கவிதைகள்

This entry is part of 42 in the series 20090115_Issue

வே பிச்சுமணி


ஒட்டஞ்சில் சொல்லும்

பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்உன் பெயர் உச்சரிக்கையில்

விழா மேடையில் உன் பெயர்
உச்சரிக்கையில் முகம் சாய்த்து
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்
இதழ் விரித்து நீ புன்னகைக்க
என் முகமும் பிரதிபலிக்க


விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு
என என் மனசாட்சி-
கீழ்வானம் சிவக்க
புல் இனங்கள் துயில் எழவில்லையா
அவள் பெயரின் ஒலி என்னுள்
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா

பரமனின் உடுக்கை நாதத்தில
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்
எரிமலையின் வெடிசத்தத்தில்
பிறந்ததாய் விஞ்ஞானம்
உன் பெயரின் ஒலியில்
நான் பிறந்ததாய் என்ஞானம்

நான்மறைகளும் காற்றில் ஒலியாய்
இன்றும் உள்ளதாக நம்பிக்கை
உன் பெயரின் ஒலியில்
என் நாளும் என் இருக்கை

பெயர்களின் ஒலி வலிமையை
அனுமனுக்கு பின் நானறிவேன்
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே
எனது ராமஜெயம் உன் பெயர்தானே

உன் பாட்டியின் பெயர் உனக்கு
உன் தந்தை சூட்டிய காரணம்
இப்போதான் விளங்கிறது
என் மூலம் ஊரிலும் தெருவிலும்

புது பேனா எழுதும் முதல்
பரிசோதனை வார்த்தையாய்
என் கை எழுதும் உன் பெயர்

உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்

உன் பெயர் சூட்டிய
சின்ன குழந்தைகளின் கன்னம்
செல்லமாய் தடவும் என் கைகள்

உன் பெயர் சூட்டிய
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க
உதவும் என் கால்கள்

மொழி பாடங்களில் எழுதும்
கடிதங்களின் முகவரியில்
எல்லாம் உன் பெயர்

என் மின்னஞ்சல் முகவரியின்
கடவுசொல்லாக மட்டும்
உன் பெயரை வைக்கவில்லை
என்னை நீ கடவு செய்யகூடாதென

Series Navigation