்தளிக்க வைக்கும் !
உன் பாதத் தடங்களை
அளந்திட
அடிக்கோல் தேடுகிறேன் !

உன் தனித்துவச் சிரிப்பினைக்
காணப் பசி எனக்கு
உண்டாகும் !
காட்டுத் தனமாய்ச் செய்த
அறுவடைக்
கறை நிறத்தில் உன் கைகள்
காணப்படும் !
வெளுத்த விரல்களின்
பவளக் கல் நகங்களைப்
பார்க்கப் பசி !
வாதாம் பருப்பு போன்ற
உன் சதையைச்
சுவைத்திட இச்சை எனக்கு !

சூரிய ஒளிநடனம்
பொன்னுட லாக்கும்
உன்னெழில் மேனியைச்
சுவைத்திட இச்சை எனக்கு !
அகந்தை முகத்திலே
உள்ளது உனக்கு
அரச பரம்பரை மூக்கு !
மின்னல் வெட்டும்
இமைகளின் நிழலைச்
சுவைத்திட இச்சை எனக்கு !

இங்கு மங்கும்
இச்சை மிகுந்து நான்
நடமாடி வருகிறேன் !
காலை இளம் பரிதியின்
கதிரொளியைச்
சுவாசித்து
வேட்டை யாடுவேன்
உன்னையும்
உன் நெருப்பு நெஞ்சையும்
வெட்ட வெளியிலே
பெருவியன்
வேங்கை போல் தேடி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 9, 2009)]

Series Navigation